தில்ஜித் தோசன்ஜ் நடிப்பில், ஹனி ட்ரீஹான் இயக்கத்தில் உருவான ‘சட்லஜ்’ திரைப்படம் கடந்த ஜூலை 3-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது. அதற்கு முன்னதாக படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆவதற்கான அறிவிப்போ, விளம்பரமோ வெளியாகவில்லை. கமுக்கமாக படம் வெளியான நிலையில், ஜூலை 5-ம் தேதி அந்தப் படம் அதிரடியாக நீக்கப்பட்டது.
இந்நிலையில், பல ஆண்டுகளாக தணிக்கை வாரியத்துடனான வெளியீட்டுச் சிக்கலில் சிக்கித் தவித்து, பின்னர் ஓடிடியில் வெளியான திரைப்படம், 48 மணி நேரத்துக்குள் நீக்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இந்தப் பின்னணியில், அவசர அவசரமாக அந்தப் படம் நீக்கப்பட காரணம் என்ன? அப்படியென்ன ‘பேசக் கூடாத!’ அரசியலை அப்படம் பேசியது? அதன் பின்புலம் என்ன? - இவை பற்றி சற்று சுருக்கமாகவும் தெளிவாகவும் பார்ப்போம்.
ஜஸ்வந்த் சிங் கல்ரா யார்? - இந்தக் கேள்விக்கான விடையோடு தொடங்கினால்தான் நாம் இந்தப் படத்தைப் பற்றி புரிந்துகொள்ள முடியும்.
1980, 90-களில் காலிஸ்தான் பிரிவினைவாத போராட்டங்கள் பஞ்சாப்பில் தலைதூக்கி இருந்தன. அப்போது, கைதான சீக்கியர்கள் பலர் மர்மமான முறையில் மாயமானதாகத் தெரிகிறது.
அவ்வாறு மாயமான சுமார் 25 ஆயிரம் பேர் காவல் துறையினரால் சட்டத்திற்குப் புறம்பாகக் கொல்லப்பட்டு ‘அடையாளம் காணப்படாத உடல்கள்’ என்ற போர்வையில் எரிக்கப்பட்டதாக சொன்னவர்தான் சமூக செயற்பாட்டாளராகவும், மனித உரிமைகள் போராளியாகவும் அறியப்படும் ஜஸ்வந்த் சிங் கல்ரா. அதற்கான ஆதாரங்களையும் அவர் ஆவணப்படுத்தி இருந்தார்.
அவருடைய புலன் விசாரணை ஆதாரங்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்தன. பஞ்சாப்பில் மனித உரிமைகள் மீறல் என்று பேசவைத்தன.
இந்நிலையில், 1995-ம் ஆண்டு கல்ரா மாயமானார். சில நாட்களில் அவர் கொல்லப்பட்டார். ஓராண்டுக்குப் பின்னர் அவர் மர்ம மரணம் தொடர்பான விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.
சிபிஐ விசாரணையில் கடைசியாக கல்ரா கைது செய்யப்பட்டு டார்ன் டரன் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பதை கண்டுபிடித்ததோடு. அந்தக் காவல் நிலையத்தின் 9 காவலர்கள் மீது கடத்தல், கொலை குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய பரிந்துரைத்தது.
2007 அக்டோபரில் பஞ்சம் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம், குற்றவாளிகளின் தண்டனையை ஆயுள் தண்டனையாக உயர்த்தியது.
இந்த நிகழ்வுகள்தான் ‘சட்லஜ்’ திரைப்படத்தின் கதைக்களம். இதனால் இப்படம் தணிக்கையில் பல்வேறு சிக்கல்களை சந்தித்தது. மத்திய திரைப்பட தணிக்கை வாரியம், இப்படத்துக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த ‘பஞ்சாப் 95’ பெயரை மாற்றும்படி முதலில் கூறியது. அந்தப் பெயர் மாற்றப்பட்டு ‘சட்லஜ்’ என்று தலைப்பிடப்பட்டது. அது மட்டுமல்லாது படத்தில் 21 நீக்கங்களுக்கு (கட்ஸ் ) பரிந்துரைத்தது. 127 திருத்தங்களையும் சொன்னது.
