இந்தி மொழி திணிப்பு விவகாரத்தில் ஈவிகே சம்பத்துக்கு பிரதமர் ஜவஹர்லால் நேரு எழுதிய கடிதம்
ஆரம்ப காலத்தில் இருந்தே அண்ணாவுடன் நெருங்கிப் பழகியவர் ஈ.வி.கே.சம்பத். அரசியலில் இருவரும் கைகோத்து பயணித்தனர். சென்னை வாழ்க்கையின்போதும் அண்ணாவின் இணை பிரியாத தம்பியாக சம்பத் விளங்கினார். சுற்றுப் பயணத்திலும் கூட இருவரும் இணைந்தே பெரும்பகுதி நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
1950-ல் நடைபெற்ற ஒரு நிகழ்வு. அண்ணாவும் சம்பத்தும் ரயிலில் ஒரு மாநாட்டுக்குச் சென்று கொண்டிருந்தனர். அண்ணாவின் வளர்ப்பு மகன் சிறுவன் பரிமளமும் உடன் சென்றார். வழியில் பரிமளத்துக்குக் கடும் காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை இருந்தது.
அப்போது விழுப்புரம் சந்திப்பை ரயில் நெருங்கிக் கொண்டிருந்தது. விழுப்புரத்தில் அண்ணாவின் நண்பர் டாக்டர் அருணாசலத்தின் இல்லம் இரும்புப் பாதை அருகில் அமைந்திருந்தது. ரயில் நிலையத்துக்குச் சென்று ஒரு வண்டி பிடித்து டாக்டர் வீட்டுக்குப் போக சிறிது தாமதமாகும்.
அதேநேரம் அதற்கு முன்பாகவே இறங்கினால் ஒரு வேலியைத் தாண்டியதும் மருத்துவர் வீடு. அண்ணாவுக்கு ஒரு யோசனை ஏற்பட்டது. தம் கையிலிருந்த சிறு பையை வெளியே எறிந்துவிட்டு அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்தார். ரயில் நின்றது. உடனே அண்ணாவும் சம்பத்தும் கீழே இறங்கி பரிமளத்தை மாறி மாறி தோளில் போட்டுக் கொண்டு வேகமாக நடந்து மருத்துவர் வீட்டை அடைந்தனர்.
இன்னொரு நிகழ்வு. அண்ணாவோடு பரிமளத்தை அனுப்பத் தொத்தா (அண்ணா தனது சிற்றன்னை ராஜாமணி அம்மையாரை அவ்வாறுதான் அழைப்பார்) சம்மதிக்க மாட்டார். சென்னையில் ஒரு நாடகத்துக்குத் தலைமை தாங்கச் செல்வதால் 12 வயது சிறுவனான பரிமளத்தை உடன் அழைத்துச் செல்வதாகத் தொத்தாவிடம் அனுமதி கேட்டார் அண்ணா. வழக்கம்போல் அவர் மறுத்து விட்டார். தொத்தாவிடம் சம்பத் நயமாகப் பேசி நான் பொறுப்பு... அழைத்துச் செல்கிறேன் என்று கூட்டி வந்தார்.
அண்ணா, சம்பத், பரிமளம் மூவரும் சென்னையில் ஒற்றைவாடைக் கொட்டகை நாடகத்துக்குச் சென்றார்கள். நாடக இடைவேளையில், அண்ணா தலைமை உரையாற்றினார். மேடைக்குச் சென்றபோது பரிமளத்தையும் அழைத்துச் சென்றார்கள். 12 மணிக்கு மேலாகி விட்டது. பரிமளத்துக்குத் தூக்கம் வந்துவிட்டது.
மேடையில் ஒரு புறமாக இருந்த சிறிய பலகையில் படுத்துத் தூங்கி விட்டார். நிகழ்ச்சி முடிந்ததும் அண்ணாவும் சம்பத்தும் பரிமளத்தை மறந்துவிட்டு காரில் புறப்பட்டு புகாரி ஓட்டலில் உணவருந்திவிட்டு காஞ்சிக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தபோது, ‘சம்பத்... பரி எங்கே?’ என்று அண்ணா கேட்க, இருவரும் திகைத்து காரைத் திருப்பிக் கொண்டு ஒற்றைவாடைக் கொட்டகைப் பக்கம் விரைந்து வந்தார்கள்.
