சிறப்புக் கட்டுரைகள்

தொழிலாளர் பங்கேற்பில் பெண்களின் நிலை | சொல்.. பொருள்.. தெளிவு

கி.சந்திரசேகர், க.உஷா

காலமுறைத் தொழிலாளர் வர்க்கக் கணக்கெடுப்பு (Periodic Labour Force Survey) 2025 அறிக்கையின்படி, கரோனா பெருந்தொற்றுக்குப் பின்னர் பெண்களின் தொழிலாளர் வர்க்கப் பங்கேற்பு விகிதத்தில் (FLFPR – Female Labour Force Participation Rate) குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்பட்டிருக்கிறது. 2019–20ஆம் ஆண்டில் 15 வயது, அதற்கு மேற்பட்டவர்களுக்கான மொத்தப் பங்கேற்பு விகிதம் 30%ஆக இருந்தது 2025இல் 40% ஆக உயர்ந்துள்ளது. இந்த உயர்வு கிராமப்புறங்களில் குறிப்பிடத்தக்கதாக இருந்தது; அதாவது, 33 சதவீதத்திலிருந்து 45.9%ஆக உயர்ந்தது. இதற்கு மாறாக, நகர்ப்புறங்களில் அது 23.3 சதவீதத்திலிருந்து 27.7%ஆக மட்டுமே உயர்ந்துள்ளது. இந்த வேறுபாடு, கரோனா பெருந்தொற்றுக்குப் பின்னர் சில மாநிலங்கள் எவ்வாறு செயல்பட்டுள்ளன என்பதை ஆராய வேண்டிய அவசியத்தை எடுத்துக் காட்டுகிறது.

ஆண்டு சதவீதப் புள்ளி மாற்றம்: இதற்காக, 2019–20 முதல் 2025 வரை ஒவ்வொரு மாநிலத்துக்குமான கிராமப்புற எஃப்.எல்.எஃப்.பி.ஆர்-இல் ஏற்பட்ட சராசரி ஆண்டு சதவீதப் புள்ளி மாற்றத்தை (AAPP – Average Annual Percentage Point) கணக்கிட வேண்டும். இது முன்னேற்றத்தின் வேகத்தைச் சுட்டிக்காட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறதே அன்றி, மாநிலங்களைத் தரவரிசைப்படுத்துவதற்காக அல்ல. குறிப்பாக மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், குஜராத், ஒடிஷா, பிஹார், ராஜஸ்தான், ஹரியாணா போன்ற மாநிலங்களில் ஏ.ஏ.பி.பி. ஆண்டுக்கு 2.58 சதவீதப் புள்ளிகள் என்கிற அகில இந்திய கிராமப்புறச் சராசரியைவிட அதிகமாக இருந்தது. அதாவது, இம்மாநிலங்களில் கிராமப்புற எஃப்.எல்.எஃப்.பி.ஆர். தேசியச் சராசரியைவிட வேகமாக உயர்ந்துள்ளது.

இதற்கு மாறாக மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், உத்தராகண்ட், மகாராஷ்டிரம், கோவா, இமாசலப் பிரதேசம் ஆகியவற்றுடன் ஐந்து தென் மாநிலங்களிலும் ஏ.ஏ.பி.பி. தேசியச் சராசரியைவிடக் குறைவாக இருந்தது. இருப்பினும், பெரும்பாலான மாநிலங்கள் நேர்மறையான மாற்றத்தைத் தொடர்ந்து பதிவுசெய்தன.

இதேபோல், நகர்ப்புறங்களுக்கான ஏ.ஏ.பி.பி. மாற்றத்தில் ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்கள் ஆண்டுக்கு 2 சதவீதப் புள்ளிகளுக்கு மேல் ஏ.ஏ.பி.பி-ஐப் பதிவுசெய்து, குறிப்பாக வலுவான முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. மேலும் உத்தராகண்ட், கேரளம், சத்தீஸ்கர், கர்நாடகம், ஒடிஷா, பிஹார், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களும் ஆண்டுக்கு 0.88 சதவீதப் புள்ளிகள் என்கிற அகில இந்திய நகர்ப்புற சராசரியைவிட அதிகமான ஏ.ஏ.பி.பி-ஐப் பதிவு செய்தன.

இதற்கு மாறாக, மீதமுள்ள மாநிலங்கள் தேசிய சராசரியைவிடக் குறைவாகப் பதிவுசெய்துள்ளன. ஆக, நகர்ப்புறங்களில் ஒட்டுமொத்த முன்னேற்றத்தின் வேகம் கிராமப்புறங்களைவிடக் கணிசமாகக் குறைவாக இருந்தபோதிலும், பல மாநிலங்கள் ஒப்பீட்டளவில் வலுவான முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளன.

அணுகுமுறையில் மாற்றம்: எனினும், மாநிலங்களின் செயல்திறனை மதிப்பிடுவதற்கு ஏ.ஏ.பி.பி. மட்டும் போதுமானதல்ல. ஏனெனில், ஒரு மாநிலம் எந்த அளவிலான பெண்களின் தொழிலாளர் படைப் பங்கேற்பிலிருந்து தொடங்கியது என்பதை அது கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. எனவே, ஒவ்வொரு மாநிலத்துக்குமான 2019–20 எஃப்.எல்.எஃப்.பி.ஆரை அடிப்படை அளவாக வைத்து, இந்த அடிப்படை அளவையும் அதன்பிறகு ஏற்பட்ட ஏ.ஏ.பி.பி-ஐயும் இணைத்துப் பார்க்கும்போது, குறைந்த அடிப்படை நிலையிலிருந்து மாநிலங்கள் முன்னேறி வருகின்றனவா, ஏற்கெனவே உயர்ந்த நிலையில் உள்ள பங்கேற்பை மேலும் மேம்படுத்தி வருகின்றனவா அல்லது மெதுவான முன்னேற்றத்தை எதிர்கொள்கின்றனவா என்பதைச் சரியாக மதிப்பிட முடிகிறது.

