பிரான்ஸ், பெல்ஜியம், ஸ்வீடன், அயர்லாந்து, நெதர்லாந்து முதலான ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல்பொருள் அங்காடிகள் மீது சைபர் தாக்குதல்கள் நடத்தப்படுவது அண்மையில் பரபரப்புக்கு உள்ளாகியுள்ளது.
அங்காடிகளின் குளிர்பதனப் பெட்டிகளில் உறைந்த நிலையில் வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பண்டங்களைச் சிதைப்பதே இந்தத் தாக்குதலின் நோக்கம்.
தொலைதூரத்தில் இருந்தபடியே தொழில்நுட்பத்தின் துணை கொண்டு இணைய ஊடுருவல்காரர்கள் (hackers) உணவுப் பண்டங்களைக் குறிவைத்துத் தாக்குதலை நடத்துகின்றனர். உறைகலன்களைக் கட்டுப்படுத்தி சைபர் தாக்குதல் நடத்தப்படுவது எப்படி?
கட்டுப்பாட்டு இயந்திர ரகசியம்
உறைந்த நிலையில் உணவுப் பண்டங்களை விற்பனை செய்யும் பல்பொருள் அங்காடிகள் அனைத்திலும் குளிர்பதனப் பெட்டி, உறைகலன் (Freezer) முதலான இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
தவிர, பெரிய கடைகளில் பொருத்தப்பட்டுள்ள ஏசி, அபாய அறிவிப்புக்கான அலாரம் முதலானவற்றை இயக்க மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு இயந்திரங்கள் வேறொரு பகுதியில் நிர்மாணிக்கப்படுகின்றன.
தொழில்நுட்ப வல்லுநர்கள் ஒவ்வொரு கடையையும் நேரில் பார்வையிடாமல் தொழில்நுட்ப இயந்திரங்களின் செயல்பாட்டைக் கண்காணிக்கவும் பராமரிக்கவும் இந்தக் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் உதவுகின்றன.
ஆகவே, கட்டுப்பாட்டு இயந்திரங்களைக் கையகப்படுத்துவதன் வழியாக ஒட்டுமொத்த உணவு அங்காடிகளின் தட்பவெப்ப நிலை, உணவு பதப்படுத்தும் போக்கைக் கட்டுப்படுத்த முடியும்.
இத்தகைய காரியத்தை டான்ஃபோஸ், கோப்லேண்ட் / டிக்செல் (Danfoss and Copeland / Dixell) ஆகிய இரண்டு நிறுவனங்கள் வடிவமைத்த - இணையத்துடன் இணைக்கப்பட்ட குளிர்பதனப் பெட்டிகள் மீது இணைய ஊடுருவல்காரர்கள் செய்துவருவதாக பிரான்ஸ் நாட்டின் சைபர் பாதுகாப்பு நிலையமான CERT-FR அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
காலாவதியாகும் ஆபத்து
பொதுவாக, குளிர்பதனப் பெட்டிகளில், ‘டீஃப்ராஸ்ட் மோடு’ (defrost mode) இருக்கும். உறைகலத்துக்குள் இறுகிப்போயிருக்கும் பனிக்கட்டிகளை உருக்கி அகற்ற இது உதவும்.
சைபர் தாக்குதல் நடத்துபவர்கள் பல்பொருள் அங்காடிகளில் உள்ள குளிர்பதனப் பெட்டிகளின் உறைகலத்துக்குள் இருக்கும் ‘டீஃப்ராஸ்ட் மோடை’ இயக்கிப் பனிக்கட்டிகள் உருகும்படி செய்துவிட்டனர். இதனால் குளிரூட்டப்பட்ட நிலையில் பாதுகாக்கப்பட வேண்டிய உணவுப் பண்டங்கள் கெட்டுப்போகத் தொடங்கின.
சொல்லப்போனால், கடந்த அக்டோபர் மாதத்திலேயே பிரான்ஸ் நாட்டில் மிகப்பெரிய குளிர்பதனத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் நூற்றுக்கணக்கான கடைகள் பாதிக்கப்பட்டு, அங்கு சேமிப்பில் இருந்த உணவுப் பண்டங்கள் வீணடிக்கப்பட்டன.
அக்டோபர் 12, 16 தேதிகளில் அந்நாட்டு சைபர் பாதுகாப்பு நிலையம் இது தொடர்பான எச்சரிக்கையை விடுத்தது. இதற்கிடையில் டான்ஃபோஸ், கோப்லேண்ட்/டிக்செல் நிறுவனங்கள் முந்தைய காலத்தில் விற்பனை செய்த கட்டுப்பாட்டு இயந்திரங்கள் காலாவதியாகும் நிலையை எட்டிவிட்டன என்பதைப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டன.
தாங்கள் உற்பத்திசெய்த பழைய மாதிரிக் கட்டுப்பாட்டு இயந்திரத்தைப் பயன்படுத்திவரும் வாடிக்கையாளர்கள், இணையத்துடனான அவற்றின் இணைப்பைத் துண்டிக்கும்படி பொது அறிவிப்பு வெளியிட்டன. புதிய கட்டுப்பாட்டு இயந்திரத்தின் விவரங்களையும் இணையத்தில் பகிர்ந்துகொள்ள வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டன.
ஆனாலும், பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தபாடில்லை. ஏனெனில், இடைப்பட்ட நாள்களில் பழுதுபட்ட உறைகலத்தில் குளிரூட்டப்படாமல் கிடக்கும் பல உணவுப் பண்டங்கள் கெட்டுப்போகச் சாத்தியம் இருக்கிறது.
