தேவதை, சூனியக்காரி, பேய் என்று எந்த வடிவத்தில் கதை புனைவதென்றாலும் மனிதர்களுக்கு ஒரு பெண் தேவைப்படுகிறாள். கதைகளில் மட்டுமல்ல; வீடுகளிலும், அலுவலகங்களிலும் கூட பெண்களைப் பற்றிப் பேசுவதே அவர்களுக்கு பெரிய பொழுதுபோக்காக இருந்து வருகிறது.
பெண் என்பவள் இந்தச் சமூகத்துக்கு எப்போதும் ஒரு சுவாரஸ்யமான கதைப் பொருள்.
அவள் சமூகம் வகுத்த சட்டங்களில் பொருந்தி இருந்தாலும் கதை, அதில் பொருந்தாமல் போனாலும் கதை. அவள் சிரித்தாலும் கதை, அழுதாலும் கதை. அவள் ஒரு தொடர் கதை.
அப்படிக் கதையாக்கப்படும் சில பெண்களைப் பற்றித்தான் இந்த அத்தியாயத்தில் நாம் பார்க்கப் போகிறோம். ‘அவிஹிதம்’ (Avihitham) 2025-ல் மலையாளத்தில் வெளியான காமெடி டிராமா ஜானர் திரைப்படம். 2021-ல் ‘திங்களாழ்ச்ச நிச்சயம்’ திரைப்படத்துக்காக மாநில, தேசிய விருது பெற்ற எழுத்தாளர், இயக்குநர் சென்னா ஹெக்டேவின் மற்றுமொரு சிறந்த படைப்பு இது என்று கொள்ளலாம். ஜியோ ஹாட்ஸ்டாரில் தமிழ் டப்பிங்கில் காணக் கிடைக்கிறது.
“They weigh us, Measure us and then decide our Worth.” - டைட்டில் கார்டு முடியும்போது இந்த மேற்கோள் இடம்பெறும்.
காலங்காலமாகவே, பெண்களை சமூகம் எடை போட்டும், அளவிட்டும் கொண்டும்தான் இருக்கிறது. ஒவ்வொரு பெண்ணின் மதிப்பு என்னவென்றும் இச்சமூகம் அதுவே ஏதேனும் ஒன்றை முடிவு செய்கிறது.
குடும்பம், வசிப்பிடப் பகுதி, அவள் வாடிக்கையாகப் பயணிக்கும் வாகனத்தில் / வழியில் இருப்போர், அலுவலகம் என ஒவ்வொன்றுமே ஒரு பெண்ணுக்கான கதையை எழுத ஆர்வத்துடனேயே இருக்கிறது.
‘அவிஹிதம்’ படத்தில் வரும் நிம்மியும், கீதாவும் கூட அப்படிக் கதையாக்கப்பட்ட பெண்கள் தான்.
முதல் ஃப்ரேம் முழுநிலவின் முகத்தையும், சில ஆண்களின் குரலையும் காட்சிப்படுத்தும். அவர்களின் தலைக்கேறிய போதைக்கு ஊறுகாயாக மாறியிருக்கும் ரேஷ்மியின் கதையை பேசுவார்கள். ‘அந்த ரேஷ்மியோட கதை தெரியுமா? வெளிநாட்டுக்குப் புறப்பட்ட கணவன் எதையோ மறந்துவிட்டு திரும்ப, ரேஷ்மியுடன் பக்கத்து வீட்டு மனோஜ் இருப்பதைப் பார்த்து அவளை அடித்து உதைத்து அவன் ஊருக்குப் புறப்பட்ட டாக்ஸியில் ஏற்றி அம்மா வீட்டுக்கு அனுப்பிவிட்டான் கணவன்’ என்று போதை ஆசாமிகளில் ஒருவன் கதை சொல்ல மற்றவர்கள் ‘உம்’ கொட்டிக் கொண்டிருப்பார்கள். அது உண்மையா என்பது பற்றி அவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. அவர்களுக்கு அப்போது தேவைப்பட்டது ஒரு கதை.
