

பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட உத்தரப் பிரதேச பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்காரின் ஆயுள் தண்டனையை ரத்துசெய்து, அவரைப் பிணையில் விடுவித்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்திருப்பது வரவேற்கத்தக்கது.
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தின் பங்கர்மாவ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த குல்தீப் சிங் செங்கார் 2017இல் தன்னிடம் வேலை கேட்டு வந்த 15 வயதுச் சிறுமியைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியதாகப் புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட சிறுமி நீதி கேட்டு முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டின் முன் தற்கொலைக்கு முயன்றார். எனினும், அந்தச் சிறுமியின் தந்தை பொய்க் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுச் சிறையிலேயே மரணமடைந்தார். ஓராண்டு கடந்த பிறகே இந்த வழக்கில் 2018இல் குற்றப் பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது.