சிறப்புக் கட்டுரைகள்

அமோனியா வாயு ஏன் ஆபத்து? | சொல்... பொருள்... தெளிவு

இது போன்ற விபத்துகளைத் தடுக்க விதிமுறைகள் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும்

ம.சுசித்ரா

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்துக்கு அருகில் கன்னிகைப்பேர் / மஞ்சங்கரணை பகுதியில் இயங்கிவந்த கடல் உணவு பதப்படுத்தும் / ஏற்றுமதி செய்யும் தனியார் தொழிற்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில் 16 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பலர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். தொழில்சார் பணியிடங்களில் அமோனியா வாயுவால் ஏற்படும் அபாயங்கள், அதைச் சுவாசிப்பதால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் குறித்த புரிதல் அவசியமாகிறது.

அமோனியா என்றால்?

அமோனியா என்பது கடுமையான நெடியுடைய நிறமற்ற வாயு. இயற்கையாகவும் மனிதச் செயல்பாடுகளின் மூலமாகவும் உற்பத்தி செய்யப்படும் வாயு இது. ஒரு நைட்ரஜன் அணு, மூன்று ஹைட்ரஜன் அணுக்களால் ஆன இதன் மூலக்கூறு வாய்பாடு NH3. இதை அழுத்தத்துக்கு உள்படுத்தி திரவமாக்கி, நீரில் கரைக்க முடியும்.

உரங்கள், ஞெகிழி, சலவை / சுத்தம் செய்யும் பொருள்கள், சாயங்கள் முதலானவற்றைத் தயாரிக்கப் பயன்படும் முக்கிய வேதிப்பொருள் அமோனியா. இதுபோக ஐஸ் கட்டி தயாரிப்பு ஆலைகள், கடல் உணவுப் பொருள்களைப் பதப்படுத்தும் குளிர்பதனக் கிடங்குகளில் குளிரூட்டியாகப் பயன்படுத்தப்படுகிறது.

ஈரப்பசை மீதான தாக்குதல்

இது காற்றில் உள்ள ஈரப்பதத்துடன் மிக எளிதில் வினைபுரியும் தன்மை கொண்டது. கண், மூக்கு, தொண்டை, நுரையீரலில் உள்ள ஈரப்பசை மிகுந்த திசுக்களை உடனடியாக எரிச்சலடைய வைக்கக்கூடியது.

ஆகையால் குறைந்த அளவில் இந்த வாயு வெளியேறும்போது லேசான எரிச்சல் ஏற்படும். அதுவே அதிக அளவில் சுவாசிக்க நேர்ந்தால் மூச்சுக்குழாய், உடல் திசுக்கள் கடுமையாகச் சேதமடையும். ஒரு நபர் அபாயகரமான அளவில் அமோனியாவைச் சுவாசிக்கும்போது அது நஞ்சாக மாறும்.

நடந்தது என்ன?

விபத்து நிகழ்ந்த திருவள்ளூர் தொழிற்சாலையில் அமோனியா குளிரூட்டியாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. வழக்கமான பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே அமோனியா கசிவு ஏற்பட்டிருக்கிறது. வாயு தொட்டியில் ஏற்பட்ட கசிவின் காரணமாக அங்கிருந்த தொழிலாளர்கள் அதைச் சுவாசிக்க நேரிட்டது.

பொதுவாக, உடலில் உள்ள அமோனியா கல்லீரலால் யூரியாவாக விரைவாக மாற்றப்படும். பின்னர் சிறுநீரகங்களால் வெளியேற்றப்படும். ரத்தத்தில் உள்ள அமோனியாவின் அளவு, அதை வெளியேற்றும் கல்லீரலின் திறனைவிட அதிகரிக்கும்போது அமோனியா நஞ்சாகும். வாயு அல்லது திரவ வடிவில் அமோனியா இருக்கும்போது, மனிதத் திசுக்களில் உள்ள நீருடன் வினைபுரிந்து அமோனியம் ஹைட்ராக்சைடு என்கிற அரிக்கும் தன்மை கொண்ட காரப்பொருளாக (corrosive alkali) மாறிவிடும். இது கடுமையான எரிச்சல், திசு சேதத்தை ஏற்படுத்தும்.

காற்றில் மிகக் குறைந்த அளவு (50 பிபிஎம் - பத்து லட்சத்தில் ஒரு பங்கு) அமோனியா இருந்தால்கூட கண், மூக்கு, தொண்டை எரிச்சல், இருமல், மூச்சுக்குழாய் சுருங்குதல் போன்ற பின்விளைவுகள் உடனடியாக ஏற்படும். அமோனியாவின் அளவு அதிகரித்தால் தொண்டை சுருங்கி, பிறகு வீங்கிச் சுவாசக் குழாய் அடைபட்டு நுரையீரலில் நீர் கோக்க வழிவகுக்கும்.

