உலக அளவில் பாலின இடைவெளியைக் குறைக்க 120 ஆண்டுகள் ஆகும் என உலகப் பொருளாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்காக 2006 முதல் பாலின இடைவெளி குறித்துக் கண்காணிக்கப்பட்டு வருவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. உலகப் பாலின இடைவெளி அறிக்கையின் 20ஆவது பதிப்பில் பாலினச் சமத்துவம் 69.2 சதவீதமாக உள்ளது.
100 சதவீதம் இருந்தால்தான் முழுச் சமநிலையை அடைந்துவிட்டோம் என்று பொருள். தற்போது எட்டியுள்ள அளவு கடந்த ஆண்டைவிட 0.4 சதவீதம் அதிகம். தொடர்ந்து 17ஆவது ஆண்டாக, குறைவான பாலின இடைவெளி (93 சதவீதம்) கொண்ட நாடாக முதலிடத்தில் ஐஸ்லாந்து உள்ளது.
கடந்த ஆண்டைவிட இந்தியா சிறிதளவு முன்னேறியுள்ளது. ஆனால், உலக அளவில் அது வகித்துவரும் 131ஆவது இடத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. மத்திய ஆப்ரிக்க நாடான சாட் (Chad) தரவரிசைப் பட்டியலில் கீழே உள்ளது. இதனுடன் ஈரான், பாகிஸ்தான் ஆகியவை கடைசி மூன்று இடங்களில் உள்ளன.
பாலின இடைவெளிக் குறியீடு என்றால்...
கடந்த இரண்டு தசாப்தங்களாக உலகப் பாலின இடைவெளிக் குறியீட்டின் அளவுகோலானது, பொருளாதாரப் பங்களிப்பு - வாய்ப்புகள், கல்வி நிலை, ஆரோக்கியம் - உயிர்வாழ்தல், அரசியல் முன்னேற்றம் ஆகிய நான்கு பரிமாணங்களில் ஏற்பட்ட வளர்ச்சியின் அடிப்படையில் அளவிடப்பட்டது.
2006ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவரும் 97 நாடுகளின் எண்ணிக்கை, தற்போது 145 நாடுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் நீண்ட காலப் பாலினச் சமநிலை குறித்துக் கணக்கிட முடிகிறது.
உலக அளவிலான பாலின இடைவெளிக் குறியீடு 0 - 1 என்கிற அளவீட்டால் அளக்கப்படுகிறது. இதற்கு அளிக்கப்படும் மதிப்பெண்கள் எவ்வளவு தூரம் இடைவெளி குறைக்கப்பட்டுள்ளது என்பதை விளக்குகிறது.
நாடுகளுக்கு இடையேயான ஒப்பீட்டில் பலம் - பலவீனம் குறித்துத் தெரிந்துகொள்ள முடிகிறது. பொருளாதாரத்தின் அடிப்படையில் ஒப்பிட்டால் பாலின இடைவெளியைக் குறைக்கச் சிறந்த கொள்கையை அடையாளம் காண முடியும்.
சாதித்தவர்கள்
17ஆவது ஆண்டாக 93 சதவீத இடைவெளியைக் குறைத்து, தொடர்ந்து ஐஸ்லாந்து முன்னிலையில் உள்ளது. மேலும், 90 சதவீதத்துக்கு மேல் இடைவெளியைக் குறைத்த நாடு என்கிற நிலையை எட்டிய ஒரே நாடாகவும் உள்ளது.
பின்லாந்து (87.2 சதவீதம்), நார்வே (85.7 சதவீதம்) ஆகிய நாடுகள் மூன்றாவது ஆண்டாகத் தலா இரண்டு / மூன்றாவது இடங்களில் உள்ளன. நமீபியா (84.5 சதவீதம்), நான்காவது இடத்தில் உள்ளது.
தொடர்ந்து இங்கிலாந்து (84.2 சதவீதம்), நியூசிலாந்து (82.8 சதவீதம்), ஸ்வீடன் (82.3 சதவீதம்), ஆஸ்திரேலியா (81.9 சதவீதம்), ஜெர்மனி (81.7 சதவீதம்), அயர்லாந்து (81.4 சதவீதம்) ஆகிய நாடுகள் உள்ளன.
