2026 ஆகஸ்ட் 26 அன்று காலை, நேபாளத்தின் சீன எல்லைப் பகுதியில் உள்ள போட்டேகோஷி, திரிசூலி ஆற்றுப் பள்ளத்தாக்கில் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய வெள்ளம் திடீரெனப் பாய்ந்தது. இதில் ரசுவா, நுவாகோட் மாவட்டங்களின் கிராமங்கள், சாலைகள், பாலங்கள், நீர்மின் நிலையங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இந்த வெள்ளத்தின் விளைவு திபெத்தின் ஜிரோங் பகுதிவரை பரவியது. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்கிறார்கள் எனத் தெரிகிறது.
இந்த வெள்ளத்துக்கான காரணம் இன்னும் முழுமையாக உறுதி செய்யப்படவில்லை. தொடக்கத்தில் இது ஒரு ‘பனிமலை ஏரி வெடிப்பு வெள்ளம்’ (Glacial Lake Outburst Flood, GLOF) என்று செய்திகளில் பரவலாகச் சுட்டிக்காட்டப்பட்டது. செயற்கைக்கோள் தரவுகளும் நில அதிர்வுத் தரவுகளும் மற்றொரு சாத்தியத்தையும் சுட்டிக்காட்டுகின்றன.
அதாவது, மலைச் சரிவில் இருந்து ஒரு பெரிய பனிப்பாறைத் திரள் உடைந்து பள்ளத்தாக்கில் விழுந்திருக்கலாம்; இது நிலச்சரிவையும் அதைத் தொடர்ந்து பெரும் நீர்ப்பெருக்கையும் ஏற்படுத்தியிருக்கலாம். ஏரி ஏதேனும் உடைந்ததா அல்லது பனிப்பாறை வீழ்ச்சியே நேரடியாக வெள்ளத்தை உருவாக்கியதா என்பதெல்லாம் இன்னும் ஆய்வில் உள்ளன. இதற்கான காரணத்தை உறுதிசெய்ய அறிவியலாளர்களுக்குச் சில வாரங்கள் ஆகலாம். எது எப்படியிருந்தாலும், இது பனிமலை சார்ந்த இயற்கை அபாயங்களின் பரந்த வகைமையில் ஒரு பகுதியே.
உயர் மலைப் பகுதிகளில் பனிப்பாறைகள் உருகும்போது, அந்த நீர் பனி அல்லது கற்கள், மண் அடங்கிய இயற்கையான அணை (moraine) ஒன்றின் பின்னால் தேங்கி ஒரு ஏரியாக உருவாகிறது. இது பனிமலை ஏரி எனப்படுகிறது. இந்த இயற்கை அணைகள் ஓர் அமைப்பாகவே நிலையற்றவை. ஏனெனில், அவை உறுதியான பாறையால் அல்ல; தளர்வான பனி, மண் துகள்களால் ஆனவை. இந்த அணை திடீரென உடையும்போது ஏற்படுவதே பனிமலை ஏரி வெடிப்பு வெள்ளம்.
இந்த உடைவைப் பல காரணிகள் தூண்டலாம்: ஏரிக்குள் பனிப்பாறை உடைந்து விழுதல், நிலநடுக்கம், அதிக மழைப்பொழிவு அல்லது காலப்போக்கில் அணையின் சுவர் மெல்ல மெல்ல பலவீனமடைதல். சில நேரம் மேலே உள்ள பனிப்பாறையே பெரிய அளவில் உடைந்து விழுவதால், ஏரி இல்லாமலேயே இதே அளவிலான வெள்ளம் ஏற்படக்கூடும். அணை உடையும்போது, ஏரியில் தேங்கியிருந்த பெரும் அளவு நீர் நிமிடங்களில் இருந்து சில மணி நேரத்தில் வெளியேறுகிறது. இந்த நீர் பள்ளத்தாக்கு வழியே பாயும்போது பாறைகள், மண், மரங்கள், இதர அழிவுப் பொருள்களைத் தன்னுடன் இழுத்துச்செல்கிறது.
இதனால் இது ஒரு சாதாரண வெள்ளத்தைவிட மிக அதிக அழிவாற்றல் கொண்ட ஒரு சேற்று-கற்பாறை ஓட்டமாக (debris flow) மாறுகிறது. குறுகிய இமயமலைப் பள்ளத்தாக்குகளில் இந்த ஓட்டம் மணிக்குப் பல பத்து கி.மீ. வேகத்தில் பயணிக்கக்கூடும். இதனால் கீழே உள்ள ஊர்களுக்கு எச்சரிக்கை விடுக்க மிகக் குறைந்த அவகாசமே கிடைக்கிறது.
அறிவியல்ரீதியாகப் பார்த்தால், அனைத்துப் பனிமலை ஏரிகளும் ஒரே அபாயத்தைக் கொண்டவை அல்ல. ஏரியின் அளவு, அணையின் தடிமன், அமைப்பு, ஏரிக்கு மேலே தொங்கும் பனிப்பாறைகள் அல்லது பாறைச் சரிவுகளின் நிலை ஆகியவற்றை வைத்தே ஆய்வாளர்கள் ஒவ்வொரு ஏரியின் அபாய அளவையும் மதிப்பிடுகின்றனர்.
