பாபு ராஜேந்திர பிரசாத் - ஜவஹர்லால் நேரு
பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து இந்தியா விடுதலை பெற்ற பின், அதிகாரங்கள் குறித்த கருத்து வேறுபாடு குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத்துக்கும் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கும் இடையே ஏற்பட்டது. உச்சபட்ச அதிகாரம் குடியரசுத் தலைவருக்கா, அல்லது பிரதமருக்கா என்பதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இன்றைக்கு மாநில ஆளுநர்களுக்கும், முதல்வர்களுக்கும் இடையே எப்படி பனிப்போர் நடைபெறுகிறதோ அதேபோன்று அன்று ராஜேந்திர பிரசாத்துக்கும், நேருவுக்கும் இடையே ஏற்பட்டது.
சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில் ஆளுநர், குடியரசுத் தலைவர் அதிகாரங்கள் குறித்து இன்றைய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்பு, எவ்வாறு உச்ச நீதிமன்றத்தின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைக் (பிரசிடெண்ட் ரெபரன்ஸ்) கேட்டிருந்தாரோ, அதேபோல் அன்றைக்கும் கேட்கப்பட்டது.
அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஹரிலால் ஜெ.கனியா தலைமையில் இந்த வழக்கு நடந்தது. இந்த வழக்கு நிலுவையில் இருந்த சமயத்தில் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், குஜராத் மாநிலத்தில் உள்ள துவாரகா பீடத்தில் நடைபெற்ற விழாவுக்குச் செல்வதாக அறிவிக்கப்பட்டது.
இதையறிந்த பிரதமர் நேரு, “குடியரசுத் தலைவர் என்பவர் எல்லா மதங்களுக்கும் பொதுவானவர். இந்தியாவில் பல்வேறு மதங்கள், கலாச்சாரங்கள் உள்ளன. ஒரு குறிப்பிட்ட மத விழாவுக்கு அனைத்து மதங்களின் பிரதிநிதியாக உள்ள குடியரசுத் தலைவர் செல்வது, இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு நேர்மாறானது. எனவே கோயில் விழாவுக்கு குடியரசுத் தலைவர் செல்லக் கூடாது” என்றார்.
அதற்கு குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், “மத விழாக்களுக்கு குடியரசுத் தலைவர் செல்லக் கூடாது என்பது சரிதான். அதை நான் ஒப்புக் கொள்கிறேன். நான் எந்த மதத்துக்கும் எதிரானவன் அல்ல; அதேநேரம் நான் பிறப்பால் இந்து; எனக்கென்று வழிபாட்டு உரிமைகள் உள்ளன. அந்த வகையில் இந்து கோயில்களுக்கோ, ஆதீன மடங்களுக்கோ செல்லவும் சுவாமி தரிசனம் செய்யவும் உரிமை உள்ளது” என்று பதிலளித்தார். அந்த வகையில் நேரு தடுத்தும் துவாரகா பீடத்துக்குச் சென்றார் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்.
இந்த இடத்தில் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்... திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குனேரியில் உள்ள வானமாமலை மடத்துக்கும் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்துக்கும் தொடர்பு உண்டு. நாங்குனேரி வைணவ மடத்தில் உள்ள கிணற்றில் இருக்கும் தண்ணீரில், எண்ணெய் கலந்து இருப்பதாகவும், அது மருத்துவ குணம் வாய்ந்ததாகவும், அதை கால், கைகளில் வலியுள்ள இடத்தில் தடவினால் வலி குறைவதாகவும் ஒரு கருத்து நிலவியது.
இதைக் கேள்விப்பட்டு பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானோர் இங்கு வந்து அந்த தண்ணீரை பெற்றுச் சென்றனர். இதனால் பிஹார் மாநிலத்துக்கும் நாங்குனேரி வைணவ மடத்துக்கும் இடையே நெருக்கம் அதிகமானது.
வைணவ மடத்தின் கிணற்றில் உள்ள எண்ணெய் கலந்த நீரை குடியரசுத் தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத்தும் உடல் வலிக்கு தடவிக் கொள்வது வழக்கம். இதற்காக வைணவ மடத்திலிருந்து பிரத்யேகமாக அவருக்கு அந்த எண்ணெய் கலந்த நீர் அனுப்பி வைக்கப்பட்டது.
