தியாகி சங்கரலிங்கனார்
டெல்லி அரசியல் வட்டாரத்தில் தற்போது நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது.
நேஷனல் ஹெரால்டு என்ற ஆங்கில நாளிதழை, இந்திய விடுதலை இயக்கத்துக்காக, ஜவஹர்லால் நேரு 1938-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி லக்னோவில் தொடங்கினார். இதன் உருது மொழி பதிப்பு ‘குவாமி ஆவாஸ்’ எனும் பெயரிலும், இந்தி மொழி பதிப்பு ‘நவஜீவன்’ எனும் பெயரில் வெளி வந்தது.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு அன்றைய காலத்தில் தளகர்த்தர்கள், நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய பலர் தாராளமாக நிதி வழங்கினர். 1942-ல் நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின்போது இந்த நாளிதழை ஆங்கிலேய அரசு தடை செய்தது.
இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்நாளிதழ் நிதிச்சுமையால் 2008 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதன் உரிமையாளர்களான அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்தினர் 2016-ல் நேஷனல் ஹெரால்டு நாளிதழை மீண்டும் வெளியிட்டனர். பின்னர் 2017-ல் இந்நாளிதழை நடத்தி வந்த அசோசியேட்டட் நிறுவனத்தை, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனத்தினர் விலைக்கு வாங்கி, நேஷனல் ஹெரால்டு நாளிதழை மீண்டும் நடத்தினர்.
பல்வேறு வழக்குகளால் இந்நாளிதழ் நிறுத்தப்பட்டு, மின் நாளிதழாக தற்போது வெளிவருகிறது. நேஷனல் ஹேரால்டு நாளிதழை நடத்தி வந்த அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.2,000 கோடி எனும் நிலையில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு இந்நிறுவனம் ரூ.90.25 கோடி கடன் நிலுவை வைத்திருந்தது.
இந்நிலையில், யங் இந்தியா எனும் நிறுவனத்தின் பங்குதாரர்களாக உள்ள சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் ரூ.50 லட்சம் செலுத்தி, மோசடியாக அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்தை கையகப்படுத்தியதாக சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டி வழக்கு தொடர்ந்தார்.
இது பண மோசடி மற்றும் குற்றவியல் முறைகேடாகக் கருதப்பட்டு, தற்போது டெல்லி நீதிமன்றத்தில் விசாரணை நிலையில் உள்ளது, இந்த வழக்குக்காக ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தியை அமலாக்கத்துறை விசாரித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. தற்போது அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதால், இது அரசியல் பழிவாங்கல் முயற்சி என்று காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. அடுத்து என்ன நடக்கிறது என்பதை பொருத்திருந்து பார்ப்போம்!
சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக காமராஜர் இருந்தபோது, 1957-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சாத்தூர் தொகுதியில் காமராஜர் போட்டியிட்டார். அவரை எதிர்த்து சீர்திருத்தக் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜெயராம ரெட்டியார் 31,683 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். காமராஜர் 36,400 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இரண்டாவது முறையாக முதலமைச்சராக காமராஜர் பதவியேற்றபோது சென்னை மாகாண ஆளுநராக ஏ.ஜே.ஜான் இருந்தார். இந்த காலகட்டத்தில்தான் திமுக முதல்முறையாக சட்டமன்றத்துக்குள் நுழைந்தது. அப்போது எதிர்க்கட்சியாக சீர்திருத்தக் காங்கிரஸ் இருந்தாலும் களத்தில் எதிர்க்கட்சியாக செயலாற்றியது திமுகதான். மக்கள் பிரச்சினைகளுக்காக முன்நின்றவர்களும் திமுகவினர்தான்.
முதுகுளத்தூர் கலவரத்தைத் தொடர்ந்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டதும் இந்தக் காலத்தில்தான். தேவர் மீது பொய்யான வழக்கு ஜோடிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டதற்குக் காரணம் காமராஜர்தான் என்று பார்வர்டு பிளாக் கட்சியினர் பிரச்சாரம் செய்தனர். திமுகவினர் கூட இதற்கு ஆதரவாக இருந்தனர்.
