ஆக.21-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ படத்தின் வித்தியாசமான நாயக, நாயகி அறிமுக வீடியோ வெளியாகி ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதல் நாளில் (ஜூலை 30) நாயகன் அறிமுக வீடியோவும், அடுத்த நாளில் (ஜுலை 31) நாயகி அறிமுக வீடியோவும் வெளியானது.
நாயக அறிமுகத்தில், வீட்டின் அறை ஒன்றிலிருந்து வெளியே வரும் இளன் தனது அம்மா, அப்பாவிடம் திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறுகிறான். தொடர்ந்து தோட்டத்தில் இருக்கும் கிணற்றுக்கு சென்று குதித்து விட ‘பியார் பிரேமா கல்யாணம்’ என தலைப்பு வருகிறது.
இதேபோன்ற கதைதான் நாயகி வீட்டிலும், அவளும் தனது பெற்றோரிடம் தான் கல்யாணம் செது கொள்ளப் போவதாக கூறுகிறாள். அடுத்த காட்சியில், காவல் நிலையத்தின் சிறைக்குள் இருந்து சமையல் செய்து கொண்டிருக்கிறாள்.
இந்தக் குறியீடுதான் திருமணம் பற்றிய இன்றைய இளைஞர்களின் கருத்தா என யோசிக்கும் வேளையில், படத்துக்கான எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்துகின்றன இந்த வீடியோக்கள்.
‘பியார் பிரேமா காதல்’, ‘ஸ்டார்’ ஆகிய படங்களை இயக்கிய இளன், தற்போது ‘பியார் பிரேமா கல்யாணம்’ என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை அவரே எழுதி, இயக்கியுள்ளார்.
சான்வீ மேக்னா நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், செந்தில், மாறன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ‘மேட் இன் கொரியா’வைத் தயாரித்த ‘ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட்’ ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ளார்.