ஓடிடி தகவல்

‘காந்தாரி’ ட்ரெய்லர் எப்படி? - கடத்தப்பட்ட மகளை மீட்க தாய் நடத்தும் போராட்டம்

ப்ரியா

டாப்ஸி நடித்துள்ள ‘காந்தாரி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

நெட் ஃப்ளிக்ஸ் இந்தியா அதன் எக்ஸ் தள பக்கத்தில் ‘காந்தாரி’ படத்தின் ட்ரெய்லரை பகிர்ந்துள்ளது. அந்தப் பதிவில் ‘ஒரு தாய், ஒரு மகள், சுற்றிலும் போலி மனிதர்கள். ஒவ்வொருவரின் முகமூடியை கிழிக்க வருகிறார் காந்தாரி’ என்று தெரிவித்துள்ளது.

பானிக்கும் அவரது செல்ல மகள் மிஸ்டி-க்கும் இடையில் இருக்கும் நெருக்கத்தை காட்டுவதுடன் ட்ரெய்லர் தொடங்குகிறது. தாயும் மகளும் ரயிலில் பயணம் செய்யும்போது, அடையாளம் தெரியாதவர்களால் மிஸ்டி கடத்தப்படுகிறாள். மகளை மீட்க பானி நடைமேடையில் இறங்கி ஓடும்போது, வழியில் வரும் இரும்பு கம்பியில் மோதி விடுகிறார். மருத்துவமனையில் கண் விழிக்கும் அவருக்கு பார்வை பறிபோய்விடுகிறது.

இருந்தும் கணவனுடன் இணைந்து தனது மகளைத் தேடும் அந்த தாய், மகள் இல்லாமல் அந்த நகரத்தை விட்டு போகமாட்டேன் எனக்கூறி, நவீன காந்தாரியாக மாறி மகளுக்காக யுத்தம் செய்வதை ட்ரெய்லர் சொல்கிறது.

இந்தக் கதாபாத்திரம் குறித்து டாப்ஸி கூறும்போது, ‘காந்தாரி’ முழுவதிலும் என்னுள் தங்கிய ஒரே விஷயம், சூழல் எல்லாம் எதிராக இருந்தபோதிலும் விட்டுக் கொடுக்காத பானியின் மன உறுதிதான். இந்தக் கதாபாத்திரம் அதிகமான உடல் உழைப்பைக் கோரியபோதிலும், அவரது மன உறுதி, நம்பிக்கை,  எதற்கும் தளராத மனப்பான்மை உண்மையில் என்னை ஈர்த்தது’ என்று தெரிவித்துள்ளார்.     

கனிகா தில்லான் எழுத்தில் தேவஷிஷ் மக்கிஜா இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் டாப்ஸி, இஷ்வாக் சிங், ஜடின் சர்னா, சாய கதம், ஸ்வஸ்திகா முகர்ஜி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த இந்திப் படம் செப்டம்பர் 3-ம் தேதி நேரடியாக நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

SCROLL FOR NEXT