இதற்கிடையே சென்னை மாகாணத்துக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டக் கோரி விருதுநகரில் சங்கரலிங்கனார் உண்ணாவிரதத்தை தொடங்கினார். விருதுநகரை அடுத்த மண்மலைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கரலிங்கனார். ராஜாஜியின் திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் பணிபுரிந்தார். விருதுநகரில் உள்ள மாரியம்மன் கோயில் அருகில் ஒரு சிறிய ஓலைக்குடிசையில் தனது
உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் சங்கரலிங்கனார். நாட்கள் கடந்து கொண்டிருந்தன. உண்ணாவிரதம் தீவிரம் அடைந்தது. அதேநேரம், சங்கரலிங்கனாரை காமராஜர் வந்து பார்க்கவில்லை என்று ஒருபுறம் குற்றச்சாட்டு எழுந்தது.
ஓலைக் குடிசையில் உள்ள ஒரு கயிற்றுக் கட்டிலில் சுருண்டு படுத்திருந்தார் சங்கரலிங்கனார். முக்கியத் தலைவர்கள் எல்லாம் வந்து உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளும்படி எவ்வளவோ சொல்லியும், வைராக்கியமாக உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். இதனால் அவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமானது. அதைத்தொடர்ந்து அவரை, மதுரையில் இன்றைக்கு ராஜாஜி மருத்துவமனை என்று அழைக்கப்படும் அரசு பொதுமருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் உண்ணாவிரதத்தின் 76வது நாளில், 1957-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தனது இன்னுயிரை நீத்தார்.
இந்தப் பிரச்சினை சட்டமன்றத்தில் பயங்கர புயலைக் கிளப்பியது. அப்போது பேசிய அமைச்சர் சி.சுப்பிரமணியம், நாங்கள் ஏற்கெனவே தமிழ்நாடு அரசு என்றுதானே அழைத்து வருகிறோம் என்று கூறி அதற்கான ஆவணங்களையும் அவையில் சமர்ப்பித்தார். இந்த இடத்தில் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்...
அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த ஜோதி வெங்கடாச்சலம், திருநெல்வேலியில் உள்ள மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் தங்கும் விடுதியைத் திறந்து வைத்தார். அந்தப் பெயர்ப் பலகையில் ‘தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் ஜோதி வெங்கடாச்சலம்’ என்றுதான் உள்ளது. அவர் அமைச்சராக இருந்தது 1965 - 66 காலகட்டம்.
அதற்குப் பிறகு முதலமைச்சராக வந்த அண்ணா 1967-ம் ஆண்டு சென்னை மாகாணத்துக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றம் செய்வதற்கான தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். ஆனால் இதற்கு முன்பாகவே அந்தக் கல்வெட்டில் ‘தமிழ்நாடு’ அரசு என்று பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. எனவே காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே ‘தமிழ்நாடு அரசு’ என்றுதான் கூறப்பட்டு வந்துள்ளது இதன்மூலம் நமக்கு தெரிய வருகிறது.
காமராஜர் தனது ஆரம்ப காலத்தில் அரசியல் ஆசானாக ஏற்றுக் கொண்டது சத்தியமூர்த்தியைத்தான். தனக்கு 20 வயது இருக்கும்போது சத்தியமூர்த்தியைச் சந்தித்தார். அவரின் வழிகாட்டுதலால் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றார் காமராஜர். சத்தியமூர்த்தி மூலமாகத்தான் காமராஜரைப் பற்றி நேருவுக்கு தெரியவந்தது. சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று அப்போது நிகழ்ந்தது.
ஒருமுறை நேரு சென்னை வந்திருந்தார். அவர் தங்கியிருந்த அறைக்கு வெளியே காமராஜர் படுத்திருந்தார். அவர் குறட்டை விடும் சத்தம் அந்த அறையையே அதிரச் செய்தது. உள்ளே படுத்திருந்த நேருவுக்கு தூக்கமே வரவில்லை. நள்ளிரவு நேரம் ஆகி விட்டது. அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தவர் பின்னர் சத்தியமூர்த்தியை அழைத்தார்.
“யார் இவர்? இப்படி குறட்டை விடுகிறார். என்னால் தூங்கவே முடியவில்லை. இவரை இங்கிருந்து போகச் சொல்லுங்கள். அல்லது நான் வெளியே போகிறேன். மெரினா கடற்கரையில் ஒரு கட்டிலைப் போடுங்கள்... அங்கு நான் தூங்குகிறேன்..” என்று கூறினார்.