ஆனால், அங்கே கதவைப் பூட்டி விட்டு எல்லோரும் சென்று விட்டார்கள். சம்பத் ஆவேசத்துடன் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு சுற்றுச் சுவரைத் தாண்டி குதித்து, உள்ளே சென்று இருட்டில் நெடுநேரம் தேடி, உறங்கிக் கொண்டிருந்த பரிமளத்தைக் கண்டுபிடித்து எழுப்பினார். அது முடியாமல் போகவே சிறுவனை, சம்பத் தம் தோளிலே போட்டுக் கொண்டு மறுபடியும் சுவரேறிக் குதித்து காரில் வீடு திரும்பினார்.
இப்படியாக அண்ணாவோடு மட்டுமல்லாமல் அண்ணாவின் குடும்பத்தாரிடமும் நெருங்கிப் பழகியவர் சம்பத். சமையல் கட்டு வரை சென்று ராணி அம்மையாரிடம் சமையல் குறிப்புகளை எல்லாம் சொல்லிச் சமைக்கச் செய்து அண்ணாவும் சம்பத்தும் ஒரே வட்டிலில் உண்டு, ஒரே கட்டிலில் தூங்கிய பாசமிகு நாட்கள் பசுமையானவை.
ராஜகோபாலாச்சாரியாருக்கு கருப்புக் கொடி!
1950-ம் ஆண்டு அக்டோபர் 23-ம் நாள் சென்னை தங்கசாலை வீதியில், 207-ம் எண்ணுள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் திமுக செயற்குழு கூடியது. அதில், பொதுச் செயலாளர் அண்ணா, ஈ.வி.கே.சம்பத், இரா.நெடுஞ்செழியன், என்.வி.நடராசன், கே.ஏ.மதிவாணன், காஞ்சி மணிமொழியார், அன்பில் தர்மலிங்கம், மதுரை முத்து, ஜி.பி.சோமசுந்தரம், ஈ.வே.அ. வள்ளிமுத்து, டி.எம்.பார்த்தசாரதி, குறிஞ்சிப்பாடி சாம்பசிவம், சத்தியவாணிமுத்து, டி.எம்.மொய்தீன், கே.எம்.கண்ணபிரான், முல்லை எம்.பி. வடிவேல், குமார தணிகாசலம், கா.அப்பாத்துரையார் ஆகியோர் பங்கேற்றார்கள்.
இச் செயற்குழுவில் கட்சியின் நடைமுறைத் திட்டங்கள் குறித்தும், எதிர்கால ஆக்கப்பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அடுத்து, சென்னை வரும் இலாகா இல்லாத மத்திய மந்திரி ராஜகோபாலாச்சாரியாருக்கு கருப்புக் கொடி காட்டுவதென கழகம் எடுத்த முடிவின்படி நிர்வாகிகள் செயலில் இறங்கினார்கள்.
இதன் எதிரொலியாக சென்னையில் முக்கியத் தலைவர்களான ஈ.வி.கே.சம்பத், கே.ஆர்.ராமசாமி, என்.வி.நடராசன், கே.கே.நீலமேகம், கே.கோவிந்தசாமி, ஈழத்து அடிகள், தில்லை வில்லாளன், காஞ்சி சி.வி.ராஜகோபால், டாக்டர் கணேசன், ஜலகண்டபுரம் ப.கண்ணன், முல்லைக் கொம்பை கே.எம்.கண்ணபிரான், காஞ்சி சுந்தரேசன் (இவர் அண்ணாவின் நாடகங்களுக்கு ஒப்பனைக் கலைஞர்), குறிஞ்சிப்பாடி சாம்பசிவம், அகரம் டி.வி.சாமி ஆகியோர், இந்தியக் குற்றவியல் சட்டப் பிரிவு 151-ன் கீழ் காவலில் வைக்கப்பட்டனர். இவர்களோடு மேலும், கருப்புக்கொடி காட்டுவதாக இருந்த பல வட்டத் தோழர்களையும் முன்னேற்பாடாகக் கைது செய்தனர். அன்று அண்ணா காஞ்சியில் இருந்தார்.
