புதுடெல்லி: பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில், ஆதித்யா தார் இயக்கத்தில் வெளியான ‘துரந்தர்’ திரைப்படம் 2026-ம் ஆண்டில் நெட்பிளிக்ஸ் தளத்தில் உலகளவில் மிகவும் பார்க்கப்பட்ட ஆங்கிலம் அல்லாத திரைப்படமாக மாறி, ஹாலிவுட் படங்களையும் மிஞ்சி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இந்தியப் படங்கள் உலகளவில் பெரும் சாதனை படைத்து வருவதாக நெட்பிளிக்ஸ் தலைவர் டெட் சரண்டோஸ் கூறியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய டெட் சரண்டோஸ், இந்த ஆண்டில் நெட்பிளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட ஆங்கிலம் அல்லாத திரைப்படமாக ‘துரந்தர்’ சாதனை படைத்துள்ளதாகவும், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு அடுத்தபடியாகப் பல ஆங்கிலப் படங்களை விடவும் அதிக பார்வைகளைப் பெற்றுப் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த ஆண்டின் முதல் பாதியில் மட்டும் இப்படத்தின் முதல் பாகம் 37 மில்லியன் பார்வைகளைப் பெற்று, 22 நாடுகளின் நெட்பிளிக்ஸ் தரவரிசையில் முதலிடம் பிடித்தது. மேலும், திரையரங்குகளில் இதன் இரு பாகங்களும் இணைந்து ரூ.3,100 கோடிக்கு மேல் வசூலித்துள்ள நிலையில், இதன் இரண்டாம் பாகமான ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ இந்தியாவில் ரூ.1,000 கோடி வசூலித்த முதல் பாலிவுட் படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.
தென்கொரியாவின் ‘ஸ்குவிட் கேம்’ அல்லது ஸ்பெயினின் ‘மனி ஹெய்ஸ்ட்’ போன்ற உலகளாவிய வெற்றி இந்தியாவுக்கு எப்போது கிடைக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இந்தியாவில் ஏற்கெனவே அத்தகைய வெற்றிகள் தொடர்ந்து கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது எனக் கூறினார்.
மேலும், இந்தியாவில் தயாரித்த ‘சேக்ரட் கேம்ஸ்’ தொடர் ஒரு புதிய அனுபவமாக இருந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், நீண்ட சினிமா பாரம்பரியம் கொண்ட இந்தியாவில் இதுபோன்ற சாதனைகள் திரைப்படங்கள் மூலமாகவே சாத்தியமாகி வருவதாகப் பாராட்டினார்.
கடந்த 2025 டிசம்பரில் திரையரங்குகளில் வெளியான ‘துரந்தர்’ முதல் பாகம், 2026 மார்ச் மாதத்தில் வெளியான இரண்டாம் பாகத்தின் திரையரங்க வெளியீட்டுக்கு முன்பே நெட்பிளிக்ஸில் வெளியானது. தற்போது இதன் இரண்டாம் பாகமான ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்' திரைப்படம் இந்தியாவில் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்திலும், சர்வதேச அளவில் நெட்பிளிக்ஸ் தளத்திலும் ஒளிபரப்பாகி வருகிறது.