சின்னத்திரையில் கவனம் ஈர்த்த பொழுதுபோக்குத் திருவிழாவான ‘பிக்பாஸ் தமிழ்’ தன் வரலாற்றிலேயே இல்லாத புதுப் பரிமாணத்தோடு என்ட்ரி கொடுக்க தயாராகி வருகிறது. அதுதான் ‘பிக்பாஸ் காமன் மேன்’ (சாமானியருக்கான வாய்ப்பு).
முன்னெப்போதும் இல்லாத வகையில், ‘பிக்பாஸ் காமன் மேன்’ நிகழ்ச்சி மூலம் சின்னத்திரை வரலாற்றிலேயே முதன்முறையாகச் சாமானிய மக்களுக்கும் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதுவரை ஸ்டார் நடிகர்கள், பிரபலங்கள், இன்ஃப்ளூயன்ஸர்களின் முகத்தைப் பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு, நம்ம ஊரு டீக்கடை பெஞ்ச் பேச்சு முதல் பஸ் ஸ்டாண்ட் புரணி வரை எல்லாவற்றையும் பிக்பாஸ் வீட்டுக்குள் பார்க்கப் போவது மிகப் பெரிய இன்ப அதிர்ச்சி.
‘தி காமன் மேன்’ நிகழ்ச்சி மூலம், பக்கத்து வீட்டுப் பையனும் எதிர் வீட்டுப் பெண்ணும் போட்டியாளர்களாகக் களமிறங்கி, பிக்பாஸ் வீட்டின் சொகுசு சோஃபாவில் அமர்ந்து காபி சாப்பிடப் போகிறார்கள். இயல்பாகப் பழகும் சாமானியர்கள், அவர்களுடன் மோதும் நட்சத்திரங்கள் என ரசிகர்களின் பொழுதுபோக்குக்கும் ரசனைக்கும் பஞ்சமே இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்வு முறை - நடுவர் குழு
பிரபலங்கள் மற்றும் நன்கு அறியப்பட்ட முகங்கள் மட்டுமே பங்கேற்கும் போட்டியாகவே ‘பிக்பாஸ்’ இதுவரை அடையாளம் காணப்பட்டது. ஆனால், இந்த முறை, தொலைக்காட்சி, திரைப்படம் என எதிலுமே அறியப்படாத, ஆனால் போட்டியில் பங்கேற்க ஆர்வமுள்ள போட்டியாளர்கள் மீதே இந்த புதிய நிகழ்ச்சி கவனம் செலுத்துகிறது. அவர்களுக்குத்தான் வாய்ப்பும் அளிக்கப்படுகிறது.
‘காமன் மேன்’ என்பது வரவிருக்கும் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக நடத்தப்படும் ஒரு ரியாலிட்டி ஷோ. இந்த நிகழ்ச்சியின் மூலம், சாதாரண மக்கள் ‘பிக்பாஸ்’ வீட்டுக்குள் நுழைந்து, முதன்மை சீசனில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறப் போட்டியிடலாம்.
விஜய் டிவி மற்றும் ஜியோ ஹாட் ஸ்டார் இணைந்து நடத்தும் ‘பிக்பாஸ் - தி காமன் மேன்’ என்ற பிரத்யேக முன்-நிகழ்ச்சி மூலம் சாமானியர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். 21 எபிசோட்கள் கொண்ட இந்த நிகழ்ச்சி வாரத்தின் 7 நாட்களும் ஒளிபரப்பாகிறது.
இந்த நிகழ்ச்சியை பன்முகக் கலைஞரும், பிக்பாஸ் சீசன் 7 பங்கேற்பாளருமான மாயா எஸ்.கிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். முன்னாள் வெற்றியாளர்களான ஓவியா ஹெலன், ஆரி அர்ஜுனன் மற்றும் ராஜு ஜெயமோகன் ஆகிய 3 பேரைக் கொண்ட நடுவர் குழு போட்டியாளர்களை உன்னிப்பாகக் கவனித்துத் தேர்வு செய்கிறது. போட்டியாளர்கள் தேர்வு பல கட்டங்களில் கடுமையான சோதனைகள் மூலம் நடைபெறுகிறது.
டிஜிட்டல் பதிவு:
vijay.jiostar.com தளத்தில் ஆயிரக்கணக்கானோர் தங்களின் சுயவிவரங்கள் மற்றும் “நான் ஏன் பிக்பாஸ் வீட்டுக்குச் செல்ல தகுதியானவர்?” என்ற வீடியோ பதிவுகளைப் பதிவேற்றம் செய்தனர்.
