நிலையாமையை அறிவால் அறிந்தாலும் அதை மனிதர்க்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக இயற்கை சில அதிர்ச்சிகரமான சம்பவங்களை அவ்வப்போது நிகழ்த்திக் காட்டுகிறது. எழுத்தாளர் அரவிந்தனின் அகால மரணத்தை அப்படித்தான் பார்க்கிறேன்.
உணவுக் கட்டுப்பாடு, முறையான உடற்பயிற்சி என உடல்நலம் பேணுவதில் பெருங்கவனத்தோடு இருந்த அரவிந்தன் தம் அறுபத்திரண்டாம் வயதில் திடுமென இறந்து போனார். காப்பி குடித்துவிட்டு இன்னும் சற்று நேரம் ஓய்வெடுக்கலாம் என்று படுத்தவர் திரும்ப எழவில்லை. நேற்றிரவு என்னிடம் பேசினார், எனக்குச் செய்தி அனுப்பினார், இன்று பேசுவதாகச் சொன்னார் என்றெல்லாம் சமூக ஊடகங்களில் நண்பர்கள் பதறுகின்றனர். இத்தனை நண்பர்களின் நல்லெண்ணத்தில் வீற்றிருக்கும் அவரை இத்தனை எளிதாக, சீக்கிரமாகவா மரணம் நெருங்கும்?
1990களில் தொடங்கி முப்பத்தைந்து ஆண்டுகளாக ஊடகத்திலும் நவீன இலக்கியத்திலும் காத்திரமாக இயங்கி வந்தவர். இந்தியா டுடே, காலச்சுவடு, உலகத்தமிழ்.காம். இந்து தமிழ் திசை, மின்னம்பலம், சமயம்.காம், நம்ம சென்னை எனப் பல அச்சு, இணைய இதழ்களில் பணியாற்றி ஒவ்வொன்றிலும் தம் சுவடுகளைப் பதித்தவர். இந்து தமிழ் திசை நாளிதழ் இணைப்பிதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றிய போது தமிழில் அதுவரை இல்லாத வகையில் பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்தார்.
இலக்கியம் மட்டுமல்ல, சிறுவர், பெண்கள், இளைஞர் உள்ளிட்ட பல்வேறு பிரிவினருக்குமான தேவைகளை நவீனப் பார்வையோடு நிறைவேற்றும் வகையில் அவர் செயல்பாடுகள் இருந்தன. இதழியலாளருக்கு இருக்க வேண்டிய அடிப்படைப் பண்புகளான கருத்து வேறுபாடுகளை இணக்கமான முறையில் விவாதிப்பதும் அனைவருடனும் நட்பு பேணுவதும் அவருக்கு இயல்பாகவே கைவந்திருந்தன.
சிறுகதை, நாவல் என்று தம்மை எழுத்தாளராகவும் நிறுவிக் கொண்டவர். நான்கு சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு நாவல்கள் (பயணம், பொன்னகரம்) அவர் பங்களிப்பு. சென்னை மொழியை இழிவானதாகக் கருதும் பொதுமனோபாவத்துக்கு எதிரான பார்வை கொண்ட அவர், சென்னையின் வழக்கு மொழியில் ‘பொன்னகரம்’ நாவலை எழுதினார். சென்னை வாழ்வின் பல பகுதிகளை தம் வாழ்வனுபவத்தோடு இணைத்து எழுதிய வாசிப்புச் சுவை கொண்ட நாவல் அது.
இரண்டாண்டுக்கு முன் வெளியான ‘வெல்கம் டூ மில்லெனியம்’ சிறுகதைத் தொகுப்பில் அத்தனை நவீன மனதுடன் கதை சொல்லி வாசகக் கவனத்தை ஈர்த்திருந்தார். சிறுகதை அவருக்கு மிகவும் பிடித்த இலக்கிய வடிவம். ஓய்வற்ற தம் வேலை நெருக்கடிக்கு இடையே கொஞ்சம் அவகாசம் கிடைத்தால் சிறுகதை எழுத உட்கார்ந்துவிடுவார். எழுத்தாளர் முகாம் ஒன்றில் பதினைந்து நாட்கள் தங்கக் கிடைத்த வாய்ப்பில் கிட்டத்தட்ட நாளொன்றுக்கு ஒரு சிறுகதை என்னும் வேகத்தில் ஒரு தொகுப்புக்கான கதைகளை எழுதிவிட்டார்.
பாலசரஸ்வதி தேவியின் வாழ்க்கை வரலாறு, டி.எம்.கிருஷ்ணாவின் மூன்று நூல்கள் என பத்துக்கும் மேற்பட்டவற்றை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தவர். சில்வியா பிளாத்தின் வாழ்வை அடிப்படையாகக் கொண்ட புனைவாகக் கோனி பால்மன் எழுதிய ‘என் கதை உன் கதை’ நாவல் அவர் மொழிபெயர்ப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியாயிற்று. ஏராளமான மொழிபெயர்ப்புகள் வந்து குவியும் இக்காலத்தில் ஒரு நாவலை மொழிபெயர்க்கத் தேர்ந்தெடுக்கும் திறனும் அதன் அத்தனை கூறுகளையும் கொண்டு வந்து விடும் ஆற்றலும் அவருக்கு இருந்தன என்பதன் வெளிப்பாடாக இந்நாவல் அமைந்து வரவேற்பு பெற்றது.
சுந்தர ராமசாமியின் தாக்கம் பெற்ற இலக்கியப் பார்வை இவருடையது என்றாலும், தர்க்க ரீதியாகத் தம் கருத்தை முன்வைக்கும் ஆய்வெனத் தம் விமர்சனக் கட்டுரைகளை எழுதினார். ஜெயகாந்தன், இமையம், ஜே.பி.சாணக்யா ஆகியோர் படைப்புகள் பற்றி அவர் எழுதிய கட்டுரைகள் மிகவும் முக்கியமானவை. கிட்டத்தட்டப் பத்துக் கட்டுரை நூல்களை வெளியிட்டுள்ளார். சமீப காலத்தில் தம் விமர்சனப் பார்வையை முன்வைத்து சிறப்பான உரைகளையும் ஆற்றத் தொடங்கியிருந்தார். நாமக்கல்லில் டி.எம்.கிருஷ்ணா பற்றிய உரை, ஓசூரில் புரவி இலக்கியக் கூடுகையில் ஆற்றிய உரை ஆகியவற்றைக் கேட்டோர் போற்றினர்.
இதழியல், இலக்கியம் இரண்டுக்கும் ஆதாரக் கருவியாகிய மொழியைச் சரியாகக் கையாள வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் கொண்டவர். ஆர்வத்தாலும் சுய அனுபவத்தாலும் தொடர்ந்து தாம் கற்றுக் கொண்டவற்றைப் பிறருக்கும் பயன்படும் வகையில் இந்து தமிழ் திசை, மின்னம்பலம் ஆகிய இதழ்களில் தொடர்கட்டுரைகளாக எழுதிப் பின் ‘ஒருசொல் கேளீர்!’ என்னும் நூலாக்கிக் கொடுத்துள்ளார். செம்மையாக்கம் அவரது முக்கியமான பணிகளுள் ஒன்று. அவர் கைபட்ட பிறகு தம் கதையோ கட்டுரையோ துலங்குவதை உணர்ந்தோர் பலர். இப்படி அவர் திறன்கள் பல. அனைத்துக்கும் அரவிந்தன் என்றே சொல்லலாம்.