அதேபோல், 1989 - 90 காலகட்டத்தில் வி.பி.சிங் அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் ராம்விலாஸ் பாஸ்வான். அப்போது அவருடன் நான் நெருங்கிய நட்பில் இருந்தேன். அவர் ஒருமுறை மதுரை வந்தபோது என்னிடம், “நாங்குனேரியில் மருத்துவ குணம் வாய்ந்த எண்ணெய் கலந்த நீர் இருக்கிறதாமே? அது கிடைக்குமா?” என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நான் நாங்குனேரி மடத்துக்குச் சென்று அந்த மூலிகை நீருடன், மடத்தைச் சார்ந்தவர்களையும் அழைத்துக் கொண்டு ராஜபாளையம் நிகழ்ச்சியில் இருந்த ராம்விலாஸ் பாஸ்வானைச் சந்தித்து அவரிடம் கொடுத்தேன்.
ராம்விலாஸ் பாஸ்வான் இறைமறுப்பு கொள்கை உடையவர் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் அதில் உண்மையில்லை. தீபாவளிதோறும் அவருக்கு இங்கிருந்து பட்டாசுகளை வாங்கி நான் அனுப்புவேன். ஒருமுறை அவரது மகள் தீபு என்று நினைக்கிறேன், அவர் மத்தாப்பு வெடிக்கும்போது அதன் தீப்பொறி அவரது கண்ணில் பட்டு மருத்துவ சிகிச்சை எடுத்ததெல்லாம் உண்டு. அதேபோல் அவரது மனைவிக்கு காஞ்சிபுரம் பட்டு மிகவும் பிடிக்கும்.
சரி... குடியரசுத் தலைவர் அதிகாரங்கள் விவகாரத்துக்கு வருவோம்...
உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நடந்து கொண்டிருந்த சமயத்தில்தான், உச்ச நீதிமன்றத்துக்கு எதிரே இந்திய - சட்ட நிறுவனம் திறப்பு விழா நடைபெற்றது. அப்போது விழா மேடையிலேயே இந்த விவகாரம் எழுப்பப்பட்டு விவாதிக்கப்பட்டது.
இதற்கிடையே வழக்கு விசாரணை முடிந்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், “மத்திய அமைச்சரவையின் முடிவை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று ஆலோசனை வழங்கப்பட்டது. “அமைச்சரவையின் தலைவர் பிரதமர். அந்த அமைச்சரவை எடுக்கும் முடிவுகளை செயல்படுத்த சம்மதம் தெரிவிக்க வேண்டியது குடியரசுத் தலைவரின் பொறுப்பு” எனவும் கூறப்பட்டது. இந்த வழக்கு விவகாரம் அன்றைய காலகட்டத்தில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது.
தமிழ்நாட்டில் தற்போது விஸ்வரூபமெடுத்துள்ள விஷயம் திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் என்றால் மிகையில்லை. அறுபடை வீடுகளான முருகனின் படை வீடுகளில் ஐந்து குன்றத்தில் அமைந்திருப்பதால் ‘குன்றத்தின் மைந்தன்’ என்றும், ‘தமிழ்க் கடவுள் முருகன்; முருகன் என்றால் அழகு’ என்றெல்லாம் திரு.வி.க. சொல்வதுண்டு.
திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் தர்கா இருப்பது மறுப்பதற்கில்லை. அதேநேரம் வரலாற்றை பின்னோக்கி பார்த்தோமானால், மாலிக்காபூர் தெற்கே படையெடுத்து வந்தபோது, அந்தப் படையை எதிர்த்து கம்பண்ண உடையார் என்றும் வீரகம்பராய என்றும் அறியப்பட்ட விஜயநகரப் பேரரசின் ராணுவத் தளபதி குமார கம்பண்ணா தீரத்துடன் போரிட்டு, மாலிக்காபூரின் தளபதி சிக்கந்தரை திருப்பரங்குன்றம் மலையில் கொன்று சாய்த்தார். சிக்கந்தரின் உடல் மதுரை கோரிப்பாளையத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவ்வாறிருக்க திருப்பரங்குன்றம் மலைக்கு சிக்கந்தர் மலை என்ற பெயர் எப்படி வந்தது கேள்வி எழுகிறது.
