பிரகாஷ் ராஜ் நடிப்பில், பாலநாத் சூர்ய பிரதாப் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஜகமே சங்கீதம்' வெப் தொடர் செப்டம்பர் 4-ம் தேதி பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
மிகவும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இந்த இசை - நாடக தெலுங்கு வெப் தொடரில் பிரகாஷ் ராஜ், மதுபாலா, மேகா ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்தி இசைத் தொடரான ‘பண்டிஸ் பண்டிட்’-ஐ தழுவி எடுக்கப்பட்ட இந்த வெப் தொடரை சுஷ்மிதா கொனிடேலா தயாரித்துள்ளார். வாங்கல சூர்யா மனோஜ், ஷ்ரவாணி சமுத்ராலா, ஏ.ஆர்.பிரபவ் எழுத்தில் உருவாகி இருக்கும் தொடருக்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார்.
இந்த வெப் தொடர் குறித்து படக்குழு வெளியிட்ட தகவல்கள்: கர்நாடக சங்கீதத்தின் பின்னணியில் உருவாகி இருக்கும் இந்தக் கதை, தனது தாத்தா சாஸ்திரியின் இசை மரபின் வாரிசான பாலுவை பற்றிச் சொல்கிறது.
குடும்பச் சிக்கல்கள், மறைக்கப்பட்ட உண்மை, மீண்டும் தலைதூக்கும் பகை உணர்வுகளுக்கு மத்தியில் தங்களின் பாரம்பரியத்தை பாதுகாப்பதா அல்லது தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்குவதா என்கிற சிக்கலை எதிர்கொள்கிறான் பாலு.
இசை ஒரு பின்னணியாக மட்டும் இல்லாமல், ஒரு குடும்பத்தின் பக்தி, மனகசப்பு, தீர்க்கப்படாத உணர்வுகளின் மொழியாகவும் இருக்கும் ‘ஜகமே சங்கீதம்’ வெப் தொடர் ஆங்கில சப் டைட்டிலுடன் வெளியாக இருக்கிறது. மேலும் தமிழ் மொழியிலும் டப் செய்யப்பட்டு வெளியாகிறது.