‘உலகத்தில் எதுவும்... தனிச்சு இல்லையே... குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல...’
பழநிபாரதியின் இந்தப் பாடல் வரிகள் என் தனிப்பட்ட வாழ்வின் சோகங்களைக் கடக்க உதவிய ‘மன ஊட்டச்சத்து’ மருந்து.
மனித மனங்களைப் போல் சிக்கலான வலைப்பின்னல் கொண்டதாக இவ்வுலகில் எதுவும் இருந்துவிட முடியாது. அதீத ஆசை, கோபம், துயரம் இன்னும்பிற உணர்வுகள் காலப்போக்கில் மனித மனங்களில் புதைப் படிமம்போல் அப்பிக்கொள்ள, அதன் விளைவாக தன்னைச் சுற்றி நூறுமுகங்கள் இருந்தாலும் கூட தனித்து நிற்பவராக ஒருவரை உணர வைத்துவிடுகிறது.
அப்படியான மனச்சிக்கலில் சிக்கிய ஒருவனுக்கும், பால்ய பருவ ‘நைட்மேர்’ தருணத்துக்கும், வாழ்க்கை ரொட்டீன்களுக்குள் தனது யதார்த்த மகிழ் தருணங்களை தொலைத்த ஏக்கங்களுக்கும் இடையே ஊசலாடும் ஒருத்திக்கும் இடையேயான எதிர்பாரா திடீர் சந்திப்பும், அவர்களுக்கு இடையே அரும்பி ஆழமாகும் ஆத்மார்த்த நட்பும், அவர்களை எப்படி ‘குழலில் ராகம், மலரின் வாசம் போல்’ உணரவைக்கிறது என்பதுதான் ‘8 A.M. Metro’ படத்தின் கதை.
அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது. ஒரு பார்வை திரையிலும், இன்னொரு பார்வை வேறு வேலையிலும் வைத்துக் கொண்டு பார்க்கக் கூடிய படம் அல்ல. உங்களால் 1 மணி நேரம் 56 நிமிடங்கள் முழுமையாக கால தேவனிடம் ஒப்படைக்க முடிந்தால் ‘8 A.M. Metro’-வில் ஏறிக் கொள்ளுங்கள். அங்கே இராவதியும், ப்ரீத்தமும் உங்கள் விரல்பற்றி இதமாக பயணப்பட வைப்பார்கள்.
படத்தில் இராவதியாக (சயாமி கேர்), ப்ரீத்தம் ஆக (குல்ஷன் தேவய்யா) நடித்துள்ளனர். இராவதி மகாராஷ்டிராவில் ஒரு சாமானிய இந்தியக் குடும்ப வாழ்க்கை வட்டத்துக்குள் வசிக்கிறாள். அவளுடைய சகோதரி ரியா ஹைதராபாத்தில் தலைப்பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறாள்.
ரியாவுக்கு துணையாகச் செல்ல வேண்டிய சூழல் இராவதிக்கு. ஆனால், கணவனால் உடன் வர இயலவில்லை. ரயில் பயணங்கள் மீது சிறு வயது சம்பவத்தால் மனோ பீதி கொண்டவள், வேறு வழியில்லாமல் தங்கைக்காக ஹைதராபாத் புறப்படுகிறாள். ரயில் நிலையம், இரையும் அதன் ஹார்ன்கள், பெட்டிகளுடன் நீண்டு கிடக்கும் ரயில் என எல்லாமே அவளை பயமுறுத்துகிறது.
ரயிலில் பெட்டி நிறைய ஆட்கள் இருந்தும் இராவுக்கு மூச்சு முட்டுகிறது. ஒரு டைரியை எடுத்து, தன்னை துரத்தும் கடும் பயத்தை கவிதையாக்கி தன்னைத் தானே ஆசுவாசப்படுத்த முயற்சிக்கிறாள். அத்துடன் முடிந்துவிடவில்லை அவளது ‘ரயில் பய(ண)ம்’, மருத்துவமனையில் தங்கையை சந்தித்தால் ‘வீட்டுக்கு மெட்ரோ ரயிலில் போ’ என்று சிபாரிசு செய்கிறாள்.
