இந்திய அரசியல் சாசன நிர்ணயக் குழுவில் இடம்பெற்றிருந்த பெண் தலைவர்கள்.
இன்றைய இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கம், பொது வாழ்க்கையில் தூய்மையற்ற நிலை, ஊழல், சாதி மதச் சண்டைகள், வேலையற்ற நிலையில் இளைஞர்கள் விரக்தி, பொருளாதார நெருக்கடிகள், மத்திய - மாநில அரசுகள் உறவில் சிக்கல், மாநில அரசுகளைக் கலைக்கும் 356-ஆவது பிரிவு பற்றிய தெளிவான விவாதம், தேர்தல் சீர்திருத்தங்கள், ஆளுநர் பதவி குறித்த விவாதம் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்குத் தெளிவு ஏற்படும் வகையில் கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ள சிந்தனைகளைக் கொண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மறு ஆய்வு செய்யவேண்டிய நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், விவாதத்தில் இருக்கும் தேசிய அரசு இந்தியாவுக்குச் சாத்தியமா? அதேபோன்று இந்தியாவுக்கு ஜனாதிபதி ஆட்சி முறை வேண்டுமா? அல்லது நாடாளுமன்ற ஆட்சி முறை வேண்டுமா? என்று இந்தியாவின் அடிப்படை அமைப்புகளைப் பற்றி தினமும் விவாதங்கள் நடந்து கொண்டு வருகின்றன. இதற்கு விடை அளிக்கும் வகையில், இந்திய அரசியல் சாசனம் அமைய வேண்டும்.
இந்தியா கூட்டாட்சி அமைப்பா அல்லது கூட்டாட்சி கலந்த ஒற்றையாட்சி அமைப்பா என்பதைத் தெளிவாக அரசியல் சாசனத்தில் அறிவிக்க வேண்டும். இந்திய அரசியல் சாசனம் நெகிழாத்தன்மை உடையதா அல்லது நெகிழும் தன்மையுடையதா? என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.
அரசு நெறிமுறைக் கொள்கைகளை நீதிமன்றம் மூலம் எவ்வாறு நெறிப்படுத்தலாம் என்பதையும் திட்டவட்டமாகக் கூற வேண்டும். மத்திய - மாநில உறவுகளைப் பற்றியும் மாநிலங்களுக்கு இடையே உள்ள நதிநீர்ச் சிக்கல்களை விரைவில் தீர்க்கவும் அரசியல் சட்டம் ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும். மத்திய - மாநில உறவுகளை ஆராய இதுவரை இந்தியாவில் நீதிபதி சர்க்காரியா குழு, திமுக அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி ராஜமன்னார் குழு போன்ற குழுக்களின் பரிந்துரைகள் அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும்.
மேற்கு வங்க அரசின் சார்பில் அம்மாநில முதல்வர் மத்திய அரசுக்கு அளித்த மத்திய - மாநில உறவுகள் குறித்த அறிக்கை, ஹைதராபாத், ஸ்ரீநகர், கல்கத்தா, பெங்களூர் போன்ற நகரங்களில் கலைஞர், என்.டி. ராமாராவ், ஜோதிபாசு, ஈ.கே.நாயனார், பரூக் அப்துல்லா, ராமகிருஷ்ண ஹெக்டே போன்ற முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு மத்திய - மாநில உறவுகள் குறித்து மாநாட்டில் எடுக்கப்பட்ட விவாதங்களையும் மனதில் கொள்ள வேண்டும். நாட்டின் பாதுகாப்பு, நிதி, ரயில்வே, தொலைத்தொடர்பு, வெளி உறவு போன்ற துறைகள் மட்டுமே மத்திய அரசிடம் இருக்கலாம் என்ற கருத்துகள் இம்மாநாட்டில் தெரிவிக்கப்பட்டன.
இந்திய அரசியல் சட்டம் 356-வது பிரிவின்படி மாநிலத்தின் ஆளுநருடைய பரிந்துரை இல்லாமல் ‘மற்ற வகையில்’ (other wise) என்ற சொற்றொடரின்படி மாநில அரசுகளை மத்திய அரசு சில சமயங்களில் கலைத்துவிடுகிறது. தமிழகத்தில் 1991-இல் தி.மு.க. அரசு இதைப் போன்று ஆளுநருடைய பரிந்துரை இல்லாமல் ‘அதர் வைஸ்’ என்று அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள சொற்றொடரின் அடிப்படையில் கலைக்கப்பட்டது.
