புறணி பேசுதல்... இது பெண்களுக்கே உரித்தான பழக்கம் என்று அடையாளப்படுத்தப்பட்டு, அது உண்மை என்று சமூகத்தின் பொதுபுத்தியில் நம்பவைக்கவும் பட்டிருக்கிறது. ஆனால், ஆண்கள் பேசும் புறணிகளின் பின்னால் எத்தனை சூட்சமங்கள், எத்தனை சுயநலங்கள், எத்தனை எத்தனை குதர்க்கங்கள் இருக்கும் என்று அறிந்துகொள்ள 2023-ம் ஆண்டு மலையாளத்தில் ஆனந்த் ஏகர்ஷி எழுத்து, இயக்கத்தில் வெளியாகி தேசிய விருது வென்ற ‘ஆட்டம்’ (Aattam) மலையாளம் படத்தை அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
ஒளி நிறமாலை (ஸ்பெக்ட்ரம் ஆஃப் கலர்ஸ்) பற்றி நாம் அனைவரும் பள்ளிப் பருவத்தில் படித்திருப்போம். அதில் அடர்த்தி அதிகமான நிறத்திலிருந்து குறைந்த நிறம் வரை அலைநீளங்களின் அடிப்படையில் நிறங்கள் அணிவகுத்திருக்கும். அதுபோல், பெண்ணுக்கான நீதியை ஆண்கள் அணுகுவதிலும் அலைநீளங்கள் உள்ளன.
நம் நாயகி அஞ்சலி ஒரு பாலியல் சீண்டலுக்கு உள்ளாகிவிட, அவளைப் பற்றி ‘பேசிக்கொண்டே...’ இருக்கும். அவளது சகாக்கள் அந்த ஒளி நிறமாலையில் எந்த அடர்த்தியில் நிற்கிறார்கள் என்பதுதான் மையம். தன்னை ஒரு தராசில் நிறுத்தி மதிப்பீடு செய்ய முயன்ற 12 ஆண்கள் மீது நாயகி வெகுண்டெழுவதே ‘ஆட்டம்’.
படத்தில் பிரதானமானவர்கள் 13 நாடகக் கலைஞர்கள். அதில் ஒருவர்தான் ஒரே பெண் பாத்திரமான அஞ்சலி. இவர்கள் எல்லோருக்கும் நாடகம் நடிப்பது என்பது உப தொழில், பிழைப்புக்கு வெவ்வேறு தொழிலில் இருக்கிறார்கள். ஓய்வு பெற்ற பத்திகையாளராக இருக்கும் மதன், சினிமா நடிகராக இருக்கும் ஹரி, டாக்சி ஓட்டுநர் நந்தன், பெட்ரோல் பங்க் ஊழியர் அஜி, உணவகப் பணியில் இருக்கும் வினய் என பல தொழில் சார்ந்தவர்கள். இவர்களில் அஞ்சலிக்கும், வினய்க்கும் காதல் இருக்கிறது. அதுபற்றி அரசல், புரசலாக குழுவினர் பேசிக் கொண்டாலும் நேரடியாக யாரும் அவர்களிடம் கேட்பதில்லை. நேரடியாகக் கேட்காமல் பேசிக் கொள்வதில்தான் புறணியின் சுகமே இருக்கும் போல.
புறணி பேசும் ஆணுலகம் பற்றிய ‘ஆட்டம்’ படம், எழுத்தாளர் கிரிஷ் கர்னாடின் ‘ஹயவதனா’ நாடகத்தை குழுவினர் அரங்கேற்றுவதில் இருந்து தொடங்குகிறது. ‘ஹயவதனா’ என்றால் குதிரையின் முகம் என்று பொருள். அந்த நாடகம் கொஞ்சம் புராணம், கொஞ்சம் கிராமியப் பின்னணி பிணைந்து உருவாக்கப்பட்ட புனைவு.