சந்திக்க விரும்பாத பயத்துக்குள் சூழலால் அகப்படும் இராவை மெட்ரோ ரயில் நிலையத்தில்தான் முதன்முதலில் சந்திக்கிறான் ப்ரீத்தம். மறைக்க முடியாத இராவதியின் பீதியும், செய்வதறியாத ப்ரீத்தம்மின் ஆற்றாமையும் படத்துக்குள் நம்மை ஈர்த்துவிடுகிறது.
முன்பின் அறியாத நபர் ஆறுதலாகயிருக்க எடுத்துக் கொண்ட முயற்சியால் தற்காலிகமாக மீண்டு வீடு வந்து சேரும் இராவுக்கு அடுத்தடுத்த பயணங்களுக்கும் மெட்ரோ ரயில்தான் சிபாரிசு செய்யப்படுகிறது.
மறுநாள் காலை 8 மணிக்கு தொடங்கி அடுத்த சில நாட்கள் காலை, மாலையென நீளும் இராவின் மெட்ரோ ரயில் பயணங்கள் ஊடான உரையாடல்களும், அதில் பரிமாறப்படும் ஆறுதல்களும், இரா தன்னை வதைத்த பய உணர்வுகளை விட்டு விடுதலையாவதும், ப்ரீத்தம் விடுதலையை நோக்கி நகர்வதும்தான் மீதிக் கதை. புதிய ரொட்டீன் இராவுக்கு புதுவாழ்வு தருகிறது.
மனநலம் சார்ந்த பிரச்சினைகள் உள்ளவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்கிவைக்காமல், ரசிக்கும்படி கண்ணியமாகக் காட்டியதற்காகவும், அவர்கள் வாயிலாக ஆழமான உண்மைகளை சமூகத்துக்கு கூறியதற்காகவும் இயக்குநரைப் பாராட்டலாம். அதுவும் அதை, ஓர் ஆண் - பெண் உறவு மூலமாகவும், அது பலமாக இருக்க பாலுறவு அவசியமில்லை என்பதன் வாயிலாகவும் சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது.
இரா - ப்ரீத்தம் இடையிலான பேச்சுகளில் கவிதைகளும், புத்தகங்கள் மீதான பார்வைகளும் தத்துவங்களாக சிதறவிடப்பட்டுள்ளன.
குறிப்பாக சத்தீஸ்கார் மாநிலம் பஸ்தாரில் வாழும் கோட்டுல் (Ghotul) பழங்குடிகள் தங்கள் சமூகத்துக்குள் எப்படி யாரையும் தவறாக மதிப்பிடுவதில்லை என்பது பற்றி நடக்கும் உரையாடல் பெரும்பான்மை சமூகத்துக்கு ஒரு முக்கிய அறிவுரை.
முன்பெல்லாம், பார்த்துப் பழகியவர்களை மட்டுமே விமர்சித்துக் கொண்டிருந்த சமூகம் இன்று இணையவழி வெர்ச்சுவல் அப்யூஸ் வரை தரம் தாழ்ந்திருக்கும் இவ்வேளையில் பழங்குடிகளிடம் இருந்து இந்த பெரும்பான்மை சமூகம் நாகரிகம் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதை உணர்த்தும் மானுட அழகியல்.
இராவும், ப்ரீத்தமும் தங்கள் உரையாடல்களில் ஒருவரைப் பற்றி இயல்பாக வெளிப்படுத்திப் புரிந்து கொள்கின்றனர்.
நம்மைச் சுற்றி நிறைய பேர் இருந்தாலும் கூட நாம் பேசுவதையெல்லாம் எந்த முன்முடிவும் இல்லாமல் கேட்கும் நமக்கானவர்களாக அவர்கள் இருக்கத் தவறிவிடுகிறார்கள். சில நேரங்களில் முன்முடிவுக்கு பயந்து நாமும் அந்த உரையாடலை நம்மை சார்ந்தோரிடம் முன்னெடுக்க தயங்குகிறோம்.
மனதிலிருந்து அளவளாவ ஆள் இருந்தாலே பாதிப் பிரச்சினைகள் சரியாகிவிடும். இதை, இரா ஓரிடத்தில் உணர்ந்து ப்ரீத்தமிடம் வெளிப்படுத்துவாள். அவளுக்குப் பிடித்த ஃபில்டர் காபி தருணங்களை, அவளுக்குப் பிடித்தமான கதை, கவிதைப் பேச்சுக்களுடன் கூடுதல் அழகாயிருப்பான் ப்ரீத்தம். அதனால், இராவுக்கு அவளும், அவளுடைய வாழ்க்கையும் புதிதாகத் தெரியும். அதை ரசிக்க ஆரம்பிப்பாள்.
