சிறப்புக் கட்டுரைகள்

சர்க்கரை விலையேற்றம் கட்டுக்குள் வருமா? | சொல்... பொருள்... தெளிவு

பண்டிகைக் காலத்தில் நெருக்கடி அதிகரிக்கலாம் என்னும் கவலை எழுந்திருக்கிறது

உதயசங்கரன் பாடகலிங்கம்

இந்தியாவில் கடந்த ஒரு மாதக் காலத்தில் சர்க்கரை விலை ஏறக்குறைய 30% அதிகரித்திருக்கிறது. ‘தீவிரமாகவும் அடிக்கடியும் நிகழ்கிற வானிலை மாற்றங்களால், உணவு விலையேற்றம் தொடர்ந்து நீடிக்கக்கூடும்’ என்று ரிசர்வ் வங்கி விடுத்த எச்சரிக்கை சார்ந்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது.

சர்க்கரை உற்பத்தி

உலக அளவில் கரும்பு அதிகமாக விளைகிற நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இதனால் 5 கோடி விவசாயிகளும் சர்க்கரை ஆலைகள், அது சார்ந்த தொழில் துறைகளின் 5 லட்சம் தொழிலாளர்களும் பயனடைகின்றனர். மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி 2025 – 26இல் இந்தியாவின் கரும்பு உற்பத்தி 50 கோடி மெட்ரிக் டன்னை எட்டியுள்ளது.

இது, 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட 43.5% அதிகம். இலங்கை, மேற்கு ஆசியா, கிழக்கு ஆப்ரிக்கா ஆகியவற்றுக்கு அதிக அளவில் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவ்வளவு பெருமிதங்களுக்கு மத்தியில், அண்மைக் காலமாகத் தொடர்ந்துவரும் சர்க்கரை விலையேற்றம் சாமானியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

அதிகப்படியான மழை, கரும்பைப் பாதிக்கும் பயிர்நோய்கள் ஆகியவற்றால் சர்க்கரை உற்பத்தி மதிப்பீடு குறைந்ததாக மத்திய அரசு கூறியது. ஒருவகையில், தற்போதைய சூழல் 2024 ஆகஸ்ட்டில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையின் மீது கவனத்தைக் குவித்துள்ளது. தீவிர வானிலை நிகழ்வுகள் அடிக்கடி நிகழும்போது, அதனால் ஏற்படும் விலையேற்றம் நீடிக்கும் என்று அந்த மதிப்பீட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பொதுவாகவே, உணவுப்பொருள் விலையேற்றம் என்பது தற்காலிகமானதாக, நிலையற்றதாக இருக்கும். ஆனால், அண்மைக் கால விலையேற்றம் அப்படி இல்லை. தீவிர வானிலை நிகழ்வுகளால் பயிர்ச் சேதம் ஏற்பட்டு, அதன் தொடர்ச்சியாக விநியோகம் பாதிக்கப்பட்டு, உணவு விலை அதிகரித்து, அந்த விலையேற்றத்தைக் குறைக்க முடியாத சூழல் இதை உறுதிப்படுத்துகிறது.

இந்த நிலையில், எத்தனால் உற்பத்திக்காகக் கரும்பு அதிகமாகப் பயன்படுத்தப்படுவதாலேயே நாட்டில் சர்க்கரை பற்றாக்குறை நிலவுவதாகவும் அதன் காரணமாகச் சந்தையில் சர்க்கரை விலை அதிகரித்திருப்பதாகவும் அண்மையில் தகவல்கள் பரவின. ஆனால், எத்தனால் உற்பத்தியில் நான்கில் மூன்று பகுதிப் பங்களிப்பு சோளம் உள்ளிட்ட தானியங்களில் இருந்து பெறப்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது.

2022-23இல் எத்தனால் உற்பத்தியில் கரும்பின் பங்களிப்பு 12%ஆக இருந்த நிலையில், 2025-26இல் அது 9%ஆகக் குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. ஆண்டுக்குச் சராசரியாக 300 – 340 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரையை இந்தியா உற்பத்தி செய்கிறது; அதில் உள்நாட்டுத் தேவையானது ஏறக்குறைய 280-290 லட்சம் மெட்ரிக் டன்னாக உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக மிக அதிக அளவில் கரும்பு உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், அவற்றில் ஒருபகுதி எத்தனால் உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்டதாகவும், அதற்கான கரும்புக் கொள்முதலால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்ததாகவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

2024 ஆகஸ்ட் முதல் 2026 ஜூலை வரை சர்க்கரைக்கான சில்லறை விற்பனை விலை 3% மட்டுமே அதிகரித்ததாகக் குறிப்பிட்டுள்ளது. கடந்த 2 மாதங்களில் மட்டும் சர்வதேச அளவில் சர்க்கரை விலை 16% அதிகரித்திருப்பதாகக் கூறியுள்ளது.

