

மகாராஷ்டிரத்தில் பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்ட கொண்டைக் கடலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயுவைச் சுவாசித்த இரண்டு சிறுமிகள் (6 வயது, 4 வயது) உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. கொண்டைக்கடலை சேமித்துவைக்கப்பட்ட அறையில் காற்றோட்டம் இல்லாத நிலையில், இரவு முழுவதும் உறங்கியதால் இந்தக் கொடுமை நிகழ்ந்திருக்கிறது. வேதி உரங்களாலும் பூச்சிக்கொல்லிகளாலும் நிகழும் தொடர் மரணங்கள் குறித்துத் தீவிரத்தோடு செயலாற்ற வேண்டிய தருணம் இது.
மத்தியப் பிரதேசத்தில் பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்ட கோதுமை சேமித்து வைக்கப்பட்டிருந்த அறையில் உறங்கிய இரண்டு சிறுமிகள் 2026 ஏப்ரலில் இறந்தனர். கடந்த ஜூன் மாதத்தில் பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்ட நெல்லில் இருந்து வெளியேறிய நச்சுப்புகையைச் சுவாசித்த மும்பையைச் சேர்ந்த இரண்டு வயதுக் குழந்தை இறந்தது. 2019இல் வயலில் பூச்சிக்கொல்லியை அடித்தபோது கேரளத்தைச் சேர்ந்த இரண்டு விவசாயிகள் உயிரிழந்தனர்.
2024இல் பூச்சிக்கொல்லி அடிக்கப்பட்ட வீட்டில் உறங்கிய சென்னை, குன்றத்தூரைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் இறந்தனர். இவை எல்லாமே வேதிப் பூச்சிக்கொல்லிகளை விவசாய நிலத்திலும் விளைபொருள்களிலும் வீடுகளிலும் பயன்படுத்தியதால் நிகழ்ந்த, தவிர்க்கப்பட்டிருக்கக்கூடிய மரணங்கள்.
பசுமைப் புரட்சி தொடங்கப்பட்ட 1960களில் இந்தியாவில் வேதி மூலப்பொருள்கள் கொண்ட பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள், உரங்கள் புழக்கத்துக்கு வந்தன. இவற்றால் ஒரு பக்கம் விளைச்சல் அதிகரித்து இந்தியாவில் பஞ்சம் ஒழிந்தாலும், மறுபக்கம் விவசாயிகளும் மக்களும் வேதிப்பொருள்களின் நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்டனர். கேரள மாநிலத்தில் ‘எத்தில் பாரதியான்’ (ஃபாலிடால்) என்கிற வேதிப்பொருள் கலக்கப்பட்ட கோதுமை மாவில் சமைத்த உணவை உண்டதால் 1958இல் 100 பேர் இறந்தனர். இதையடுத்து, வேதிப்பொருள் கலப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் பூச்சிக்கொல்லிச் சட்டம் 1968இல் இயற்றப்பட்டது.