சினிமா பிரியர்களுக்கு ஒரு கலவையான ரசனை விருந்தாக ஓடிடி தளங்களில் இந்த வாரம் வெளியாக இருக்கும் தென்னிந்திய படங்களின் பட்டியல் இது.
ஜனநாயகன்: முதல்வர் விஜய் தனது கடைசி படமாக அறிவித்த படம் ‘ஜனநாயகன்’. ஹெச்.வினோத் இயக்கத்தில் வெளியான இந்த ஆக்ஷன் டிராமா படத்தில் விஜய் உடன், மமிதா பைஜு, பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், கவுதம் வாசுதேவ், நரேன், பிரியாமணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஜூலை 23-ம் தேதி திரை அரங்குகளில் வெளியான இந்தத் தமிழ் மொழிப் படம், ஆகஸ்ட் 21-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
என்வழி தனிவழி: பி.ஜெரின் இயக்கத்தில் ஃபாசல் பூனூர் நடித்துள்ள மலையாள மொழி படம் இது. கடந்த 2025-ம் ஆண்டு வெளியான இந்த த்ரில்லர் டிராமா படத்தில் ஹேமா, அபிலாஷ் நரிக்குனி, பிந்து பாலா, ஜோபன் ஜேக்கப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் ஆகஸ்ட் 18-ம் தேதி ஹுங்கமா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
பியார் பிரேமா கல்யாணம்: இளன் இயக்கி நாயகனாக அறிமுகமாகும் தமிழ்ப் படம் இது. ரொமான்டிக் காமெடி படமான இதில் சான்வி மேக்னா, ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், கீதா கைலாசம், இளங்கோ குமாரவேல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் ஆகஸ்ட் 21-ம் தேதி நேரடியாக நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
மிஸ்டர் மிடில் கிளாஸ்: ஜி.நாகேஸ்வர ரெட்டி இயக்கத்தில் மேகா ஸ்ரீகாந்த் நடித்திருக்கும் தெலுங்கு படம் இது. நகைச்சுவைப்படமான இதில் லயா கோர்டி, ராஜேந்திர பிரசாத், வெண்ணிலா கிஷோர், ரகு பாபு, ப்ருத்வி ராஜ், அலி பாஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜூலை 17-ம் தேதி திரை அரங்குகளில் வெளியான இந்தப் படம் ஆஹா வீடியோ ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 19-ம் தேதி வெளியாகிறது.
சென்னை லவ் ஸ்டோரி: ரவி நம்புரீ இயக்கத்தில் கிரண் அப்பாவரம் நடித்துள்ள தெலுங்கு படம் இது. இந்த ரொமான்டிக் டிராமா படத்தில் ஸ்ரீகவுரி பிரியா, த்ரிகுன், தேவி பிரசாத், பி.வாசு, தீபா சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜூலை 24-ம் தேதி திரை அரங்குகளில் வெளியான இந்தப் படம், ஆகஸ்ட் 21-ம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.