Last Updated : 27 May, 2022 07:02 AM

3  

Published : 27 May 2022 07:02 AM
Last Updated : 27 May 2022 07:02 AM

கனவுகளை விரிவாக்கிய இல்லம் தேடிக் கல்வி

ஊட்டி - மைசூர் நெடுஞ்சாலையில், கூடலூர் அருகில் காட்டுநாயக்கன் பாடி. சாலையின் ஓரத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு, மலைச் சரிவில் மிகமிக நிதானமாக இறங்க வேண்டும். மழைக் காலம் எனில், சேறும் சகதியும் நிறைந்த ஒற்றையடிப் பாதையில் வழுக்கி விழாமல் நகர்ந்து செல்ல வேண்டும். அப்படி வந்து சேர்ந்தால், லாவண்யாவின் வீடு. பொறியியல் பட்டதாரி. இவர் தனது வீட்டில் இல்லம் தேடிக் கல்வி மையத்தை நடத்திவருகிறார்.

மண் சுவர், அதில் ஓடுகள் வேயப்பட்டிருக்கின்றன. 8×8 அடி இருக்கலாம். அதனை ஒட்டி 8×4 சமையல்கட்டு. காற்றும் வெளிச்சமும் அதிகமில்லை. மையம் முடியும் வரை லாவண்யாவின் அண்ணி கைக்குழந்தையுடன் அங்கு காத்திருக்கிறார். இந்த வீட்டைச் சுற்றியுள்ள வனப் பகுதியில், ஆங்காங்கே 40 வீடுகளில் குடியிருக்கும் காட்டுநாயக்கர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் பயிலும் மையம். லாவண்யாவும் அதே பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்.‘‘குழந்தைகள் தினமும் வருகிறார்களா?’’ என்று கேட்டபோது, ‘‘ஆமாங்க சார்.

ஆனால், புதன் மற்றும் சனிக் கிழமைகளில் தண்ணீர் பிடித்து வைத்துவிட்டு, கொஞ்சம் லேட்டா வருவாங்க. அப்பா - அம்மா இருவரும் வேலைக்குச் சென்று திரும்ப இரவாகும். இவர்கள்தான் சமையல் செய்வார்கள். மையத்துக்கு வருவதற்கு முன்பும் பின்பும் வீட்டு வேலை’’ என்றார். மேலும், ‘‘எங்கள் தாய்மொழி கன்னடமும் தமிழும் கலந்தது. தமிழ் சரியாகப் பேசத் தெரியாது. இப்போது தமிழ் சரளமாகப் பேசுகிறார்கள். விலங்குகள், செடி கொடிகள், பார்க்கும் பொருட்களின் பெயர்களைத் தமிழில் சொல்வார்கள். பள்ளி ஆசிரியர்களிடமிருந்து நல்ல பின்னூட்டம் கிடைக்கிறது. நன்றாக எழுதத் தொடங்கியுள்ளனர்’’ என்றார் லாவண்யா.

‘இல்லம் தேடிக் கல்வித் திட்டம்’ மீண்டும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இது எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள, நீலகிரி மாவட்டம் கூடலூரில் மே 16 முதல் 19-ம் தேதி வரை 21 மையங்களைப் பார்வையிட்டோம். தமிழ், மலையாளம், கன்னடம் ஆகியவற்றைத் தாய்மொழியாகக் கொண்ட தோட்டத் தொழிலாளர்கள். இந்துக்கள், முஸ்லிம்கள், தனித்தனி தாய்மொழியைக் கொண்ட பழங்குடிகள் எனப் பலரும் கலந்து வாழும் பகுதி கூடலூர். ஆறு மாதங்கள் தொடர்ந்து பெய்யும் மழை. வன விலங்குகள் நடமாட்டம். இப்படியான ஒரு பகுதியில் பயணம் செய்வது, தன்னார்வலர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவது, குழந்தைகளிடம் உரையாடுவது அவசியம் என்று உணர்ந்தோம்.

கூடலூர் நகருக்குள் எஸ்.எஸ். நகர். அங்குள்ள சமுதாயக் கூடத்தில் மையம் செயல்படுகிறது. குழந்தைகள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தோடு இருந்தார்கள். அடுத்த மூன்று நாட்களில் பார்வையிட்ட மையங்கள் ஒவ்வொன்றுமே தனித்தன்மை வாய்ந்தவை. அதிலும் குறிப்பாகச் சில மையங்கள், அவற்றின் தன்னார்வலர்கள், அவர்களின் அர்ப்பணிப்பு நமது குடிமைச் சமூகம் அறிய வேண்டியவை.

வீட்டின் முன் பகுதியில் மையம் நடக்கும் இடத்தைத் திரைச் சீலைகளால் வகுப்பறைபோல் வடிவமைத்து, குழந்தைகள் ஆர்வத்தைத் தூண்டிக் கற்க வைக்கிறார் பனஞ்சரா திவ்யா. தமிழ்நாட்டு எல்லைப் பகுதியான கோட்டூரில், தன் வீட்டு முற்றத்தில் மையத்தை நடத்திவரும் அப்சத் கற்றல் பொருட்களால் முற்றத்தை அழகுபடுத்தி, பொது அறிவு உட்பட புதியனவற்றைக் கற்றுத்தருகிறார். இதன் விளைவாக, 15 பேருடன் மையத்தை நடத்தத் தொடங்கிய அவரிடம், இப்போது தனியார் பள்ளிக் குழந்தைகள் உட்பட 30 பேர் பயில்கின்றனர். இப்படி எத்தனையோ பேர்.

