சிறப்புக் கட்டுரைகள்

பள்ளி ஆசிரியர்கள் பணியிலிருந்து விலகுவது ஏன்?

கற்பித்தல் பணியைவிடவும் பிற பணிகளின் அழுத்தம் அதிகரித்திருக்கிறது

Guest Author

நிரந்தர ஆசிரியர் பணி கிடைப்பதே இன்று குதிரைக்கொம்பாகிவிட்டது. எனினும், இளம் ஆசிரியர்களில் பலர் வேலையை உதறிவிட்டு வேலையில்லாத் திண்டாட்டத்துக்குள்ளும் நிச்சயமற்ற வாழ்க்கைச் சூழலுக்குள்ளும் நுழைய முற்படுகின்றனர். பள்ளிக்கூடங்களில் பரவும் அமைதியின்மை வெளி உலகத்துக்குத் தெரிவதில்லை.

அதிகரிக்கும் நெருக்கடி: இரண்டு தசாப்​தங்​களுக்கு முன்பே இந்தப் போக்கு பல நாடுகளில் தலைதூக்குவதை யுனெஸ்கோ கவனப்​படுத்​தியது. யுனெஸ்கோ நிறுவனத்தின் அதிகாரபூர்வ ஆய்விதழான ‘பிராஸ்​பெக்ட்​டஸ்’இல் ‘அத்தனை ஆசிரியர்​களும் எங்கே போனார்​கள்?’ என்னும் கட்டுரை வெளிவந்தது.

          

வெவ்வேறு கண்டங்​களைச் சேர்ந்த அனுபவம் மிக்க ஆசிரியர்கள் சோர்வடைந்து, விரக்​தி​யுற்று இருப்பதை உலகளாவிய ஆய்வு முடிவுகள் வெளிப்​படுத்​தி​யிருந்தது இதில் விவாதிக்​கப்​பட்டது. இந்தப் பணியில் சத்தமில்​லாமல் மூண்டிருக்கும் நெருக்​கடிக்கான காரணிகளை அந்த ஆய்வு அடையாளப்​படுத்​தியது. பள்ளிகள், வகுப்​பறை​களின் நிலைமையோடு தொடர்​புடைய காரணிகள் சில உள்ளன. மற்றவை குடும்​பச்​சூழலில் ஏற்பட்​டிருக்கும் மாற்றங்கள், பள்ளிக்​கூடத்தில் குழந்தை​களின் நடத்தையில் ஏற்படுத்தும் தாக்கத்​துடன் தொடர்​புடையவை.

ஆனால், இப்படியொரு நிகழ்வை உணர்ந்ததாக இந்தியாவில் இதுவரை எந்தவொரு ஆய்வும் நடத்தப்​பட​வில்லை. தங்களது பணிவாழ்க்கையைச் சிக்கலாக்​குபவை பற்றி இங்கும் ஆசிரியர்கள் ஓரளவு பேசவே செய்கின்​றனர். அரசு இயந்திரத்தின் அடக்கு​முறையில் இருந்து தங்களைக் காப்பாற்ற யாரும் இல்லையே என்கிற ஏக்கப்​பெரு​மூச்சு பொதுவான புகாராக எதிரொலிக்​கிறது. அதிகார அடக்கு​முறையும் அதிகப்​படியான எதிர்​பார்ப்பும், ஏதோ அரசுப் பள்ளி​களில் மட்டுமே நிலவுவதாக யாரேனும் தவறுதலாக நினைக்​கக்​கூடும்.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது செலுத்​தப்​படும் அதிகார நெருக்​கடிக்கு இணையான நெருக்கடி தனியார் பள்ளி​களின் கார்ப்​பரேட் மயமான நிர்வாகத்​தாலும் தரப்படு​கிறது. இன்றைய காலச்​சூழலில் ஆசிரியர்​களுக்குத் தொழில்சார் சுதந்​திரமும் அதிகாரமும் மறுக்​கப்​படுவது வழக்கமான கதையாகி​விட்டது.

சில எடுத்​துக்​காட்டுகள்: நான் அறிந்த சிறந்த வரலாற்று ஆசிரியர்​களுள் ஒருவர் உயர் தகுதி வாய்ந்த பொதுப்​பள்ளி ஒன்றி​லிருந்து வெளியேறி​விட்​டார். காரணம், எண்ணிலக்க (Digital) வளங்களைப் பயன்படுத்திக் கற்பிக்​கும்படி அவர் நிர்ப்​பந்​திக்​கப்​பட்​டார். வரலாற்றுத் தரவுகள், விவாதங்களை அலசி ஆராய்வதே உண்மையான வரலாற்றுக் கல்வி எனச் சிந்திப்​பவரான அந்த ஆசிரியர், அதை ஏற்க மறுத்து​விட்​டார்.

