நெட்பிளிக்ஸ் தளத்தில் 2017ம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்ற வெப் தொடர் ‘மணி ஹெய்ஸ்ட்’. இதன் 5 சீசன்களும் வரவேற்பைப் பெற்றது. புரொபசர் தலைமையிலான குழுவின் கொள்ளை சாகசங்கள் பார்வையாளர்களைக் கட்டிப் போட்டன.
இந்நிலையில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் மணி ஹெய்ஸ்ட் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது. ஐந்து சீசன்களுடன் வெளியான இத்தொடர் கடந்த 2021-ம் ஆண்டு நிறைவடைந்த நிலையில், அதன் கதைக்களம் இத்துடன் முடிந்துவிடவில்லை என்பதை நெட்பிளிக்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது. மணி ஹெய்ஸ்ட் தொடரின் ஸ்பின்-ஆப் தொடரான ‘பெர்லின்’ சீசன் 2, மே.15ம் தேதி ரிலீஸ் ஆகும் என நெட்பிளிக்ஸ் அறிவித்துள்ளது.
ரசிகர்கள் அதிகம் விரும்பிய பெர்லின் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த தொடரில், மேலும் ஒரு பெரிய கொள்ளை சம்பவம் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது. பெட்ரோ அலோன்சோ பெர்லின் கதாபாத்திரத்தில் மீண்டும் நடித்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
குறிப்பாக “த ரெவல்யூஷன் நெவர் எண்ட்ஸ்” என்ற வாசகத்துடன் வெளியான டீஸர், மணி ஹெய்ஸ்ட் உலகம் இன்னும் முடிவடையவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுவதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அந்த டீஸரில் சிவப்பு உடைகள், மாஸ்க், தங்கக் கட்டிகள் மற்றும் புதிய கொள்ளை சம்பவங்களை காட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், இது நேரடி 6 வது சீசனாக வருமா ? அல்லது புதிய ஸ்பின் - ஆஃப் தொடரா ? என்பது குறித்து நெட்பிளிக்ஸ் தெளிவான அறிவிப்பை வெளியிடவில்லை.