இப்படித்தான் நேருவுடனான காமராஜரின் அறிமுகம் இருந்தது. பின்னாளில் போகப் போக காமராஜருடன் நெருக்கமாகப் பழகினார் நேரு என்பது வேறு விஷயம்...
சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக காமராஜர் இருந்த காலத்தில், இந்தியாவை 4 பிரதேசங்களாகப் பிரிக்க வேண்டும் என்று நேரு திட்டமிட்டிருந்தார். அந்த வகையில் ஒன்றுபட்ட ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகியவற்றை இணைத்து ‘தட்சிணப் பிரதேசம்’ என்று அமைக்க திட்டமிடப்பட்டது.
1956-ம் ஆண்டு அமிர்தசரசில் நடந்த காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில், இவ்வாறான பிரதேசங்கள் அமைப்பது பற்றி ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு விவாதிக்கப்பட்டது. மேற்கு வங்காளத்தின் முதல்வராக இருந்த டாக்டர் பி.சி.ராய் தயாரித்த இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளலாம் என்று உள்துறை அமைச்சர் பந்த் அறிவித்தார். அந்தத் தீர்மானத்தை வரவேற்று சி.சுப்பிரமணியம் பேசினார். தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. தட்சிணப் பிரதேசத்துக்கு காமராஜரே முதல்வராக இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.
இதற்கிடையே தட்சிணப் பிரதேசம் திட்டத்தை திமுக கடுமையாக எதிர்த்தது. இதில் ஒன்றுமட்டும் புரியவில்லை. அதாவது தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகியவை சேர்ந்ததுதான் திராவிட நாடு என்று திமுக சொல்லி வந்தது. ஆனால் இந்த மாநிலங்கள் இணைந்து ஒரே பிரதேசமாக - அதாவது தட்சிணப் பிரதேசமாக இருக்கக் கூடாது என்று மறுபுறம் திமுக எதிர்த்தது முரணாக இருந்தது. தட்சிணப் பிரதேசம் குறித்து அண்ணாவிடம் கேட்டபோது, ‘நான் கேட்பது இட்லி; தட்சிணப் பிரதேசம் என்பது மண் இட்லி’ என்று தனக்கே உரித்தான நடையில் கூறினார்.
இந்த காலகட்டத்தில் காமராஜருக்கு பெரியார் ஒரு தந்தி அனுப்பினார். அதில், “தட்சிணப் பிரதேசம் அமைக்கப்பட்டால் இதர மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்துவார்கள். கடைசியில் உங்கள் தலைமைக்கே அது ஆபத்தாக முடிந்து விடும். எனவே தட்சிணப் பிரதேசம் அமைக்கும் முடிவுக்கு சம்மதிக்காதீர்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இத்தகைய குழப்பமான சூழல் நிலவியதால் தட்சிணப் பிரதேசம் அமைக்கும் திட்டத்தில் இருந்து காமராஜர் பின்வாங்கினார். அதைத்தொடர்ந்து நேருவும் அத்திட்டத்தை கைவிட்டு விட்டார்.
காமராஜர் ஆட்சிக் காலத்தில் இலங்கை பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயகா சென்னை வந்தார். அவரை திறந்த காரில் அமரச் செய்து அண்ணா சாலையில் ஊர்வலமாக காமராஜர் அழைத்துச் சென்றதெல்லாம் அப்போது நடைபெற்றது.
அன்றைய அரசியல் களத்தில் காங்கிரஸ் - கம்யூனிஸ்டுகள் நேர் எதிர் திசையில் இருந்தனர். நேருவுக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சியினர் தீவிரமாகக் களமாடினர். அதேநேரம் காங்கிரஸ் கட்சிக்குள் காமராஜர் ஆதரவு, ராஜாஜி ஆதரவு என பல குழுக்கள் இருந்தன. இதற்கிடையே காங்கிரஸும் வேண்டாம், கம்யூனிஸ்டும் வேண்டாம் என்று தொடங்கப்பட்ட இயக்கம்தான் சோசலிஸ்ட் காங்கிரஸ். இதில் இருந்தவர்கள் பெரும்பாலும் காங்கிரசில் இருந்து பிரிந்து வந்தவர்களே.
தமிழக சட்டப்பேரவையில் 1957-ம் ஆண்டு திமுக உறுப்பினர்கள் 15 பேர் நுழைந்த சமயத்தில் திமுக சட்டமன்றக் குழுத் தலைவராக அண்ணா செயல்பட்டார். துணைத் தலைவராக பேராசிரியர் க.அன்பழகனும், கொறடாவாக கலைஞரும் செயல்பட்டனர்.