வரலாற்றுச் சம்பவங்களை எண்ணிலக்க அணுகுதல் மூலம் அறிந்து​கொள்​வதால் தமது இலக்கு நிறைவேறாது என்று அவர் கருதுகிறார். இந்த ஆசிரியரை இழப்ப​தற்காக அந்தப் பள்ளி வருந்​தவில்லை. வேறு பல பள்ளி​களைப் போலவேதான் அந்தப் பள்ளியும் நடந்து​கொண்டது. அந்தப் பள்ளியின் முதல்​வரைப் பொறுத்​தமட்​டில், கூடுமானவரை தொழில்​நுட்​பத்தைப் பயன்படுத்து​வ​தில்தான் எதிர்​காலம் உள்ளது. பள்ளிக்​கூடங்​களின் கதவுகளை ஏற்கெனவே செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தட்டிக்​கொண்​டிருக்​கிறது. பள்ளி முதல்​வர்கள் பலரும் ஏஐ-யை வரவேற்க ஆவலாக உள்ளனர்.

இப்படித்தான் மற்றொரு மூத்த ஆசிரியர், தம்மிடம் ஒப்படைக்​கப்பட்ட கூடுதல் பொறுப்பு, கடுமையான பணிச்​சுமையை ஏற்படுத்து​வ​தாகவும் கற்பித்​தலில் கவனம் செலுத்த முடியாதபடி செய்வ​தாகவும் கூறி ராஜினாமா செய்து​விட்​டார். தான் பணிபுரிந்துவந்த கேந்திரிய வித்யாலயா பள்ளி தம்மை நிகழ்ச்சி மேலாளராக மாற்றிக்​கொண்​டிருந்ததாக வருத்தம் தெரிவித்​தார். ஏதேதோ நாள்களைக் கொண்டாடச் சொல்லி மேலிருந்து கட்டளைகள் வந்தவண்ணம் இருந்தன; போதாக்​குறைக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளின் ஒளிப்​படங்​களைப் பதிவேற்​றவும் பணிக்​கப்​பட்​ட​தாகத் தெரிவித்​தார்.

விழா நாள்களில் பள்ளியை நல்ல காட்சிப்​பொருளாக்க உதவும் ஆசிரியர்​களைப் பள்ளி முதல்​வர்கள் பாராட்டு​கின்​றனர். பதிவேடு பராமரித்தல் ஆசிரியர் பணியின் முக்கிய அங்கமாக எப்போதுமே இருந்து​வந்துள்ளது. இன்றோ அது கற்பித்​தலைக் காட்டிலும் கூடுதல் முக்கி​யத்துவம் வாய்ந்ததாக மாறிவிட்டது. இதனால் பாடவேளைக்கான தயாரிப்​புக்கும் கற்பித்​தலுக்கும் மிகக்​குறைந்த அவகாசம் மட்டுமே கிடைக்​கிறது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டிய​தில்லை.

பொருளாதார வசதி கொண்ட​வர்கள் மட்டுமே ஆசிரியர் பணியை ராஜினாமா செய்து​விடு​வ​தாகச் சிலர் கருதலாம். ஆனால், பொருளா​தா​ரரீ​தியில் பின்தங்கிய சூழலில் இருந்து​வந்து அரசுப் பள்ளியில் படித்துப் பின்னாளில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றில் நிரந்த ஆசிரியர் பணியில் சேர்ந்த ஒருவர், இனியும் இதைத் தொடர முடியாது என்று வேலையை ராஜினாமா செய்து​விட்​டா​ராம். குறிப்பாக, வகுப்பறை வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு​வருதல் இந்த ஆசிரியருக்கு மற்றொரு உளவியல் சிக்கலாக மாறியுள்ளது.

வகுப்​பறை​களிலும் பள்ளி வளாக நடைபாதைகளிலும் மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுவது அண்மைக் காலமாக அதிகரித்து​வரு​கிறது. புத்தகப்​பையில் குழந்தைகள் கத்தியை எடுத்து​வரும் செய்திகள் அவ்வப்போது தென்படு​கின்றன. அமெரிக்கா அளவுக்கு இங்கு நிலைமை மோசமாகி​விட​வில்லை என்றாலும், அதை நோக்கி நகர்வது கண்கூடு.

