நா.மணி எழுதிய ‘கனவுகளை விரிவாக்கிய இல்லம் தேடிக் கல்வி’ (27.05.22) கட்டுரை படித்தேன். இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தால், மலைப் பகுதிக் குழந்தைகளின் கற்றலில் நல்ல முன்னேற்றம் உள்ளதை நேரடிக் கள ஆய்வு மூலம் விவரித்துள்ளார். இதைச் சாத்தியப்படுத்திய பள்ளிக் கல்வித் துறையையும், திட்டத்தில் இதுவரை இணைந்துள்ள தன்னார்வலர்களையும் வாழ்த்துவோம்.
குழந்தைகளுக்குக் கல்வியில் ஏற்பட்ட இடைவெளி, கற்றல் இழப்பு இரண்டையும் ஈடுசெய்யும் அரும்பணியைத் தன்னார்வலர்கள் நிறைவேற்றிவருகின்றனர். 1.70 லட்சம் எண்ணிக்கையிலான இளம் மகளிர் சமூகத்தினரைக் குழந்தைகளுக்கான கல்விப் பணியைத் தன்னார்வப் பணியாக ஏற்று, அக்கறையோடு செய்ய வைத்திருப்பது எங்கும் நடக்காத ஒன்று.
இத்திட்டம் ஊருக்கு ஒரு ‘அக்கா’வோடு பள்ளிக் குழந்தைகளை ஐக்கியப்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். பள்ளி மேலாண்மைக் குழுக்களை வலிமையாக்குவதில் அரசுப் பள்ளிகளுக்கும் பெற்றோர்களுக்குமான உறவுப் பாலமாகத் தன்னார்வலர்கள் செயலாற்றிவருகின்றனர். இல்லம் தேடிக் கல்வி நூலகங்கள் மூலம் குடியிருப்புகள்தோறும் ‘கல்வி இல்லம்’ என்பதும் புதிய வடிவமாக உருவாகிவருகிறது. தமிழ்நாடு அரசு இத்திட்டத்தின் கால அளவை மேலும் நீட்டிக்க வேண்டும்.
- சு.மூர்த்தி, ஒருங்கிணைப்பாளர், கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு.
கட்டுரையின் லிங்க்: கனவுகளை விரிவாக்கிய இல்லம் தேடிக் கல்வி