இன்றைய இளைஞர்கள் குடும்ப வாழ்க்கைக்கும் திருமணத்துக்கும் எதிரானவர்கள் என்கிற பொதுக் கருத்தை மறுதலித்திருக்கிறது, அண்மையில் வெளியாகியிருக்கும் ஓர் ஆய்வறிக்கை.
‘மக்கள்தொகை எதிர்காலக் கணிப்பு ஆய்வு’ என்னும் தலைப்பில் ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியம் வெளியிட்டிருக்கும் அந்த ஆய்வு, சர்வதேச அளவில் விவாதப் பொருளாகி இருக்கிறது.
எதிர்பார்ப்பும் யதார்த்தமும்
73 நாடுகளைச் சேர்ந்த 1 லட்சத்து 8 ஆயிரம் இளைஞர்கள் மத்தியில் ‘வாழ்க்கை, விருப்பம், எதிர்காலம்’ என்னும் தலைப்பில் ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியம் ஆய்வு நடத்தியது. 18-39 வயது வரையிலான இருபாலினரிடமும் இது தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டபோது, பலர் இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவது குறித்து ஆர்வம் காட்டியுள்ளனர்.
ஆய்வில் பங்கேற்ற இந்திய இளம்பெண்கள் தங்களுக்குக் குழந்தைப்பேறு முக்கியம் என்றும், இரண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள விருப்பம் என்றும் கூறியுள்ளனர். இந்திய இளைஞர்கள் சராசரியாக 2.2 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.
கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக, இந்தியாவில் மக்கள்தொகைப் பெருக்கத்தின் பாதகம் குறித்து நாடு தழுவிய விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் நடத்தப்பட்டன.
மத்திய, மாநில அரசுகளின் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம் முதலான சமூக அடிப்படையில் வளர்ச்சி அடைந்த மாநிலங்கள் பெண்களின் கல்வி வளர்ச்சி, சுகாதார மேம்பாட்டில் கூடுதல் கவனம் செலுத்தியதன் பலனாக இந்தியாவின் கருத்தரிப்பு விகிதம் 2.0 என்னும் அளவைவிடக் குறைந்துள்ளது.
அதிலும் 35லிருந்து 39 வயதுக்கு உள்பட்ட முதிர்ந்த தம்பதிகளின் உண்மையான சராசரிக் குழந்தை எண்ணிக்கை 1.0லிருந்து 1.1 மட்டுமே உள்ளது. இந்நிலையில், ஆச்சரியம் அளிக்கும் வகையில் இந்த ஆய்வில் 30 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்களில் பலரும்கூட, தங்களுக்கு இரண்டு குழந்தைகள் பெற விருப்பம் எனத் தெரிவித்துள்ளனர்.
அதிலும் குழந்தைகளைப் பெறுவதன் மூலம் கிடைக்கும் உணர்வுபூர்வமான மகிழ்ச்சியே தங்களின் முதன்மையான ஊக்கசக்தி எனப் பெரும் எண்ணிக்கையிலானோர் கூறியுள்ளனர்.
புதிய சவால்கள்
இளைஞர்களின் இத்தகைய கனவுக்குப் பொருளாதாரச் சுமையும் சமூகக் கட்டமைப்புகளும் முட்டுக்கட்டையாக இருப்பதை வெளிப்படுத்தி உள்ளனர். நிதிப் பாதுகாப்பின்மை, வீட்டுவசதிப் பற்றாக்குறை ஆகியவை பூதாகரமான சிக்கல்களாக இவர்களுக்கு எழுந்துள்ளன.
நிலையான வருமானம் இன்மை, நிரந்தரப் பணி இல்லாத சூழல் உலக அளவில் 88 சதவீத இளைஞர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் நகர்ப்புறங்களில் வீட்டு வாடகை அல்லது சொந்த வீடுகளின் விலை அதிகரிப்பு, விலைவாசி ஏற்றம், வாழ்க்கை முறை மாற்றத்தால் அதிகரிக்கும் செலவுகள் ஆகியவை திருமணத்தைத் தள்ளிப்போடச் செய்யும் முக்கியக் காரணிகளாக உள்ளன.
பாலினச் சமத்துவமின்மை
கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் பெண்களின் வாழ்க்கை குடும்பச் சூழலிலும் சமூக அமைப்பிலும் முன்னேற்றம் கண்டிருக்கிறது. இருப்பினும் இன்றளவும் நடுத்தர, கீழ் நடுத்தரச் சமூக அடுக்குகளைச் சேர்ந்த இளம் பெண்கள் நாள் ஒன்றுக்கு 5 மணி நேரத்துக்கும் மேல் ஊதியமில்லா வீட்டு வேலைகளில் ஈடுபடுகின்றனர் என்பதையும் இந்த ஆய்வு பதிவுசெய்திருக்கிறது. அதேவேளையில், இளம் ஆண்கள் அரை மணி நேரம் மட்டுமே வீட்டு வேலையில் செலவிடுகின்றனர்.
மேலும், மூன்று வயதுக்கு உள்பட்ட குழந்தைகளின் தாய்மார்கள் முழுநேர வேலைக்குச் செல்வதை இன்னும் சமூகத்தின் ஒரு பகுதியினர் நெறிபிறழ்வாகக் கருதுகின்றனர். இதனால் பெண்கள் தங்களின் தொழில் வாழ்க்கையையும் குடும்பத்தையும் சமாளிக்க முடியாமல் தவிக்கின்றனர். இவற்றை மீறிப் பணிபுரிந்தாலும் ஆண்களுக்கு நிகரான ஊதியம் பெண்களுக்குப் பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் வழங்கப்படுவதில்லை என்பதே கசப்பான உண்மை.
காலநிலைக் கவலை
இன்றைய இளைஞர்கள் முந்தைய தலைமுறையை விடப் பல புதிய உலகளாவிய அழுத்தங்களை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக, காலநிலை நெருக்கடி தங்களின் அன்றாட வாழ்க்கையைச் சீர்குலைப்பதாக ஏறக்குறைய அனைத்து இளைஞர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.
பொருளாதார உறுதியற்ற தன்மை, உலகளாவிய மோதல்கள், மனநலப் பிரச்சினைகள் போன்ற பன்முகக் கவலைகள் இவர்களின் எதிர்கால நம்பிக்கையைக் கேள்விக்கு உள்ளாக்குகின்றன.
தேவையான மாற்றம்
உலக நாடுகளிலேயே மிக அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களைக் கொண்ட இந்தியா, தனது எதிர்காலத்தின் கனவுகளைத் தடையின்றி நனவாக்கக்கூடிய உகந்த சூழலை உருவாக்கிக் கொடுப்பதற்குத் தேவையான புதிய திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் தீட்ட வேண்டும்.
இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையே மிகப் பெரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. பிஹாரில் கருத்தரிப்பு விகிதம் 2.7 ஆக உள்ள நிலையில், கேரளம், தமிழ்நாடு, சிக்கிம் போன்ற மாநிலங்களில் இது மிகக் குறைவாக உள்ளது.
எனவே, ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஒரே மாதிரியான மக்கள்தொகைக் கொள்கையை வகுக்காமல், அந்தந்த மாநிலங்களின் நிலைக்கு ஏற்பத் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். குழந்தை வளர்ப்பு சார்ந்து இளைஞர்களின் தயக்கத்தைப் போக்க அரசு, தனியார் துறைகள் இணைந்து தரமான குழந்தை பராமரிப்பு மையங்கள், சமமான ஊதியம், நெகிழ்வான வேலை நேரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மனநல ஆதரவை வழங்க முன்வர வேண்டும்.
வேலைக்குச் செல்லும் பெற்றோருக்கு உதவும் வகையில் குறைந்த கட்டணத்தில் தரமான சேவையை வழங்குகிற, அருகமை குழந்தைப் பராமரிப்பு வசதிகள் உருவாக்கப்பட வேண்டும். தனியார் துறைகள், நிறுவனங்கள் பெற்றோருக்கான விடுப்பு, நெகிழ்வான வேலை நேரத்தை வழங்குவதன் மூலம் குடும்பப் பொறுப்புகளைச் சமமாகப் பகிர்ந்துகொள்ள உதவலாம்.
காலநிலை மாற்றம், வேலைவாய்ப்பின்மையால் ஏற்படும் மன அழுத்தங்களை எதிர்கொள்ளத் தகுந்த ஆலோசனைகளும் மனநலப் பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும். இளைஞர்கள் குடும்ப வாழ்க்கைக்கு எதிரானவர்கள் அல்ல. மாறாக, தங்கள் கனவுகளைப் பாதுகாப்பான முறையில் கட்டமைப்பதற்கான உகந்த சூழலும் வாய்ப்புகளுமே அவர்களுடைய எதிர்பார்ப்பாக உள்ளன.