அந்த போதைக் கும்பலில் இருந்தவர்களில் ஒருவன் தான் பிரகாஷன். இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரம். கிராமமோ, நகரமோ இன்றும்கூட பிரகாஷனைப் போல் இலக்கற்ற வம்பர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்கள் சோற்றுக்கும், குடிக்கும் காசு சம்பாதிப்பதோ / தேற்றுவதோ ஊர் வம்பு அளக்க மட்டும்தான்.
விழிபிதுங்கும் போதையில் நடைகட்டும் பிரகாஷன், மங்கிய வெளிச்சத்தில் ஒரு சம்பவத்தைப் பார்க்கிறான். அது கொலையாக இருந்திருந்தால் பிரகாஷன் ஓடியிருப்பான். ஆனால் அது ஓர் ஆணும் பெண்ணும் ஆரத்தழுவி முத்தமிடும் காட்சி.
இந்தியச் சமூகம் பொதுவெளியில் மலம் / மூத்திரம் கழிப்பதை இயல்பானதாக ஏற்றுக் கொண்ட அளவுக்கு ஆணும் பெண்ணும் பொது இடத்தில் முத்தமிட்டுக் கொள்வதை இயல்பாக எடுத்துக் கொள்ளவில்லை.
அப்படியிருக்க சுவர் ஏறிக் குதித்து வரும் ஆணும், இருளில் பதுங்கியிருக்கும் பெண்ணும் பரிமாறும் முத்தம் வெகு நிச்சயமாக பெருங்குற்றம் தானே!
இருந்தாலும் அந்த முத்தங்கள் மீது ஆண்களுக்கு குறுகுறுப்பு அதிகம். காரணம் ‘பார்வை மோகம்’. பரிணாம வளர்ச்சியில் மனித மூளையில் இருந்து மாறாமல் போனது என்னவோ வாயூரிஸம் என்றால் அது மிகையல்ல.
பிரகாஷனுக்கு அந்தக் காட்சி கிளுகிளுப்பாக இருப்பதோடு, அவனுடைய வம்பளக்கும் வாய்க்கு அவலாகிப் போகிறது. இருளில் தெரிந்த ஆண், மாவு மில் நடத்தும் வினோத் என்பது தெளிவாகிவிடுகிறது. ஆனால் அந்தப் பெண் யார் என்பது அவனுக்கு பிடிபடவில்லை.
யார் அந்தப் பெண்? அதுதான் படத்தின் மீதிக் கதை. ஒரு ஷார்ட் ஃபில்முக்கான கதைக்கரு போல் உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் அதை 1.45 மணி நேரத்துக்கு எந்தத் தொய்வும் இல்லாமல் நீட்டித்து, அழுத்தமாகச் சொன்ன விதத்துக்காகவே இந்தப் படத்தைக் கொண்டாடலாம்.
பிரகாஷன் தான் பார்த்த சம்பவத்தை ஊரில் உள்ள டெய்லர் வேணுவிடம் சொல்கிறான். சம்பவம் வேணுவின் நண்பன் மாதவன் தோட்டத்தில் நடந்ததால் அவன் காதில் முதலில் ஓதுகிறான் பிரகாஷன். கூடவே அது மாதவனின் மருமகள் நிர்மலாவோ என்ற சந்தேகத்தையும் கிளப்பிவிடுகிறான்.
அது நிர்மலாவா என்பதை உறுதி செய்ய, பிரகாஷனோடு, டெய்லர் வேணுவும் செல்கிறான். இருளில் தெரியும் உருவத்தைப் பார்த்தவுடனேயே 14 - 36 - 30, இது நிர்மலா தான் என்று அளவெடுத்துச் சொல்கிறான், டெய்லர் வேணு.
குக்கிராமத்து டெய்லர் வேணு மட்டுமல்ல, பரபரப்பான நகரத்தில் கூட நிர்மலாவைப் போல் கணவனுடன் இல்லாத பெண்கள் ஏரியா கண்காணிப்பு வளையத்தில் தான் இருப்பார்கள்.