6 மாத காலமாக காலை 8 மணி, மாலை 6 மணி மெட்ரோவில் பயணித்துக் கொண்டிருக்கும் ப்ரீத்தம், சமூகத்தில் பழகும் தடுமாற்றம் கொண்ட ‘சோஷியலை ஆக்வர்டு’ நபராகவே இருந்திருப்பான் அதுவரை. அவனையும் அதிலிருந்து மீட்க முயற்சிப்பாாள் இராவதி.
“புத்தகங்கள் நல்ல நண்பர்கள் தான். ஆனால் நாம் மனிதர்களையும் நட்பாக்கிக் கொள்ள வேண்டும்” என்ற இராவின் அட்வைஸ், இன்ட்ரோவெர்ட்களை மீட்கக் கூடியது. படம் முழுவதுமே, நல்ல நட்புறவு மாறி மாறி எதைச் செய்யும் என்பதற்கு நடமாடும் உதாரணங்களாக இரா - ப்ரீத்தம் தெரிவர்.
இந்த நட்பால், ரயில் சத்தத்துக்கே பயந்து நடுங்கும் இரா, மெட்ரோ ரயிலில் இருந்து புன்னகையுடன் கீழிறங்கும் காட்சியிலேயே அவள் விடுதலைக்கு தயாரானது புரிந்துவிடும். அது அவளை ஓபன் அப் செய்ய வைக்கும்.
சமூகத்தின் முன்முடிவுகள் மீதான அச்சத்தைப் பற்றி இரா ப்ரீத்தமிடம் சொல்லும் தருணம் படத்தின் நங்கூரம்.
“என்னுடைய மனோ பீதியைப் பற்றி இதுவரை நான் யாரிடமும் பேசியதில்லை” என்று தனது ஃப்ளாஷ்பேக்கை கூறுவாள் இரா. கூறி முடித்த கையோடு, “சில நிமிடங்கள் நீ நானாகவும், நான் இந்தச் சமூகமாகவும் இருப்போமா” என ப்ரீத்தமிடம் கேட்பாள். அவனும் ஏன் என்று புரியாமல் இருந்தாலும் முன்முடிவுகளில்லாது ஆமோதிக்க, இப்படியாக அந்த உரையாடல் நீளும்...
“இரா உனக்கு ஏன் இந்தப் பயம் வருகிறது? எல்லோரும் தான் ரயிலில், பேருந்தில் போகிறார்கள், வருகிறார்கள். ஏதாவது நடக்கிறதா என்ன? இதெல்லாம் வெறும் மனப்பிரம்மை என்று உனக்குத் தெரியவில்லையா? இதன் மூலம் நீ யாரிடமாவது அனுதாபம் தேட முயற்சிக்கிறாயா? இதிலிருந்து வெளிவரும் துணிச்சல் உன்னிடம் இருக்கிறது. அது உனக்குத் தெரியாதா?” என்று சமூகக் குரல் தொனியில் அவள் பேசி முடிக்க...
இரா நிலையில் இருந்து பேசும் ப்ரீத்தம், “வேண்டுமென்றே தான் நான் இதிலிருந்து விடபட முயற்சிக்கவில்லை. இதுபோன்ற துன்பத்தை நான் ரசிக்கிறேன்” என்று சர்காஸ்டிக் பதிலைக் கூறிமுடித்து சத்தமாக சிரிப்பான்.
ஓர் அழுத்தமான காட்சியை பகடியாக கையாள்வதெல்லாம் தனித்திறமை. அதன்மூலம் ஜட்ஜ்மென்ட்டல் சமூகத்துக்கான செருப்படி கொடுத்திருப்பது மாஸ் வகையறா. சில மனத்தாங்கல்கள் வெளிப்படையான பேச்சுகளாலேயே சீராகிவிடும். அந்தக் காட்சிகளுக்குப் பின் இராவுக்கும் நடந்திருக்கும்.
