மாப்பிள்ளைக்கு பரிசாக ரூ.2.5 கோடியில் கார் - பேசுபொருளான பிஹார் எம்எல்ஏ ஆனந்த சிங் மகள் திருமணம்

மாப்பிள்ளைக்கு பரிசாக ரூ.2.5 கோடியில் கார் - பேசுபொருளான பிஹார் எம்எல்ஏ ஆனந்த சிங் மகள் திருமணம்
Updated on: 
2 min read

பாட்னா: பிஹாரின் மொகமா தொகுதி எம்எல்ஏவான ஆனந்த் சிங்கின் இளைய மகள் திருமணம் பேசுபொருளாகி உள்ளது. மாப்பிள்ளைக்கு ரூ.2.5 கோடியில் லேண்ட் ரோவர் டிபண்டர் கார் வழங்கப்பட உள்ளது.

பிஹாரின் குற்றவியல் அரசியல்வாதிகள் பட்டியலில் இடம்பெற்றவர் ஆனந்த் சிங். பல்வேறு குற்ற வழக்குகள் அவர் மீது பதிவாகி உள்ளன. இதில் ஒரு கொலைக் குற்றத்துக்காக ஆனந்த் சிங் சிறையிலும் இருந்தார். இவரைப் போலவே ஆனந்த் சிங்கின் மனைவி நீலம் தேவியும் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏவாக உள்ளார்.

ஒருமுறை சிறையில் இருந்தபடியே சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு ஆனந்த் சிங் எம்எல்ஏவாகி உள்ளார். இவரது மகள் ஷிவாங்கி சிங்குக்கு வரும் நவம்பர் 25-ம் தேதி நடைபெற உள்ள திருமணம் வட மாநிலங்களில் பேசுபொருளாகி உள்ளது.

மாப்பிள்ளையான ரிஷிகேஷ் குமார், அமெரிக்காவில் வசிக்கிறார். இவருக்கு திருமணப் பரிசாக ஆனந்த் சிங் சுமார் ரூ.2.5 கோடி மதிப்புள்ள 'லேண்ட் ரோவர் டிஃபென்டர்' காரை வழங்குகிறார்.

ரிஷிகேஷ் குமார், அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள ஜார்ஜியா மாகாணப் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றவர். இவரது தந்தை ரன்விஜய் குமார் சிங், மத்திய ரிசர்வ் காவல் படையில் கமாண்டன்ட்டாகப் பணியாற்றுகிறார்.

இந்தத் திருமணம், மொகமா பகுதியில் உள்ள ஆனந்த் சிங்கின் பூர்வீக கிராமமான லாட்மாவில் நடைபெறவுள்ளது. இந்தத் திருமணத்திற்காக ஆனந்த் சிங் பல கோடி ரூபாயைச் செலவிட உள்ளார். சுமார் 6 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்டமான பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. விருந்தினர்களுக்காக சுமார் 150 வகையான உணவு வகைகள் தயார் செய்யப்படுகின்றன.

இதே நிகழ்வின்போது, ஆனந்த் சிங்கின் இளைய மகன் அபினவ் சிங்கின் உபநயனம் (பூணூல் அணிவிக்கும் சடங்கு) நடைபெறவுள்ளது. இதற்காக அபினவுக்கு ஆனந்த் சிங் ஒரு பிஎம்டபிள்யூ காரைப் பரிசாக வழங்க உள்ளார்.

இந்த பிரம்மாண்டமான திருமண விழாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் முதலமைச்சருமான நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட பல அரசியல் மற்றும் திரையுலகப் பிரமுகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த திருமணத்துக்கு சுமார் 4 லட்சம் பேர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குதிரை வளர்ப்பு பிரியரான ஆனந்த் சிங் தேர்தலின்போது தனது சொத்தாக ரூ.100 கோடி காட்டி இருந்தார். இவரது மனைவி நீலம் தேவி ரூ.26 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

தனது மகளின் இந்த ஆடம்பரமான திருமணத்தில் தேசிய அளவில் ஒரு குதிரை பந்தயத்தையும் ஆனந்த் சிங் அறிவித்துள்ளார். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு தார் ஜீப் பரிசாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுபோல், விலை உயர்ந்த பரிசுகளுடன் விமரிசையான அரசியல்வாதி குடும்ப திருமணம் நடைபெறுவது இது முதன்முறையல்ல. இதற்குமுன், உத்தர பிரதேசத்தின் அம்ரோஹா தொகுதி மக்களவை எம்பியான கன்வர் சிங் தன்வாரின் மகன் லலித் கன்வாருக்கும், ஹரியானாவின் முன்னாள் சட்டமன்ற எம்எல்ஏ சுக்பீர் சிங் ஜவுனாபுரியாவின் மகள் யோகிதாவுக்கும் 2011-ல் திருமணம் நடைபெற்றது. இதற்காக நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் செலவிடப்பட்டது.

சுக்பீர் சிங், வரதட்சணையாக லலித் கன்வருக்கு 33 கோடி ரூபாய் மதிப்புள்ள 'பெல் 429' ரக ஹெலிகாப்டரை வழங்கினார். மேலும், மணமகன் வீட்டுக்கு ரூ.2.5 கோடியும், திருமணச் சடங்குகளின்போது மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான ரொக்கமும் பரிசுகளும் வழங்கப்பட்டன.

திருமணத்தில் கலந்துகொண்ட சுமார் 3,000 விருந்தினர்கள் ஒவ்வொருவருக்கும், வெள்ளி பிஸ்கட், சஃபாரி சூட் மற்றும் 11,000 முதல் 40,000 ரூபாய் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டன.

மாப்பிள்ளைக்கு பரிசாக ரூ.2.5 கோடியில் கார் - பேசுபொருளான பிஹார் எம்எல்ஏ ஆனந்த சிங் மகள் திருமணம்
இந்தியாவுக்கு எதி​ராக அவதூறு பரப்பும் சீன வலைதள பிரபலங்களுக்கு மத்திய அரசு கண்டனம்

X