பல தசாப்தங்களாக ரசிகர்களை மகிழ்வித்து வந்த இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக அறியப்படும் சிரஞ்சீவி, தொகுப்பாளராக ஓடிடி தளத்தில் அறிமுகமாக உள்ளார்.
பிரபலங்கள் பங்கேற்கும் ‘சிரஞ்சீவியின் மெகாவெர்ஸ்’ நிகழ்ச்சி டாக் ஷோவாக (உரையாடல் நிகழ்ச்சி) நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமாக உள்ளது. இதை சிரஞ்சீவி தொகுத்து வழங்க இருக்கிறார். இந்தத் தகவலை 'நெட்ஃபிளிக்ஸ் சவுத்' எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், ‘மாஸுக்கான இலக்கணம், ஸ்டைலுக்கான வரையறை. இதோ மெகாஸ்டார் வந்துவிட்டார். காணுங்கள் ‘சிரஞ்சீவியின் மெகாவெர்ஸ்’. விரைவில் நெட்ஃபிளிக்ஸில் மட்டும்’ என்று தெரிவித்துள்ளது.
இந்த உரையாடல் நிகழ்ச்சி, தெலுங்கு சினிமாவின் பயணத்தை வடிவமைத்த நட்சத்திரங்கள், கதைகள் மூலமாக அதன் பாரம்பரியத்தை ஆராயும். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதன் மூலமாக, தனது சொந்த அனுபவங்கள், திரைப்படங்களுடனான தனது நீண்ட கால தொடர்பின் மூலம் திரை உலகத்தைப் பற்றிய ஒரு நெருக்கமான பார்வையை சிரஞ்சீவி வெளிப்படுத்த உள்ளார்.
தனது வசீகரம், நகைச்சுவை, இயல்பான நடிப்பிற்காக அறியப்படும் சிரஞ்சீவி, அதே விஷயங்களை இதிலும் கொண்டு வருவார். இதன் மூலம் ரசிகர்கள் இதுவரை அறிந்திராத ஒரு புதிய பரிமாணத்தில் அவரை பார்த்து ரசிக்கலாம் என்று எதிபார்க்கப்படுகிறது.
கோல்ட் பாக்ஸ் என்டர்டயின்மெண்ட், ஆடோம் மீடியா வென்சர்ஸ் மற்றும் சோல் புரொடக்ஷன் எல்எல்பி தயாரிக்கும் இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.
சிரஞ்சீவி கடந்த 1978-ல் வெளியான ‘பிராணம் கரீடு’ படத்தின் மூலம் தெலுங்கு சினிமா உலகில் அறிமுகமானார். கிட்டத்தட்ட 48 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பயணித்து வரும் அவர், 150-க்கும் அதிகமான படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். கடைசியாக அவரது நடிப்பில், ‘மன சங்கர வர பிரசாத் காரு’ என்ற படம் வெளியானது.