

பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையாவின் உடலுக்கு அரசு சார்பில் அஞ்சலி செலுத்திய அமைச்சர்கள் நிர்மல் குமார், விஸ்வநாதன், மதார் பதுருதீன் எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர். படம். நா.தங்கரத்தினம்
மதுரை: தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையாவின் உடல், மதுரை தத்தனேரி மின் மயானத்தில் நேற்று கவுரவ அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
மதுரை அரசரடி ஞானஒளிவுபுரத்தைச் சேர்ந்த மில் தொழிலாளி சுந்தரத்தின் மகனாக 1936-ம் ஆண்டு பிப்.22-ம் தேதி பிறந்தவர் சாலமன் பாப்பையா. இவர், உடல்நலக் குறைவால் தனது 90-வது வயதில் நேற்று முன்தினம் காலமானார்.
மதம், சாதி,பொருளாதார வேறுபாடுகளைக் கடந்து அனைவரையும் ஒன்றாக பார்க்க வேண்டும் என்ற கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் பாப்பையா. பேராசிரியராக மாணவர்களின் முன்னேற்றத்துக்கும், தமிழ் மேடை பேச்சுகள், பட்டிமன்றங்கள் வாயிலாக தமிழ் மொழிக்கும், சமூகத்துக்கும் தனது வாழ்நாள் முழுவதும் சேவைகளை செய்துள்ளார்.
அவரது உடல் நேற்று பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. தமிழ் அறிஞர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள், அரசியல் தலைவர்கள், உறவினர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் உவெப் நினைவு தேவாலயத்தில் அவருக்கு நேற்று காலை இறுதி பிரார்த்தனை நடைபெற்றது. அங்கு முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராஜன், துணை மேயர் நாகராஜன் திமுக கவுன்சிலர் ஜெயராம், ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அவரது உடல் இறுதி ஊர்வலமாக தத்தனேரி மின் மயானத்துக்கு கொண்டு வரப்பட்டது. வழிநெடுகிலும் பொதுமக்கள் திரண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். மயானத்தில் அமைச்சர்கள் நிர்மல்குமார், விஸ்வநாதன், மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, காவல் ஆணையர் ராஜேந்திரன், எம்எல்ஏ மதார் பதுருதீன் ஆகியோர் முன்னிலையில் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை எனப்படும் கவுரவ அரசு மரியாதை (துப்பாக்கி குண்டுகள் முழக்கம் இல்லாமல்) செலுத்தப்பட்டது. பின்னர் அவரது உடல் தகனம் நடைபெற்றது.
பட்டிமன்றப் பேச்சாளர்கள் ராஜா, பாரதி பாஸ்கர், பட்டிமன்ற நடுவர் லியோனி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். திண்டுக்கல் லியோனி கூறும்போது “தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை வழங்கிய தமிழக முதல்வர் விஜய்க்கும், அமைச்சர்கள் நிர்மல்குமார், ராஜ்மோகன் ஆகியோருக்கும் தமிழ் அறிஞர்கள், பேச்சாளர்கள் உள்ளிட்டோர் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.