எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ ஆந்த்தாலஜி வெப் சிரீஸின் மூன்றாவது பாகம் செப்டம்பர் 18-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நெட்ஃபிளிக்ஸ் இந்தியா அதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளது. அதில், ‘நான் இதை உங்களிடம் சொல்லப் போவது இல்லை. என்றாலும், செப்டம்பர் 18-ம் தேதி நெட்ஃபிளிக்ஸில் மட்டும் வெளியாக இருக்கும் ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 3’ பார்க்க மிகவும் ஆர்வமாக உள்ளேன்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் ஒரு வீடியோ ஒன்றையும் வெளிட்டுள்ளது. அதில், கொங்கனா சென் ஷர்மா, அலி ஃபாஸல், அதிதி ராவ் ஹைதரி, விஜய் வர்மா, சித்தார்த், ராதிகா ஆப்தே ஆகியோர் வரவிருக்கும் சீசனின் புதிய நடிகர்கள் பற்றிய குறிப்புகளைச் சொல்கிறார்கள்.
நேரடியாக எதையும் குறிப்பிடாமல், ‘நான் யாரிடமும் சொல்ல மாட்டேன்’ என்று அனைவரும் சொல்வது, முந்தைய பாகங்களில் நடித்தவர்கள் இந்த புதிய பாகத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் வரக்கூடும் என்று உணர்த்துகிறது.
இந்தப் பதிவுக்கு பதில் அளித்துள்ள நடிகர் சித்தார்த், ‘இது லஸ்ட் ஸ்டோரீஸ் தானே? நெட் ஃப்ளிக்ஸில் வருகிறது? யார் நடிக்கிறார்கள், யாராவது சொல்ல முடியுமா? நான் யாரிடமும் சொல்ல மாட்டேன்’ என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து நெட்ஃப்ளிக்ஸ் இந்தியா ஒரிஜினல் பிலிம்ஸ் இயக்குநர், ருசிக்கா கபூர் ஷேய்க் கூறுகையில், ‘தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும் இந்த தொகுப்பின் தன்மையே அது இன்றும் நீடித்து வருவதற்கான முக்கியமான காரணமாகும். இந்தியாவின் நான்கு முன்னணி இயக்குநர்கள் விக்ரமாதித்ய மோத்வானே, கிரண் ராவ், ஷாகுன் பத்ரா மற்றும் விஷால் பரத்வாஜ் ஆகியோர் தங்களின் தனித்த கண்ணோட்டங்களை முன்வைக்கின்றனர்.
என்றாலும், பார்வையாளர் தங்களின் சொந்த அனுபவத்தின் மூலம் அவை உணர வைக்க வேண்டும் என்ற ஒற்றைப் புள்ளியில் இயக்குநர்கள் ஒன்று இணைகின்றனர்’ என்றார்.
‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ முதல் முறையாக கடந்த 2018-ம் ஆண்டு வெளியானது. அனுராக் காஷ்யப், ஜோயா அக்தர், திப்கர் பானர்ஜி மற்றும் கரண் ஜோகர் ஆகியோர் அதன் நான்கு கதைகளை இயக்கி இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து ஐந்து வருடங்கள் கழித்து ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ தொகுப்பை ஆர்.பால்கி, கொங்கனா சென் ஷர்மா, அமித் ரவிந்தரநாத் ஷர்மா மற்றும் சஞ்சய் கோஷ் இயக்கி இருந்தனர். இது 2023-ம் ஆண்டு வெளியானது.