புதிய நட்பும், அது தந்த நம்பிக்கையும், விடுதலையும், ஆறுதலும் புதிய வாழ்க்கைக்குள் அவளை மூழ்கடித்துவிட, புதிதாக ஒரு குற்ற உணர்வு உருவாகும்.
என் கணவர், என் குடும்பம், எனக்கான அழகான வாழ்க்கை என எல்லாம் இருந்தும், நான் ஏன் இன்னொரு ஆணுடன் நட்பாக இருக்கிறேன். இந்த குற்ற உணர்வு என் ரத்தத்தை உறிஞ்சுகிறது என்று புலம்புவாள் இரா.
அவளை அந்த நெருக்கடிக்கு தள்ளியதும் சமூகம்தான். தங்கை ரியா, அக்காளின் புதிய மகிழ்ச்சி முகத்தின் பின்னாள் இருக்கும் ரயில் சிநேகத்தை சந்தேகப் புள்ளியில் நிறுத்த குற்ற உணர்வுக்குள் விழுந்திருப்பாள் இரா.
ஆணும் பெண்ணும் நட்பாக இருந்தால், அது பாலியல் தேவைக்காகவே என்றுதான் சமூகம் உறுதியாக முன்முடிவு செய்து வைத்திருக்கிறது.
ஓர் அழுத்தத்தில் இருந்து விடுபட்ட இரா, எங்கே சமூகம் சொல்வதுபோல் நிகழ்ந்துவிடுமோ என்று தனது நட்புக்கு ஒரு வேலி போட நினைப்பாள். இங்கிருந்து நான் சென்ற பின்னர், உன்னை தொடர்புகொள்ள மாட்டேன். இன்றைய தினம் தான் கடைசி சந்திப்பு என்பாள். இருவரும் பரஸ்பரம் மரியாதையும் நன்றி சொல்லும் தருணமும் பின்னால் வேகமாக மெட்ரோ ரயில் கடந்து செல்வதும், ஓர் அழகான குறியீடுகள் நிறைந்த பிரியாவிடைக் காட்சி.
இராவும், ப்ரீத்தமும் ஒருவரை ஒருவர் ஆத்மார்த்தத் துணையாகவே உள்ளத்தில் நிறுவியிருப்பார்கள். இரா விட்டு விடுதலையாகி இருந்தாலும் கூட, ப்ரீத்தம் அப்படியில்லை.
ஒரு தீவிர மன நோயில் சிக்கியிருக்கும் ப்ரீத்தம், இராவை போல் பேனிக் / ஆன்க்சைட்டி டிஸார்டர் எனக்கு இருக்கிறது என்று போட்டுடைத்திருக்க மாட்டான். அதை மறைக்க அழகான பொய்களைச் சொல்லி சாட்சிகளுடன் சமாளித்திருப்பான். இராவின் முயற்சிகளுக்குப் பின்னரும் அவன் சோஷியலி ஆக்வார்டாகத் தான் இருப்பான்.
ஒரு காட்சியில், இராவும் கூட தங்கையிடம் தனது மனப் பதற்றம் பற்றிப் பேசும்போது, “கடந்த சில நாட்களாக எனக்கு பேனிக் அட்டாக வரவில்லை. ஒருவேளை வந்தாலும் நான், அதை அவமானமாக நினைக்க மாட்டேன். மருத்துவரை சந்திப்பதிலும் தயங்க மாட்டேன்” என்பாள்.
இனி உன்னை சந்திக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டுச் செல்லும் இரா, தங்கைக்கு குழந்தை பிறந்தபின்னர் மீண்டும் ப்ரீத்தமை தேடி அவனது வீட்டுக்குச் செல்வாள். அவன் வீட்டின் ஜன்னல் வழியே இரா பார்க்கும்போதுதான், ப்ரீத்தம் தன் மனைவி மிருதுளாவுடன் பேசித் திரிந்ததுபோன்ற காட்சிகளெல்லாம் அவனுடைய ஹலூஷினேஷன் என்று நமக்கு உறுதியாகும்.
அதுவரை தன்னை மகிழ்ச்சியான குடும்பஸ்தனாக இராவிடம் காட்டிக் கொண்ட ப்ரீத்தம், அழுது உடைவான். கூடவே நாமும் உடைவது தவிர்க்க முடியாது.