இதுவரை இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட முறை மத்திய அரசால் ஆட்சிக் கலைப்புகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியக் குடியரசுத் தலைவர் அவசர நிலையைப் பிரகடனம் செய்யவும், பிரதம அமைச்சரைக் கூட நீக்கவும், நாடாளுமன்றத்தைக் கலைக்கவும் அதிகாரம் இருந்தாலும் இந்தியக் குடியரசுத் தலைவர் ஒரு சம்பிரதாயத் தலைவராகவே இருக்கிறார். பிரதம அமைச்சருக்கும், இந்தியக் குடியரசுத் தலைவருக்கும் உள்ள உறவை அரசியல் சாசனம் தெளிவுபடுத்தவில்லை.
இதனால், பண்டித நேருவுக்கும், இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான ராஜேந்திர பிரசாத்துக்கும் கருத்து வேற்றுமைகள் பல சமயங்களில் ஏற்பட்டன. நீதித்துறைக்கும் நாடாளுமன்றத்துக்கும் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன. திட்டக் கமிஷன் மற்றும் நிதிக் கமிஷன் பற்றிய பணிகள் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.
நாடாளுமன்றமும், சட்டமன்றமும் 5 ஆண்டுகள் எவ்விதத் தடையுமின்றி இயங்க வேண்டும். இந்திரஜித் குப்தா குழுவின் பரிந்துரையின்படி தேர்தல் செலவுகளை (State Funding) அரசே ஏற்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைத் திரும்பி அழைக்கும் (Recall) உரிமை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
கிரிமினல்களும், சட்டத்தை மீறுபவர்களும் தேர்தலில் போட்டியிடுவதைத் தடை செய்ய வேண்டும். விகிதாச்சார பிரதிநிதித்துவ அடிப்படையில் தேர்தல் நடத்துவதைப் பற்றி ஒரு பொது விவாதம் நடத்தப்பட வேண்டும். நாட்டின் முக்கியப் பிரச்சினைகளை மக்களிடம் இருந்து கருத்தறியும் (Referendum) முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
கல்வி, உறைவிடம், பணி (Right to Education, Housing, Work) ஆகியவை அடிப்படை உரிமைகளாக்கப்பட வேண்டும். அரசுப் பணிகள் மக்களுக்குத் தெரியக்கூடிய வகையில் வெளிக்காட்டுதல் உரிமை வழங்கப்பட வேண்டும். மாநிலங்களுக்கிடையேயான அவையை அரசியல் அதிகாரம் பெற்ற அவையாக மாற்றி அரசியலமைப்பில் அதற்கொரு முக்கியத்துவம் ஏற்படுத்த வேண்டும். பல தெளிவின்மைகள் நமது அரசியல் சாசனத்தில் இருக்கின்றன. ஒரு நாட்டின் ஜீவ நாடியாக உள்ள அரசியல் சாசனம், நாட்டை நடத்திச் செல்லும் வழிகாட்டியாக விளங்க வேண்டும்.
இந்திய அரசியல் சாசனம், காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட பெரும்பான்மையினரால் வகுக்கப்பட்டது. 9.12.1946-இல் அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்கள் இந்தியாவின் அனைத்துத் தரப்பு மக்களின் விருப்பத்துக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுக்கப்படவில்லை என்ற கருத்து இருக்கின்றது. ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஆச்சாரியார் நரேந்திர தேவ் போன்ற சோசலிஸ்டுகள் அரசியல் நிர்ணய சபையில் பங்கேற்க விரும்பவில்லை.
வயது வந்தவர்களால் ஓட்டளித்துத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இன்றைக்கு உள்ள தேர்தலில் இந்தியாவில் உள்ள அத்துணை குடிமக்களும் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்படுகின்ற பிரதிநிதிகள் போல் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட மேட்டுக்குடி, கல்வி கற்றோர் என்ற அடிப்படையில் அரசியல் நிர்ணய சபைக்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். எனவே, இன்றைக்கு உள்ள இந்திய அரசியல் சாசனம் என்பது அனைத்து இந்திய மக்களின் பிரதிபலிப்பல்ல.
மத்திய அரசில் மாநிலக் கட்சிகள் முக்கிய பங்கேற்கக்கூடிய நிலைமைகள் மாறி உள்ளன. மாநிலங்களின் நலன்கள் காக்கப்பட வேண்டும். அடிப்படை உரிமைகள், மதச்சார்பின்மை சட்டத்தின் ஆட்சி, கூட்டாட்சி முறை போன்றவற்றைக் கவனத்தில் கொண்டு இந்திய அரசியலமைப்பைச் செய்ய வேண்டும்.
