House of the Dragon S3: அரியணைப் போரில் தவறவிட்ட சுவாரஸ்யம் | ஓடிடி திரை அலசல்

House of the Dragon S3: அரியணைப் போரில் தவறவிட்ட சுவாரஸ்யம் | ஓடிடி திரை அலசல்
Updated on
2 min read

‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடர் தந்த மாபெரும் வெற்றிக்குப் பிறகு வெஸ்டரோஸ் உலகுக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் முயற்சியாக வந்த ‘ஹவுஸ் ஆஃப் தி டிராகன்’ முதல் சீசன் ஓரளவுக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பைக் காப்பாற்றியது. ஆனால் இரண்டாவது சீசன் பெரும் ஏமாற்றத்துடனேயே முடிந்தது. இந்தச் சூழலில், டார்கேரியன் வம்சத்தின் உள்நாட்டுப் போரான 'டான்ஸ் ஆஃப் தி டிராகன்ஸ்' முழு வீச்சில் வெடிக்கும் என்ற மாபெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இதன் 3-வது சீசன், பார்வையாளர்களுக்கு திருப்தியளித்ததா என்றால், ஏமாற்றமே அதிகமாக மிஞ்சுகிறது.

தொழில்நுட்ப ரீதியாகவும், காட்சி அமைப்புகளிலும் இத்தொடர் எந்தவித சமரசமும் செய்து கொள்ளவில்லை. பிரம்மாண்டமான தயாரிப்புத் தரம் ஒவ்வொரு எபிசோடிலும் வெளிப்படுகிறது. குறிப்பாக, முந்தைய சீசன்களை விட இதில் டிராகன்களுக்கு இடையே நடக்கும் வான்வெளி மோதல் காட்சிகள் மிக நேர்த்தியாகவும், வியக்க வைக்கும் வகையிலும் படமாக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக டிராகன்களின் உடலில் இருக்கும் செதில்கள் தொடங்கி அவை பறக்கும் காற்றில் அசையும் அதன் உடல் வரை பார்த்து பார்த்து அதீத துல்லியத்துடன் செதுக்கியுள்ளனர். வெஸ்டரோஸின் நிலப்பரப்புகள், அரண்மனை அரங்குகள் மற்றும் சிஜிஐ  தொழில்நுட்பம் ஆகியவை ஒரு புதிய சாதனையை படைத்துள்ளன.

ரெனேரா டார்கேரியனாக நடித்துள்ள எம்மா டார்சி, ஏமண்ட் டார்கேரியனாக வரும் யுவான் மிட்செல் ஆகியோர் வழக்கம்போலவே மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். தன் மகனின் உடலைக் கண்டு கதறும் காட்சியில் தான் ஏன் இந்த கதாபாத்திரத்துக்கு 100 சதவீதம் பொருத்தமானவர் என்பதை எம்மா டார்சி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். இசையமைப்பாளர் ராமின் ஜவாடி வழக்கம் போல் தனது இசையால் சுமாரான காட்சிகளுக்குக் கூட உயிரூட்டியுள்ளார்.

தொடரில் இருக்கும் தொழில்நுட்பப் பிரம்மாண்டத்தைத் தாண்டி, கதையின் நகர்வில் இந்த சீசன் கடுமையாகத் தடுமாறுகிறது. ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பிரம்மாண்டமான போர்க் காட்சிகள் பலவும், வெறும் உரையாடல்களாகவும், அடுத்த சீசனுக்கான தயார்படுத்தல்களாகவுமே முடிகின்றன. ஒரு காட்சி போரை நோக்கி நகர்வது போல் கட்டமைக்கப்பட்டு, இறுதியில் அது தவிர்க்கப்படுவது அல்லது தள்ளிப்போடப்படுவது எனப் பார்வையாளர்களின் பொறுமையை சோதிக்கும் ஒரு பாணி தொடர்ந்து கையாளப்படுகிறது. 