“தற்கொலை எண்ணத்தில் இருந்த டிப்ரஷன் நோயாளியான எனக்கு, பேனிக் அட்டாக டிஸார்டர் உள்ள உங்களது சந்திப்புதான் மரணத்தை தள்ளிப்போட வைத்தது. உங்களை சந்தித்தபின்னர் மகிழ்ச்சியாகத் தான் இத்தனை நாள் இருந்தேன். வரமாட்டேன் என்று சொல்லிவிட்டு வந்து எனது குறைகளை அறிந்துகொண்டு என் மகிழ்ச்சியை பறித்துவிட்டீர்கள்” என்று மனப்போராட்டத்தின் உச்சத்தில் இருக்கு ஒரு தீவிர மனநோயாளியின் உணர்வுகளை கச்சிதமாகக் கடத்தி, இராவின் கடிதத்தை கூட சுக்கு நூறாக கிழித்து எறிவான் ப்ரீத்தம்.
தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என்று கடைசி அட்வைஸை உதிர்த்துவிட்டு இரா சென்ற பின்னர் அந்தக் கடிதத்தை எடுத்துச் சேர்த்து படிப்பான். அதில், ப்ரீத்தம் உதவியால் தான் பேனிக் அட்டாக்கில் இருந்து விடுபட்டத்தை நெகிழ்ச்சியுடன் பகிருந்திருப்பாள் இரா. அவனால், தான் ஒரு புதிய உலகத்தைக் கண்டத்தையும் சொல்லியிருப்பாள்.
“சில உறவுகளுக்கு காலாவதி தேதியும், பெயரும் இல்லை. அவற்றை நம்மால் மறக்கவும் முடியாது. ஆனால், அதற்காக அவற்றை நீடிப்பது அசாத்தியம். அது அப்போதைக்கு வாழ்ந்து கடக்க வேண்டிய தருணம் என்பதே யதார்த்தம்.”இராவதி
கடிதத்தில் இருந்த இந்த வார்த்தைகள் ப்ரீத்தமின் தற்கொலை முடிவுகளை மீண்டும் தள்ளிப்போட்டிருக்கும்.
கிட்டத்தட்ட 9 மாதங்களுக்குப் பிறகு ப்ரீத்தம் கையில் இராவதி எழுதிய புத்தகம் ஒன்று கிட்டும். அதற்கு 8 A.M. Metro என்றே இரா பெயர் சூட்டியிருப்பாள். அத்துடன் கூடவே தனது தந்தையின் கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டிருப்பாள்.
“ஓர் ஆணும், பெண்ணும் இந்த உலகில் எந்த நியாயத் தீர்ப்புகளையும் சந்திக்காமல் பழகிக்கொள்ள முடியும் என்பதை உங்களுடைய ஆத்மார்த்த நட்பின் மூலம் உணர்ந்தேன். நீங்கள் என் ஆன்மாவைத் தொட்டீர்கள். உங்களுடை தொடுகையால் இன்னும் பலர் மீள வேண்டும். அதற்கு நீங்கள் முதலில் மீண்டெழ வேண்டும்” என்று கூறி, காஃப்காவின் தொலைந்தபோன பொம்மையின் பயணக் கதைகள் பற்றி சொல்லியிருப்பாள்.
“நீ விரும்பும் எதுவானாலும், ஒருநாள் அது உன்னைவிட்டுச் செல்லும், ஆனால் உனது விருப்பம், நீ எதிர்பாராத வேறு வடிவில் உனக்கு வந்து சேரும்,” என்ற காஃப்காவின் குறிப்பை மேற்கோள் காட்டியிருப்பாள் இராவதி.
காஃப்காவின் வார்த்தைகளால் அசையாத ப்ரீத்தம், கடைசியாக அவள், ”இதற்கும் மேல் நீ தற்கொலை செய்துகொண்டால் உன்னோடு சேர்ந்து என் ஆன்மாவின் ஒரு பகுதியும் உடையும்” என்று சொல்லியிருக்க ப்ரீத்தம் கையிலெடுப்பது ஆஷா மனநல மருத்துவமனையின் விசிட்டிங் கார்டு.
அப்புறம், இந்த உலகத்தில் எதுவும்...தனிச்சு இல்லை... குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல..!
| தேவதைகள் இன்னும் வலம் வருவர்... |
தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in