சிறப்புக் கட்டுரைகள்

பேரவைத் தேர்தல் 2026: ஏன் வாக்களிக்க வேண்டும்?

100 சதவீத வாக்களிப்பு என்பது லட்சியம்

ஆனந்தன் செல்லையா

‘நான் ஏன் வாக்கு அளிக்க வேண்டும்?’ - தமிழகத்தில் இன்று நடைபெறுகிற தேர்தலில் ‘ஜென் இசட்’ தலைமுறையினரின் தெரிவு என்னவாக இருக்கப்போகிறது என்கிற கேள்வி முக்கியத்துவம் பெற்றுள்ள சூழலில், அவர்களிடையே மேற்கண்டதுபோல் கேள்வி கேட்பவர்களும் இருக்கிறார்கள்.

இளைஞர்களை வாக்காளர் வட்டத்துக்குள் கொண்டுவருவதை முதன்மை நோக்கமாகக் கொண்டுதான், கடந்த சில மாதங்களாகவே இந்தியத் தேர்தல் ஆணையம் விழிப்புணர்வுப் பரப்புரை மேற்கொண்டு வந்தது.

அசாமில் தேர்தல் ஆணையம் நடத்திய இத்தகைய நிகழ்ச்சிகளில் ‘சோட்டா பீம்’, ‘சுட்கி’ போன்ற குழந்தைகளுக்கான கார்ட்டூன் தொடர் கதாபாத்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. கேரளத்தில் அண்மைத் தேர்தலில் புதிய வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் அல்வா அளித்தது.

புரியாத மௌனம்

வாக்குப்பதிவில் இளைஞர்களின் பங்களிப்பு குறைவது கவலைக்குரிய வெற்றிடம். சாலை விதிமீறல்கள், சாதிமோதல்கள், பாலியல் குற்றங்கள் போன்றவற்றில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஈடுபடும்போது, கல்வியின் பயன்தான் என்ன என்கிற கேள்வி எழுவது வாடிக்கை.

தேர்தலிலிருந்து அவர்கள் தங்களை விலக்கி வைத்துக்கொள்வதற்கும் அந்தக் கேள்வி பொருந்தும். பள்ளிப் பருவத்தில் தேர்தல் குறித்த அடிப்படைப் புரிதலை ஏற்படுத்தும்வகையிலான தகவல்கள் பாடங்களில் உண்டு.

ஆனால் பாடத்திட்டத்தில் அறிவியல், கணிதம் குறித்த பாடங்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் வரலாறு, சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கு அளிக்கப்படுவதில்லை.

மாணவருக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்ட கல்வியமைப்பு, அது அவர்களைப் பொறுப்புள்ள குடிமக்கள் ஆக்குவதையும் உள்ளடக்கிய ஒன்றாக அமைந்திருக்கவில்லை.

இந்த அமைப்பு தங்களிடம் எதை வலியுறுத்து​கிறது, எதை மேம்போக்காக எதிர்​பார்க்​கிறது என்கிற வித்தி​யாசத்தை மாணவர்கள் உணர்ந்தே இருக்​கின்​றனர். வாக்களிப்பது உள்ளிட்​ட​ வற்றுக்கு உரிமை அளிக்​கப்​படுகிற பதினெட்டு வயதை அவர்கள் அடையும்​போது, சமூகம் அவர்களிடம் பல வகையான பங்களிப்புகளை எதிர்​பார்க்​கிறது. ஆனால் அதற்கான உள்ளார்ந்த ஆயத்தங்கள் நடந்திருக்​காத​போது, புதிர் போன்ற மௌனம்தான் இளைஞர்​களிட​மிருந்து பதிலாகக் கிடைக்​கிறது.

கற்பிக்கும் பெரியோர்

உள்ளுணர்வு மூலமாக மட்டுமல்லாமல், பெற்றோர் உள்ளிட்ட பெரியவர்களைக் கவனித்தும்தான் குழந்தைகள் தங்களைத் தகவமைத்துக்கொள்கின்றனர். தேர்தலுக்கும் இளம் தலைமுறையினருக்குமான தொடர்பும் பெரியவர்களின் தாக்கத்துக்கு உட்பட்டதுதான்.