1952, 1957 தேர்தலின்போது இரட்டை உறுப்பினர் தேர்வு செய்யும் முறை இருந்தது. அதாவது எஸ்சி, எஸ்டி மக்கள் அதிகமாக வசிக்கும் தொகுதிகளில் எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த ஒரு வேட்பாளரும், பொது வேட்பாளர் ஒருவரும் தேர்தலில் போட்டியிடுவார்கள். எஸ்சி, எஸ்டி வேட்பாளருக்கு ஒரு வாக்கு, பொது வேட்பாளருக்கு ஒரு வாக்கு என இரு வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும்.
அந்தவகையில் 1957 தேர்தலில் கோவை தொகுதியில் எஸ்சி, எஸ்டி சார்பில் போட்டியிட்டு 2-வது இடத்துக்குத் தள்ளப்பட்ட வேட்பாளர் பெற்ற வாக்குகளை விட பொதுப் பட்டியலில் நின்று வெற்றி பெற்ற வேட்பாளர் குறைவாகவே வாக்குகளைப் பெற்றிருந்தார். இந்த நடைமுறையால் பிரச்சினைகள் எழுந்ததையடுத்து, இரட்டை உறுப்பினர் தொகுதி முறை 1961 தேர்தலில் ஒழிக்கப்பட்டது. அதற்குப் பிறகுதான் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான தனித் தொகுதி உருவாக்கப்பட்டு தற்போது வரை நடைமுறையில் உள்ளது.
1959-ம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 100 இடங்களில் போட்டியிட்டது. அதில் 36 இடங்களில்தான் வெற்றி பெற்றது. இத் தேர்தலில் 90 இடங்களில் வென்ற திமுக முதன்முறையாக மாநகராட்சி மேயர் பொறுப்பேற்றது. திமுகவின் முதல் மேயராக அ.பொ.அரசு பொறுப்பேற்றார்.
தமிழகத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக திமுக வளர்ந்து வந்தது. அதேநேரம் கட்சிக்குள் குழப்பங்களும், பூசல்களும் ஒருபுறம் தொடர்ந்தன. பொதுச் செயலாளராக இருந்த நாவலர் நெடுஞ்செழியனின் பதவிக் காலம் 1960 அக்டோபரில் முடிவடைந்தது. அடுத்த பொதுச் செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்தது.
ஐம்பெரும் தலைவர்களுள் ஒருவரான ஈவிகே சம்பத்துக்கும், கலைஞருக்கும் இடையே கருத்து மோதல்கள் அடிக்கடி ஏற்பட்டு வந்தன. ஆனால் அண்ணா இதைக் கண்டு கொள்ளவில்லை. இதனால் அண்ணா மேல் சம்பத்துக்கு வருத்தம் இருந்து வந்தது. அடுத்தடுத்து தனக்கு ஏற்பட்ட மன வருத்தங்களால் அவைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ஈவிகே சம்பத். சினிமாக்காரர்கள் பிடியில் திமுக சிக்கிக் கொண்டது என்று கடும் விமர்சனங்களை வைத்தார் சம்பத். மேலும் கட்சியில் கணக்கு வழக்குகள் சரியில்லை என்பது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை பொதுவெளியில் வைத்தார்.
இப்படியான நிலையில்தான் அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்த அண்ணாவும், ராஜாஜியும் கைகோர்க்கும் சூழல் வாய்த்தது. அப்போதுதான் ‘வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது’ என்ற முழக்கங்களை அண்ணா முன்வைத்தார்.
ஒருமுறை பிரதமர் நேரு தமிழகம் வந்தார். தமிழர்களை ‘நான்சென்ஸ்’ என்று நேரு இகழ்ந்தார் என்று குற்றம்சாட்டி அவருக்கு எதிராக திமுகவினர் கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவங்களும் நடந்தேறின.
இதற்கிடையே திட்டக் குழுக் கூட்டம் சி.சுப்பிரமணியம் முயற்சியில் ஊட்டியில் நடந்தது. முன்னதாக 1958-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஐதராபாத்தில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் திட்ட துணைக் குழுவை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் இந்த திட்டக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் அதிகாரங்கள் குறித்து இந்திய அரசியல் சட்டத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. நிதிக்குழு மட்டும்தான் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. திட்டக்குழு என்பது மாநிலங்கள் ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்களை வகுத்து, அதற்கு நிதி ஒதுக்கீடு செய்வது என்பதுதான். அதுதான் இன்றைக்கு ‘நிதி ஆயோக்’ என்று அழைக்கப்படுகிறது.
