சிறப்புக் கட்டுரைகள்

ஈவிஎம்: கற்பிதங்களும் நிதர்சனமும் | சொல்... பொருள்... தெளிவு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் பாதுகாப்பு அம்சங்கள்

ஆர்.சி.ஜெயந்தன்

நாடாளுமன்றத் தேர்தல் என்றாலும், சட்டப்பேரவைத் தேர்தல் என்றாலும் இந்திய ஜனநாயகத்தின் மின்னணு இதயமாக விளங்கி வருகிறது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமான ஈவிஎம் (EVM).

கால் நூற்றாண்டுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட ஈவிஎம், கோடிக்கணக்கான மக்கள் வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களிப்பதை எளிமையாக்கியது மட்டுமல்ல; தேர்தல் என்கிற பிரம்மாண்டமான நிகழ்வைத் தேர்தல் ஆணையம் அமைதியாக நடத்தி முடிப்பதற்கான தொழில்நுட்ப வரமாகவே மாறிவிட்டது.

துல்லியமான முடிவுகளை விரைவாக வழங்குவது, தேர்தல் நடத்தும் ஊழியர்களால் தொழில்நுட்பரீதியாக எளிமையாகக் கையாள முடிவது, தேர்தலுக்கான செலவினத்தைப் பாரிய அளவில் கட்டுப்படுத்த முடிவது உள்படப் பல நிலைகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு - மக்கள் ஆகிய இரு தரப்பின் நம்பிக்கையைப் பெற்றுவிட்டன. இருந்தபோதிலும் அவற்றின் மீதான சந்தேகங்களும் விவாதங்களும் ஊகங்களும் ஒவ்வொரு தேர்தலின்போதும் எழுவது வாடிக்கையாகிவிட்டது.

ஏன் ‘ஹேக்’ செய்ய முடியாது?

‘ஈவிஎம்மின் நினைவகத்தை (Memory) தொடர்புகொண்டு வாக்குகளை மாற்றலாம்’ என்பது தொடக்கம் முதலே சொல்லப்பட்டுவரும் ஊகம். ஆனால், ஈவிஎம்கள் அவை கொண்டிருக்கும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில், நாம் அன்றாடம் பயன்படுத்தும் கணினிகள் அல்லது திறன்பேசிகள் போன்றவை அல்ல.

இவற்றில் ‘வைஃபை’, ‘புளூடூத்’ அல்லது வேறு எந்தவோர் இணையத் தொடர்பும் (Internet Connectivity) கிடையாது. தவிர இவை தனித்து இயங்கும் (Stand alone) சாதனங்களாக இருப்பதற்கு, இதில் உள்ள ‘மைக்ரோ கன்ட்ரோலர் சிப்’ ஒரு முக்கியமான காரணம்.

ஏனென்றால் இந்த ‘சிப்’கள் ஒரே ஒருமுறை மட்டுமே நிரலாக்கம் (One Time Programmable) செய்யப்பட்டவை. இவற்றை ‘பாரத் எலக்ட்ரானிக்ஸ்’ (BEL), எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (ECIL) ஆகிய பொதுத் துறை நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இவற்றின் சிப்களில் பதிக்கப்படும் மூல நிரலாக்கம் (Source Code) என்பது தொழிற்சாலையில் ஒருமுறை மட்டுமே ‘பர்ன்’ (Burn) செய்யப்படுகிறது.

இப்படி ‘பர்ன்’ செய்யப்பட்டுவிட்டால் அதன் பின்னர் அதை யாராலும் மாற்றவோ, புதிய நிரல்களை உள்ளிடவோ முடியாது. இணையத் தொடர்பை அவற்றுடன் ஏற்படுத்த முடியாது என்பதால், அவற்றை ‘ஹேக்’ செய்தல் என்கிற பேச்சுக்கே இடமில்லை.

மேலும் வாக்குப்பதிவு முடிந்தவுடன் ‘Close’ என்கிற பொத்தானை வாக்குச்சாவடியின் தலைமை அலுவலர் அழுத்திய அடுத்த நொடியில் இயந்திரம் தனது நினைவகத்தைப் பூட்டிக்கொள்ளும். அதன் பிறகு எந்தவொரு உள்ளீட்டையும் அது ஏற்காது. இதன்பிறகு விதிமுறைகளின்படி இயந்திரம் சீல் வைக்கப்படும். 2013க்குப் பிறகு தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ள ‘எம்3’ வகை (M3 Edition) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஒரு தொகுதியில் 384 வேட்பாளர்கள் வரை போட்டியிட்டாலும் தாங்கும் திறன் கொண்டவை.

இந்த வகை இயந்திரங்களில் இன்னும் கூடுதல் பாதுகாப்பாக ‘டேம்பர் டிடெக் ஷன்’ (Tamper Detection) என்கிற வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். இவற்றைத் திறந்து சிப்பை மாற்ற முயன்றால், அதில் உள்ள இந்த ‘டேம்பரிங்’ வசதி இயந்திரத்தை நிரந்தரமாகச் செயலற்றதாக்கிவிடும்.

‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வாக்குச் சாவடிக்கு வரும் முன்னரே ஒரு கட்சிக்குச் சாதகமாக வாக்குகளைப் பதிவுசெய்து வைக்க முடியும்’ என்பது மற்றொரு பிரபலமான ஊகம். ஆனால், உண்மை வேறாக இருக்கிறது.

வாக்குப்பதிவு தொடங்கும் முன்னர் அந்தத் தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள், வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் ‘மாதிரி வாக்குப்பதிவு’ (Mock Poll) நடத்தப்படுகிறது. அந்தந்த வேட்பாளருக்கான சின்னத்துக்கு எதிரே உள்ள பொத்தானை அழுத்தி வாக்குப் பதிவாவதைப் பார்த்து உறுதிப்படுத்திக்கொள்வார்கள்.

அதன்பின்னர் அந்த வாக்குச் சாவடியின் தலைமை அலுவலர், முகவர்களின் முன்னிலையில் பதிவான வாக்குகளை ‘க்ளியர்’ (Clear) பொத்தானை அழுத்தி, செயல்முறைக்காகப் பதிவு செய்யப்பட்ட வாக்குகளை நீக்கிவிடுவார்.

தேர்தல் புரட்சி

காகித வாக்குச்சீட்டு முறையிலிருந்து மின்னணு முறைக்கு மாறியது இந்தியத் தேர்தல்களில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது என்றால், அது வெறும் புகழ்ச்சி அல்ல. ஏனென்றால் வாக்குச் சீட்டு முறையில் ஒரு பொதுத்தேர்தலுக்குச் சுமார் 10,000 டன் காகிதம் தேவைப்பட்டது. இதற்காக 20 லட்சம் மரங்கள் வெட்டப்படுவது, ஈவிஎம் வருகைக்குப் பின் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

ஒரு ஈவிஎம் இயந்திரத்தின் ஆயுள்காலம் 15 ஆண்டுகள். அச்சிடும் செலவைவிட நீண்டகால அடிப்படையில் சிக்கனமானது. வாக்குச்சீட்டில் முத்திரை குத்தும்போது ஏற்படும் குளறுபடிகளால் லட்சக்கணக்கான வாக்குகள் ‘செல்லாதவை’ என அறிவிக்கப்படும் நிலை ஈவிஎம் வந்தபிறகு இல்லாமல் போனது. அதேபோல் எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாத குடிமக்கள் ‘நோட்டா’வுக்கு வாக்களிக்க வழி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

முடிவுகளை அறிந்துகொள்ள வாக்குச் சீட்டுகளைப் பல நாள்கள் எண்ணுவதும், எண்ணிக்கையில் குளறுபடி வந்தால் மீண்டும் எண்ணுவதும் ஈவிஎம் வருகையால் முடிவுக்கு வந்துவிட்டன. முடிவு தெரியாமல் அரசியல் கட்சிகள், தொண்டர்கள், வாக்காளர்கள் கொண்டிருந்த பதற்றத்துக்கு இப்போது வேலையில்லாமல் போய்விட்டது.

ஏனென்றால் ஒரு கால்குலேட்டரைப் போல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வாக்குகளை எண்ணி முடிப்பது சில மணி நேரங்களில் முடிந்துவிடுகிறது. ஒவ்வொரு வாக்காளரும் தாம் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்துகொள்ளும் நம்பகத்தன்மையின் உறுதியான சாட்சியமாக விவிபேட் (VVPAT) விளங்குகிறது. இதில் இதுவரை எந்தத் தவறும் கண்டறியப்படவில்லை.

நம்பிக்கைச் சின்னம்

தொழில்நுட்பம் வளர வளரச் சந்தேகங்களும் ஊகங்களும் எழுவது இயற்கை. தொழில்நுட்பத்தைத் தாண்டி, மனிதத் தலையீடுகளைத் தவிர்க்க ஈவிஎம்மில் பல கட்டச் சோதனைகள் உள்ளன. குறிப்பாக, சீல் வைக்கும் முறையை (Sealing) கூறலாம்.

வாக்குப்பதிவு முடிந்தவுடன் இயந்திரத்தின் ‘ரிசல்ட்’ (Result) பகுதி, ‘கிளியர்’ (Clear) பொத்தான் இருக்கும் பகுதி ஆகியன பல அடுக்கு காகித சீல்கள் மூலம் வேட்பாளர்களின் அதிகாரபூர்வ வாக்குச் சாவடி முகவர்கள் முன்னிலையிலேயே பூட்டப்படுகின்றன. அந்த சீலை உடைக்காமல் யாரும் இயந்திரத்தைத் தொட முடியாது.

வாக்குப்பதிவு முடிந்து இயந்திரம் சீல் வைக்கப்படுவதற்கு முன்னர், அந்த இயந்திரத்தில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கையை வாக்குச் சாவடியின் தேர்தல் அலுவலர் அங்கிருக்கும் அனைத்து வாக்குச்சாவடி முகவர்களுக்கும் எழுத்துபூர்வமாகத் தருவார்.

வாக்கு எண்ணிக்கையின்போது, இயந்திரத்தின் திரையைக் காட்டும்போது அதில் அலுவலர் எழுத்து பூர்வமாகக் கொடுத்த அதே எண்ணிக்கை வருகிறதா என்பதை வாக்குச்சாவடி முகவர்கள் உன்னிப்பாகச் சரிபார்ப்பார்கள். எனவே, எண்ணிக்கையைக் குறைக்கவோ, கூட்டவோ, அழிக்கவோ முடியாது. இப்படி ஈவிஎம்மின் பாதுகாப்பு, துல்லியத்துக்கான ஏற்பாடுகளை நீண்ட பட்டியலாக எழுதிச் செல்லலாம்.

நம்பிக்கையே ஜனநாயகத்தின் அடிப்படை; அந்த நம்பிக்கையைத் தொழில்நுட்பரீதியாக ஈவிஎம் உறுதிசெய்கிறது. கோடிக்கணக்கான மக்கள் வழங்கிய தீர்ப்பைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் ஒரு வெற்றிகரமான மின்னணுத் தொழில்நுட்பமாக ஈவிஎம் நீடிக்கிறது.

SCROLL FOR NEXT