2026-27இல் சர்வதேச அளவிலான சர்க்கரை பற்றாக்குறை 33 லட்சம் மெட்ரிக் டன்னாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், உள்நாட்டுச் சர்க்கரை உற்பத்தி எதிர்பார்ப்பைவிடக் குறைவாக இருப்பது, பண்டிகைக் காலத்தையொட்டித் தேவை அதிகரித்திருப்பது, வானிலை மாற்றங்களால் கரும்பு உற்பத்தியில் ஏற்பட்ட பாதிப்பு, உலகளாவிய சர்க்கரை விநியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடியால் விலை அதிகரித்திருப்பது உள்ளிட்டவற்றால் தற்போது சில்லறை சர்க்கரை விலை உயர்ந்திருப்பதாக மத்திய அரசு சொல்கிறது.

கூடவே, கரும்பு விளைச்சலைப் பாதிக்கும் சிவப்பு அழுகல், தண்டு துளைப்பான் நோய்கள், அதீத மழையால் நீர் தேங்குதல் ஆகியவற்றால் சர்க்கரை உற்பத்தி பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாகக் கூறியுள்ளது.

அதேநேரத்தில், தற்போதைய சர்க்கரைப் பற்றாக்குறை உண்மையானதல்ல என்றும், வணிகக் கணிப்புகள் சார்ந்து நிகழ்கிற பதுக்கலால் இது நிகழ்வதாகவும் இந்தியச் சர்க்கரை, உயிரி - ஆற்றல் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

உணவு விலையேற்ற அபாயம்

காலநிலை மாற்றத்தை வேளாண்மை சார்ந்த தடைகளாக மட்டுமல்லாமல், விலையேற்ற அபாயங்களுக்கான காரணியாகவும் குறிப்பிடுகிறது மத்திய ரிசர்வ் வங்கி. 2020இல் ஏற்பட்ட கோவிட் பெருந்தொற்று, உக்ரைன் போர் ஆகியவற்றோடு காலநிலை மாற்றமும் உணவு விலையேற்றத்தில் முக்கியப் பங்கு வகித்ததாக, 2024 ஜனவரியில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

மழைப்பொழிவைப் போன்றே வெப்பநிலை, வறட்சி, பருவம் தப்பிய மழை போன்றவை அதிகமானாலும் வேளாண் அறுவடை பாதிப்படையும் என்று கூறியிருந்தது.

பொதுவாக, இது போன்ற காரணங்களால் உற்பத்தி குறையும்; அதனால் சந்தையில் வரத்து குறைந்து மொத்த விற்பனை விலை உயரும்; அவற்றை அதிக விலை கொடுத்து வாங்கிச் சேமிப்பதால் சில்லறை விற்பனை விலை மேலும் உயர்ந்து, அது தொடர்பான எதிர்பார்ப்புகளால் பதுக்குதலும் நிகழும்போது கூடுதல் அழுத்தம் ஏற்படக்கூடும்.

அரசின் முன்னெடுப்பு

ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30 வரை வணிகர்களுக்கான சர்க்கரை இருப்பு வரம்பு 400 டன் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, செப்டம்பர் 1 முதல் மொத்த விற்பனையாளர்கள் 15 நாள் தேவைக்கு அதிகமான சர்க்கரையை இருப்பு வைக்க அனுமதி கிடையாது.

பதுக்கலைக் கண்டறியும் வகையில் மத்திய, மாநில அரசு அதிகாரிகளின் கூட்டுக்குழுக்கள் சர்க்கரை ஆலைகள், கிடங்குகளில் நேரடிச் சோதனைகளில் ஈடுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 லட்சம் மெட்ரிக் டன் கச்சா சர்க்கரையை வரி இல்லாமல் இறக்குமதி செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. மேலும், கரும்பு அரவைப் பருவத்தை அக்டோபர் 15க்கு மாற்றியமைத்து, இடைப்பட்ட காலத்தில் கரும்பு கொள்முதலை அதிகரித்து, பண்டிகைக் காலத்தில் வழக்கத்தைவிடக் கூடுதலாக 3 - 4 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரை உற்பத்தியைப் பெறத் திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றின் வழியே பலன்கள் கிடைக்கும்போது, தற்போதைய சர்க்கரை விலையேற்றச் சூழல் கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கலாம்.

SCROLL FOR NEXT