திரைக்கதையின் வேகம் மிகப்பெரிய பலவீனமாக அமைந்துள்ளது. கதாபாத்திரங்கள் ஒரே இடத்தில் நின்றுகொண்டு, ஒரே மாதிரியான அரசியல் சூழ்ச்சிகளைப் பற்றி மீண்டும் மீண்டும் விவாதிப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது. கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தாமல், ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளேயே சுழல வைப்பது போன்ற உணர்வைத் தருகிறது.

மேலும், சில முக்கியக் கதாபாத்திரங்களின் முடிவெடுக்கும் திறன் மற்றும் அவர்களின் குணாதிசயங்கள் முந்தைய சீசன்களுக்கு முரணாக மாற்றப்பட்டிருப்பது மிகப்பெரிய ஏமாற்றம். அதிலும் ‘வாரம் ஒரு எபிசோட்’ என்ற யோசனையை ஹாட்ஸ்டார் குழுமத்துக்கு யார் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. ஒரு வாரம் முழுக்க காத்திருந்து ஒவ்வொரு எபிசோடாக பார்ப்பது ஏற்கெனவே சுமாராக சென்று கொண்டிருக்கும் தொடரை, படுசுமாராக தோன்ற வைக்கிறது.

‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடரின் ஆரம்ப சீசன்களில் இருந்த கூர்மையான உரையாடல்கள், எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் கதாபாத்திரங்களின் வளர்ச்சி ஆகியவை தான் அத்தொடரை உலக அளவில் உச்சத்தில் கொண்டு போய் நிறுத்தின. உரையாடல்கள் கூட போர்க் காட்சிகளுக்கு இணையான பதற்றத்தைத் தந்தன.

ஆனால், ‘ஹவுஸ் ஆஃப் தி டிராகன்’ ஆரம்பத்திலேயே இந்த அளவுக்கு தடுமாறுவது அடுத்த சீசன் மீதான எதிர்பார்ப்பை அறவே நீர்த்துப் போகச் செய்கிறது.

கூர்மையான திரைக்கதையோ அல்லது திருப்பங்களோ, கவனம் ஈர்க்கும் வசனங்களோ எதுவும் இல்லை. 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொடரில் லிட்டில்ஃபிங்கர், லார்ட் வாரிஸ், டிரியன் லேனிஸ்டர் போன்ற துணை கதாபாத்திரங்கள் சதுரங்கம் ஆடுவது போல் வியூகங்களை அமைப்பார்கள். அப்படியாக இதில் வரும் காட்சிகள் மிகவும் பலவீனமாகவும், முன்னரே கணிக்கக்கூடியதாகவும் இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு இதே ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ யுனிவர்சில் இருந்து வெளியான ‘எ நைட் ஆஃப் தி செவன் கிங்டம்’ தொடரில் வெறும் வசனங்கள் மூலமாகவே கதை விறுவிறுப்பாகவும், எமோஷனலாகவும் நகர்த்தப்பட்டிருக்கும். அதில் இருந்த சுவாரஸ்யத்தில் பாதி இருந்திருந்தால் கூட இத்தொடர் பெரிதும் கொண்டாடப்படும்.

ஒட்டுமொத்தமாக, ‘ஹவுஸ் ஆஃப் தி டிராகன்’ சீசன் 3 பார்வைக்கு மிகவும் பிரம்மாண்டமான ஒரு தொடர்தான். ஆனால், ஒரு சிறந்த கதைசொல்லலுக்கும், விறுவிறுப்பான திரைக்கதைக்கும் வெறும் காட்சிப் பிரம்மாண்டமும் டிராகன்களும் மட்டுமே போதாது என்பதை இந்த சீசன் உணர்த்தியுள்ளது. 

House of the Dragon S3: அரியணைப் போரில் தவறவிட்ட சுவாரஸ்யம் | ஓடிடி திரை அலசல்
Balan: The Boy - இந்து, மேரி, ஃபர்ஸானா... இன்னும் சில விக்டிம்கள் | திரை தேவதைகள் 30

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in