இத்தனைக்கும் நிர்மலாவின் கணவன் முகுந்தன் வெளிநாட்டில் இல்லை. அவன், அவனது தம்பி முரளி, அப்பா மாதவன் எல்லோரும் தச்சு வேலைகளுக்காக அவ்வப்போது வெளியூர் சென்று வருபவர்கள் மட்டுமே.
ஆண் இல்லாத வீடு என்பது குடும்பத் தலைவன் மறைவு, வெளியூர், வெளிநாட்டு இருப்பு என்று எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக வைத்திருக்கிறது ஆணுலகம். அதன் மீது உண்மையில் ஊருக்கு இருப்பது அக்கறையல்ல; ஆராய்ச்சிப் பார்வை.
பிரகாஷனும், வேணுவும் தங்கள் ‘ஆராய்ச்சி’ முடிவுகளை முகுந்தன் தம்பி முரளியிடம் சொல்கின்றனர். முரளி அதை தந்தை மாதவனிடம் சொல்கிறான். பின்னர் ஊருக்கு வந்து தானே நேரில் உறுதி செய்ய வேண்டும் என்று முடிவு செய்கிறான்.
முதல் முறை பிரகாஷன், இரண்டாவது முறை பிரகாஷன் - வேணு, மூன்றாவது முறை முரளி அவனுடைய நண்பன் நித்தீஷ் என்று ‘இருளிலே தெரிந்தது நிர்மலாவா?!’ என்ற ஆராய்ச்சிப் படலங்கள் தொடர்கின்றன.
ஒரு பெண்ணை வேவு பார்ப்பதை ஏதோ புனிதமான பணிக்கு கூட்டுச் சேர்வதுபோல் ஊர்க்கார ஆண்கள் சேர்ந்து செய்வதை சிரிக்கச் சிரிக்க சொன்னாலும் சிந்திக்கவும் வைக்கிறார் இயக்குநர்.
பிரகாஷன் ஊர் வம்பன் என்றால் உழைக்கும் வேணுவும், முகுந்தனும், முரளியும், மாதவனும் அவனுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல.
முரளி திடீரென வீட்டுக்கு வருவது போவதை அவன் அம்மா விவரிக்கையில், “இந்த ஆண்களுக்கெல்லாம் வீட்டுப் பொம்பளைங்க சமைக்கவும், வீட்டை சுத்தம் செய்யவும் மட்டும் தான்” என்பார்.
குடும்பப் பெண் என்ற பெயரில் ஊதியமும் இல்லாமல், விடுமுறையும் இல்லாமல் குறைந்தபட்ச மதிப்பும் மரியாதையும் கூட இல்லாமல் கோடிக் கணக்கான பெண்கள் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பின்றி சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
படித்து சுய சம்பாத்தியத்தில் இருப்பது மட்டுமே திருமணமான பெண்களை முழுமையாக விடுவித்துவிட்டது என்றால், அதிலும் பற்றாக்குறை தான் நிலவுகிறது. ஒர்க் - லைஃப் பேலன்ஸ் என்ற வட்டத்துக்குள் சிக்கி பலநேரம் சமரசங்களில் மறைகிறது அவர்களின் சுயம்.
சரி, கதைக்குத் திரும்புவோம். முரளி தன் அண்ணியின் கள்ளத் தொடர்பை தானே நேரில் கண்டதாக உறுதிப்படுத்த முகுந்தனுக்கு அப்பா மாதவன் இரண்டு சாய்ஸ் தருகிறார். ஒன்று நிர்மலா (நிம்மியை) விவாகரத்து செய்துவிடு, இல்லாவிட்டால் நீ விரும்பினால் அவளை மன்னித்து அவளுடன் வாழ்க்கையைத் தொடரு.