24.10.50 அன்று சென்னை கடற்கரையில் கோட்டைக்கு அருகில் காலை 7 மணி முதலே திரளான தொண்டர்கள் கருப்புக் கொடிகளுடன் அணி வகுத்தனர். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க அன்று காலை 9 மணிக்கு அங்கே ராஜாஜி வருவதாக இருந்தது. ஆனால் 8 மணிக்கே போலீஸ் அதிகாரிகள் குவிக்கப்பட்டு, கருப்புக் கொடியுடன் அணிவகுத்திருந்த ஆயிரக்கணக்கான ஆண், பெண் தொண்டர்களை அப்புறப்படுத்த கடும் தடியடி நடத்தினர்.
இந்தத் தாக்குதலுக்கு உள்ளான மக்கள் நாலா பக்கங்களிலும் சிதறி ஓடினர். அவர்களைப் போலீஸார் துரத்தித் துரத்தி அடித்தனர். இந்தத் தடியடியில் கா.அப்பாதுரையார் பலமாகத் தாக்கப்பட்டு ரத்தம் வழிய நகர முடியாமல் விழுந்துவிட்டார். பட்டுக்கோட்டையில் தடையை மீறிப் பேசிய என்.எஸ்.இளங்கோ கைது செய்யப்பட்டார்.
குன்றத்தூர் துப்பாக்கிப் பிரயோகம்
மறுநாள் சென்னையை அடுத்த குன்றத்தூரில் 144 தடை உத்தரவை மீறி என்.வி.நடராசன் தலைமையில் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. என்.வி.நடராசனும், பாலசுந்தரம் என்பவரும் வழியில் போலீஸாரால் தடுக்கப்பட்டு கைவிலங்கிட்டுக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்கள் கைதானதைக் கேள்வியுற்ற மக்கள், குன்றத்தூரில் கண்டன ஊர்வலம் புறப்பட்டனர்.
ஊர்வலத்தைக் கலைப்பதற்கு போலீஸார் மூர்க்கத்தனமாக தடியடி நடத்தினர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமுற்றனர்.
கூட்டத்தைக் கலைக்க முன்னறிவிப்பின்றி 7 சுற்று துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. பலர் படுகாயமுற்றனர். மாங்காடு குட்டி என்பவர் மார்பில் குண்டு பாய்ந்து பிணமானார். வேறொருவருக்கு கால் சதை பிய்த்துக் கொண்டது. இதனால் மக்கள் கொதிப்படைந்தனர். அதைத் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்கள் பீதியடைந்தனர். கடைகள் மூடப்பட்டன. வீதிகளில் மக்கள் நடமாட்டமில்லை. என்.வி.நடராசன் உள்ளிட்ட 26 பேர் மீது வழக்கு நடைபெற்றது. கோர்ட்டுக்கு கொண்டு வரும்போதெல்லாம் என்.வி.நடராசன் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்டார்.
இதேபோல், நாரணமங்கலம் என்ற ஊரில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. தடையை மீறி கூட்டத்தில் பேசாமல் இரா.நெடுஞ்செழியன் திரும்பி வந்துவிட்டார். ஆனால் உள்ளூர்த் தோழர்கள் தடையை மீறிப் பேசிக் கைதாயினர். இதேபோல், கட்சி எடுத்த தீர்மானத்தின்படி தமிழகத்துக்கு வருகை தந்த மத்திய அமைச்சர் அரிகிருஷ்ணன் மேத்தா, கே.எம்.முன்ஷி, கோபால்சாமி அய்யங்கார், ஜெகஜீவன்ராம் ஆகியோருக்கும் கருப்புக்கொடி காட்டப்பட்டு எண்ணற்றோர் சிறையிலிருந்தனர்.
தஞ்சை, அதிராம்பட்டினம் ஆகிய இடங்களிலும் 144 தடை உத்தரவு மீறப்பட்டு கைதாகினர். சென்னையில் தடையை மீறிப் பேசிய கா.அப்பாதுரையார், என்.ஜீவரத்தினம் கைது செய்யப்பட்டனர். இந்த அடக்குமுறைகளைக் கண்டித்து கடற்கரையில் நடைபெற்ற கூட்டத்தில் அண்ணாவும் சம்பத்தும் கடும் கண்டனத்தை அறிவித்தனர். தாங்களே நேரடிக் கிளர்ச்சியில் ஈடுபடப் போவதாகவும் எச்சரித்தனர்.
