ஓடிடி தகவல்

ரஜினியின் ‘ஜெயிலர் 2’ நவ.12-ல் ஓடிடியில் ரிலீஸ்

ப்ரியா

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியாகி திரையரங்கில் வரவேற்பை பெற்ற ‘ஜெயிலர் 2’ படம் நவம்பர் 12-ம் தேதி அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

இந்தத் தகவலை அமேசான் பிரைம் வீடியோ இந்தியா தமது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், ‘டைகர் முத்துவேல்பாண்டியன் மீண்டும் வந்துவிட்டார். அமேசான் பிரைமில் நவம்பர் 12-ல் ‘ஜெயிலர் 2’ வெளியாகிறது’ எனத் தெரிவித்துள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் தொடர்ச்சியாக வந்த இந்த இரண்டாவது பாகம் அக்டோபர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. முத்துவேல் பாண்டியனின் இந்த இரண்டாவது வேட்டை ரசிகர்களிடம் அபாரமான வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கிறது. வெளியான நாள் முதல், தமிழ் சினிமாவில் இதுவரை எந்தப் படமும் செய்திடாத அளவுக்கு ரூ.800 கோடியைக் கடந்து வசூல் சாதனையை இப்படம் படைத்துள்ளது.

இந்த நிலையில், ஜெயிலர் 2 படம் அமேசான் பிரைம் வீடியோஸில் நவம்பர் 12–ல் வெளியாக இருக்கிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் காணக் கிடைக்கும்.

முந்தைய பாகத்தின் இறுதியில் தனது மகனின் இறப்புக்குப் பிறகு ஒரு மலைக் கிராமத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் சூப்பர்வைசராக அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் முத்துவேல் பாண்டியன் (ரஜினிகாந்து). அங்கு இருக்கும் நகராட்சி அதிகாரியுடன் ஏற்படும் ஒரு சின்ன மோதல், அவரை பழக்கடை நடத்தும் மூர்த்தி என்பவரிடம் டிரைவாக கொண்டு சேர்க்கிறது.

இன்னொரு பக்கம், முதல் பாகத்தில் கொல்லப்பட்ட வர்மனின் மரணத்துக்கு பழிவாங்க அவரது கூட்டாளி திலீப்பும் (சுராஜ்), அவர்களுக்கு மேலிருக்கும் மாஃபியா கும்பல் தலைவர் போதி கல்பக்கும் (எஸ்.ஜே.சூர்யா) வெறியோடு அலைகின்றனர்.

வர்மனைக் கொன்றது யார் என்று தேடி வரும் இந்த கும்பலின் பார்வை, இறுதியில் முத்துவேல் பாண்டியன் மீது விழுகிறது. தான் ஒதுங்கி வாழ நினைத்த வன்முறை உலகத்துக்குள் மீண்டும் இழுக்கப்படும் முத்துவேல் பாண்டியன், இந்தச் சிலை கடத்தல் கும்பலை ஒட்டுமொத்தமாக எப்படி முடித்துக்கட்டுகிறார் என்பதே மீதிக்கதை.

‘ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன், ரம்யா கிருஷ்​ணன், நமோ நாராயணன், சுராஜ் வெஞ்​சரமூடு, யோகி பாபு, வித்யா பாலன், எஸ்.ஜே.சூர்யா உள்​ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களுடன், மோகன்லால், சிவ ராஜ்குமார், ஹ்ரித்திக் ரோஷன் உள்ளிட்டோர் கவுரவ வேடத்தில் நடித்திருக்கின்றனர். படத்​துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். 

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT