சிறப்புக் கட்டுரைகள்

சாலமன் பாப்பையா (1936 - 2026): பட்டிமன்றத்தை உலகெங்கும் பரப்பியவர் | அஞ்சலி

கு.​ஞானசம்​பந்​தன்

90 ஆண்​டு​கள் வாழ்ந்த சாலமன் பாப்​பை​யா, தனது வாழ்​நாள் முழு​வதை​யும் தமிழ் மொழி, தமிழ் இலக்​கி​யம் மற்​றும் தமிழ்ச் சமூகச் சிந்​தனை​களுக்​காக முழு​மை​யாக அர்ப்​பணித்​தவர். நல்​லறிஞர், தமிழ் மூதறிஞர், பத்​மஸ்ரீ, கலை​மாமணி உள்ளிட்ட விருதுகளைப் பெற்ற சாலமன் பாப்​பை​யா, மகாகவி பார​தி​யார் மீது மிகுந்த பற்​றுடைய​வர். அவரது மறைவு, பாரதி நினைவு நாளான செப்​டம்​பர் 11ஆம் தேதி நிகழ்ந்​திருப்​பது நம்மைத் துயரில் ஆழ்த்​துகிறது.

அவரது புகழை​யும் பெரு​மை​யை​யும் நாம் நினை​வு​கூரும் வேளை​யில், அவரோடு எனக்​கிருந்த தொடர்​பை​யும் குறிப்​பிட வேண்​டி​யிருக்​கிறது. நான் சிறு​வ​னாக இருந்​த​போது எனது தந்​தை​யாருடன் சென்று தரை​யில் அமர்ந்து அவரது பேச்​சைக் கேட்​டிருக்​கிறேன். அதன் பிறகு, மதுரை அமெரிக்​கன் கல்​லூரி​யில் பயின்​ற​போது, அனைத்​துக் கல்​லூரி​களுக்​கு​மான பேச்​சுப்​போட்​டி​யில் இரண்​டா​மிடம் பெற்று அவரது கரங்​களால் பரிசு பெற்​றேன்.

பிற்​காலத்​தில் பட்​டிமன்​றங்​களில் அவரது அணி​யிலேயே பேசும் வாய்ப்​பும் எனக்​குக் கிடைத்​தது. அவரோடு பட்​டிமன்ற மேடைகளில் பேசிய பெருமை மட்​டுமல்​லாது, 2003ஆம் ஆண்டு வடஅமெரிக்​கத் தமிழ்ச் சங்​கப் பேரவை (FeTNA - பெட்​னா) அவரை அமெரிக்​காவுக்கு அழைத்​த​போது, அவருடன் நானும் சென்​றிருந்​தேன். அவரோடு நான்கு வாரங்​கள் இணைந்து பயணிக்​கிற அரிய வாய்ப்பு எனக்​குக் கிடைத்​தது.

அப்​போதெல்​லாம் நாங்​கள் இரு​வரும் மேடைகளில் மாறி மாறிப் பேசி, பெரு​வாரி​யான மக்​களின் அமோக வரவேற்​பைப் பெற்​றோம். அங்கு இரவு நேரப் பயணங்​களின் ​போதும், ஓய்​வெடுக்​கும் விடுதி அறை​களி​லும் பார​தி​யாரின் பாடல்​களை அற்​புத​மாகப் பாடு​வார். பாடல்​களைப் பாடும் தனித்​திறமை​யும் அவரிடம் இயல்​பாகவே இருந்​தது.

அவர் பேச்​சாளர் மட்​டுமல்ல, சிறந்த எழுத்​தாள​ரும் கூட. பட்​டுக்​கோட்டை கல்​யாண சுந்​தரத்​தின் வாழ்க்கை வரலாற்றை எழு​தி​யிருக்​கிறார். அதில் அட்​டைப்​படத்​துக்​குரிய பட்​டுக்​கோட்​டை​யாரின் உரு​வத்தை அவரே ஓவிய​மாக​வும் வரைந்​திருக்​கிறார். அவரது கையெழுத்து அச்சு போன்று அழகாக இருக்​கும். திருக்​குறள் உரை, புற​நானூறு உரை போன்ற பல புத்​தகங்​கள் எழு​தி​யிருக்​கிறார்.

அக்​கால​கட்​டத்​தில் பட்​டிமன்​றங்​களுக்​குப் பேருந்​துகளில்​தான் செல்ல வேண்​டும். குழு​வில் உள்ள அனை​வரை​யும் ஒருங்​கிணைத்​துப் பேருந்​துகளில் அழைத்​துச் சென்​று, பட்​டிமன்​றம் முடிந்து திரும்​ப​வும் பேருந்​துக்​காகக் காத்​திருந்​து, விடியற்​காலை​யில்​தான் மதுரைக்கு வந்து இறங்​கு​வார். எனினும், காலை​யில் தவறாமல் கல்​லூரிப் பணிக்​குச் செல்​வார். அவரோடு பயணித்த அந்​தக் காலங்​கள் எனக்​குச் சிறந்த அனுபவங்​களைத் தந்​தவை. அவரோடு பட்​டிமன்​றங்​களில் பேசிய ஒவ்​வொரு​வருமே தனித்​தன்மை வாய்ந்​தவர்​களாக உருப்​பெற்​றனர்.

அவருட​னான மற்​றொரு நிகழ்​வை​யும் நன்​றியோடு நினைவுகூர்​கிறேன். நான் முதன்​முதலில் எங்​களது ஊருக்கு ஐயா​வைப் பட்​டிமன்​றத்​தில் பேச அழைத்து வந்​திருந்​தேன். நிகழ்ச்சி ஏற்​பாட்​டாளர்​கள் ஐயா உட்பட அனை​வருக்​கும் தொகை​யைக் கொடுத்​தனர்; எனக்கு மட்​டும் கொடுக்​க​வில்​லை. ‘‘அவர் எங்​களூர் பையன்தான், அவருக்கு இன்​னும் நிறைய வாய்ப்​பு​கள் தரு​வோம்’’ என்​றனர். அதற்கு ஐயா, புன்​னகையோடு, “அவர் உங்க ஊரு பையன்​தான், அவருக்கு நிறைய வாய்ப்​பு​கள் கொடுக்​கலாம்; தவறில்​லை. ஆனால் அவர் வாழணும்ல? அதுக்கு வசதி செய்​யணும்ல? எனவே, அவருக்கு வாய்ப்​பு​கள் தரு​வது​போல​வே, முறை​யான பொருளுத​வி​யும் செய்​யுங்​கள்” என்​றார்.

ஊர்க்​காரர்​கள் சற்றே யோசித்​த​போது, ஐயா தயங்​காமல், தனக்​குக் கொடுத்த தொகையி​லிருந்து ஒரு பகு​தியை எடுத்து எனக்​குக் கொடுத்​து, “தம்​பி, வெச்​சுக்​கோங்​க... நல்லா வரு​வீங்​க!” என்று மனதார ஆசீர்​வ​தித்​தார். இன்​று​வரை அந்த ஆசீர்​வாதத்​தைப் பெரு​மகிழ்​வோடு நினைத்​து, என் வாழ்​வில் ஈட்​டும் அனைத்​துச் சம்​பாத்​தி​ய​மும் அவருடைய ஆசீர்​வாதத்​தின் பலனால்​தான் கிடைக்​கிறது என்று நெகிழ்ச்​சி​யோடு நினைத்​துக்​கொள்​கிறேன். பிறர் வாழ வேண்​டும் என்ற பரந்த மனசுக்​குச் சொந்​தக்​காரர் அவர்.

பட்​டிமன்​றத்​தைக் குறிப்​பிட்ட எல்​லைக்​குள் முடங்​கி​யிருந்த இலக்​கிய நிகழ்​வாக வைத்​தி​ராமல், பட்​டிதொட்டி முதற்​கொண்டு உலகம் முழு​வதும் கொண்டு சேர்த்​த​தில் சாலமன் பாப்​பையா அவர்​களின் பங்கு மகத்​தானது. நகைச்​சுவை​யுடன் சிந்​திக்​கத் தூண்​டும் அவரது தனித்​து​வ​மான பேச்​சுப்பாணி, எதிர்​காலத்​தின் பல தலை​முறைப் பேச்​சாளர்​களுக்​குச் சிறந்த வழி​காட்​டி​யாக அமைந்​துள்​ளது.

அவர் மத்​திய, மாநில அரசுகளின் உயரிய விருதுகள் பல பெற்​றிருந்​தா​லும், தன்​னைப் பா​ராட்​டிய சா​தாரண மக்​களின் அன்​பையே மிகப்​பெரிய அங்​கீ​கார​மாகக் கரு​தி​ய​வர். மதம், சா​தி, பொருளா​தார வேறு​பாடு​களைக் கடந்து மனிதர்​கள்​ அனை​வரை​யும்​ சமமாகப்​ பார்க்​க வேண்​டும்​ என்​ற மானுடக்​ கருத்​தை உரக்​கச் சொன்னவர்.

SCROLL FOR NEXT