ஒரு பெண் இப்படித்தான் என்று முடிவு செய்துவிட்டு அவளுக்கான நியாயத் தீர்ப்பையும் அவர்களாகவே எழுதிக் கொள்ளும் திமிரை ஆண்களுக்குக் கொடுத்தது யார்?
அந்தக் காட்சியைக் காணும்போது எனக்கு இந்தக் கேள்விதான் தோன்றியது!
அப்பாவின் உபதேசங்களோடு, முகுந்தன், முரளி வீடு திரும்ப ஆராய்ச்சிப் படலம் அடுத்தக்கட்டத்துக்கு நகரும். இந்தச் சமூகம் குடும்ப கவுரவத்தை பெண்ணின் நடத்தையில் பதுக்கி வைத்திருப்பதால், ஆலோசனைக்கு பெரியப்பா குடும்பத்தை நாடுகிறார்கள்.
ஆக, பிரகாஷன், வேணு, முரளி, மாதவன், நித்தீஷ், முகுந்தன் என்ற கோமாளிக் கூட்டத்தில் பெரியப்பாவும், அவர் மகன் மகேஷும் சேர்ந்து கொள்கிறார்கள்.
அங்கிருந்து படத்தில் காமெடிக் காட்சிகளுக்கு குறைவில்லாமல் செல்லும். நிர்மலா - வினோத்தை கையும் களவுமாகப் பிடிக்க வேண்டும் என்ற அந்த மூடர் கூடத்தின் முயற்சிகள் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.
குறிப்பாக, ஏதோ ஐஏஎஸ் பரீட்சைக்குப் போவதுபோல் முரளி தன் அம்மாவின் காலில் விழுந்து ஆசி கேட்கும்போது, “பஸ்ஸில் நடு சீட் கிடைக்கட்டும்” என்று அம்மா வழங்கும் ஆசி அதகளம்.
அதுபோலத்தான், தங்கள் ப்ளான் படி செயல்படுவதற்காக மகேஷ் தன் அம்மா மற்றும் மனைவி கீதாவிடம், “ஒரு வேலைக்காக நானும், அப்பாவும் வெளியில் செல்கிறோம். டிவியை அணைத்துவிட்டு தூங்கச் செல்லுங்கள்” என்று சொல்லித் திரும்பும்போது அவனது தாய் மகேஷ் சென்ற திசையை நோக்கி, “மூஞ்சியப் பாரு சீரியல் கில்லர் மாதிரி” என்பார்.
இந்தப் படத்தில் வரும் ஆண்கள் எல்லோருக்குமே மனைவி மீது நம்பிக்கை இல்லை. வீட்டிலிருக்கும் பெண்கள் மீது குறைந்தபட்ச மரியாதையும் கூட இல்லை.
திரைப்படத்தைத் தாண்டி சமூகத்தை எடுத்துக் கொண்டால் கூட பெரும்பாலான ஆண்களுக்கு சந்தேகம் என்பது ‘டார்மன்ட் வல்கனோ’ மாதிரி உறங்கிக் கொண்டிருக்கும் உணர்வு தான். அதேபோல் மரியாதை என்பதையும் பெரும்பாலான ஆண்கள் சரியாக உள்வாங்கிக் கொள்ளவில்லை.
பெண்கள் தங்கள் இணையரிடம், தந்தை, சகோதரரிடம், இன்னும் அவர்களுக்குப் பரிச்சியமானவர்களிடம் இருந்து எதிர்பார்க்கும் மரியாதை ததும்பும் வெற்று வார்த்தைகள் அல்ல; அது அவர்களின் உணர்வுகளுக்கு கிடைக்கும் அங்கீகாரம்.
இந்த அங்கீகாரத்தை படத்தின் எந்தவொரு ஆணும் அவர்கள் குடும்பத்துப் பெண்களுக்குக் கொடுத்திருக்க மாட்டார்கள். ஒருபடி மேலே சென்று, “பொண்ணுங்களை வைக்குற இடத்தில் வைக்க வேண்டும்; இல்லாவிட்டால் நம் தலையில் ஏறிவிடுவார்கள்” என்று டெய்லர் வேணு சொல்லும் போது அவர்களுடைய ஆணாதிக்கம் புரியும்.