ஆஸ்திரேலியா முதல் முறையாக முதல் 10 இடத்துக்குள் வந்துள்ளது. 2006 முதலே முதல் 4 இடங்களில் ஐஸ்லாந்து, பின்லாந்து, நார்வே, ஸ்வீடன் ஆகியவை உள்ளன.
இந்த ஆண்டு தரவரிசையில் முன்னேறியுள்ள நாடுகளில் கென்யா (65ஆவது இடம், [33 இடங்கள் முன்னேறியுள்ளது]), கானா (56ஆவது இடம், [32 இடங்கள் முன்னேறியுள்ளது]), கவுதமாலா (50ஆவது இடம், [31 இடங்கள் முன்னேறியுள்ளது]), அங்கோலா (87ஆவது இடம் [30 இடங்கள் முன்னேறியுள்ளது]), செக் குடியரசு (77ஆவது இடம் [25 இடங்கள் முன்னேறியுள்ளது]) ஆகியன இடம்பெற்றுள்ளன.
இந்த ஆண்டுக் குறியீட்டில் உள்ள முக்கிய விவரங்கள்:
2006ஆம் ஆண்டு முதல் கணக்கிடப்பட்டுவரும் 97 நாடுகளில், இடைவெளி 5.2 சதவீதம் குறைக்கப்பட்டு, இதுவரை பதிவானதிலேயே அதிக அளவான 69.4 சதவீதம் என்பதை எட்டியுள்ளது. கரோனா பெருந்தொற்றுக்கு முன்னர், பாலின இடைவெளியைக் குறைப்பதில் முன்னேற்றம் உச்சத்தை அடைந்திருந்தது.
அந்தக் காலத்தில் பின்னடைவுகள் அதிகரிப்பதற்கு முன்னர், 76 சதவீத நாடுகள் ஆதாயத்தை அடைந்திருந்தன. ஆரோக்கியம் - உயிர் வாழ்தல் (96.2 சதவீதம்), கல்வி நிலை (96.9 சதவீதம்) ஆகியவற்றில் இடைவெளி குறைவாக உள்ளது.
பொருளாதாரப் பங்கேற்பு - வாய்ப்புகள் (61.7 சதவீதம்), அரசியல் முன்னேற்றம் (22.1 சதவீதம்) ஆகியவை பாலின இடைவெளி அதிகம் உள்ள அம்சங்களாக உள்ளன.
கடந்த 20 ஆண்டுகளில் அரசியல் முன்னேற்றம் அதிகரித்துள்ளது. இதுவரை கண்காணிக்கப்பட்ட அனைத்து நாடுகளிலும் கிட்டத்தட்ட 8 சதவீதம் உயர்ந்துள்ளது. 2006இல் 8.1 ஆணுக்கு ஒரு பெண் அமைச்சர் இருந்தார்.
தற்போது 4.3 ஆணுக்கு ஒரு பெண் அமைச்சர் இருக்கிறார். நாடாளுமன்றங்களில் 5.6 ஆணுக்கு ஒரு பெண் என்கிற நிலை மாறி மூன்று ஆண்களுக்கு ஒரு பெண் என உள்ளது.
62 நாடுகளில் 2024ஆம் ஆண்டு முதல் பெண்களின் பங்கு உயர்நிலை நிர்வாகப் பதவிகளில் சராசரியாக 30 சதவீதம் அதிகரித்து வருகிறது. 2015இல் பணிக்குச் செல்லும் பெண்களின் அளவு 39.9 சதவீதத்தில் இருந்து 2026ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 41.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அதே காலக்கட்டத்தில் தலைமைப் பணிகளில் பெண்களின் பங்கு 26.7 சதவீதத்தில் இருந்து 29.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேநேரம், முதுநிலைப் பதவிகளில் (Seniority) பெண்களின் பிரதிநிதித்துவம் குறைந்துவிடுகிறது. 2026இல் சாதாரண நிலை முதல் உயரதிகாரி வரை (46 சதவீதத்தில் இருந்து 23 சதவீதமாக) பாதியாகக் குறைந்துள்ளது.