தேவன் எஸ்டேட் பிரீத்தி, வனவிலங்கு ஆபத்து நிறைந்த வழித்தடத்தில் தினமும் பயணிக்கிறார். ஒரு மாட்டையும் மறுநாள் மனிதனையும் புலி அடித்துக் கொன்ற இடங்கள் வழியே சென்றுவருகிறார். இதே பகுதியில் சிறப்பாக மையத்தை நடத்திவரும் பஹ்னா ஒரு மாற்றுத் திறனாளி. அம்புலி மலை யானை, புலி நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி. சமீபத்தில் ஒருவரை யானை அடித்துக் கொன்றுவிட்டது. அந்த அச்சத்தில், அதுவரை நன்றாகப் படித்துவந்த ஒரு குழந்தை மையத்துக்கு வருவதையே நிறுத்திக்கொண்டதில் மையத்தின் தன்னார்வலர் ரம்யாவுக்குப் பெரும் துயரம். எந்தவித முன்னறிவிப்பும் இன்றிச் சென்றபோதும், மையத்தில் உற்சாகமான கற்றல் செயல்பாட்டைப் பார்த்து மகிழ்ந்த இடம் கரோலின் எஸ்டேட் காயத்ரி.

நாம் பார்த்த 21 மையங்களில் 11 மையங்கள் வீடுகளில் நடைபெறுகின்றன. நான்கு மையங்கள் சமுதாயக் கூடங்கள், தொண்டு நிறுவன இடங்கள் ஆகியவற்றில் நடைபெறுகின்றன. ஐந்து மையங்களில் மின்வசதி இல்லை. ஒன்றிரண்டு வீடுகளைத் தவிர, மீதமுள்ள மையங்கள் நடைபெறும் வீடுகள் மிகவும் சிறியவை. இட நெருக்கடி இருந்தாலும் மகிழ்ச்சியோடு அந்த இடத்தை வீட்டின் உரிமையாளர்கள் ஒதுக்கிக் கொடுத்துள்ளனர். பார்வையிட்ட அனைத்து மையங்களிலும் படிக்கும் குழந்தைகள், அவர்களுடைய பெற்றோர், பொதுமக்கள் அனைவரும் ‘இல்லம் தேடிக் கல்வி மையம்’ ஏன் வேண்டும் என்பதற்குப் பல்வேறு நியாயமான காரணங்களை அவரவர் நிலையிலிருந்து அடுக்குகிறார்கள்.

பழங்குடிக் குழந்தைகளின் கற்றலில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. எழுதத் தெரியாதவர்கள் எழுதக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். பாட்டு, கதைகள், ஓவியம், செயல்பாடுகள், எழுதுதல், கூட்டல், கழித்தல், பெருக்கல், வாய்ப்பாடு, சரளமாக வாசித்தல் ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று பதிவுசெய்தனர். பல பள்ளிகளில் நல்ல பின்னூட்டம் கிடைத்திருக்கிறது.

பள்ளிக்குத் தொடர்ந்து செல்ல ஊக்குவிப்பாக இருக்கிறது. “மையம் எப்படி இருக்கிறது?” என்ற கேள்விக்கு, “ஜாலியா இருக்கு” என்றனர் குழந்தைகள். இல்லம் தேடிக் கல்வி மையங்கள் குழந்தைகளின் எதிர்காலக் கனவுகளை விரிவுபடுத்தியுள்ளன. கூடலூர் ஒன்றியத்தில் 350 மையங்கள் செயல்படுகின்றன. “இதில் எத்தனை மையங்களை நீங்கள் இதுவரை நேரடியாகப் பார்வையிட்டிருக்கிறீர்கள்?” என்று திட்ட ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் கருணாநிதியிடமும் சரவணனிடமும் கேட்டோம். இன்னும் 20 மையங்களை மட்டுமே எங்களால் நேரில் சென்று பார்க்க முடியவில்லை.

சில மையங்களைப் பல முறை பார்வையிட்டிருக்கிறோம்" என்றனர். நான்கு நாட்களில், அந்த மலைப் பிரதேசத்தில் சென்று வருவது எவ்வளவு கடினமானது என்று உணர்ந்தேன். அவ்வளவு கவனமாகச் சென்றும் ஓரிடத்தில் வழுக்கி விழுந்தேன். இந்தப் பின்னணியில் அவர்களின் பணி மகத்தானது. அவர்களுக்குள் இருக்கும் ஒருங்கிணைப்புத் தன்மை, திட்டத்தின் வெற்றியில் பெரும் பங்கு வகிக்கிறது. “இல்லம் தேடிக் கல்வி மையங்கள் வேண்டுமா?” என்ற கேள்விக்கு, மலைவாழ் குழந்தைகள், பெற்றோர், தன்னார்வலர்கள் ஆகியோரோடு இணைந்து நின்று ‘நிச்சயம் வேண்டும்’ என்று உரக்கக் குரல் எழுப்பத் தோன்றுகிறது.

- நா.மணி, பேராசிரியர் மற்றும் தலைவர் பொருளாதாரத் துறை, ஈரோடு கலை அறிவியல் கல்லூரி.தொடர்புக்கு: tnsfnmani@gmail.com

To Read this in English: A learning scheme that widens the horizon of children’s dreams

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x