ஒவ்வொரு தேர்தலின்போதும் ‘இந்த நிகழ்வால் எனக்கு என்ன கிடைக்கப்போகிறது?’ என்கிற கேள்வியைக் குடும்பத்திலோ, பொதுவெளியிலோ முன்வைக்கும் பெரியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த அணுகுமுறையை நிர்ணயிப்பதில் அவர்களின் வாழ்க்கைத்தரம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

தேர்தல் செயல்பாட்டில் நம்பிக்கை அற்ற இவர்கள் கிராமப்புறங்களிலும் இருக்கலாம்; நகர்ப்புறங்களிலும் இருக்கலாம். ஆனால், இரண்டுக்கும் இடையே வேறுபாடு உள்ளது.

அகற்றப்படத்தக்க அறியாமை

பள்ளிக்குக் கிளம்பிக்கொண்டிருக்கும் மகனையோ, மகளையோ தடுத்துத் தங்களின் வீட்டு வேலை அல்லது தோட்ட வேலைக்கு அனுப்பிய தந்தைகள் ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புவரைக்கும் இருந்தனர்.

படிப்பிலிருந்து விடுபட்ட, ஆனால் குழந்தைகளை விடுபட வைக்க இயலாத பெற்றோராக அவர்கள் இருந்தனர். அடுத்த தலைமுறையானது படிப்பின் பலனை முழுமையாக அனுபவிக்கும் காலத்தில் அடியெடுத்து வைக்காததால், ‘படிப்பு சோறு போடாது’ என்கிற கருத்தை இவர்கள் பற்றிக்கொண்டு இருந்தனர்.

இந்தப் பிரிவினரில் எஞ்சிய சிலர் தேர்தலையும், இதேபோல அணுகுவதைச் சிற்றூர்களில் காண முடியும். பரப்புரை நடவடிக்கைகளால் இந்த அறியாமையை அகற்றிவிட முடியும் என்பது கவனிக்கத்தக்கது.

பின்புலத்தில் இயங்கும் பிடிவாதம்

வாக்களிப்பிலிருந்து எளிதில் விடுபடும் தரப்பினராகத் தேர்தல் ஆணையம் அடையாளம் கண்டுள்ள நகர்ப்புற வாக்காளர்களின் நிலை இதிலிருந்து வேறுபட்டது. குறிப்பாக, அனைத்து வசதிகளோடும் வாழ்ந்துகொண்டிருக்கும் மேல்தட்டுப் பிரிவினர், தேர்தல் குறித்து வெளிப்படுத்தும் அவநம்பிக்கை பரவலாக அறியப்பட்ட ஒன்று.

குடிமக்கள் தங்களை அரசிடம் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு ஒரே வழி தேர்தல் என்பதை இவர்கள் புரிந்துகொண்டிருப்பினும், வாக்களிப்பதை இவர்கள் தவிர்க்கின்றனர். பிடிவாதமான மனநிலை இதன் பின்புலத்தில் உள்ளது எனலாம்.

சுய விருப்பத்தின் அடிப்படையில் இவர்கள் செய்துகொள்ளும் வெளியேற்றம் பிரச்சினைக்குத் தீர்வாக அமைவதில்லை. குறைகள் இருப்பினும், குடியாட்சி முறையில் ஒரு சமூகம் தன்னைத் தானே நிர்வகித்துக்கொள்ள, தேர்தல் தவிர்க்கப்படவே முடியாதது.

பங்கேற்பாளர்கள் குறையக் குறைய ஓர் இடமோ, துறையோ பெரும்பான்மைச் சமூகத்துக்குப் பயனற்ற ஒன்றாகவே மாறும் என்பதே உலக நடைமுறை. மைதானத்துக்கு உள்ளிருக்கும் ஒருவருக்குத்தான் ஆட்டத்தை விமர்சிக்கும் தகுதி உள்ளது. இதை இவர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் பரப்புரைகள் அமைய வேண்டும்.

அரசியல்வாதிகளின் பொறுப்பு

தேர்தலை மறைமுகமாகப் புறக்கணிப்பவர்கள் தேர்தல் கட்டமைப்புக்குள் வருவதில், அரசியல் தலைவர்களின் ஆக்கபூர்வமான செயல்பாட்டுக்குப் பெரும்பங்கு இருக்கிறது. வாக்களிக்கப் பணம் தரப்படும் கலாச்சாரம், தேர்தல் கருத்தியலின் அடித்தளத்தையே சிதைப்பதோடு, பலரைத் தேர்தலிலிருந்து விலகி இருக்க வைக்கிறது.