‘ஹயவதனா’வை நாடகக் குழுவினர் மிக நேர்த்தியாக அரங்கேற்ற, அதனைப் பார்க்கவந்த வெளிநாட்டு தம்பதி ஒன்று அவர்களுக்கு தங்களுடைய ரிசார்ட்டில் விருந்து வைக்கிறது. நாடகக் குழு மொத்தமும் அவருடைய ரிசார்ட்டுக்கு செல்கிறது. அந்த ரிசார்ட்டில் மது விருந்தில் மகிழ்ந்திருந்துவிட்டு எல்லோரும் உறங்கச் செல்கின்றனர். அடுத்த நாள் எல்லோரும் கிளம்புவதே திட்டம். ஆனால் அஞ்சலி மட்டும் அதிகாலையிலேயே அங்கிருந்து புறப்பட்டு விடுகிறாள். அவளது காதலனுக்குகூட என்ன காரணம் என்று தெரியவில்லை. 2 நாட்களுக்குப் பின்னர் அஞ்சலியே நேரில் வந்து, தான் ரிசார்ட்டில் ஜன்னல் அருகே தூங்கிக் கொண்டிருந்தபோது தன்னிடம் ஹரி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறுகிறார்.
ஏற்கெனவே குழுவில் தனது ஹீரோ வாய்ப்புகளை வெள்ளித் திரை நடிகர் என்பதால் பறித்துக்கொண்ட ஹரி மீது வினய்க்கு கடும் கோபம் உண்டு. அதில் தனது காதலி அஞ்சலியை அவன் பாலியல் தொந்தரவு செய்தான் என்பது இன்னமும் அவனை கோபம் கொள்ளச் செய்கிறது.
அஞ்சலி தன்னிடம் சொன்ன பாலியல் சீண்டல் புகாரை குழுவின் முக்கிய நபரான மதனிடம் கொண்டு செல்கிறான் வினய். அதன்பின்னர் அந்தப் புகாரை நாடகக் குழு மொத்தமும் எப்படிக் கையாள்கிறது என்பதே திரைக்கதை.
அந்தப் புகாரைப் பற்றி 11 ஆண்களும் பேசுகிறார்கள். வீட்டுக்கு வெளியே திண்ணையில் அமர்ந்து கொண்டு, வீட்டுக்குள்ளே தேநீர் அருந்திக் கொண்டு, வந்த இடத்தில் ப்ளம்பிங், எலக்ட்ரீஷன் வேலை செய்து அன்றைக்கான கூலியைத் தேத்தலாமே என பணி செய்து கொண்டு, கொஞ்சம் விவாதம் காரசாரமானால் தம், திருட்டுத்தனமாக வோட்கா அடித்துக் கொண்டு, மதியம் ஸ்விகியில் உணவு ஆர்டர் செய்து சாவகாசமாக உணவருந்திக் கொண்டு... ஒரு பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் சீண்டலைப் பற்றிப் பேசுகிறார்கள்.
அஞ்சலி மீது அத்தனை முன்முடிவுகள், அஞ்சலி மீது அத்தனை சந்தேகங்கள், அஞ்சலி மீது அவதூறுகள், அஞ்சலிக்கு நீதி கிடைக்கச் செய்வதில் நிகழ்த்தப்படும் சமரசங்கள் என்று அந்த 11 பேரின் உரையாடல்கள் மூலம் இந்தச் சமூகத்தின் பாலின அரசியலை பிரமாதமாகப் படமாக்கியிருப்பார் இயக்குநர்.
நாம் ஏற்கெனவே ஆரம்பத்தில் பேசினோமே ‘ஸ்பெக்ட்ரம் ஆஃப் கலர்ஸ்’, அதில் இந்த 12 பேரையும் பொருத்தும் அளவுக்கு அவர்களின் பேச்சு அமைந்திருக்கும்.
தனக்கு நேர்ந்த அவலத்தை தன்னுடன் உறவில் இருக்கும் வினய்யிடம் கூறும்போதே, ‘இந்தச் சம்பவத்தைப் பற்றி நான் வேறு யாரிடமும் விளக்கிப் பேச விரும்பவில்லை’ என்று தெளிவாகச் சொல்வாள். ஆனால், அதை விவாதப் பொருளாக்கிவிட்டிருந்த வினய்க்கு, ஹரியை குழுவை விட்டு நீக்க வேண்டும் என்பதே பிரதான இலக்கு. அதற்காக அந்தப் புகாரை மதனிடம்தான் அஞ்சலி சொன்னாள் என்று மொத்தக் குழுவையும் மதன் ஒப்புதலோடு நம்பவைப்பான்.