வெப்பநிலை உயர்வால் நிரந்தர உறைநிலம்கூட (permafrost) உருகத் தொடங்குவதால், முன்பு உறுதியாக இருந்த மலைச்சரிவுகளும் தளர்வடைந்து, ஏரி இல்லாத இடங்களிலும் திடீர் பனிப்பாறை வீழ்ச்சிகள் ஏற்படும் சாத்தியம் அதிகரிக்கிறது. இதனாலேயே பல வல்லுநர்கள், தனிப்பட்ட ஏரிகளை மட்டும் கண்காணிப்பது போதாது; மலைச்சரிவு முழுவதையும் ஒரு முழுமையான அமைப்பாகக் கருதிக் கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
பனிமலை ஏரி வெடிப்பு வெள்ளம் என்பது இமயமலைத் தொடர் முழுவதும் பரவியுள்ள ஒரு பொதுவான இயற்கை நிகழ்வு. நேபாளம், இந்தியா (குறிப்பாக லடாக், இமாசலப் பிரதேசம், சிக்கிம், உத்தராகண்ட் போன்ற பகுதிகள்), பூட்டான், பாகிஸ்தான், திபெத் உள்பட சீனாவின் மேற்குப் பகுதிகள் ஆகிய அனைத்து இமயமலை நாடுகளிலும் இது தொடர்ந்து நிகழ்ந்துவருகிறது.
உலக வெப்பநிலை உயர்வு காரணமாகப் பனிப்பாறைகள் தொடர்ந்து உருகிப் பின்வாங்குவதால், கடந்த சில பத்தாண்டுகளில் இந்தப் பகுதிகளில் புதிய பனிமலை ஏரிகளின் எண்ணிக்கையும் அளவும் கணிசமாக அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
நேபாளத்தில் இப்படியான நிகழ்வுகள் புதிதல்ல. 2024 ஆகஸ்ட் மாதத்தில் எவரெஸ்ட் பகுதியில் உள்ள தாமே கிராமத்துக்கு மேலே இரண்டு பனிமலை ஏரிகள் உடைந்து வீடுகளையும் உள்கட்டமைப்பு வசதிகளையும் சேதப்படுத்தின. 2025 மே மாதத்தில், தொலைதூர டில்காவ் (ஹும்லா) பகுதியில் திடீர் ஏரி வெடிப்பு பாலங்களை அழித்து, கிராமவாசிகள் 32 பேரை இடம்பெயர வைத்தது. அதுவும் மழையே இல்லாத நிலையில் நிகழ்ந்தது. இது, பனிப்பாறை நிலையின்மையே இதற்குக் காரணமாக இருக்கலாம் என்பதைக் காட்டுகிறது.
இமயமலைப் பகுதி புவியியல்ரீதியாகவே இளமையானதும் இயங்கியல்ரீதியாகவே செயலூக்கம் மிக்கதுமான ஒரு மலைத்தொடர். மலைச்சரிவுகள், பனிப்பாறை அசைவுகள், நிலநடுக்கங்கள் ஆகியவை இங்கு இயற்கையான, தொடர்ந்து நிகழும் செயல்முறைகள்.
இவற்றை யாருடைய தவறாகவோ, தடுக்கப்பட வேண்டிய ஏதோ ஒன்றின் தோல்வியாகவோ பார்ப்பதைவிட, இந்த நிலப்பரப்பின் இயல்பான தன்மையாகப் புரிந்துகொள்வதே முக்கியம். அதை உணர்ந்து கொண்டு செயல்பட்டிருக்கிறோமா என்பதே கேள்வி. அதற்கேற்பத் தயார் நிலையை வலுப்படுத்துவதே நடைமுறையில் சாத்தியமான வழி.
தொலைதூர, உயரமான பகுதிகளில் இந்த ஏரிகள் அமைந்திருப்பதால், தொடர்ச்சியாகக் கண்காணிப்பது கடினம். செயற்கைக்கோள் அடிப்படையிலான கண்காணிப்பை விரிவுபடுத்துதல், அபாயகரமான ஏரிகளிலும் பள்ளத்தாக்குகளிலும் நிலத்தடி உணர் கருவிகளை (Underground sensors) நிறுவுதல், உள்ளூர் மக்களையும் அப்பகுதி வழியே செல்லும் பயணிகளையும் விரைவாக எச்சரிக்கக்கூடிய முன்னெச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்துதல் ஆகியவை இமயமலை நாடுகள் அனைத்துக்கும் பொதுவான தேவைகள். பனிப்பாறை உடைந்து விழுவதே நேரடியாக வெள்ளத்தைத் தூண்டும் சூழலில், எச்சரிக்கை விடுப்பதற்கான நேரம் மிகக் குறைவாக இருக்கக்கூடும் என்பதையும் இந்த நிகழ்வு நினைவூட்டுகிறது.
தற்போது நேபாளத்தில் தேடுதல், மீட்புப் பணிகள், காணாமல் போனோரைக் கண்டறியும் பணிகளே முதன்மையானவை. மலைச் சரிவில் என்ன நடந்தது என்பதற்கான முழுமையான அறிவியல் விளக்கமும், இமயமலை முழுவதும் இதுபோன்று இன்னும் எத்தனை ஏரிகள், பனிப்பாறைகள் அபாயத்தில் உள்ளன என்கிற புரிதலும் இனிமேல்தான் படிப்படியாக வெளிவரும்.