அண்மையில் வெளியான 16ஆவது நிதி ஆணையத்தின் அறிக்கை, பல புதிய அணுகுமுறைகளை முன்வைத்துள்ளது. குறிப்பாக, நகரமயமாதலை (Urbanisation) வேகப்படுத்தும் நோக்கத்துடன் சில ஊக்குவிப்புக் கருத்துகள் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. நகரமயமாதல் குறித்த அளவுகடந்த அக்கறை, சமநிலையற்ற வளர்ச்சிக்கான பாதையாக மாறிவிடுமோ என்கிற கேள்விக்கு வழிவகுத்திருக்கிறது.
விரிவடைந்த பணிகள்
அரசமைப்புச் சட்டக்கூறு 280இன் கீழ், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை குடியரசுத் தலைவரால் அமைக்கப்படும் நிதி ஆணையம், மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலான நிதிப் பகிர்வைத் தீர்மானிக்கும் மிக முக்கிய அமைப்பு.
1993இல் மேற்கொள்ளப்பட்ட 73ஆவது, 74ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தங்களுக்குப் பிறகு, இந்த ஆணையத்தின் பங்கு கணிசமாக விரிவடைந்தது. மாநில அரசுகளுக்கு மட்டுமன்றி, ஊரக உள்ளாட்சிகள் (Rural Local Governments), நகர்ப்புற உள்ளாட்சிகள் (Urban Local Governments) ஆகியவற்றுக்கும் எவ்வாறு நிதிப் பகிர்வு செய்ய வேண்டும் எனப் பரிந்துரைக்கும் பொறுப்பு இந்த அமைப்புக்கு உண்டு.
அந்தந்த மாநில நிதி ஆணையங்களின் (State finance commission) பரிந்துரைகளின் அடிப்படையில் ஊரக உள்ளாட்சிகளுக்கும் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கும் அவற்றின் வளங்களை நிரப்ப ஒரு மாநிலத்தின் ஒருங்கிணைந்த நிதியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன.
நகரமயமாதலுக்கு முக்கியத்துவம்
ஒவ்வொரு நிதி ஆணையமும் பரிந்துரைகளுக்கு முன்னால் தனது அணுகுமுறையை (Approach) விளக்கும். 16ஆவது நிதி ஆணையம் முதன்முறையாக நகரமயமாதலைத் தனித்துவமாகக் குறிப்பிட்டுள்ளது. ‘வேகமான நகரமயமாதல் பொருளாதார வளர்ச்சிக்குத் தூண்டுகோலாகச் செயல்படும்’ என ஆணையம் கருதுகிறது.
ஆனால், இத்தகைய அணுகுமுறை இந்தியாவின் சமூக-அரசியல் சூழல்களை உள்ளடக்கிய ஒரு பரந்துபட்ட பார்வையைத் தந்துள்ளதா என்கிற கேள்வி எழுகிறது.
நகர வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியுடன் மட்டுமே தொடர்புடையது அல்ல; அது சமூகச் சமத்துவம், மக்கள் பங்கேற்பு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, வாழ்வாதாரப் பாதுகாப்பு ஆகிய பல பரிமாணங்களைக் கொண்டது.
இவற்றைத் தவிர்த்துவிட்டு நகரமயமாதலை மட்டும் முதன்மையான இயக்கும் காரணியாகப் பார்ப்பது, உள்ளடக்கிய வளர்ச்சி (inclusive development) நோக்கத்துக்கு முழுமையாகப் பொருந்தாது.
தரவின் தரம்
10ஆவது நிதி ஆணையம் முதல் தற்போதுவரை, நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான நிதிப் பங்கு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. ஆனால், இந்த உயர்வுக்கு அடிப்படையாக இருக்கும் தரவுகளின் தரம் என்ன? அதே 16ஆவது நிதி ஆணைய அறிக்கையிலேயே, உள்ளாட்சிகளுக்கான நிதித் தரவுகளின் தரம் தொடர்பான சிக்கல்கள் இறுதிவரை நீடித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தரவின் தரம் உறுதி செய்யப்படாமல் நகர்ப்புற உள்ளாட்சிகளின் பங்கைத் தொடர்ந்து அதிகரிப்பது, திட்டமிடலிலும் நிதி ஒதுக்கீட்டிலும் பெரும் சிக்கல்களை உருவாக்கலாம்.
14ஆவது, 15ஆவது நிதி ஆணையங்களில் இல்லாத ‘Urbanisation Premium’ என்கிற புதிய கருத்துருவாக்கம் 16ஆவது ஆணையத்தில் வலியுறுத்தப்படுகிறது.
நகரமயமாதலை மாநிலங்கள் வேகப்படுத்தினால் கூடுதல் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்பதே இதன் சாரம். நிதிச் சமநிலையைப் பேண வேண்டிய ஓர் ஆணையம், நகரமயமாதலை முன்னெடுக்கும் ஒரு கொள்கை அமைப்பைப் போலச் செயல்படுவது போன்ற தோற்றத்தையே இது ஏற்படுத்துகிறது.
அதிகாரப் பரவல் எங்கே?
நகரங்களுக்கு அருகில் உள்ள கிராமங்களை (peri-urban villages) நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கும் மாற்றுக் கொள்கையை (Rural-urban transition policy) இந்த ஆணையம் பரிந்துரைக்கிறது. ஆனால், இதில் கிராம சபையின் அதிகாரம் குறித்த தெளிவான குறிப்புகள் இல்லை.
தமிழ்நாட்டில் நகராட்சிகளுடன் இணைக்கப்படுவதை எதிர்த்துப் பல கிராம ஊராட்சிகள் கிராம சபைத் தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளன; போராட்டங்களும் நடத்தப்படுகின்றன. இது அவர்களின் அரசமைப்புச் சட்ட உரிமையாகும்.