ஆரம்பத்தில் மதன் தன்னிடம் அஞ்சலி நேரில் சந்தித்துக் கூறியதாக புகாரை விவரிக்கவும், அனைவரும் அக்கறையுடன் ஓர் அதிர்ச்சியை முன்வைக்கிறார்கள். அந்த அக்கறையை, இங்கே நடக்கும் பிஞ்சுக் குழந்தை பாலியல் வன்கொடுமை முதல் கல்லூரிப் பெண்ணுக்கு இழைக்கப்படும் கொடுமை வரை எல்லாவற்றையும் பிரேக்கிங் நியூஸாக அறியும்போது நம் சமூகம் முதலில் ‘உச்...’ கொட்டுவதோடு தொடர்புப்படுத்திக் கொள்ளலாம். அப்புறம்தான் வரிசையாக ‘மாஸ்க்’குகள் முகத்தில் ஏறும். பாதிக்கப்பட்டவளை நோக்கி சந்தேகங்கக் கேள்விகள், டிடெக்டிவ் வேலைகள், குற்றச்சாட்டுகள் முதலானவை கட்டவிழ்க்கப்படும்.
இங்கேயும் அதுதான் நடக்கும். உதாரணத்துக்கு ஒரு காட்சியை மட்டும் குறிப்பிடலாம். அந்தச் சம்பவம் ஹரி மது அருந்தியதால் நடந்தது என்று சொல்லும் செல்வம், ‘இனி குழுவில் யாரும் மது அருந்தக் கூடாது’ என்ற ‘உயரிய சமூகச் சிந்தனை’யை முன்வைப்பார். அப்போது வினய் குறுக்கிட்டு ‘நாமெல்லோரும் தான் குடித்திருந்தோம். நம்மில் யாருக்கும் எப்பவும் அஞ்சலி மீது அப்படியான எண்ணம் கூட வந்ததில்லையே’ என்று எல்லா ஆண்களும் மது போதையில் அப்படிச் செய்வதில்லை என்று நாம் வேறு குடித்துத் தவறு செய்யும் ஆண்கள் வேறு என்று தன்னையும், மற்ற 10 பேரையும் சேஃப்கார்டு செய்வான்.
இங்கே தவறு செய்யும் ஆண்கள் ஸ்பெக்ட்ரத்தில் ஒரு நிற அடர்த்திக்குள் அடங்குவார்கள் என்றால், எல்லா ஆண்களும் அப்படியல்ல என்று முட்டுக்கொடுப்பவர்கள் ஒரு ரகம். அதுதான் வினய்.
அடுத்து ஒருவர் ‘சம்பவம் நடந்து ஒரு வாரத்துக்கு அப்புறம் ஏன் இந்தக் குற்றச்சாட்டை அஞ்சலி வைக்கிறார்?’ என்ற ‘மகத்தான சந்தேகம்’ ஒன்றை எழுப்புவார். ‘மீ டூ’ (Me Too) இயக்கத்தின் மீது முன்வைக்கப்பட்ட/படும் முக்கிய ‘முட்டு’க் கேள்வி இதுதான்.
கூட்டத்தில் வினய் தவிர இன்னொருவரும் ஹரியை குழுவை விட்டு நீக்குவது தவிர வேறு எந்த முடிவிலும் தனக்கு உடன்பாடில்லை என முரட்டுப் பிடிவாதம் காட்டுவார்.
இப்படியாக முதல் ரவுண்ட் ஆலோசனையோடு தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள கலைபவர்கள் தனித்தனியாக சம்பவத்தைப் பற்றி ஆலோசித்துக் கொள்வார்கள். அதில் அஞ்சலியின் அரகன்ஸ், அவளின் மதுப் பழக்கம், அவளின் ஆடைத் தேர்வு என எல்லாமே அலசி ஆராயப்படும். ‘பெண்களே இப்படித்தான்; அவர்களை நம்பக்கூடாது’ என்ற க்ளிஷே ஸ்டேட்மென்ட்களை உதிர்ப்பர்.