அன்றைய காலகட்டத்தில் இஸ்லாமியர்களுக்கும், இந்துக்களுக்கும் இடையே நல்ல உறவு முறை இருந்தது. சாதி வேறுபாடுகளைக் கடந்து அண்ணன், தம்பி, மாமன், மச்சான், சித்தப்பா என்று உறவு முறை சொல்லி அழைத்துக் கொள்வது வழக்கமாக இருந்தது. ரம்ஜான் போன்ற இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளின்போது சங்கரன்கோவிலில் இருந்து எங்கள் வீட்டுக்கு பிரியாணி வந்துவிடும். அதேபோல் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது கழுகுமலை, திருநெல்வேலி போன்ற பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ அன்பர்கள் கேக்குகளை வாங்கி அனுப்புவார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அந்த உறவில் சிறு சறுக்கல் ஏற்பட்டு விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது...
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை விசாரித்து வந்தது. இதில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘திருப்பரங்குன்றம் மலையில் மத்திய பாதுகாப்பு காவலர்களுடன் பக்தர்கள் 10 பேர் சென்று தீபம் ஏற்றலாம்’ என்று தீர்ப்பு வழங்கினார்.
இந்த உத்தரவு குறித்து இஸ்லாமிய மக்கள் கருத்து எதுவும் சொல்லவில்லை. அதேநேரம் தீபம் ஏற்றுவதில் தமிழக அரசுக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. நீதிபதியின் உத்தரவை ஏற்க மறுத்து, அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்தது. இதனால் அடுத்தடுத்து பல்வேறு சம்பவங்கள் நடந்து விட்டன. நீதிமன்ற உத்தரவுப்படி 10 பேரை தீபம் ஏற்ற தமிழக அரசு அனுமதித்திருந்தால், பிரச்சினை அதோடு முடிந்திருக்கும். இவ்வளவு சட்ட சிக்கல்களை ஏற்படுத்தியிருக்காது என்று நடுநிலையான மக்கள் கருதுகின்றனர். ஏன்... என்னுடைய பார்வையும் அதுதான்.
இந்தியாவில் மதச்சார்பின்மை என்ற கருத்து நிலவுகிறது. அரசியல் சாசன திருத்தத்தின்படி அது மத நல்லிணக்கம் என்றுதான் இருந்திருக்க வேண்டும் என்பது பலரின் கருத்தாக உள்ளது. இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலகட்டத்தில்தான் மதச்சார்பின்மை என்ற சொல் அரசியல் சாசனத்தில் திணிக்கப்பட்டது.
இந்தியாவில் எத்தனையோ மதங்கள் இருக்கின்றன.... எத்தனையோ கலாச்சாரங்கள் உள்ளன. தீபாவளியோ, ரம்ஜானோ, கிறிஸ்துமஸோ... அந்தந்த மதத்தைச் சார்ந்த மக்கள் அவரவர் விருப்பம்போல் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் மத நல்லிணக்கத்தோடு மக்கள் வாழும் நாடு இந்தியா.
* இந்து கோயில்களில் 6 கால பூஜை சிறப்பாக நடைபெற வேண்டும்.
* மசூதிகளில் இஸ்லாமிய சகோதரர்கள் பாங்கு ஓசையோடு தொழுகை நடத்தப்பட வேண்டும்.
* தேவாலயங்களில் மணியோசையோடு கிறிஸ்துவ சகோதரர்களின் ஜெப வழிபாடுகள் நடைபெற வேண்டும்.
* சீக்கிய அன்பர்கள் குருத்துவாராக்களில் கிரந்தங்களை ஓதி வழிபாடுகள் செய்யப்பட வேண்டும்.
இவற்றுக்கு எந்தவிதமான தடையோ, பிரச்சினைகளோ இருக்கக் கூடாது. இவற்றை அனைவரும் கடைபிடிப்பதுதான் மத நல்லிணக்கம்.
ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்... அமெரிக்காவில் வெள்ளை மாளிகையிலோ, அல்லது காங்கிரஸ் கட்டிடத்திலோ அதிபர் பதவியேற்கும்போது நூற்றாண்டுகள் கடந்த பழமையான பைபிள் வேத புத்தகத்தின் மீது சத்தியம் செய்து, பாதிரியார் முன்பாக பதவிப் பிரமாணம் எடுக்கப்படும். அதேபோல் பிரிட்டனில் அரசியோ / அரசரோ / பிரதமரோ தேவாலயங்களில் ஜெபம் செய்து பைபிள் மீது சத்தியம் செய்துதான் பதவி ஏற்பார்கள்.
ஆனால், இந்தியாவில் இன்றைய பிரதமர் மோடி வரை இதற்கு முன் பதவியேற்ற பிரதமர்கள் எவரும், இந்து மக்களின் புனித நூலான பகவத் கீதையின் மீது சத்தியம் செய்து பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டது கிடையாது. அதுதான் இந்தியாவின் பெருமை. இன்றைய பாரதிய ஜனதா கட்சியை இந்துத்துவா கட்சி என்று விமர்சனம் செய்கிறார்கள். அவர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் கூட கீதையை முன்வைத்து உறுதிமொழி எடுத்ததில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நம் நாடு இன, மொழி, மதங்களைக் கடந்த நல்லிணக்கமுள்ள நாடு என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.
இந்தியாவில் மதக் குறியீடுகள், சாதிக் குறியீடுகள் ஒழிக்கப்பட வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். இது விவாதிக்கப்பட வேண்டிய பொதுவான கருத்துதான். அதேநேரம் அரசு திட்டங்களுக்கோ, பள்ளி, கல்லூரிகளில் சேருவதற்கோ சாதி விவரங்கள் கேட்கப்படுகின்றன. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுப்பப்படுகின்றன. ஒரு காலத்தில் தெருக்களில் சாதிப் பெயர்கள் இடம்பெறக் கூடாது என்று சாதிக் குறியீடுகளை மறைத்தார்கள். ஆனால் அதற்குப் பிறகுதான் சாதிக் கலவரங்கள் அதிகமானது என்பதை மறுக்க முடியாது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது குற்றம்சாட்டி அவர் பதவி விலக வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினார்கள். இதற்கு முன்பு முதல்முறையாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதி வி.ராமசாமி மீது இவ்வாறு குற்றச்சாட்டுகள் புனையப்பட்டு, நாடாளுமன்றத்தில் அந்தத் தீர்மானம் வரும்போது வழக்கறிஞராக இருந்த கபில் சிபில், ராமசாமிக்கு ஆதரவாக தனியாகக் கூண்டு அமைத்து வாதிட்டார். அன்றைக்கு கபில் சிபில் நாடாளுமன்ற உறுப்பினர் அல்ல. வழக்கறிஞர் மட்டுமே.
அதைத் தொடர்ந்து மேலும், 2 நீதிபதிகள் மீது பதவி விலகும் தீர்மானம் கொடுக்கப்பட்டது. அது இன்றும் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே இன்றைக்கு 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கையெழுத்திட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் கடிதம் கொடுத்துள்ளனர். இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது கேள்விக்குறிதான்!
உலக நாடுகளிலேயே மிகப் பெரிய குடியரசு நாடான இந்தியாவில் சட்டங்களை வடிவமைக்கும்போது மிகவும் சவாலாக இருந்தது ஹிந்து சட்ட மசோதாதான். அரசியல் சட்ட வடிவமைப்புக் குழுவின் தலைவராக இருந்த அம்பேத்கர், அப்போது பொது சிவில் சட்டம் வேண்டும் என்று வலியுறுத்தினார். பொது சிவில் சட்டம் இருந்தால் மக்களை ஒருமைப்படுத்த முடியும்; ஜனநாயகம் வலுப்படும் என்று கூறினார். அந்தக் கருத்தை முதலில் ஆதரித்த பிரதமர் நேரு, பின்னர் பின்வாங்கினார்.