ஆனால் 16ஆவது நிதி ஆணையம், கிராம சபையைப் பற்றிப் பேசாமல் ‘பொது ஆலோசனை’ (Public Consultation) பற்றிக் குறிப்பிடுவது, கிராம ஊராட்சிகளின் அதிகாரத்தைக் குறைக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.
73ஆவது, 74ஆவது அரசமைப்புச் சட்டத்திருத்தங்கள், உள்ளூர்ப் பொருளாதார வளர்ச்சி, சமூக நீதி சார்ந்த திட்டங்களை உள்ளாட்சிகள் வகுக்கும் என்று கூறின. ஆனால் 16ஆவது நிதி ஆணைய அறிக்கையில் இந்த இரண்டு முக்கிய அம்சங்களும் இடம்பெறவில்லை.
14ஆவது, 15ஆவது நிதி ஆணைய அறிக்கைகளில் உள்ளாட்சிகள் குறித்து ‘Local Governments’ என்ற தலைப்பில் தனி அத்தியாயம் இருந்தது. ஆனால் 16ஆவது நிதி ஆணைய அறிக்கையில் அது ‘Local Bodies’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மொழி மாற்றம் சிறியதாகத் தோன்றினாலும், உள்ளாட்சிகளை ஒரு நிர்வாக அமைப்பாக மட்டுமே பார்க்கும் போக்கை இது பிரதிபலிக்கிறது. உள்ளாட்சிகள் என்பவை வெறும் அமைப்புகள் அல்ல; அவை அரசமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட மூன்றாம் நிலை அரசாங்கம். 14ஆவது நிதி ஆணையம் இதைச் சுட்டிக்காட்டுவது குறிப்பிடத்தக்கது.
பல மாநிலங்களில் உள்ளாட்சித் தேர்தல்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை உரிய நேரத்தில் நடத்தப்படாதது ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. ஆனால், 16ஆவது நிதி ஆணைய அறிக்கையில் அதைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.
வழங்கப்படும் நிதியில் (tied and untied grants) ஊரக உள்ளாட்சிகள் எந்தெந்த வேலைகளைச் செய்யலாம் என்பதைக் கிராம சபை தீர்மானிக்கும் என்று 16ஆவது நிதி ஆணையம் சொல்கிறது.
கிராம வளர்ச்சிக்குத் தேவையான வேலைகளில் மக்கள் பங்கேற்பை உறுதிசெய்துள்ளது. ஆனால், நகர்ப்புற உள்ளாட்சிகளில் மக்களின் பங்கேற்பைப் பற்றி எதுவும் சொல்லவில்லை.
நகர்ப்புற உள்ளாட்சிகளில் மக்கள் பங்கேற்பை உறுதிசெய்யும் Area Sabha போன்ற அமைப்புகள் குறித்துக் குறிப்பிடத்தக்க விவாதமும் இல்லை. தமிழ்நாட்டில் உள்ள இது போன்ற அமைப்புகளை வலுப்படுத்துவது நகர்ப்புற உள்ளாட்சி ஜனநாயகத்தை மேம்படுத்த உதவும்.
நகர–கிராம சமநிலையின் அவசியம்?
நகரமயமாதலை ஊக்குவிப்பது என்றால் அது நகரங்களின் நிர்வாகத் திறனையும் சேவை வழங்கும் திறனையும் வலுப்படுத்துவதோடு தொடர்புடையதா என்பது இன்னொரு கேள்வி.
இந்தியாவின் பல நகரங்களில் குடிநீர், கழிவுநீர் மேலாண்மை, குடியிருப்பு வசதி, போக்குவரத்து போன்ற அடிப்படைச் சேவைகளில் ஏற்கெனவே பல்வேறு சிக்கல்கள் நிலவுகின்றன.
இந்த நிலையில், உள்ளாட்சி நிர்வாக அமைப்புகளின் திறனை அதிகரிக்காமல் நகர்ப்புற எல்லைகளை விரிவுபடுத்துவது, புதிய பகுதிகளை நகராட்சிகளுடன் இணைப்பது ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டால் அது நகர்ப்புற நிர்வாகத்தை மேலும் சிக்கலாக்கலாம்.
அதேபோல், நகரமயமாதலை வளர்ச்சியின் ஒரே வழியாகப் பார்க்கும் அணுகுமுறையால், கிராமப்புற வளர்ச்சி இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படும் அபாயமும் உள்ளது. இந்தியாவின் சமூக அமைப்பு பெரும்பாலும் கிராமங்களை மையமாகக் கொண்டதுதான்.
கிராமப்புறங்களில் உள்ள உள்ளாட்சிகள் வலுப்பெறாமல், அவற்றின் பொருளாதார வளர்ச்சி, சமூக வளர்ச்சி உறுதி செய்யப்படாமல் நகரமயமாதலை மட்டும் ஊக்குவிப்பது சமநிலையற்ற வளர்ச்சியை உருவாக்கும். நகரமயமாதலை ஊக்குவிப்பது அவசியம்தான்.
ஆனால் அது கிராம உள்ளாட்சிகளின் அதிகாரத்தையும் சமூக நீதி நோக்கத்தையும் மக்கள் பங்கேற்பையும் பாதிக்கக் கூடாது. எதிர்கால நிதி ஆணையங்கள் நகர-கிராம சமநிலையை உறுதிசெய்யும் ஒருங்கிணைந்த பார்வையை முன்னிறுத்த வேண்டும். அதுவே கூட்டாட்சித் தத்துவத்தையும் உள்ளாட்சி ஜனநாயகத்தையும் வலுப்படுத்தும்.
- தொடர்புக்கு: m.gurusaravanan@gmail.com