நேருவிடம் சம்பத் பெற்ற வாக்குறுதி பற்றி அண்ணா கடிதம்
இந்திப் பிரச்சினையில் இந்தி பேசாத மக்களுக்கு என்றும் பாதுகாப்புப் பட்டயமாக பிரதமர் நேருவிடம் ஈ.வி.கே.சம்பத் பெற்றுத் தந்த வாக்குறுதி பற்றி அண்ணா, தமது ‘திராவிட நாடு’ 7.8.60 இதழில் கீழ்க்கண்டவாறு தம்பிக்கு கடிதத்தில் கூடியுள்ளார்.
தம்பி! காங்கிரஸ் வட்டாரத்திலே தனியாக அவர்கள் பேசுவது என்னவாக இருக்கும் தெரியுமா? கருப்புக் கொடி இல்லையாமே ஏன்? எதற்காகக் காட்டப் போகிறார்கள். அவர்களுக்குத்தான் கேட்டது கிடைத்து விட்டதே!
அதென்ன விஷயம்?
இது தெரியாதா உனக்கு? கோடம்பாக்கத்திலே கூறினார்கள். ராஜேந்திர பிரசாத், தமிழகம் வருமுன், மொழி பற்றிய தமது ஆணைக்கு விளக்கம் கூறிவிட்டுத்தான் வரவேண்டும்; விளக்கம் தராவிட்டால், கருப்புக் கொடி காட்டப்படும் என்று. இந்த ராஜேந்திர பிரசாத், இங்கு வந்த பிறகாவது பேசக் கூடாதா? அவர்கள் கேட்டுக் கொண்டபடியே, இங்கு வருவதற்கு முன்பே, ஐதராபாத்திலே விளக்கம் கொடுத்துப் பேசிவிட்டார்.
என்ன விளக்கம் கொடுத்துப் பேசினார்?
என்ன விளக்கம் வேண்டுமென்று, தீனா, மூனாக்காரர் கேட்டார்களோ, அந்த விளக்கத்தைத்தான். இந்தித் திணிப்பு இல்லை. இந்தி விஷயமாக நேரு கொடுத்த வாக்குறுதியின்படி செயல்படுவோம் என்று விளக்கம் கொடுத்தார். பேச்சுத்தானே! பொதுக்கட்டத்தில்... ஆமாம், நான் கூட அப்படித்தான் மனதுக்குள் சமாதானம் தேடிக் கொண்டேன்.
ஆனால்...
ஆனால் என்ன...
இவர் பேசினார்! நமது பாரதப் பிரதமரோ, கடிதமே எழுதி அனுப்பினார்? கடிதமா? அவரா? இதுகளுக்கா..?
“ஆமாம் ! நினைத்தாலே கோபம் கோபமாக வருகிறது. நாம் காங்கிரசுக்கு தூணாக இருக்கிறோம். ஒரு மந்திரி கூட நமக்குக் கடிதம் எழுதுவதில்லை. இந்தக் கழகத்தான் சம்பத்து, ‘என்ன சொல்லுகிறீர்? ஏன் கழகம் கருப்புக் கொடி காட்ட தீர்மானித்திருக்கிறது. ராஜேந்திர பிரசாத்துக்கு. நீங்கள் ஒரு விளக்கம், சமாதானம் கொடுக்க வேண்டும்’’ என்று.
எப்போது எழுதினார்?
ஆகஸ்டு மூன்றாம் தேதி!
பாரேன், துணிச்சலை... ஆகஸ்டு ஆறாம் தேதி கருப்புக் கொடி என்று அறிவித்துவிட்டு மூன்றாம் தேதி கடிதம் எழுதி, பதில் கேட்டிருக்கிறான். சீனாக்காரன் தொல்லை ஒருபுறம், நாகர்கள் அமளி இன்னோர் புறம், அசாம் ரகளை வேறோர் புறம், இவைகளைக் கவனிப்பாரா? இந்தக் கழகத்தான் கடிதத்தைக் கவனிப்பாரா?
நானும் அப்படித்தான் எண்ணிக் கொண்டேன். இதுகளுக்காவது நேருவாவது கடிதம் எழுதுவதாவது! அவர், பதில் கடிதம் போட வேண்டிய அளவு இதுகள் என்ன, பெரிய மனிதர்களா?
- என்றெல்லாம் எண்ணிக் கொண்டேன். பயல் முகத்திலே கரி பூசிக் கொண்டு வந்து சேருவான் என்று நினைத்தேன். ஆனால் நேரு பதில் கடிதம் கொடுத்திருக்கிறாரே!