இதனால் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவும் குறைந்து மயக்கம் ஏற்படக்கூடும். வாயுவின் தாக்கம் அதிகரிக்கும்போது, சுவாச மண்டலம் பாதிக்கப்பட்டு மூச்சுவிடுவதில் சிரமம் உண்டாகும். பாதிப்பு தீவிரமாகும்பட்சத்தில் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்.

திருவள்ளூர் சம்பவத்திலும் இதுதான் நிகழ்ந்தது. இதனால், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல், கண், சுவாச மண்டலத்தில் கடுமையான எரிச்சல், இடைவிடாத இருமல், நெஞ்செரிச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இவை அனைத்தும் அமோனியா வாயுவைச் சுவாசித்ததன் விளைவு எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிகிச்சை என்ன?

அமோனியா நஞ்சை முறிக்கப் பிரத்யேக மருந்துகளோ, சிகிச்சையோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. உடலில் நச்சுத்தன்மையின் அளவைக் கண்டறிய முறையான சோதனைகளும் இல்லை.

உடலிலிருந்து அமோனியாவை எவ்வளவு விரைவாக நீக்க முடியுமோ அவ்வளவு விரைவாக நீக்கி, துணை சிகிச்சைகளை வழங்குகிறார்கள் மருத்துவர்கள். இதில் ஆக்ஸிஜன் உதவியுடன் சுவாசத்தைச் சீராக்குவது, தீக்காயங்களுக்கான சிகிச்சை, கண் எரிச்சல், காயம் ஏற்பட்டால் அதற்கான சிகிச்சைகள் வழங்குவது ஆகியவை அடங்கும்.

தீவிரமான சுவாசப் பாதிப்பில் இருந்து உயிர் பிழைப்பவர்கள், பிற்காலத்தில் நாள்பட்ட நுரையீரல் நோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. கண்களில் இந்த வாயு படும் பட்சத்தில், சில வாரங்கள் அல்லது மாதங்களுக்குப் பிறகு ‘கார்னியா’ எனப்படும் விழி வெண்படலத்தில் புண், துளைகள் ஏற்படலாம்.

இதனால் பார்வையிழப்பு நேரிடலாம். கடுமையான பாதிப்புக்கு உள்ளான நபர்களுக்குக் கண்புரை, குளுகோமா போன்ற கண் அழுத்த நோய்களும் ஏற்படும் அபாயம் இருப்பது தெரியவந்துள்ளது.

வீதி மீறல்களைத் தடுத்தல்

தமிழ்நாடு அரசு அமைத்த விசாரணைக் குழு நடத்திய ஆய்வில், திருவள்ளூர் தொழிற்சாலையில் போதிய பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படாதது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

முதலாவதாக, தொழிற்சாலையின் அவசரக்கால எச்சரிக்கை அமைப்புகள் செயலிழந்ததால்தான், நச்சு வாயு பரவத் தொடங்கிய தகவல் அறிந்து தொழிலாளர்களால் வெளியேற முடியவில்லை.

பதப்படுத்தும் பிரிவுகளில் போதிய காற்றோட்ட வசதி இல்லாததால் நச்சு வாயு வெளியேற முடியாமல் போக, குறுகிய நேரத்தில் அங்கிருந்த பலருக்கு வாயு பாதிப்பு வேகமாக ஏற்பட்டிருக்கிறது. இதுபோக அபாயகரமான தொழிற்சாலைப் பணிகளுக்குத் தேவையான முறையான தனிநபர் பாதுகாப்புக் கருவிகளோ, சுவாசக் கருவிகளோ தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை.

எல்லாவற்றையும்விட, அங்கு பணிபுரிந்த புலம்பெயர் தொழிலாளர்கள், வளாகத்துக்குள்ளேயே சுகாதாரமற்ற, இடநெருக்கடி மிகுந்த அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

சட்டவிரோதமாக, 18 வயதுக்குக் குறைவான வடமாநிலக் குழந்தைத் தொழிலாளர்கள் பலர் அங்கு பணியமர்த்தப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட மூவர் குழு, இந்தத் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது. எதிர்காலத்தில் இது போன்ற மோசமான விபத்துகளும் விதிமீறல்களும் ஏற்படுவதைத் தடுக்க, தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கும் விதிகளில் புதிய கடுமையான பிரிவுகளை இணைக்க வேண்டும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வலியுறுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT