சிறப்புக் கட்டுரைகள்

கல்விக்கான நிதி ஒதுக்கீடு: ஏன் அதிகரிக்கப்பட வேண்டும்? | சொல்... பொருள்... தெளிவு

உதயசங்கரன் பாடகலிங்கம்

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 6% வரை கல்விக்கான செலவினமாக அமைய வேண்டும் என்று தேசியக் கல்விக் கொள்கை 2020 பரிந்துரைக்கிறது; 60 ஆண்டுகளுக்கு முன் 1966இல் சமர்ப்பிக்கப்பட்ட கோத்தாரி ஆணைய அறிக்கையும் அதையே வலியுறுத்துகிறது. ஆனால் மத்திய, மாநில அரசுகள் இணைந்து கல்விக்காகச் செலவழிப்பது 4.1% என்கிற அளவிலேயே இருப்பதால், இன்னும் அது கனவாகவே தொடர்கிறது.

கல்விப் பங்களிப்பில் சரிவு

இந்திய அரசமைப்பின் ஏழாவது அட்டவணையில் பொதுப்பட்டியலில் கல்வி இடம்பெற்றிருப்பதால், அது தொடர்பான அதிகாரங்கள், பொறுப்புகளை மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்துகொள்கின்றன. 2013 – 14 பட்ஜெட்டில் கல்விக்காக ரூ.65,867 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2026 – 27ஆம் நிதியாண்டில் ரூ.1,39,289 கோடியாக உயர்ந்திருக்கிறது.

இடைப்பட்ட ஆண்டுகளில் மொத்த பட்ஜெட்டின் அளவு ஒவ்வோர் ஆண்டும் 10% என்கிற அளவில் உயர்ந்து வந்திருக்கிறது. அதேநேரம், ஒட்டுமொத்த பட்ஜெட்டின் அளவைக் கணக்கில் கொண்டால், கடந்த 12 ஆண்டுகளில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு 4.6%இல் இருந்து 2.5%ஆகக் குறைந்திருக்கிறது. இது அரசு நிதியுதவி பெறும் கல்விக்கான முன்னுரிமை குறைந்து வருவதையே உணர்த்துகிறது.

உலக வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின்படி 2021இல் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகள் தங்களது ஜிடிபியில் முறையே 5.4%, 5.9%, 5.2%யைக் கல்விக்காக ஒதுக்கியுள்ளன.

இந்தியாவில் இவ்விஷயத்தில் இன்னும் முன்னேற்றம் தென்படவில்லை. 2013-14இல் மொத்த பட்ஜெட்டில் சுகாதாரத்துக்கான பங்கு 2% என்கிற அளவில் இருந்தது. தற்போது அது 1.97%ஆக இருக்கிறது.

அப்போது சாலைகள், நெடுஞ்சாலைகள் துறைக்கு 1.8% நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது; தற்போது அந்தத் துறைக்கு மட்டும் 6.5% ஒதுக்கப்பட்டிருப்பது கல்விக்கான நிதி ஒதுக்கீடு பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பதை உணர்த்துகிறது.

2015-16ஆம் நிதியாண்டில் திறன் மேம்பாட்டுக்கு எனத் தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது. அதற்கான நிதி ஒதுக்கீடு மொத்த பட்ஜெட்டில் 0.06%ஆக இருந்தது; தற்போது அது 0.05%ஆக உள்ளது.

மாநிலங்களில் நிலவரம்

மாநில அரசுகளும் கல்விக்கான செலவினத்தை பட்ஜெட்டில் குறைத்துவருகின்றன. 2005-06ஆம் நிதியாண்டில் தமிழக பட்ஜெட்டில் கல்விக்காக ரூ.5,507 கோடி ஒதுக்கப்பட்டது; 2023இல் அது ரூ.57,263 கோடியாக உயர்த்தப்பட்டது. 2025 – 26இல் ரூ.55,261 கோடியாகவும் 2026-27 இடைக்கால பட்ஜெட்டில் அது ரூ.57,039 கோடியாகவும் இருந்தது.

கடந்த நிதியாண்டில் தமிழகமும் கேரளமும் தலா 12% நிதியைக் கல்விக்கு ஒதுக்கின. கல்விக்கான நிதியில் குஜராத் 13%, மேற்கு வங்கம் 14%, டெல்லி 19%, பிஹார் 20% ஆகவும் இதர மாநிலங்கள், மத்திய ஆட்சிப் பகுதிகளின் சராசரி 13% என்கிற அளவிலும் உள்ளன.

2008-09 காலக்கட்டத்தில் தேசியச் சராசரியை அடியொற்றிக் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டைக் கையாண்ட தமிழகம், அதற்குப் பின்னர் அதில் சரிவைச் சந்தித்துவருகிறது. 2020வரை தேசியச் சராசரியைவிட கேரளம் அதிகமாக நிதி ஒதுக்கினாலும், அதன்பின்னர் அதிலிருந்து பின்தங்கிவிட்டது.