இந்தியா சுதந்திரம் அடைந்த 50 ஆண்டுகளிலேயே 78-க்கும் மேற்பட்ட முறை சட்டத் திருத்தங்கள் வந்துள்ளன. இந்திய அரசியல் சட்டத்தில் சில தெளிவின்மைகள் இருப்பதே இதற்குக் காரணம். அமெரிக்க அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு கிட்டத்தட்ட 211 ஆண்டுகள் (1999 கணக்கீட்டின்படி) ஆயினும் 27 சட்டத்திருத்தங்களே அந்த நாட்டின் அரசியல் சாசனத்தில் செய்யப்பட்டுள்ளன.
உலகிலேயே இந்திய அரசியல் சாசனம்தான் அதிகமான பிரிவுகளும், பக்கங்களும் அடங்கிய அரசியல் சாசனமாகும். இந்திய அரசியல் சாசனம் விடுதலைப் போராட்ட உணர்வுகளினால் பன்மையிலும் ஒருமை என்ற தத்துவத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், பல்வேறு மொழிகள், இனங்கள், கலாச்சாரங்கள் ஆகியவற்றை எல்லாம் ஒட்டுமொத்தமாக கட்டுக்கோப்பாகச் சேர்த்து வைக்கின்ற கருவியாக அரசியல் சாசனம் இருக்கவில்லை.
கடந்த 1998-ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டுமா என்பது பற்றி ஆய்வு செய்தபோது, 68 சதவீதத்தினர் மாற்ற வேண்டுமென கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்திய ஒருமைப்பாட்டைக் காக்கக்கூடிய இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டுமென்று பாரதிய ஜனதா கூட்டணி அரசு 1998 முதல் வலியுறுத்தி வருகிறது.
எனவே, மக்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகளுக்கு அவ்வப்போது தெளிவுபடுத்துகின்ற உயிருள்ள ஜீவனாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஆய்வு செய்து திருத்தப்பட வேண்டும். (1999-ஆம் ஆண்டில் என்னுடைய பதிவு).
அரசியல் சாசனம் - தேவை மீள்பார்வை!
அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தின் எடை 600 கிராம். அமெரிக்க அரசியல் சாசனம் சுருக்கமான சரத்துகளும், பக்கங்களும் கொண்டாலும், அந்த நாட்டுக்கு தெளிவான வழிகாட்டுதல்களைக் கொண்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உலகத்திலேயே அதிக பக்கங்கள், அதிகமான பிரிவுகளும் கொண்டது. அதன் எடை 1.5 கிலோ ஆகும்.
கடந்த 1999-இல் பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அரசியல் சாசன 50-ஆவது நிறைவு விழாவையொட்டி அரசியல் சாசனத்தின் மூலப்பிரதி அப்படியே அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினா்களின் கையொப்பம் மூலப் பிரதியில் இருந்தது. அதில் தமிழகத்தைச் சோ்ந்த மு.சி.வீரபாகு என்று தமிழிலும் ஒரு கையொப்பம் இடம் பெற்றிருந்தது என்பது மகிழ்ச்சியான செய்தி.
நிர்வாகம், நீதித்துறை, நாடாளுமன்றம் என்று மூன்றுமே சம அதிகாரம் படைத்தவை என்பதுதான் அரசியல் சாசனத்தின் அடிப்படைக்கூறு. ஒன்றை மற்றொன்று கட்டுப்படுத்தாமல், அவற்றுக்கு இடையே அதிகார மீறல்கள் இல்லாமல் இருக்கும் வகையில் அதிகாரப் பகிர்வு உறுதிப்படுத்தப்பட்டிருந்தும் கூட, பிரச்சினைகள் எழாமல் இல்லை.
சிறையில் இருந்துகொண்டு ஜார்ஜ் பொ்னாண்டஸ், சிம்ரஞ்சித் சிங் மான் ஆகியோர் தோ்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டனா். ஆனால், சிறையில் உள்ளவா்கள் தோ்தலில் வாக்களிக்க இந்தியாவில் வாய்ப்பில்லை. இது ஒரு பெரிய முரண்.
1946-இல் அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக டாக்டா் அம்பேத்கா் தொடக்கத்தில் இடம்பெறவில்லை. கிழக்கு வங்கத்தைச் சோ்ந்த யோகேந்திரநாத் மண்டல் கடைசி நிமிஷத்தில் விலகியதால் அந்த இடத்தில் அம்பேத்கா் இடம்பெற்றார். ஜவஹா்லால் நேரு, சி.ராஜகோபாலாச்சாரி, ராஜேந்திர பிரசாத், சா்தார் வல்லபபாய் படேல், சந்திப் குமார் படேல், மெளலானா அபுல் கலாம் ஆசாத், ஷியாமா பிரசாத் முகா்ஜி, நளினி ரஞ்சன் கோஷ், பால்வந்த் சிங் மேத்தா ஆகியோர் அரசமைப்பு நிர்ணய மன்றத்தில் முக்கியப் பிரமுகா்களாக இருந்தனா்.
