பார்வதி திருவோத்து நடிப்பில் வெளியான மலையாள த்ரில்லர் படமான ‘பிரதம திருஷ்டிய குட்டக்கார்’ அக்டோபர் 9-ம் தேதி ஓடிடியில் வெளியாக இருக்கிறது.
ஷஹத் நிலம்பூர் இயக்கி இருந்த இந்தப் படத்தில், பார்வதி திருவோத்து, விஜயராகவன், மேத்யூ தாம்ஸ், சித்தார்த் பரதன், உன்னிமய பிரசாத், அஷீஸ் நெடுமங்காடு, வினய் ஃபோர்ட் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
செப்டம்பர் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த இந்தப் படம், அக்டோபர் 9-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
கேரளத்தின் கோட்டயம் நகருக்கு வெளியே, மர்மமான முறையில் தொடர் கொள்ளைகள் நிகழ்கின்றன. அதேசமயத்தில், அங்குள்ள ஒரு காவல் நிலையத்தில் கணவனை இழந்ததால் வேலை கிடைத்து புதிய பெண் காவலராக சேர்கிறார் அலீனா ஆப்ரஹம்.
அதே காவல் நிலையத்தில் திருமணமாகாத வயது முதிர்ந்த ஓர் ஆண், காதல் கைகூடாத ஓர் இளம் காவல் வாகன ஓட்டுநர் மற்றும் குழந்தைப் பேறுக்காக சிகிச்சையில் இருக்கும் இன்னொரு பெண் எழுத்தர் ஆகியோரும் உள்ளனர்.
ஓர் இரவு, ரோந்துப் பணியின்போது ஓர் எதிர்பாராத அசம்பாவிதம் நிகழ்ந்தேறுகிறது. அந்நிகழ்வு அந்த நான்கு காவலர்களை எப்படியெல்லாம் அலைக்கழித்து என்னவெல்லாம் செய்கிறது என்பதே கதை.
கேள்விகள், விடைகள், முடிச்சுகள் என நிகழும் ஒவ்வொரு சம்பவத்தின் நீட்சியும் பார்வையாளர்களான நம்மை வெகுவாக பதற்றமடையவும், அதேசமயத்தில் கதையோட்டத்தில் பங்கேற்பாளர்களாகவும் ஆக்கி வைக்கிறது.
கேரள சினிமாவின் காக்கிச் சீருடை படங்களின் வரிசையில் ‘பிரதம திருஷ்டிய குட்டக்கார்’ படத்துக்கு என்றென்றும் ஒரு தனி இடம் நிச்சயம் உண்டு.
அக்டோபர் 9-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் இந்த மலையாளப் படம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் காணக் கிடைக்கும்.