அதேநேரத்தில் டெல்லி, பிஹார் ஆகியன இதில் முன்னே நிற்கின்றன. 2014 முதல் 2025 வரை டெல்லியில் அப்போதைய ஆம் ஆத்மி அரசு மொத்தச் செலவினத்தில் கல்விக்காக ஒதுக்கிய நிதி கணிசமாக அதிகம்.

மாணவர் சேர்க்கையில் பின்னடைவா?

ஏறக்குறைய 24 கோடியே 69 லட்சம் மாணவர்கள், 1 கோடிக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், 14.71 லட்சம் பள்ளிகள் என உலகின் மிகப்பெரிய பள்ளிக் கல்வி அமைப்பை இந்தியா கொண்டிருக்கிறது.

வரும் 2030ஆம் ஆண்டுக்குள் 1ஆம் வகுப்புக்கு முன் தொடங்கி இடைநிலைக் கல்வி நிலை வரையிலான மொத்தச் சேர்க்கை விகிதம் (GER) 100ஆக வேண்டும் எனப் பொருளாதார ஆய்வறிக்கை 2026இல் வலியுறுத்தப்பட்டிருந்தது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பிஆர்எஸ் (PRS) ஆய்வின்படி, தேசிய அளவில் இடைநிலைக் கல்வி (9-12) மொத்தச் சேர்க்கை விகிதம் 68.

இடைநிலைக் கல்வி மொத்தச் சேர்க்கை விகிதம் கோவாவில் 101, கேரளத்தில் 94, டெல்லியில் 92, தமிழகத்தில் 89 என்னும் நிலையில் உள்ளது. டெல்லி போலவே கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ள பிஹாரில் இந்த விகிதம் 45ஆக உள்ளது.

ஆதலால், குறுகிய காலத்தில் அதிக நிதியை ஒதுக்கீடு செய்வதால் மட்டுமே மாணவர் சேர்க்கை விகிதத்தில் மாற்றங்களைக் கொண்டுவந்துவிட முடியாது என்பது தெளிவாகிறது.

2024 – 25இல் 14 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களின் கல்வி இடைநிற்றல் விகிதம், மேற்கு வங்கத்தில் 20%, குஜராத்தில் 17%, காஷ்மீரில் 13%ஆகப் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் இது 8.5%ஆக உள்ளது.

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை, மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் போதிய அளவில் இன்மை, டிஜிட்டல் கட்டமைப்புக் குறைபாடு உள்ளிட்டவற்றால் தரமான கல்வி குறித்த எதிர்பார்ப்போடு தனியார் பள்ளிகளில் சேர்பவர்களின் எண்ணிக்கை அண்மையில் அதிகரித்திருக்கிறது.

2024-25ஆம் ஆண்டில் தனியார் பள்ளிகளில் 9.6 கோடி பேரும் அரசுப் பள்ளிகளில் 12.2 கோடி பேரும் பயில்கின்றனர். ஆசிரியர்களின் பயிற்சிச் செலவினம் குறைந்திருப்பதையும் இதனோடு பொருத்திப் பார்க்கலாம்.

2023 டிசம்பரில் மாநிலங்களவையில் மத்தியக் கல்வியமைச்சகம் வெளியிட்ட குறிப்பிலிருந்து, மத்திய பட்ஜெட்டில் 2018-19இல் ரூ.334 கோடியாக இருந்த இச்செலவினம் 2022-23இல் ரூ.96 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

கல்வி முதலீட்டின் அவசியம்

தற்போது உயர் கல்விக்கு என மத்திய அரசு ஒதுக்கும் நிதியில் ஏறக்குறைய 30% வரை ஐஐடி, ஐஐஎம் போன்ற குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களுக்கே செலவிடப்படுகின்றன.

இவை பெரும்பாலும் நகர்ப்புற மாணவர்களையே கொண்டிருப்பதால், கிராமப்புற மாணவர்களுக்கான கல்வி வளர்ச்சி மீதமுள்ள பொதுக்கல்வி நிறுவனங்களையே சார்ந்திருக்கிறது.

எதிர்காலத் தலைமுறையினரின் கல்விக்காக அரசுகள் முதலீடு செய்வது நிச்சயம் செலவு ஆகாது. சிறப்பான சூழலை நமது சந்ததியினருக்கு வழங்க, கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பதும், அதைச் சிறப்புறப் பயன்படுத்துவதற்கான வழிவகைகளைச் செயல்படுத்துவதும் மிகமிக அவசியம்; அதற்கான முன்னெடுப்புகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்த வேண்டும்.

SCROLL FOR NEXT