படத்தின் இறுதிக் காட்சிக்கு நெருங்கும்போது 8 பேர் குழு போடும் ப்ளானும், ப்ளூ ப்ரின்ட்டும், அதை முரளி விரித்தவுடன் அவன் பெரியப்பா மேஜைக்குக் கீழ் கவிழ்ந்து பார்க்கையில் ‘கத்தி’ பட ரீ ரெக்கார்டிங் வருவதும் கண்களில் நீர் வழிய நம்மை சிரிக்க வைக்கும்.
நிர்மலாவையும் வினோத்தையும் கையும் களவுமாக பிடிக்கும் நாளும் வரும். இந்த முறை அந்த இருட்டு முத்தக் காட்சியைக் காண முகுந்தனும் முரளியும் குத்தவைத்திருப்பார்கள். நிர்மலா - வினோத்தை குளியலறையில் பூட்டிவைத்து ஒரு கூட்டமே திரளும். அதில் முகுந்தன், முரளியின் சகோதரிகளும் இருப்பார்கள். களேபரங்களைக் கண்டு அங்கு தாயும் வருவார். கூடவே நிர்மலாவும் வருவார்.
நிர்மலா என்ட்ரியில் தான் ட்விஸ்ட். வினோத்தின் ஜோடி நிர்மலா இல்லையென்றால் அவனுடன் குளியலறைக்குள் இருப்பது யார் என்ற பதற்றம் ‘மிஷனில்’ இணைந்த முரளி அண்ட் குழுவை தொற்றிக் கொள்ளும். கதவைத் திறந்தால் வெளியில் வருவாள் கீதா (மகேஷின் மனைவி).
ஆக, முரளி தனது உடன்பிறந்த அண்ணன் மனைவியை அல்ல ஒன்றுவிட்ட அண்ணன் மனைவியை எக்ஸ்போஸ் பண்ணியிருப்பான். அவனுக்கு ஏதோ ஒருவகையில் ‘மிஷன் அக்கம்ப்ளிஷ்டு’. ஆனால், அவமானம் மாதவன் குடும்பத்திலிருந்து அவர் அண்ணன் குடும்பத்துக்கு ஷிஃப்ட் ஆகிவிடுவதால் இந்த மிஷனே நிர்மலாவை எக்ஸ்போஸ் செய்யத்தான் என்று போட்டுடைப்பான் மகேஷ்.
இந்தப் படத்தின் இறுதிக் காட்சியை எட்டியபோது எனக்கு எழுத்தாளர் இமையத்தின் ‘நறுமணம்’ சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றிருந்த ‘துபாய்க்காரன் பொண்டாட்டி’ கதை நினைவுக்கு வந்தது.
அந்தக் கதையில், துபாயில் வேலை செய்யும் மதியின் மனைவியான பத்மாவதி சந்தர்ப்ப சூழ்நிலைகளால் கண்ணன் என்ற இளைஞனுடன் திருமணத்தைத் தாண்டிய உறவில் இருக்கிறாள். அவனுக்குப் பணமும், நகையும் வாரிக் கொடுக்கிறாள். ஆனால் அதற்காக மட்டுமே பழகிய கண்ணன், மெல்ல மெல்ல அவளை விட்டு விலகுகிறான். ஒரு நாள் அவனிடம் பத்மாவதி நகையை திரும்பக் கேட்க, “ஒரு வருஷம் உனக்கு வேலை செஞ்சதுக்கு கழிஞ்சு போச்சு” என்ற அத்தனை நாராசமாகப் பேசுகிறான். இதை அவளது மாமி, மாமன், நாத்தனாரும் பார்த்து விடுகின்றனர். அடுத்த சில நாட்களில் கணவன் மதி திடீரென ஊருக்கு திரும்புவதாகச் சொல்ல பத்மாவதி அந்த இரவில் எதிர்கொள்ளும் மனப் போராட்டங்களும் அவள் எடுக்கும் முடிவும் தான் கதை.