மன்னராட்சி காலத்தில் ஆச்சாரங்களும், மரபுகளும் இந்து தர்ம முறைப்படி வெளிப்படையாக அறிவிக்கப்பட்டிருந்தன. ஆனால், பிரிட்டிஷ் அரசாங்கம் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. 1880 காலகட்டங்களில் 5, 6 வயது சிறுமிகளுக்குக் கூட திருமணம் செய்து வைக்கப்பட்டது. கணவன் இறந்தால் மனைவியும் இறக்க வேண்டும் என்ற விதி இருந்தது. மறுத்தால் அவளை வலுக்கட்டாயமாக தீயில் தள்ளும் கொடுமையான, நாகரீகமற்ற நடைமுறைகள் இருந்தன. இந்த ‘சதி’ திட்டங்களை கடுமையாக எதிர்த்தவர்களில் முன்னோடியாக இருந்தவர் ராமானுஜர். அவரைப் பின்பற்றி ராஜாராம் மோகன்ராய், திலகர் போன்றவர்கள் இந்த கொடுஞ்செயலைக் கடுமையாக எதிர்த்தனர்.
அதைத் தொடர்ந்து, பால்யத் திருமணம் தவிர்க்கப்பட்டு 15 வயது நிரம்பியவுடன், அவள் பருவமடையாவிட்டாலும் கூட திருமணம் செய்து வைத்தார்கள். அதேநேரம், பருவம் அடைந்த பிறகுதான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று முற்போக்காளர்கள் குரல் கொடுத்தார்கள்.
அந்தச் சூழலில், பூப்படையாத பெண்களுக்குத் திருமணம் செய்து வைத்தால் சிறைத் தண்டனை என்று பிரிட்டிஷ் அரசாங்கம் 1913-ல் சட்டம் கொண்டுவந்தது. 1929-ம் ஆண்டில் மீண்டும் ஒரு தெளிவான சட்டத்தை காப்பிலாஸ் சார்தா என்ற ஆங்கிலேயர் முன்மொழிந்தார். அந்தச் சட்டம் ‘சார்தா’ என்ற பெயரால் அழைக்கப்பட்டது. காலப்போக்கில் அது மருவி ‘சாரதா சட்டம்’ என்று அழைக்கப்படலாயிற்று. அந்தச் சட்டம் 1929-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி நிறைவேற்றப்பட்டு, 1930 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்தது.
சென்னை மாகாணத்தைப் பொருத்தவரை 1920-ம் ஆண்டில் நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்தது. அதற்குப் பிறகுதான் பெரியாருடைய சுயமரியாதை இயக்கமும் வலுப்படத் தொடங்கியது. 19-ம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் நீதிபதி மாயவரம் வேதநாயகம் பிள்ளை (சிறந்த நாவலாசிரியரும் கூட) போன்ற பெரியவர்களும், 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாரதியார் போன்ற விடுதலைக் கவிஞர்களும் பெண் விடுதலையை முதன்மைப் படுத்தினார்கள். தங்களுடைய கவிதைகளில் அதை அழுத்தமாகப் பதிவு செய்தார்கள்.
அதன் விளைவாக பெண்கள் பலர் வெளியுலகத்துக்கு வந்தனர். போராட்டக்களத்தில் பங்கேற்றனர். 1948-ல் அம்பேத்கர், வல்லபபாய் படேல் போன்ற தலைவர்கள் தீண்டாமை ஒழிப்பு, பெண்கள் விடுதலை வலியுறுத்தியதோடு, பெண்கள் சமுதாயத்தை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் வகையிலான சட்ட மசோதாக்களை கொண்டு வந்தார்கள்.
இந்துக்கள் அனைவருக்கும் ஒரே சட்டம் என்பதை முன்வைத்தார்கள். அது ‘ஹிண்டு கோட் பில்’ (Hindu Code Bill) என்று அழைக்கப்பட்டது. இந்து மதத்தில் நிலவும் பால்ய விவாகம், சதி போன்றவற்றை மாற்றுவதே இதன் முக்கிய நோக்கமாக இருந்தது.
இந்திய விடுதலைக்கு முன்பே, 1941-ம் ஆண்டுகாலகட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது, அனைத்து இந்துக்களுக்கும் ஒரே மாதிரி சட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. இதற்காக சர். பி.என்.ராவ் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது பிரிட்டிஷ் அரசாங்கம்.
(தொடர்வோம்...)