இதன் அடிப்படையில், கிராமப்புற 2019-20 (எஃப்.எல்.எஃப்.பி.ஆர்.) அடிப்படை நிலைக்கும் ஏ.ஏ.பி.பி-க்கும் இடையிலான தொடர்பில் பிஹார், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், ஹரியாணா ஆகியவை ஒப்பீட்டளவில் குறைந்த பெண்கள் எஃப்.எல்.எஃப்.பி.ஆர்-இல் இருந்து தொடங்கியிருந்தாலும், அகில இந்தியச் சராசரியைவிட அதிகமான ஏ.ஏ.பி.பி-ஐப் பதிவுசெய்துள்ளன.

இது ஒப்பீட்டளவில் வேகமான முன்னேற்றத்தையும், பின்தொடர்ந்து முன்னேறும் (catch-up) போக்குக்கான சாத்தியத்தையும் குறிக்கிறது. மறுபுறம் ஒடிஷா, குஜராத், ராஜஸ்தான் ஆகியவை ஒப்பீட்டளவில் உயர்ந்த கிராமப்புற எஃப்.எல்.எஃப்.பி.ஆர். அடிப்படை நிலையிலிருந்து தொடங்கியிருந்தும், அகில இந்தியச் சராசரியைவிட அதிகமான ஏ.ஏ.பி.பி-ஐப் பதிவுசெய்துள்ளன.

மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், உத்தராகண்ட், சத்தீஸ்கர், மகாராஷ்டிரம், இமாசலப் பிரதேசம் மற்றும் ஐந்து தென் மாநிலங்கள் ஒப்பீட்டளவில் உயர்ந்த அடிப்படை நிலைகளைக் கொண்டிருந்தாலும், தேசிய சராசரியை விடக் குறைந்த ஏ.ஏ.பி.பி-ஐப் பதிவு செய்துள்ளன. அடுத்து, நகர்ப்புற 2019-20 (எஃப்.எல்.எஃப்.பி.ஆர்.) அடிப்படை நிலைக்கும் ஏ.ஏ.பி.பி. இடையிலான தொடர்பில், ராஜஸ்தான், குஜராத், உத்தராகண்ட், பிஹார் ஆகிய மாநிலங்கள் ஒப்பீட்டளவில் குறைந்த அடிப்படை நிலையிலிருந்து தொடங்கியபோதிலும், அகில இந்தியச் சராசரிக்கு மேலான ஆண்டு சராசரிப் பங்கேற்பு விகிதத்தைப் பதிவுசெய்தன.

இது, குறைந்த அடிப்படை நிலையில் தொடங்கி ஒப்பீட்டளவில் வேகமான முன்னேற்றத்தைக் குறிக்கிறது. இதற்கு மாறாக உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களும் ஒப்பீட்டளவில் குறைந்த நிலைகளில் இருந்து தொடங்கியபோதிலும், சராசரிக்கும் குறைவான ஆண்டு சராசரிப் பங்கேற்பு விகிதத்தைப் பதிவுசெய்தன. இது, மெதுவான முன்னேற்றத்தைக் குறிக்கிறது.

முன்னேற்றத்தின் வேகம்: ஒப்பீட்டளவில் அதிக அடிப்படை நகர்ப்புறக் குடும்ப அடிப்படையிலான பங்கேற்பு விகிதத்தைக் கொண்ட மாநிலங்களில் கேரளம், கர்நாடகம், சத்தீஸ்கர், ஒடிஷா, ஆந்திரப் பிரதேசம் ஆகியவை மேலான ஆண்டு சராசரிப் பங்கேற்பு விகிதத்தைப் பதிவுசெய்தன. ஏற்கெனவே அதிகப் பங்கேற்பு நிலைகளைக் கொண்ட சில மாநிலங்கள் தொடர்ந்து ஒப்பீட்டளவில் விரைவான முன்னேற்றங்களைக் கண்டுவருவதை இது காட்டுகிறது. மறுபுறம் தமிழ்நாடு, தெலங்கானா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், இமாசலப் பிரதேசம், கோவா ஆகிய மாநிலங்கள், ஒப்பீட்டளவில் அதிகத் தொடக்க நிலைகளைக் கொண்டிருந்தபோதிலும், மெதுவான முன்னேற்றத்தையே பதிவுசெய்தன.

மொத்தத்தில், பெண்களின் தொழிலாளர் வர்க்கப் பங்கேற்பில் முன்னேற்றத்தின் வேகம் மாநிலங்களுக்கு இடையில் வேறுபடுவதுடன், கிராமப்புற - நகர்ப்புறங்களுக்கு இடையிலும் கணிசமாக வேறுபடுகிறது. எனவே, 2019–20ஆம் ஆண்டின் அடிப்படை நிலையை, அதன் பிறகான முன்னேற்றத்தின் வேகத்துடன் இணைத்துப் பார்ப்பது, கரோனா பெருந்தொற்றுக்குப் பின்னர் இந்தியா முழுவதும் பெண்களின் தொழிலாளர் வர்க்கப் பங்கேற்பில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை நுணுக்கமாகப் புரிந்துகொள்ள உதவுகிறது.

SCROLL FOR NEXT