வகுப்​பறையில் மாணவர்கள் வெளிப்​படுத்​தக்​கூடிய கட்டுக்​கடங்காத கோபம், சட்டாம்​பிள்​ளைத்​தனம், வன்முறை முதலானவற்றைக் கண்டு ஆசிரியர்கள் செய்வதறி​யாமல் தவிக்​கின்​றனர். சமூக ஊடகச் செயல்​பாடு​களில் குழந்தைகள் பங்கேற்பது, வரம்பு மீறிய வன்முறைக் காட்சிகளைத் தடையின்றி கண்டு​களிப்பது ஆகியவையே சிறார் மத்தியில் இத்தகைய போக்கு தலைதூக்கக் காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

மிக இளம் வயதில் திறன்​பேசிக்கு அறிமுக​மாவதே இந்தச் சிக்கல் பூதாகர​மாவதற்குக் காரணம் என்கிறார் ‘பதற்றமான தலைமுறை’ (The Anxious Generation) நூலாசிரியர் ஜொனதன் ஹையிட். குழந்தை​களிடத்தில் மன அழுத்தம் அதிகரிப்​ப​தற்கும் புதிய தொழில்​நுட்பச் சூழலுக்கும் இடையில் நேரடித் தொடர்பு இருப்பதாக அவர் கருதுகிறார். முரட்டுத்​தன​மாகச் சிறார் நடந்து​கொள்​ளும்படி இதுவே இட்டுச்​செல்​கிறது என்கிறார்.

மாறிப்போன இலக்கு: கிராமப்புற இந்தியாவில் ஆயிரக்​கணக்கான தொடக்கப் பள்ளிகள் இரண்டு அல்லது மூன்று ஆசிரியர்​களுடன் செயல்​படு​கின்றன. மிகக்​குறைந்த வசதியுடன் இந்த ஆசிரியர்கள் பாடம் கற்பித்​துக்​கொண்​டிருக்​கிறார்கள். போதாக்​குறைக்கு அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் மாவட்ட அதிகாரிக்கும் பள்ளி நிர்வாகம் தொடர்பான தகவல்​களைச் சேகரித்து அனுப்பி வைப்ப​திலும் பள்ளித் தலைமை ஆசிரியருக்கு இவர்கள் உதவிசெய்தாக வேண்டும்.

மையப்​படுத்​தப்பட்ட தரவு அணுகல் என்னும் பித்து இன்று பிடித்​தாட்டு​கிறது. மாணவர் சேர்க்கை, வருகைப்​ப​திவு, உதவித்தொகை விநியோகம், பயிற்சி, மதிய உணவு போன்ற அனைத்தையும் ஒன்றாகப் பிணைத்துப் போடப்பட்ட பெரிய மாவுக்​கட்டு இது. இந்தத் தரவுகளை நிர்வகித்து வழங்க வேண்டியதும் ஆசிரியர்​கள்​தான். கற்பித்​தலும் குழந்தை​களும் ஒரு பொருட்டே இல்லை என்றாகிவரு​கிறது. திட்டங்​களுக்கான பலன்கள், விளைவு​களில் வெளிப்​படைத்​தன்மை கட்டாயம். அமைப்பின் முழுக் கவனமும் இதில் மட்டுமே உள்ளது. அதாவது, உயர் அதிகாரிகள் எப்போது வேண்டு​மா​னாலும் தரவுகளைப் பார்வை​யிடும்​படி​யாகத் தகவல்களை உரிய நேரத்தில் பதிவேற்றம் செய்தாக வேண்டும்.

தரத்தை உயர்த்து​வதற்காக, இதில் கவனம் செலுத்துவதே நோக்கம். ஆனால் இதுவே தற்போது இலக்காக மாறிவிட்​டிருக்​கிறது. குழந்தை​களின் நலன், கற்றல் மீதான அக்கறையைக் காட்டிலும் அதிகாரி​களுக்கும் நன்கொடை​யாளர்​களுக்கும் செயல்​திறனுக்கான ஆதாரத்தில் மட்டுமே ஆர்வமெல்லாம் உள்ளது என்பதை ஆசிரியர்​களும் தலைமை ஆசிரியர்​களும் உணர்ந்து​விட்​டனர். பணி நிமித்தமான உண்மைக்கும் ஆசிரியர்​களுடைய உண்மைக்கும் இடையில் எப்போதுமே வேறுபாடு இருந்து​வரு​கிறது. பின்விளைவு​களைத் தவிர்க்கப் பிந்தைய உண்மை ரகசிய​மாகப் பாதுகாக்​கப்​படுகிறது.

- கிருஷ்ண குமார், தேசியக் கல்வி ஆராய்ச்சி - பயிற்சிக் குழுவின் (என்சிஇஆர்டி) முன்னாள் இயக்குநர், ‘Thank you, Gandhi’ நூலாசிரியர்.

தமிழில்: ம.சுசித்ரா

SCROLL FOR NEXT