இந்த திட்டக் குழு நிதி ஒதுக்கீடு செய்து, மத்திய நிதி அமைச்சகத்துக்குப் பரிந்துரை செய்யும். அந்த வகையில் முதல் திட்டக் குழுவில் இந்திரா காந்தி, குல்ஜாரிலால் நந்தா, கந்துபாய் தேசாய், பலவந்த்ராய் மேத்தா, டாக்டர் சம்பூர்ணா நந்த், கே.ஏ.தாமோதர மேனன், தமிழக நிதி அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம், காங்கிரஸ் தலைவராக இருந்த எஸ்.நிஜலிங்கப்பா, எஸ்.என்.மிஸ்ரா, டாக்டர் ராம் சுபாக் சிங், எஸ்.கே.திரிபாதி, வி.வி.திராவிட், வி.பி.ராஜ், பிஜு பட்நாயக், ராஜ்கிருஷ்ணா போஸ், பி.சி.சென், லாலா மோகன் லால், என்.சி.பாஹே, சாதிக் அலி, யு.என்.தேபர் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இருந்தனர்.
இந்தத் திட்டக் குழுவின் கருத்தரங்கம் ஊட்டியில் சி.சுப்பிரமணியம் மேற்பார்வையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இக்கருத்தரங்களில் நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. கடுமையான கட்டுப்பாடுகள், சீரான பொருளாதார ஸ்திரத்தன்மை, கூட்டாட்சி தத்துவத்தின்படி மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதிகள் இவற்றைப் பற்றியெல்லாம் விரிவாக விவாதிக்கப்பட்டது. திட்டமிடுவதும், வளர்ச்சி அடைவதும் ஒரு அரசின் அடிப்படை கூறாகும். அதற்கு உதவியாக இருப்பதுதான் இந்தத் திட்டக் குழு.
இந்திய தேசிய காங்கிரஸின் 65-வது ஆண்டுக் கூட்டம் 1960-ம் ஆண்டு ஜனவரி 16, 17-ம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெற்றது. காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இந்திரா காந்திக்குப் பிறகு நீலம் சஞ்சீவ ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டார். சஞ்சீவரெட்டி ஆந்திர மாநிலம் ஆனந்தப்பூரில் பிறந்தவர், விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவர். சென்னையில் படித்தவர். சென்னை ராஜ்தானியில் சட்டமன்ற உறுப்பினர், ஆந்திர மாநிலத்தின் முதல்வராக இருந்தவர்.
தான் ஒரு விவசாயப் பாரம்பரியத்தில் வந்தவர் என்பதால், வேளாண் வளர்ச்சியில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். நாட்டில் தொழில் முன்னேற்றத்துக்கு செலுத்திய கவனத்தை, விவசாயம் மீது நாம் செலுத்தத் தவறியதால்தான் நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதை நிவர்த்தி செய்ய வேண்டும். விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும். கூட்டுறவு முறைகளை மேம்படுத்த வேண்டும் என்றெல்லாம் அந்தக் கூட்டத்தில் பேசினார். அதுகுறித்தான விவாதங்களும் நடந்தன.
பெங்களூரு கூட்டத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் மகாசபையை திருத்தி அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான குழுவில் யு.என்.தேபர், ஜெகஜீவன் ராம், எஸ்.கே.பாட்டீல், சாதிக் அலி, சி.சுப்பிரமணியம் ஆகியோர் இருந்தனர். இந்தக் குழு 1960-ம் ஆண்டு ஜூன் 4, 5-ம் தேதிகளில் பூனாவில் கூடி ஆய்வு செய்து அறிக்கை அளித்தது. நேரு காலத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சியின் தேய்மானம் தொடங்கியது. அது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. இவற்றையெல்லாம் எதிர்கொண்டு காங்கிரஸ் கட்சியை எவ்வாறு புத்தெழுச்சி பெறச் செய்வது என்பது குறித்தெல்லாம் தனது அறிக்கையில் அந்தக் குழு விளக்கியது.
(தொடர்வோம்...)