வெட்கம் பிய்த்துத் தின்றது. என்ன செய்வது, சம்பத் கடிதம் பார்த்த மூன்று மணி நேரத்துக்கெல்லாம், தானே கையெழுத்துப் போட்டு, கடிதம் அனுப்புகிறார். பாரதப் பிரதமர்! செய்கிற காரியம் இப்படி இருக்கிறது!
கழகக்காரர்கள், இதை வெற்றி என்று கொண்டாடலாமலா இருப்பார்கள்?
நமக்குள்ளே பேசிக் கொண்டால், என்ன தப்பு, வெற்றிதான்! ராஜேந்திரப் பிரசாத் அவசர அவசரமாக விளக்கம் கொடுக்கிறார்; அழுத்தக்காரர் என்கிறார்கள் கோவிந்த வல்லப பந்த். அவர் பார்லிமெண்டில் பேசுகிறார். இந்தித் திணிப்பு இல்லை; நேரு வாக்குறுதி நிலைக்கும்; ஆங்கிலம் நீடிக்கும்; அதற்கான சட்டம் நிறைவேற்றுவோம்... என்றெல்லாம் நேரு கடிதமே போடுகிறார்.
எல்லாம் இந்தப் பயல்கள் கருப்புக் கொடி காட்டுகிறோம் என்று சொன்ன பிறகு!
விளக்கம் கொடு, இல்லாவிட்டால் கருப்புக் கொடி என்று மிரட்டுகிறேன்; அப்பா! அப்பா! இதோ இந்தா விளக்கம் என்று ராஜேந்திர பிரசாத் பேசுகிறார். உறுதிமொழியை உறுதிப்படுத்துங்கள் என்று கேட்கிறார் சம்பத். உடனே, உறுதி! உறுதி! என்று பதில் கடிதம் கொடுக்கிறார் நேரு. நினைத்தாலே வெட்கமாக இருக்கிறது.
கழகக்காரர்கள், நேரு கடிதத்தைப் படம் போட்டல்லவா வைத்துக் கொள்வார்கள்.
“குமாரபாளையத்தில் கூடிய நாளிலிருந்து, செயற்குழு அறிவகத்தில் கூடி, கருப்புக் கொடி காட்டத் தேவையில்லை என்று முடிவெடுத்த நாள் வரை, நடைபெற்ற நிகழ்ச்சிகளையெல்லாம், முறையாக எண்ணிப் பார்த்தால், எவரும் மகிழ்ச்சி கொள்வர்; வெற்றி கிடைத்தது கண்டு பெருமிதம் கொள்வர்.
பெற்ற வெற்றி இனிப் பெற வேண்டியவைகளை நினைவுபடுத்தட்டும். வாழ்த்துகிறேன். யானை வாகை சூடிய தம்பி நீ பெற்ற வெற்றியை உலகுக்கு அறிவிக்கும் முரசொலிதான், மூவர் மூவர் தந்த உறுதிமொழிகள் மூலவர் மூவர் முரசொலி எழுப்பிய, வாகை சூடினாய், வாழ்க நீ தம்பி!
ஒரு விடுதலை இயக்கம் தன் குறிக்கோளில் வெற்றி பெற என்னென்ன வகையான திறமைகளைப் பெற்றிருக்க வேண்டும் என்பது பற்றியும் எண்ணிப்பார். அந்தத் திறமைகளைத் தமது திறமைகளாகப் பெற்றுத் திகழும் தம்பிமார்களின் முகாமல்லவா நமது கழகம் என்பதையும் நினைத்துப் பார். அப்போதுதான் நமது கழகத்தின் அளவு மட்டுமல்ல, இயல்பு விளங்கிடும்... ஏற்றம் தெரிந்து விடும்.
கேட்பவர்கள் கிடுகிடுக்க, எதிரிகள் படை நடுங்க, நமது படை எக்களிக்க, சம்மட்டி அடி கொடுப்பது போல, மொழியும் விழியும் உறுதியையும் உணர்ச்சியையும் கொட்டிடத் தக்கபடி பேசினால், மாற்றார் மமதை மடியும் என்ற எண்ணம் தோன்றும்போது சம்பத் தெரியவில்லையா உன் கண் முன்பு.
இவ்வாறு அண்ணா அந்தக் கடிதத்தில் கூறியிருந்தார்.
(தொடர்வோம்...)