சிறப்புக் கட்டுரைகள்

பேரவைத் தேர்தல் 2026: புதுச்சேரியில் என்ன கணக்கு?

புதுச்சேரியின் முக்கியமான நீண்ட காலக் கோரிக்கை மாநில அந்தஸ்து பெறுவது என்பதை எல்லாக் கட்சிகளுமே எதிரொலிக்கின்றன

டி. கார்த்திக்

தமிழ் பேசும் மக்களை முதன்மையாகக் கொண்ட மத்திய ஆட்சிப் பகுதி என்றாலும் புதுச்சேரிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் அரசியல்ரீதியில் பெரும் வேறுபாடு உண்டு. தமிழ்நாட்டில் மாநிலக் கட்சிகள் ஆதிக்கம் என்றால், புதுச்சேரியில் தேசியக் கட்சிகளுக்கு வரவேற்பு. 2011இல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை இன்றைய முதல்வர் ரங்கசாமி தொடங்கிய பிறகு என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி - காங்கிரஸ் கூட்டணி என்று இருமுனைப் போட்டியைக் கடந்த 15 ஆண்டுகளாகப் புதுச்சேரி கண்டுவருகிறது. இந்த முறை தவெகவும் களம் கண்டிருக்கிறது. புதுச்சேரி தேர்தல் நிலவரம் எப்படி இருக்கிறது?

என்டிஏ கூட்டணி: புதுச்சேரியில் கடந்த 20 ஆண்டுகளாக காங்கிரஸ் கூட்டணியும் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியும் மாறி மாறி ஆட்சிக்கு வந்திருக்கின்றன. இந்த முறையும் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) - காங்கிரஸ் தலைமையிலான ‘இண்டியா’ கூட்டணியும் புதுச்சேரியில் கடும் போட்டியை எதிர்கொள்கின்றன. 2021க்கு முன்புவரை பாஜகவுக்கு இங்கு செல்வாக்கு இருந்ததில்லை.

          

ஆனால், கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் ஐக்கியமான முக்கியத் தலைவர்களால் பாஜக அங்கு சற்று பலம் பெற்றது. என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஐந்து ஆண்டுகள் ஆட்சியை முடித்து மீண்டும் ஒரே கூட்டணியாகத் தேர்தலை எதிர்கொள்கிறது. இக்கூட்டணியில் அதிமுக, லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் புதிதாகத் தொடங்கிய லட்சிய ஜனநாயகக் கட்சியும் (லஜக) இடம்பெற்றுள்ளன.

என்.ஆர்.காங்கிரஸ் 16, பாஜக 10, புதுச்சேரியில் இரண்டு முறை ஆட்சியைப் பிடித்த அதிமுகவுக்கும் புதிதாக உருவான லஜகவுக்கும் தலா இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் புதுச்சேரியில் அதிமுக தன்னுடைய இருப்பை இழந்திருப்பதாக விமர்சனங்கள் கிளம்பியிருக்கின்றன. என்.ஆர்.காங்கிரஸின் விருப்பத்துக்கு மாறாக பாஜகவின் அழுத்தத்தால் கூட்டணியில் லஜக இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

கூட்டணிக் கணக்குகள்: தேர்தலுக்குப் பல மாதங்களுக்கு முன்பிருந்தே இண்டியா கூட்டணிக்குத் தலைமை வகிப்பது திமுகவா, காங்கிரஸா என்கிற கேள்வி எழுந்துவிட்டது. 2021 சட்டமன்றத் தேர்தலில் முதன்மையான எதிர்க்கட்சி அந்தஸ்தை காங்கிரஸ் இழந்துவிட்டது. அந்த இடத்துக்குத் திமுக வந்தது. புதுச்சேரியில் நான்கு முறை ஆட்சியில் இருந்துள்ள திமுக, தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் கூட்டணிக்குத் தலைமை வகிக்க விரும்பியது. புதுச்சேரியில் திமுக ஆட்சி என்கிற முழக்கத்தையும் அக்கட்சி எழுப்பியது. கடந்த 20 ஆண்டுகாலமாகப் புதுச்சேரியில் இருந்த கூட்டணிக் கணக்குக்கு இது எதிர்மாறாக இருந்தது.

இந்த முழக்கம் தொகுதிப் பங்கீட்டிலும் எதிரொலித்தது. வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி நாளான மார்ச் 23 வரை யாருக்கு என்ன தொகுதி என்பதுகூடத் தெரியாமல் இக்கூட்டணியில் சிக்கல் நீடித்தது. இதனால், திமுக போட்டியிடும் 5 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்தியது, ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் 22 தொகுதிகளில் போட்டி என்று தொகுதிப் பங்கீட்டுக்கு மாறாகக் குழப்பம் ஏற்பட்டது. விசிக 4 தொகுதிகளில் போட்டி, சிபிஐ 1, சிபிஎம் 2 தொகுதிகளில் போட்டி எனக் கூட்டணிக் கட்சிகளையே எதிர்த்துக் களம் காணும் அளவுக்குக் கூட்டணியில் குழப்பம் அதிகரித்தது. இது தேர்தல் களத்தில் முந்திச் சென்றிருக்க வேண்டிய காங்கிரஸ் - திமுக கூட்டணி மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தியது என்பதை மறுப்பதற்கில்லை.

தவெகவின் தாக்கம்: தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் அதிக ரசிகர்களைக் கொண்ட விஜய்யின் தவெகவும் களத்தில் இருக்கிறது. ஒரு கட்டத்தில் முதல்வர் ரங்கசாமி தவெகவுடன் கைகோப்பார் என்றும் ஊகிக்கப்பட்டது; அது நடக்கவில்லை. தமிழகத்தில் தனித்து நின்றாலும் புதுச்சேரியில் நேயம் மக்கள் கழகம் என்கிற கட்சியுடன் இணைந்து தவெக தேர்தலை எதிர்கொள்கிறது.

புதுச்சேரியில் தற்போதைய எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்களில் சிலர் இக்கூட்டணியில் களம் காண்கின்றனர். எனவே, தவெகவின் வாக்குப் பிரிப்பு, எந்தக் கூட்டணிக்குச் சாதகமாக அமையும் என்கிற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன.

தேர்தல் களம்: புதுச்சேரியின் முக்கியமான நீண்ட காலக் கோரிக்கை மாநில அந்தஸ்து பெறுவது என்பதை எல்லாக் கட்சிகளுமே எதிரொலிக்கின்றன. புதுச்சேரியில் தனியாகச் சட்டமன்றம் இருந்தாலும், முழுமையான மாநில அந்தஸ்து இல்லாததால், தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர், துணைநிலை ஆளுநருக்குக் கீழாகவே இருக்கும் சூழலே உள்ளது.

கோப்புகள் தாமதம், சட்டங்கள் அமலாக்கம், நிதி சுயாட்சி போன்றவற்றுக்கு இது தடையாக இருப்பதாகப் புகார்கள் உண்டு. ‘இரட்டை இன்ஜின்’ அரசுகள் அமைந்தும், மாநில அந்தஸ்து பெற முடியவில்லை என்கிற குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படுகிறது. இதற்காக எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை என்கிற புகார்களையும் ரங்கசாமி எதிர்கொள்கிறார். மாநில அந்தஸ்துக்காகத் தேர்தலைப் புறக்கணிக்கத் தயார் என்று சட்டமன்றத்தில் ரங்கசாமி முன்பு பேசியிருந்ததும் சுட்டிக்காட்டப்படுகிறது.

எளிமையான, அணுகக்கூடிய முதல்வர் என்பது போன்ற நேர்மறையான அம்சங்கள் ரங்கசாமிக்கு இருந்தாலும், போலி மருந்து ஆலை விவகாரம் போன்ற விவகாரங்கள் அரசின் பலவீனங்களாகக் கருதப்படுகின்றன. ஆனால், இவற்றை முன்வைத்துப் பிரச்சாரத்தில் ஈடுபட முடியாத அளவுக்குக் கூட்டணியை இறுதி செய்வதிலேயே காங்கிரஸும் திமுகவும் நேரத்தைச் செலவிட்டதால், களத்தைத் தங்கள் பக்கம் திருப்புவதில் சுணங்கிவிட்டன.

காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் வருகைக்குப் பிறகுதான் கூட்டணி சூடுபிடித்து உள்ளது. ராகுல், மு.க.ஸ்டாலினின் பிரச்சாரம் உத்வேகம் அளித்துள்ளது. காங்கிரஸ் கட்சி உடைந்தாலும், தலைவர்கள் வெளியேறினாலும்கூட, அக்கட்சிக்கு எனக் குறிப்பிடத்தகுந்த வாக்கு வங்கி இருப்பது இக்கூட்டணிக்கு உதவலாம்.

திட்டங்களும் இலவசங்களும்: வழக்கமாகக் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்யும் ரங்கசாமி, இந்த முறை தங்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் மட்டுமே பெரும்பாலும் நேரத்தைச் செலவிடுகிறார்.

முதல்வர் வேட்பாளரான அவர் வழக்கம்போல் இந்த முறையும் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். தட்டாஞ்சாவடி தொகுதியில் இன்னொரு முதல்வர் வேட்பாளராகக் கருதப்படும் காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கத்தை ரங்கசாமி எதிர்கொள்வது சவாலாகக் கருதப்படுகிறது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களின் தொடர் பிரச்சாரத்தால் பாஜக உற்சாகமடைந்துள்ளது.

புதுச்சேரியில் நூற்பாலைகள், அரசு சார்பு நிறுவனங்கள் தொடர்பான பிரச்சினைகள் கண்டுகொள்ளப்படவில்லை என்கிற ஆதங்கம் உண்டு. விமான நிலையம், மேம்பாலம் கட்டாதது, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இல்லாதது போன்ற பிரச்சினைகளும் உண்டு. சிவப்பு அட்டை ரேஷன் கார்டு உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதாந்திரத் தொகை ரூ.2,500ஆக அதிகரிக்கப்பட்டது உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்களை என்.ஆர்.காங்கிரஸ் பெண்களிடம் கொண்டுசேர்க்க முயல்கிறது.

ரூ.2,500 மதிப்புள்ள மளிகைப் பொருள்களை இலவசமாகத் தருவதாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருக்கிறது. பொங்கல், விநாயகர் சதுர்த்தி எனப் பண்டிகைக் காலங்களில் இரண்டு எரிவாயு சிலிண்டர்கள் இலவசம் என்கிறது பாஜக. இதுபோன்ற அறிவிப்புகள் வெளியிடுவதில் மற்ற கட்சிகள் பின்தங்கியே இருக்கின்றன.

புதுச்சேரி 30 தொகுதிகளைக் கொண்ட மத்திய ஆட்சிப் பகுதி. தமிழகத்தில் வார்டு அளவுக்கு மட்டுமே எல்லைகள் கொண்டதாகத் தொகுதிகள் இருக்கும். எனவே, தனிப்பட்ட முறையில் மக்கள் செல்வாக்கு உள்ளவர்கள், தேர்தல் களத்தில் இறங்கி வேலை பார்த்தால் வெற்றி பெறும் சாத்தியம் உண்டு. யார் பக்கம் புதுச்சேரி மக்கள் சாய்கிறார்கள் என்பது மே 4இல் தெரிந்துவிடும்!

SCROLL FOR NEXT