சரோஜினி நாயுடு, ஹன்சா மேத்தா, துா்காபாய் தேஷ்முக், ராஜ்குமாரி அம்ரித் கெளா், விஜயலட்சுமி பண்டிட் போன்றவா்கள் முக்கியமான பெண் உறுப்பினா்களாக இருந்தனா். அரசமைப்பு நிர்ணய மன்றத்தின் முதல் தலைவராக டாக்டா் சச்சிதானந்தன் சின்ஹா இருந்தார். பின்னா், ராஜேந்திர பிரசாத் அரசமைப்பு மன்றத் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டார்.
அரசமைப்பு நிர்ணய மன்ற உறுப்பினா்கள் டிசம்பா் 9, 1946-இல் முதல்முறையாகக் கூடினா். பலமுறை கூடிய இந்தக் குழு தனது அறிக்கையை 1948, பிப்ரவரி 21-இல் சமா்ப்பித்தது. நவம்பா் 4-ஆம் தேதி அரசியல் நிர்ணய மன்றத்திற்கு சமா்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கை, முழுமை பெற்று 1949 நவம்பா் 26-ஆம் தேதி அரசியல் நிர்ணய மன்றத்தின் தலைவா் ராஜேந்திர பிரசாத்தின் கையொப்பம் பெற்றது.
ஜனவரி 24-இல் நடைபெற்ற அரசியல் நிர்ணய மன்றத்தின் கடைசிக் கூட்டத்தில் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக ராஜேந்திர பிரசாத் தோ்ந்தெடுக்கப்பட்டார். லாகூரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் 1950, ஜனவரி 26-ஆம் தேதியை இந்தியாவின் குடியரசு நாளாக அறிவித்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நமக்கு நாமே அா்ப்பணிப்பது என்று தீா்மானிக்கப்பட்டது. அதன்படி, ஜனவரி 26-ஆம் தேதியை இந்தியக் குடியரசு நாளாக ஏற்பது என்றும் அரசியல் நிர்ணய மன்றம் முடிவெடுத்தது. அதன்படி இந்திய குடியரசு தினத்தில் (ஜன.26, 1950) இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
இந்திய அரசியல் சாசனம் 124 முறை திருத்தப்பட்டு (2019 கணக்கீட்டின்படி), 132 முறை 356-ஆவது பிரிவின் அடிப்படையில் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராக மாநில அரசுகள் கலைக்கப்பட்டு, நமது அரசியல் சாசனம் சிதைந்து போயிருக்கிறது. எழுபது ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இப்போது அதை மீள்பார்வை பார்க்க வேண்டிய நேரம் வந்துள்ளது. (2019-ம் ஆண்டு என்னுடைய பதிவு)
அரசியல் சாசன நிர்ணயக் குழுவில் இடம்பெற்ற பெண் தலைவர்கள்
இந்திய அரசியலமைப்பு சட்டம் முழுமை பெற்று நிறைவேற்றப்பட்டு, இன்றோடு 76 ஆண்டுகள் ஆகின்றன. அந்த அரசியல் நிர்ணய சபையில் இடம்பெற்ற சில புகழ்மிக்க பெண் தலைவர்கள் குறித்து நம்மில் பலரும் அறிந்திருக்கவில்லை. அத்தகைய உன்னதமான தேசபக்தர்கள் மற்றும் விடுதலைப் போராட்ட பெண் தியாகிகள் குறித்து ஒரு சிறு பதிவு.
தாக்ஷாயணி வேலாயுதன்: 1912-ஆம் ஆண்டு கொச்சியில் பிறந்த இவர், புலையர் எனும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். பெண்கள் சமூக உரிமைகளை நிலைநாட்டப் போராடியவர்.
ஹன்ஸா மேத்தா: குஜராத்தின் பரோடாவில் (தற்போதைய வதோதரா) திவான் மனுபாய் நந்தஷங்கர் மேத்தாவின் மகளாக 1897-ம் ஆண்டு பிறந்தவர் .
துர்காபாய் தேஷ்முக்: 1909-ம் ஆண்டு ராஜமுந்திரியில் பிறந்த துர்காபாய், தனது 12-ஆவது வயதிலேயே ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டார். 1930-ம் ஆண்டு மெட்ராஸில் நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரகத்திலும் கலந்துகொண்டார்.