ஹரியை குழுவில் இருந்து நீக்க மதன், வினய், சுதீர் பிட்ச் பண்ண, சிலர் ‘குழு என்ன முடிவோ அதுவே எங்கள் முடிவு’ என்று சொல்ல, சிலர் இன்னும் முழுமையாக உடன்படாமல் இருக்க, ஒரு முடிவு எடுக்கப்படும். ஹரியை குழுவில் இருந்து நீக்க இயக்குநருக்கு பரிந்துரைக் கடிதம் எழுதி, அதில் கையெழுத்திடுவது என்பதே அந்த முடிவு. அனைவரும் கையெழுத்தும் இடுவார்கள். ஆனால், அதன் பின்னணியில் இருப்பதும் கூட ‘நீதி கிடைக்க வேண்டும்’ என்பது அல்ல, அஞ்சலி இந்தப் பிரச்சினையை பொதுவெளியிலோ, போலீஸிலோ பேசி நாடகக் குழுவுக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என்பதே.
அந்த நேரத்திலும் கூட, புகார் கொடுத்த அஞ்சலியை கூப்பிட்டு நேரில் இதைத் தெரிவிக்க வேண்டும் என்று ஒரு சில குரல் ஒலிக்கும்.
அஞ்சலி வருவாள். அவள் வரும் வழியிலேயே வினய், அவளிடம் சில பொய்களைச் சொல்லச் சொல்லி நிர்பந்தித்து கூட்டிக் கொண்டு வருவான். ஆனால், அஞ்சலிக்கு அதில் உடன்பாடு இருக்காது. அஞ்சலி வருவதற்குள் மதனை சந்திக்க ஹரி வருவான். யாரைப் பற்றி விவாதிக்கப்படுகிறதோ அவனே வருகிறான் என்று எல்லோரும் தடம் தெரியாமல் ஒளிந்து கொள்வார்கள். ஆனால், ஹரி வருகையும், மதனிடம் அவன் சொல்லும் விஷயமும்தான் கதையின் ட்விஸ்ட்.
இடைவேளைக்குப் பிறகு என்று திரைப்படத்தில் வருவதுபோல் இந்த அத்தியாயத்தில் ஹரி வருகைதான் இடைவேளை. ஹரி வந்து சென்றது பற்றி எல்லோரும் ஆலோசிப்பார்கள். நாம் ஏன் அஞ்சலியை சமாதானப்படுத்தி சமரசம் செய்து ஹரி சொன்ன ஆஃபரை ஏற்கக் கூடாது என்ற ஆலோசனைகள் விரிந்திருக்கும்.
படத்தில் ஆலோசனை தொடங்கும் நாள், ஒரு சாதாரண நாளாகவே காட்டப்படும். ஆனால், சட்டென வானிலை மாறி மழை பெய்து கொண்டிருக்கும். அதுபோலத்தான் அவர்களின் மனமும் சட்டென மாறியிருக்கும். அஞ்சலி வருவதற்குள் அவளிடம் எப்படிப் பேச வேண்டும், என்ன மாதிரி பேச வேண்டும், வார்த்தைகள் எப்படியிருக்க வேண்டும் என ஒரு மினி ஒத்திகையையே பார்த்து முடித்திருப்பார்கள்.
அஞ்சலியுடன் வந்த வினயையும் நந்தன் வாசலிலேயே மறித்து விஷயத்தைச் சொல்லி வைப்பான். அஞ்சலி வருவாள், அவளை சமாதானப்படுத்த அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் எல்லாமே அவளை கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கும். அதிலும் செல்வம், “நீயும் போதையில் இருந்ததால் உன் பக்கம் ஏதேனும் தவறு இருக்கிறதா என யோசி” என்று சொல்லும் தருணம், அவள் தன்னை எதை நோக்கி அவர்கள் திருப்புகிறார்கள் என்பதை அஞ்சலி உணர்ந்திருப்பாள்.
பின்னர் மீண்டும் அவளை சமாதானப்படுத்த மொத்தக் கூட்டமும் முயற்சிக்கும். இந்த முறை அவளிடம் சம்பவம் பற்றி விசாரணைகள் நீளும். கிட்டத்தட்ட காவல் நிலையத்தில், நீதிமன்றத்தில் கேட்கப்படும் விஷயங்கள் எல்லாம் கேட்கப்படும். குறுக்கு விசாரணைகள் வேறு வரும். அஞ்சலி இவர்கள் எல்லோரும் நமக்காக நாள் முழுவதும் ஆலோசித்திருக்கிறார்கள் என்று நம்பி பேசுவாள். அன்று தான் விவரிக்க விரும்பவில்லை என்று சொன்ன விஷயத்தை விவரிப்பாள். புறணியாக பேசப்பட்டவை எல்லாம் கேள்விகளாகப் பாயும். அது ஹரிதானா என்று உறுதி செய்ய சாட்சிகள் கேட்கப்படும்.
