சென்னை: அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில், ரிஷிகாந்த், அனிஷ்மா அணில்குமார் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான ‘மொத ராத்திரி’ திரைப்படம், தற்போது நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படம், ஒரு கிராமத்து திருமணப் பின்னணியில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. கிராமத்து மனிதர்களின் இயல்பான உரையாடல்கள், குடும்ப உறவுகள் மற்றும் நகைச்சுவை உள்ளிட்ட அம்சங்கள் இப்படத்துக்கு பெரிய பலமாக அமைந்தன.
கடந்த ஆக்ஸ்ட் 21 திரையரங்குகளில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றது. நடிகர் தனுஷ் இத்திரைப்படத்தைப் பாராட்டி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் சிலம்பரசன், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் இப்படத்துக்கு தங்களது பாராட்டை தெரிவித்தனர்.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 18 முதல் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருகிறது. ஓடிடியில் வெளியானது முதலே அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட இந்தியத் திரைப்படங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. மேலும் நெட்ஃப்ளிக்ஸ் டிரெண்டிங் பட்டியலிலும் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் உள்ளது. சமூக வலைதளங்களில் இப்படத்தை பார்த்த பலரும் இயக்குநர் ராஜா கருப்பசாமியை பாராட்டி வருகின்றனர்.