என்னைப் பற்றி இந்த ஊர் என்னவெல்லாம் கதை கட்டும் என்பதே பத்மாவதியின் அங்கலாய்ப்பாக இருக்கும். அந்தக் கதையில் மாலதி, சந்திரா என்று இன்னும் இரண்டு பெண்களும் வருவார்கள். அவர்களும் இதுபோன்ற சூழலில் இருந்தவர்கள். அவர்கள் அதை எப்படி எதிர்கொண்டார்கள் என்றும் கதை பேசும்.
‘அவிஹிதம்’ படத்தில் அத்தனை களேபரமும் தன் புகுந்து வீட்டு ஆண்கள் தன்னை சந்தேகப்பட்டு நிகழ்த்திய வேட்டை என்று தெரிந்தபோது நிர்மலா நொறுங்கிவிடுவாள். அப்போது அவளுக்கு அவள் மாமியார் ஒரு ஆப்ஷன் தருவார். “வீட்டுக்குள் வருவதாக இருந்தால், உன் புருஷன் கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டு வா” என்பார். கூடவே அண்ணிக்கு எதிராக சதித் திட்டம் தீட்டிய மகளை “நீ இனி வீட்டுக்கு வராதே..” என்றும் சொல்லிச் செல்வார்.
இங்கு இரண்டு வகை பெண்கள் உண்டு. ஒன்று சக பெண்ணுக்காக நிற்கும் நிர்மலாவின் மாமியார் போன்றவர்கள். இன்னொன்று ‘Patriarchal bargain’-ல் தங்களை இழந்து சக பெண்ணுக்கு எதிராக நிற்கும் நிர்மலாவின் நாத்தனார்கள் போன்றவர்கள்.
‘துபாய்க்காரன் பொண்டாட்டி’ சிறுகதையில் பத்மாவதி எடுத்த முடிவை கீதா எடுக்க மாட்டாள். நான் இருந்தாலும், இறந்தாலும் என்னைப் பற்றி இந்த ஊர் கதை கூறும் என்று நடுங்கி ஒரு முடிவை பத்மாவதி எடுப்பாள். மதியை நேரில் எதிர்கொள்ள துணிவற்றவளாக அவள் அந்த முடிவை பத்மாவதி எடுப்பாள்.
ஆனால், “நான் இன்னொரு உறவைத் தேட என்ன காரணம்” என்பதை மகேஷுக்கு விளக்குவாள். “எனது உணர்வுகளுக்குக் காது கொடுத்தவன் வினோத் மட்டுமே. அவனுடன் நான் செல்கிறேன்” என்றும் துணிந்த சொல்வாள்.
திருமணம் தாண்டிய உறவுகளை நியாயப்படுத்த முடியாது. ஆனால் அதனை முறித்து இன்னொரு உறவைத் தேடும் உரிமை ஆணுக்கு எளிதாக இருக்கும்போது பெண்ணைச் சுற்றி மட்டும் ஏன் ஆணுலகம் கதை சொல்ல தயாராக இருக்கிறது என்பதே எனது கேள்வி.
ஒரு மோசமான மிஷனை முன்னெடுத்த மகனுக்கு, மருமகள் மூலம் ஓங்கி ஓர் அறைவிட்ட அம்மாவும், ஒரு மோசமான உறவு வேண்டாம் என்று மாட்டிக் கொண்ட பின்னராவது யோசித்து முடிவெடுத்த கீதாவும் முதுகெலும்புள்ள மனிதர்கள்!
| தேவதைகள் இன்னும் வலம் வருவர் |
தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in
‘திரை தேவதைகள்’ முதல் 25 அத்தியாயங்கள் இப்போது புத்தகமாக வெளியாகி இருக்கிறது. நூலை வாங்க விரும்புவோருக்கான இணைப்பு > திரை தேவதைகள்