இப்போது, குளிர்பதனப் பெட்டியை மீண்டும் முழுவீச்சில் இயக்கினாலும், ஏற்கெனவே சேமிப்பில் இருந்த உணவுப் பொருள்கள் பாதுகாப்பானவையா என்பது கேள்விக்குறியே! இந்தத் தருணத்தில் அமெரிக்க உணவு, மருந்து நிர்வாக அமைப்பின் வழிகாட்டுதல் கவனிக்கத்தக்கது.
பதப்படுத்தப்பட்ட உணவு உட்கொள்ளத் தகுந்ததா என்பதைத் தோற்றம், மணத்தை மட்டும் வைத்து முடிவுசெய்ய முடியாது என அதில் சுட்டிக்காட்டப்
பட்டுள்ளது. பனிக்கட்டிகளால் சூழப்பட்டு உறைந்த நிலையில் இருக்கும் உணவை மட்டுமே உறைகலனில் நம்பிச் சேமிக்கலாம்.
முறையாகக் குளிரூட்டப்படாத உணவைப் பிற்பாடு நன்றாகச் சமைத்தாலும் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை. அதைச் சாப்பிடுவதால் உடல்நலனுக்குக் கேடு விளையும் அபாயம் உள்ளது என எச்சரித்துள்ளது.
மின்சாரம், நீர் மீதான தாக்குதல்
நிஜ உலக விஷயங்கள் மீது சைபர் தாக்குதல்கள் நடத்தப்படுவது இது முதல் முறை அல்ல. 2015 டிசம்பர் 23இல் உக்ரைன் நாட்டின் மின்விநியோக நிறுவனங்களை இணைய ஊடுருவல்காரர்கள் தங்களின் கட்டுப்பாட்டில் எடுத்தனர். இதனால் உக்ரைனில் ஒன்றிலிருந்து ஆறு மணி நேரம்வரை மின்தடை ஏற்பட்டு, 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர்.
மின்வெட்டைச் சரிசெய்ய உள்நாட்டு மின்உற்பத்தி நிறுவனங்கள் முயன்றபோது, அதற்கும் இணைய ஊடுருவல்காரர்கள் இடையூறு விளைவித்தனர்.
பின்னர் 2023 நவம்பரில், அமெரிக்காவின் நகராட்சி நீர் விநியோகத்தை இணைய ஊடுருவல்காரர்கள் கட்டுப்படுத்தியதாக அமெரிக்க சைபர் பாதுகாப்பு, கட்டமைப்புப் பாதுகாப்பு முகமை குற்றம்சாட்டியது.
டிஜிட்டல் தொடர்புகளைத் துண்டித்து, மனிதர்களால் நேரடியாக இயக்கப்படும் முறையைப் பின்பற்றியதன் வழியாகத்தான் சூழலை அதிகாரிகள் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்தியா கவனம்
டிஜிட்டல்மயமாதலில் பெரும் முனைப்புக் காட்டிவரும் இந்தியாவுக்கும் இந்த விவகாரம் ஓர் அபாயச் சங்கு. ஏற்கெனவே, 2022 நவம்பரில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் ஐந்து கணினி சர்வர்கள் மீது சைபர் தாக்குதல் நிகழ்த்தப்பட்ட சம்பவம் இங்கு நினைவுகூரத்தக்கது. எய்ம்ஸ் மருத்துவமனையின் மின் விண்ணப்ப சேவை இரண்டு வார காலம் முடங்கியது.
இந்தியாவின் உணவு வர்த்தகத்தில் உறைநிலையில் பதப்படுத்தப்படும் உணவுச் சேமிப்பு, அத்தகைய உணவுப் பொருள்கள் ஓரிடத்திலிருந்து வேறோர் இடத்துக்கு எடுத்துச் செல்லப்படுதல், அவற்றின் விற்பனை ஆகியவை சங்கிலிபோல் பின்னிப்பிணைந்து இயங்குகின்றன.
இந்திய உணவுப் பாதுகாப்பு, தரப்படுத்துதல் ஆணையம் தரும் தகவலின்படி உறைந்த உணவுப் பண்டங்கள் மைனஸ் 18 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் கீழே கையாளப்படுவது அவசியம்.
ஆகையால், கடைகளிலும் பல்பொருள் அங்காடிகளிலும் உள்ள குளிர்பதனக் கருவிகளின் டிஜிட்டல் பலகையில் தென்படும் தட்பவெப்பத்தில்தான் உள்ளிருக்கும் பண்டங்கள் உண்மையாகவே சேமிக்கப்படுகின்றனவா என்பதற்கு உத்தரவாதம் வேண்டும்.
முக்கியமாக, உணவைக் குளிரூட்டப் பயன்படுத்தும் இயந்திரங்களை இணையத் தொடர்பிலிருந்து துண்டிக்கும்படி பிரான்ஸ் சைபர் பாதுகாப்பு நிலையம் அறிவுறுத்துகிறது.
இது சாத்தியமில்லை எனக் கருதினால், குறைந்தபட்சம் கட்டுப்பாட்டு இயந்திரங்களின் கடவுச்சொல்லை மாற்றுவது, மென்பொருள் கருவியின் உள்ளமைவு (Configuration) சரியாக உள்ளதா எனச் சோதித்தல், பழுதான இயந்திரங்களை மாற்றுவது போன்ற காரியங்களை இனி கவனத்துடன் உணவு விற்பனையாளர்கள் மேற்கொள்ள வேண்டும்.