தான் உருகி உருகி நேசிக்கும் வினய்யிடம் அவள் அத்தனை வேதனையோடு சொல்லும் வாக்கியம்...
இந்த மாதிரி ஒரு சூழ்நிலையை நான் எதிர்கொள்ள வேண்டாம் என்று நினைத்துதான், யாரிடமும் சொல்லாதே என்றேன்!”அந்தக் குரல் அஞ்சலியுடைய தனித்த குரல் மட்டுமல்ல. இங்கே இப்படி கேள்விக்கு உள்ளாக்கப்படும் அத்தனை பெண்களின் குரலும்தான் அது. பாலியல் வன்கொடுமைகள், அலுவலகப் புறணிகள், பேருந்து, ரயில் காமக் கொடூரங்கள் என்று அன்றாடம் அனுபவிக்கும் அத்தனை விக்டிம்களின் குரல் அது.
அவள் சாட்சியாக ஹரியின் கார் சாவியை காட்டிய பின்னர் கூட, அது ஹரிதான் என்று நம்ப மறுப்பவர்கள், அந்தக் குழுவில் இருக்கும் இன்னும் சிலர் மீதும் சந்தேகப் பார்வையை வீச்சுவார்கள்.
தன்னை சீண்டியது ஹரிதான் என்று நம்பிக் கொண்டிருந்தவள், அது அவனா அல்லது இப்போது நம்மைச் சுற்றி நிற்கும் இவர்களுள் ஒருவரா என்று கலங்கிப் போவாள். ஒரு விக்டிமை மேலும் மேலும் விக்டிமைஸ் செய்யும் போக்கு இந்தியச் சமூகத்தில் எத்தனை ஆழமாகப் புரையோடிக் கிடக்கிறது என்பதை ‘ஆட்டம்’ அஞ்சலியைவிட யாரும் பிரமாதமாகச் சொல்லியிருக்க முடியாது.
அத்தனை கூத்துகளையும் பார்த்து முடித்த பின்னர் அஞ்சலிக்கு துணிச்சல் வரும். எல்லாவற்றையும் சொல்வாள், “அன்று தன்னை சீண்டியது ஹரி என்பதற்கு இந்த கார் சாவியும், அவன் சென்ட் வாசனையும்தான் எனக்கு சாட்சி.
நானும் வினய்யும் ஓராண்டாகவே உறவில் இருக்கிறோம். இதைச் சொல்ல அவனுக்குப் பயம், நானும் பயந்திருக்கிறேன். ஆனால், இனி யாருக்கும் பயப்படப் போவதில்லை. இது ஒரு சிக்கலான உறவு என்று தெரியும். ஆனால் இருவரும் காதலிக்கிறோம்” என்பாள். ஆனால், எதையும் ஆமோதிக்காமல் நெளிவான் வினய்.
அஞ்சலி அங்கிருந்து புறப்பட்டுச் செல்வாள். காலையில் இருந்து என்ன நடந்தது, ஹரியின் ஆஃபர் என்ன, ஏன் சமரச முயற்சி என்று பேருந்து நிலையத்தில் வினய் விவரிப்பான். அவனிடம் அஞ்சலி ஒரே ஒரு கேள்வி கேட்பாள்... “ஹரியின் ஆஃப்ரை நீ ஏற்றுக் கொள்வாயா?” என்று. “நீ இல்லாமல் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என்று வினய் சொல்லும் போதுதான் அவளுக்கு இன்னும் தெளிவு பிறக்கும்.