பேச்சு, நேர்மை, பிரச்சினைகளை அணுகும் விதம், வெளிப்படைத்தன்மை, சமத்துவம், மொழி, பண்பாடு குறித்த புரிதல், கடந்த காலச் செயல்பாடுகள் எனப் பல கூறுகள் ஓர் அரசியல் ஆளுமைக்கு உருக்கொடுக்கின்றன.

இளைஞர்களும் அதிருப்தியில் உள்ள பெரியவர்களும் ஆர்வத்தோடு தங்களை இணைத்துப் பார்த்துக் கொள்ளும் வகையிலான அரசியல் தலைவர்களின் செயல்பாடு, வாக்குப்பதிவை அதிகரிக்கச் செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

பெண் வாக்கு

வாக்கு சதவீதத்தை உயர்த்துவதில் பெண்களின் பங்கேற்பையும் அதிகரிக்கச் செய்ய, தேர்தல் ஆணையம் முயல்கிறது. பெண்களின் வாக்குகளைக் குறிவைத்துக் கட்சிகள் பல இலவசத் திட்டங்களை முன்வைக்கும் அளவுக்குப் பெண்களின் தேர்தல் பங்கேற்பு வலுவானதாக இருப்பினும், அவர்களில் குறிப்பிடத்தக்க அளவினர் வாக்களிக்கத் தவறும் நிலையே கள நிலவரமாக உள்ளது.

ஆனால் இது பெண்கள் விரும்பி எடுக்கும் முடிவல்ல. குடும்பம், பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகள், நடைமுறைச் சிக்கல்கள் போன்றவை அவர்களின் வாக்குரிமையையும் பாதிக்கின்றன. அரசியலிலும் அரசு நிர்வாகத்திலும் பெரும்பங்கு அதிகாரத்தை வசப்படுத்தியுள்ள ஆண்கள், இந்த விஷயத்தில் தங்கள் பொறுப்புணர்வை வெளிப்படுத்த வேண்டும்.

பெண்கள் வாக்களிப்பது, குடும்பத்தின் கடமையாக ஆண்களால் கருதப்பட வேண்டும். குடும்பத்தை நிர்வகிப்பதில் பெண்ணின் பங்களிப்பு இன்றியமையாதது என்பதை ஒப்புக்கொள்ள முடிகிற ஆண்களால்தான் இத்தகைய ஒத்துழைப்பும் சாத்தியமாகும்.

உணவு, உடை, உறைவிடம் உள்ளிட்ட அனைத்திலும் உலக அரசியலிலிருந்து உள்ளூர் அரசியல் வரைக்கும் பின்னிப்பிணைந்துள்ளன. அதில் பங்கெடுப்பதற்கான வாய்ப்புகளை சில வரம்புகளுக்கு உட்பட்டாவது தேர்தல் அளிக்கிறது.

யாரையும் தேர்ந்தெடுக்க விரும்பாதவர்களுக்கு ‘நோட்டா’ என்கிற தெரிவும் அளிக்கப்பட்டுள்ளது. நூறு சதவீத வாக்களிப்பு, தேர்தல் ஆணையத்தின் லட்சியமாக உள்ளது.

வாக்களிப்பதைக் கட்டாயமாக்கும் சில நாடுகளின் நடைமுறையும் விமர்சனத்துக்கு உரியது. குடியாட்சித் திருவிழாவாக அணுகப்படும் தேர்தல், பெரும்பாலான மக்களின் பங்களிப்பால்தான் உயிரோட்டம் கொண்டதாகவும் உண்மையான நோக்கத்தை நிறைவேற்றுவதாகவும் அமையும் என்பது மட்டும் உறுதி. வாக்காளர்கள், வேட்பாளர்கள் ஆகிய இரு தரப்பின் கூட்டுப் பொறுப்பால்தான் அது சாத்தியப்படும்.

- தொடர்புக்கு: anandchelliah.hindutamil.co.in

SCROLL FOR NEXT