ஆடிஷன், சவால்கள்:
தேர்வான 50 பேருக்கு சகிப்புத்தன்மையைச் சோதிக்கும் ‘பஸ் டாஸ்க் டிராமா’ என சிறிய பேருந்தில் மணிக்கணக்கில் நிற்க வைத்து அவர்களின் பொறுமை, சகிப்புத்தன்மை, மனஅழுத்தம் மற்றும் அதைக் கையாளும் திறன் ஆகியவை பரிசோதிக்கப்பட்டன.
நேரடி வாதிடுதல்:
இரண்டாவதாக, நடுவர்கள் 3 பேருடனும் கடுமையான வாதம் செய்யும் போட்டி நடந்தது. போட்டியாளர் அணிந்து வரும் உடை, பேசும் பாணி, ஆளுமை குறித்து நடுவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் போட்டியாளர்கள் பதில் அளித்து, வாதிட்டுத் தங்கள் நிலைப்பாட்டை நிரூபிக்க வேண்டும்.
3 வண்ண சிக்னல் முறை:
3 நடுவர்களிடம் இருந்தும் பச்சை சிக்னல் பெறும் சாமானியர் நேரடியாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைவார். மஞ்சள் சிக்னல் பெறுபவர் அடுத்த சுற்றுக்கு நிறுத்தி வைக்கப்படுவார். சிவப்பு சிக்னல் பெறுபவர் உடனடியாக வெளியேற்றப்படுவார்.
நிகழ்ச்சி வடிவம்:
போட்டியாளர்களின் ஆளுமை, திறன்கள், மற்றவர்களுடன் பழகும் விதம், தனிப்பட்ட வாழ்க்கைச் சம்பவங்கள் ஆகியவை உன்னிப்பாகக் கவனிக்கப்படும். பல்வேறு பணிகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் கலந்துரையாடல்கள் ஆகியவற்றின் கலவையாக இந்த நிகழ்ச்சியின் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது.
புதிய வீட்டின் சிறப்பம்சங்கள்
‘கார்னிவல்’ தீம்:
10-வது சீசனின் கொண்டாட்டத்தைக் குறிக்கும் வகையில், வீட்டின் உட்புறம் திருவிழா மற்றும் ‘கார்னிவல்’ பாணியில் வண்ணமயமான ஒளி விளக்குகள், அலங்காரப் பொருட்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரகசிய அறை:
சாமானியர்களுக்கும் நடிகர்களுக்கும் இடையிலான போட்டியைச் சுவாரஸ்யமாக்க, வீட்டில் மறைமுக அறைகள் மற்றும் தனிப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
டிஜிட்டல் கேமரா - நேரலை:
முந்தைய சீசன்களை விட இந்த முறை பங்கேற்பாளர்களின் செயல்கள் கூர்மையாகத் தெரியும் வகையில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு, ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் நேரலை செய்யப்படுகிறது.
பிரத்யேக பகுதி:
சாமானியர்களின் உடல் வலிமை மற்றும் புத்திசாலித்தனத்தைச் சோதிக்கும் வகையில், புதிய சவால்கள் நிறைந்த திறந்தவெளி உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுக் களம் அமைக்கப்பட்டுள்ளது.
தொகுப்பாளர் விஜய் சேதுபதியின் சாட்டையடி கேள்விகளும், சாமானியர் vs நட்சத்திர மோதலும் இந்த சீசனை அடுத்தக் கட்டத்துக்கு உயர்த்தும்.
யாரெல்லாம் பங்கேற்க வாய்ப்பு?
பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த அதிகாரபூர்வப் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால், சமூக வலைத்தளங்கள் மற்றும் பிக்பாஸ் வட்டாரங்கள் அளித்த தகவலின்படி சிலரின் பெயர்கள் கசிந்துள்ளன.
சின்னத்திரை பிரபலங்களான ஆர்யன் (குக் வித் கோமாளி ஷபானா கணவர்), ஹேமா ராஜ்குமார் (பாண்டியன் ஸ்டோர்ஸ்), ஃபரீனா ஆசாத் (பாரதி கண்ணம்மா) மற்றும் பார்கவ் ராம் ஆகியோர் நட்சத்திரப் போட்டியாளர்களாகக் களம் இறங்க அதிக வாய்ப்புள்ளதாம்.