2026 ஜனவரியில் ஒரு கேரள க்ரைம் சம்பவம் ட்ரெண்ட் ஆனதையும், அதன் தாக்கத்தையும் இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். ஒரு பெண் ‘ரீல் வியூஸ்’ நோக்குடன் பேருந்தில் மிகவும் மலினமாக நடந்துகொண்டதால் ஓர் ஆணின் உயிர் பறிபோனதாக கூறப்படும் சம்பவம் அது. (வழக்கு நிலுவையில் உள்ளதால் வார்த்தைகள் கவனமாக கையாளப்பட்டுள்ளன). இந்த வழக்கில் சட்டம் அந்தப் பெண்ணுக்கு உரிய தண்டனையை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மாண்ட உயிருக்கு எதுவுமே ஈடில்லை என்றாலும், குற்றம் நிரூபணமாகி நீதி வென்றால், அவரை இழந்தவர்களுக்கு குறைந்தபட்சம் ஆறுதலாவது மிஞ்சும்.
ஆனால், அந்தச் சம்பவத்தின் நீட்சியாக கேரளாவில் இருந்து நிறைய மீம் கன்டென்ட்டுகள் வெளியானதைப் பார்க்க முடிந்தது. பயணங்களிலும், பொது இடங்களுக்குச் செல்கையிலும் ஆண்கள் தங்களைச் சுற்றி அட்டைப் பெட்டிகளைக் கட்டிக் கொண்டு செல்வது போன்ற வீடியோக்கள் அவை. அப்படியென்றால், காலங்காலமாகவே பஸ், ரயில், பணியிடம் என அங்கிங்கெனாதபடி சீண்டல்களை அனுபவிக்கும் பெண்கள் ‘ஆஸ்ட்ரோனாட்’ உடைதானே தரித்துக்கொள்ள வேண்டும்.
இந்த வாதம் என்பது ரீல்ஸ் எடுத்த அந்தப் பெண்ணுக்கு ஆதரவானது அல்ல; ஒரு பெண்ணுக்கான அநீதியையும், ஓர் ஆணுக்கான அநீதியையும் இந்தச் சமூகம் எந்தத் தராசில் வைக்கிறது என்பதற்கான ஒப்பீடு மட்டுமே.
சரி, நாம் அஞ்சலிக்கு வருவோம். நெடில்களின் ஆதிக்கம் மிகுந்த அந்த நாடகக் குழுவில் இருந்து முற்றிலும் விலகி வெகுண்டெழுந்து செல்பவள் சில வருடங்களுக்கு பின்னர் தனியாக ஒரு நாடகக் குழு உருவாக்கி, தனக்கு நேர்ந்த துயரத்தையே ஒரு நாடகமாக அரங்கேற்றுவாள் அஞ்சலி. அன்று தன் மீது பாலியல் தாக்குதல் தொடுத்தது யார் என்பதை அவள் கண்டுபிடித்திருப்பாள். அந்த 12 பேரில் யாராக இருக்கும் என பார்வையாளர்களாகிய நமக்கு ஆர்வம் மேலிடும்போது, நம் நெற்றிப் பொட்டிலும் விளாசத் தவறியிருக்க மாட்டாள் அஞ்சலி.
விவிலியத்தில் கார்டியன் ஏஞ்சல்ஸ் போல தவறு செய்பவர்கள், கீழ்ப்படியாதவர்களை தண்டிக்கும் ஏஞ்சல்களும் உண்டு. ஏனோ, அஞ்சலியும் அந்த ஏஞ்சல்களை நினைவுபடுத்துகிறாள். கூடவே, ஒளி நிறமாலையில் அடர்த்தி அதிகமான நிறத்திலிருந்து குறைந்த நிறம் வரை அலைநீளங்களின் அடிப்படையில் நிறங்கள் அணிவகுத்திருப்பது போல், பெண்ணுக்கான நீதியை ஆண்கள் அணுகுவதிலும் அலைநீளங்கள் உள்ளன என்பதும் புரியும்.
நம் பணியிடத்தில் ஓர் ஆணையும் பெண்ணையும் ‘சேர்த்து வைத்து’ புறணி பேசி சிற்றின்பம் காணும்போதும் சரி, அதே பணியிடத்தில் பெண்களை ‘அப்ரோச்’ செய்யும் ‘மேல்’அதிகார வர்க்கத்தினர் குறித்து புறணியாகக் கூட ஏதும் பேசாமல் அடங்கிப் போகும்போதும் சரி, நம்மைச் சுற்றிலும் அஞ்சலிகள் வியாபித்திருக்கின்றனர் என்பதை மறந்துவிட வேண்டாம்.
| தேவதைகள் இன்னும் வலம் வருவர்... |