பேகம் ஐசாஸ் ரசூல்: பஞ்சாபில் ராஜ குடும்பத்தில் பிறந்த பேகம் ரசூல், அரசியல் சாசன சபையில் இடம்பெற்ற ஒரே இஸ்லாமிய பெண். பேகமும், அவரது கணவரும் முஸ்லிம் லீக் கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட்டனர். 1937-ம் ஆண்டு நடந்த தேர்தலில் உத்தரப்பிரதேச சட்டசபைக்கு பேகம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அம்மு சுவாமிநாதன்: வரைவு அரசமைப்பு சட்டத்தை அம்பேத்கர் தாக்கல் செய்துபோது நடந்த விவாதத்தில், “இந்தியாவில் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படுவதில்லை என வெளியில் இருக்கும் மக்கள் பேசுகிறார்கள். நாட்டில் உள்ள மற்ற அனைத்து குடிமக்களுக்கும் இணையாக பெண்களுக்கு சம உரிமை அளிக்கும் அரசமைப்பு சாசன சட்டத்தை நாமே இயற்றியுள்ளோம் என நாம் இனி கூறிக் கொள்ளலாம்” என நம்பிக்கையுடனும் உறுதியுடனும் அம்மு பேசினார்.
விஜயலட்சுமி பண்டிட்: ஜவாஹர்லால் நேருவின் தங்கை ஆவார்.
சுசேதா கிருபளானி: ஹரியாணாவின் அம்பாலா நகரில் 1908-ம் ஆண்டு பிறந்தவர். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கு பெற்றார். காங்கிரஸ் கட்சியின் பெண்கள் பிரிவை 1940-ம் ஆண்டு தோற்றுவித்தார்.
சரோஜினி நாயுடு: ‘கவிக்குயில்’ என்று அனைவராலும் அழைக்கப்படும் சரோஜினி நாயுடு, 1879-ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரஸின் முதல் இந்தியப் பெண் தலைவர்.
லீலா ராய்: அஸ்ஸாம் மாநிலத்தின் கோலாபாராவில் 1900-இல் பிறந்தார். துணை மாஜிஸ்திரேட்டாக இருந்த இவரது தந்தை, ஒரு தேசியவாதி. தந்தையைப் பின்பற்றி தேசத் தொண்டில் ஈடுபட்டார்.
பூர்ணிமா பானர்ஜி: 1911-ஆம் ஆண்டு பிறந்த இவர், சிறந்த சுதந்திர போராட்ட தியாகியாவார். இவரது சகோதரி அருணா ஆசப் அலியும் சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
ஆன் மாஸ்கரீன்: 1902-ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் லத்தீன் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்த ஆன் மாஸ்கரீன், திருவிதாங்கூர் மாநில காங்கிரஸில் இணைந்த முதல் பெண்களுள் ஒருவர்
ரேணுகா ராய்: சமூக சேவகரும் அனைத்திந்திய பெண்கள் மாநாட்டின் உறுப்பினருமான சாருலதா முகர்ஜி மற்றும் ஐசிஎஸ் அதிகாரி சதீஷ்சந்திர முகர்ஜி தம்பதியின் மகள் ரேணுகா.
கமலா செளதரி: லக்னோவில் வசதி படைத்த குடும்பத்தில் கமலா பிறந்திருந்தாலும், அவர் தனது படிப்பை தொடர பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. ஆங்கிலேய அரசுக்கு தனது குடும்பம் ஆதரவளித்து வந்த நிலையில், அதற்கு மாறாக, சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு பல முறை சிறை சென்றார்.
ராஜ்குமாரி அம்ருத் கெளர்: 1989-ம் ஆண்டு லக்னோவில் பிறந்தவர். இந்தியாவின் முதல் சுகாதார அமைச்சர் என்ற சிறப்பை பெற்றவர். இவர் மகாத்மா காந்தியின் செயலராக 16 வருடங்கள் பொறுப்பு வகித்துள்ளார்.
மாலதி செளத்ரி: கிழக்கு வங்காளத்தில் (தற்போதைய வங்கதேசம்) 1904-ம் ஆண்டு செல்வாக்கு மிக்க குடும்பத்தில் பிறந்தவர். உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்துகொண்டார். இவரது கணவர் நவகிருஷ்ண செளத்ரி பிற்காலத்தில் ஒடிஸா மாநிலத்தின் முதலமைச்சராகப் பதவி வகித்தார்.
பாரத தேசத்தின் புனிதமான அரசியல் சட்டத்தை இயற்றுவதற்காக உழைத்த இத்தகைய அறிவார்ந்த பெண் தலைவர்களை நினைவுகூர்ந்து போற்றுவோம்.
(தொடர்வோம்...)