இதையெல்லாம் கேட்ட இயக்குநர் ஹனி ட்ரீஹான், “தணிக்கை வாரியம் நடைமுறை சாத்தியமற்ற கட்ஸ், நீக்கங்களுக்கு பரிந்துரைத்தது. படைப்பு என்பது கருத்து சுதந்திரம். எங்களது பேச்சுரிமை. படத்தில் ஜஸ்வந்த் சிங் கல்ரா என்ற பெயரைக் கூட நீக்கச் சொல்கிறார்கள்.
ஒரு படத்தில் 127 திருத்தங்கள் என்றால், அது படத்தின் மீதான தாக்குதல் அல்ல; ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். முதலில் படம் வெளிவரட்டும். அதை எல்லோரும் பார்க்கட்டும். தவறு இருந்தால் நீதிமன்றம் செல்லட்டும்” என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.
தணிக்கை வாரியத்தின் பரிந்துரைகளை படக்குழு ஏற்காததால், படம் வெளியாகமலேயே இருந்தது.
இந்த நிலையில்தான், இப்படம் ஜூலை 3 அன்று ஓடிடியில் ரிலீஸ் ஆனது. ஆனால் ஜூலை 5-ம் தேதி மாலையே படம் நீக்கப்பட்டது. படம் நீக்கப்பட்டது குறித்து ஜீ 5 விளக்க அறிக்கையையும் வெளியிட்டது. அதில், படக்குழுவுடன் தாங்கள் நிற்பதாகக் கூறியது.
மேலும், “ஆற்றல்மிகு கதை சொல்லல் நீண்ட தாக்கத்தை ஏற்படுத்தும். உண்மையான, அர்த்தமுள்ள கதைகளை முன்னிறுத்துவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்றும் ஜீ5 தெரிவித்துள்ளது.
பொதுவாக ஓடிடியில் நேரடியாக வெளியாகும் திரைப்படங்களுக்கு தணிக்கைச் சான்றிதழ் தேவையில்லை. அதைப் பயன்படுத்தியே படக்குழு ஜீ5 ஓடிடி தளத்தில் படத்தினை வெளியிட்டது. இருப்பினும் மத்திய அரசு 2021 தகவல் தொழில்நுட்ப சட்டத்தை சுட்டிக்காட்டி படத்தை ஓடிடி தளத்திலிருந்து நீக்கச் செய்துள்ளது.
ஓடிடி ஸ்ட்ரீமிங் தளங்கள் மத்திய அரசின் 2021 ஐ.டி சட்டங்களைப் பின்பற்றுவது கட்டாயம் என்று கூறி அதன் அடிப்படையில் ‘சட்லஜ்’ திரைப்படத்தை நீக்கச் செய்துள்ளது.
இதனிடையே, படத்துக்கு ஆதரவாக விமர்சனங்கள் பெருகிவருகின்றன. ‘சட்லஜ்’ திரைப்படத்தை வெளியாகி 48 மணி நேரத்திலேயே மத்திய அரசு நீக்கியிருந்தாலும் கூட, பல்வேறு முன்னணி ஊடகங்களும் அப்படத்தைப் பற்றிய விமர்சனங்களை வெளியிட்டுள்ளன. அதில் பெரும்பாலானவை படத்துக்கு நேர்மறையான விமர்சனங்களைக் கொடுத்துள்ளன.
‘இந்தத் திரைப்படம் அரசு வன்முறையின் கூராய்வு’ என்று திரை விமர்சனம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 1996-ல் வெளியான ‘மாச்சிஸ்’ (Maachis) படத்துடனும் ஒப்பிடப்பட்டுள்ளது.
குல்ஸாரின் ‘மாச்சிஸ்’ திரைப்படம், பஞ்சாப் கிளர்ச்சி காலத்தை ஒரு போராளியின் பார்வையில் இருந்து படைத்திருக்க, ‘சட்லஜ்’ அதை ஒரு சமூக செயற்பாட்டாளரின் பார்வையில் இருந்து அணுகியுள்ளது.
அரசியல் கொள்கைக்காக அல்லாமல் அடிப்படை மனித உரிமைகளைப் பற்றி பேச இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் விமர்சனம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘சட்லஜ்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்டிருந்தாலும், அதைப் பற்றிய பேச்சுகளும், விவாதங்களும் இணைய வெளியில் மிகுந்து வருகிறது.