காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் முன்மொழியப்பட்ட விமான நிலையத் திட்டத்தைத் தமிழக அரசு கைவிட்டிருப்பது புதிய விவாதங்களுக்கு வித்திட்டிருக்கிறது. இது தொடர்பான கேள்விகளுக்கு விடை காண வேண்டிய அவசியம் எழுந்திருக்கிறது.
புதிய விமான நிலையம் அமைப்பதற்குக் கடந்த 2021இல் பரந்தூர், பன்னூர், படாளம், திருப்போரூர் என நான்கு சாத்தியமான இடங்கள் மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டன. இதில் பரந்தூர், பன்னூரை 2022 ஆகஸ்ட்டில் இந்திய விமான நிலைய ஆணையம் பரிந்துரைத்தது.
இரண்டு இணையான ஓடுபாதைகள், ஆரம்பக் கட்டத்தில் 2 கோடி பயணிகளைக் கையாளும் வகையில் பரந்தூரைத் தமிழக அரசு தேர்வு செய்தது. அதன் தொடர்ச்சியாக சென்னையிலிருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய அரசும் அனுமதி அளித்தது.
இந்நிலையில் விளைநிலங்கள், நீர்நிலைகளை அழித்து விமான நிலையம் அமைப்பதை எதிர்த்து பரந்தூர்-ஏகனாபுரம் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். என்றாலும் இத்திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் தீவிரமடைந்தன.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தைத் தவெக அரசு கைவிட்டிருக்கிறது. சட்டப்பேரவையில், ‘விவசாய நிலங்கள் பாதிக்கப்படாத வகையில் மாற்று இடம் தேர்வு செய்யப்படும்’ என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
‘கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மக்களுக்கும் மண்ணுக்கும் இடையூறு இல்லாத தொழில்கள் தொடங்கப்படும்’ என்று தொழில் துறை அமைச்சர் கூறியிருக்கிறார். இந்த முடிவு, தமிழகத்தின் வளர்ச்சியிலும் தொழில் வளர்ச்சியிலும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று திமுக எதிர்க்கிறது.
இதுவரை கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் உரிமையாளர்களுக்கு வழங்கப்படுமா என்கிற கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன. எந்த ஒரு மாநிலத்துக்கும் தொழில் வளர்ச்சிக்கும், புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கும் உயர் தரத்திலான சர்வதேச விமான நிலையங்கள் தேவைதான்.
மறுபுறம் விவசாய நிலங்கள், நீர்நிலைகள், சுற்றுச்சூழலைக் குலைத்து வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும்போது எதிர்ப்பு கிளம்புவதும் அதற்காகத் திட்டங்கள் கைவிடப்படுவதும் புதிதல்ல.
2011இல் மதுரவாயல் - துறைமுகம் உயர்மட்டப் பாலத் திட்டம் அரசியல் அடிப்படையில் முட்டுக்கட்டை ஏற்படுத்தப்பட்டு, 15 ஆண்டுகளைக் கடந்து இப்போது அதன் பணிகள் துரிதமாக நடைபெற்றுவருகின்றன.
தொலைநோக்குப் பார்வையில் எதிர்கால வளர்ச்சிக்கு, பெருநகரமான சென்னைக்கு அருகே இரண்டாவது விமான நிலையம் தேவை என்பதை மறுப்பதற்கில்லை.
தற்போது பரந்தூரில் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், சென்னைக்கு அருகே மக்கள், விவசாய நிலங்கள் பாதிக்கப்படாத வகையில் நிலங்கள் கிடைக்கச் சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா என்கிற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. இதற்கு விடை காண்பது சவாலானது.
மின்னணுவியல், வாகனங்கள், குறைக்கடத்திகளுக்கான ஒரு முக்கிய மையமாக சென்னை தற்போது உருவெடுத்துள்ளதால், புதிய விமான நிலையத்தை அமைக்க வேண்டும் என்று தொழில் துறையினர் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர்.
ஏற்கெனவே சென்னைக்கு அருகே ஆந்திரத்தின் குப்பத்தில் புதிய விமான நிலையம் அமைக்கும் பணியில் ஆந்திர அரசு ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் பரந்தூருக்கு மாற்றாகப் புதிய இடத்தைக் கண்டறிவதில் தமிழக அரசின் நிபுணர் குழு தீவிரம் காட்ட வேண்டும்.
புதிய விமான நிலையம் அமைக்க 7-10 ஆண்டுகள்வரை ஆகலாம் என்பதால், இதில் ஏற்படும் தாமதம் தென்னிந்தியாவில் மற்ற மாநிலங்களோடு போட்டியிடுவதில் தமிழகம் பின்தங்கிவிடும் அபாயமும் உள்ளது என்பதை மறக்கக் கூடாது.