ஓடிடி தகவல்

‘பியார் பிரேமா கல்யாணம்’ நெருக்கமான விஷயங்களை கொண்டிருக்கும்: வெற்றிமாறன் பேச்சு

ப்ரியா

இயக்குநர் இளன் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

விழாவில் திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். விழாவில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், ‘ஒரு நடிகராக இருந்து இயக்குநராக மாறுவதற்கே நிறைய தைரியம் வேண்டும். அந்தத் தைரியம் இளனிடம் இருக்கிறது. படத்தின் ட்ரெய்லர் நன்றாக இருக்கிறது. இந்தப் படம் நிறைய ஃபன் ஆன விஷயங்களையும், சில நெருக்கமான தனிப்பட்ட விஷயங்களையும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்க வைக்கிறது’ என்றார்.

நடிகை ராதிகா கூறுகையில், ‘இந்தப் படம் நெட் ஃப்ளிக்ஸில் என் பிறந்த நாளன்று வெளியாக இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது எனக்கு ஒரு நல்ல பிறந்தநாள் பரிசு. படத்தில் பல விஷயங்களை மிகவும் நேர்மையாகக் கையாண்டிருக்கிறோம். கண்டிப்பாக அனைவருக்கும் படம் பிடிக்கும்’ என்றார். 

நடிகர் செந்தில் கூறுகையில், ‘பாக்யராஜ் நடித்த படங்களைப் பார்த்திருப்போம். அந்த மாதிரியான ஒரு கதாபாத்திரத்தை நினைவுபடுத்தும் வகையில் இந்தப் படத்தில் இளன் நடித்திருக்கிறார். அவரைப்போல திரைக்கதையிலும் இயக்கத்திலும் கலக்கியிருக்கிறார். அவரைப் பார்க்கும்போது எனக்கு இன்னொரு பாக்யராஜ் மாதிரி தோன்றியது’ என்றார்.

நடிகர், இயக்குநர் இளன் பேசுகையில், ‘இப்படம் எனக்கும் மிகவும் முக்கியமான படம். இயக்குநராக மட்டுமில்லாமல், நடிகராகவும் களமிறங்கியிருக்கிறேன். இன்றைய இளைஞர்கள் ரசிக்கும்படியான ஒரு கதையை சொல்லியிருக்கிறேன். யுவன் அற்புதமான இசையை தந்துள்ளார். அவர் இசை படத்திற்கு பெரும் பலம்.

ரசிகர்கள் படத்தைப் பார்த்து, அதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களையும், சம்பவங்களையும் தங்களுடைய அனுபவத்தோடு ஒப்பிட்டு புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்’ என்றார்.

யுவன் சங்கர் ராஜா கூறுகையில், ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் தொடங்கிய ஒரு விஷயம் இப்போதும் தொடர்கிறது. பொதுவாக ஒரு படத்தின் ஆரம்பத்தில் இரண்டு அல்லது மூன்று பாடல்களைத்தான் அறிவிப்பார்கள். ஆனால் படம் முடியும் நேரத்தில் 13, 14 டிராக்குகள் இருக்கும். ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் முதலிலேயே முழு டிராக் லிஸ்ட்டையும் அறிவித்தோம். அதே மாதிரியான விஷயத்தை இந்தப் படத்திலும் செய்திருக்கிறோம்.

இது இப்போது இளனுடன் இணைந்த ஒரு ட்ரெண்ட் மாதிரி ஆகிவிட்டது. பாடல்கள் தொடர்ந்து வெளியாகி, சமூக வலைதளங்களிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. ரசிகர்கள் காட்டும் அன்பைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்றார்.

‘பியார் பிரேமா கல்யாணம்’ படத்தில் இளனுக்கு நாயகியாக சான்வீ மேக்னா நடித்துள்ளார். இவர்களுடன் ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், செந்தில், மாறன், டீப்ஸ் சைரஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் வரும் ஆகஸ்ட் 21 முதல் உலகம் முழுவதும் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.

SCROLL FOR NEXT