அரசியல் புயலின் கோரப்பிடியில் நீதித்துறை! - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 85

அரசியல் புயலின் கோரப்பிடியில் நீதித்துறை! - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 85
Updated on
5 min read

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா 28.08.2017-ம் ஆண்டு பதவியேற்றார். தனது பதவிக் காலத்தின்போது, ஊடகங்களை அவர் கண்டித்தது, நீதித்துறையின் அதிகாரத்தை தவறாக கையாளும் நடவடிக்கையாக அந்த சமயத்தில் விவாதிக்கப்பட்டது.

2018-ம் ஆண்டு காலகட்டத்தில், உச்ச நீதிமன்றத்தில் இணையதளப் பத்திரிக்கை ஒன்று அளித்த புகாரை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியையும் நீதிபதிகள் ஏ.எம். கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரையும் உள்ளடக்கிய அமர்வு விசாரித்தது.

பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய்ஷாவால் தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கை, குஜராத் உயர்நீதிமன்றம் விலக்கிக்கொள்ள மறுத்துவிட்டதை எதிர்த்து அந்தப் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அந்த அமர்வு அந்தப் புகாரை 12.04.2018-ம் தேதிக்கு தள்ளிவைத்ததோடு, இடைப்பட்ட காலத்தில் நீதித்துறை நடுவர் அந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டு இருந்தது.

‘பொது ஆவணங்களிலிருந்து எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களிலிருந்து அமித்ஷா மகனான ஜெய்ஷாவுக்குச் சொந்தமான நிறுவனங்களின் சொத்து மதிப்பு 16,000 மடங்கு உயர்ந்து, அதாவது, ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.80 கோடிக்கு மேலாக தாறுமாறாக உயர்ந்துள்ளது. இந்த உயர்வானது நரேந்திர மோடி பிரதமராகவும், அமித்ஷா பா.ஜ.க. தலைவராகவும் பதவியேற்றுக்கொண்ட சிறிது காலத்திலேயே நடைபெற்றுள்ளது’ என்று ‘தி வயர்’ இணையதளம் கூறியிருந்தது.

இந்த வழக்கில் எடுக்கப்படவேண்டிய முடிவு ஜெய்ஷாவின் புகாரைத் தள்ளுபடி செய்வதா? அல்லது அதை ஏற்றுக்கொண்டு விசாரணையைத் தொடர்வதா? என்பதே ஆகும். ஆனால், தலைமை நீதிபதியோ, ‘நான் எந்தவொரு குறிப்பிட்ட மின்னணு ஊடகத்தின் பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை. ஆனால் பழிதூற்றும் போக்கு, பொறுப்புள்ள இதழியல் ஆகாது’ என்று கூறினார்.

‘தி வயர்’ இணையதளத்தின் குற்றச்சாட்டுகளின் உண்மை நிலைக்கும் இதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அது விசாரணை நீதிமன்றம் முடிவுசெய்ய வேண்டிய விஷயம். அவரது கடுங்கோபத்துக்குக் காரணம் என்ன? வழக்கோடு தொடர்பில்லாத விஷயங்களை அனுமதிக்கும் வகையில், விசாரணை நடைபெற்றுவரும் சிக்கலான கட்டத்தில் இவ்வாறு உரையாற்றுவதற்கு, நீதிபதியின் இருக்கை ஒன்றும் தியோடர் ரூஸ்வெல்ட் சொன்னதுபோல, எல்லாப் பிரச்சினைகளைப் பற்றியும் கருத்துச் சொல்கிற ‘அதி சிறப்பு இருக்கை’யல்ல.

உலகத்தில் எந்த உச்ச நீதிமன்றத்திலாவது இப்படி நீதிபதி கண்டனம் தெரிவித்ததற்கும், அவர் முன்னால் விசாரணையில் உள்ள வழக்கோடு தொடர்பில்லாத விஷயங்களை ஏற்றுக்கொண்டதற்கும் ஏதாவது முன்னுதாரணம் இருக்கிறதா? பத்திரிக்கைகள், ஜனநாயகத்தின் நான்காவது தூண். நிர்வாகம், சட்டம் இயற்றும் அவைகள் மற்றும் நீதித்துறை ஆகிய மூன்றுக்கும் சமமானது அது. நீதித்துறை சட்டங்களைச் சார்ந்திருக்கிறது. நிர்வாகத்துறை அவற்றை நடைமுறைப்படுத்துகிறது. சட்டமன்றங்கள் சட்டங்களை இயற்றுகின்றன. இம்மூன்றையும் கண்காணிக்க வேண்டிய உரிமையும் கடமையும் பத்திரிக்கைகளுக்கு இருக்கின்றன.

நீதித்துறையின் போக்கைக் கண்காணிப்பதில் பத்திரிக்கைகளின் முக்கியத்துவம், மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கமுடியாது. பத்திரிக்கைகள் மட்டுமே நீதித்துறையின் போக்கைத் தொடர்ச்சியாகவும், வெளிப்படையாகவும் விமர்சிக்கின்றன என்று புரிந்துகொள்ள வேண்டும்.

‘வழக்கறிஞர்களுக்கும் அவர்களின் கட்சிக்காரர்களுக்கும் எதிராக அநாவசியமான குற்றச்சாட்டுகளைக் கூறுபவராக இருக்கிறார்’ என்று பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியைக் கண்டித்து செப்.19, 1929-இல் ‘யங் இந்தியா’ இதழில் கட்டுரை எழுதினார் காந்தி. அதேபோல், முற்றிலும் நியாயமற்ற வகையில் வாய்க்கு வந்தபடி கருத்துகளைக் கூறிய அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் இரண்டு ஆங்கில நீதிபதிகளைக் கண்டித்து ‘ஹரிஜன்’ இதழில் 1940, ஏப்.2-ல் எழுதினார்.

‘இந்திய தேசத்தின் குணாம்சங்களைப் பற்றி வாய்க்கு வந்தபடி கருத்துகளைத் தெரிவிக்க இந்த இரண்டு நீதிபதிகளுக்கும் என்ன சட்ட அடிப்படை இருக்கிறது? அலகாபாத் நீதிபதிகள் முடிவெடுப்பதற்கு முன்னால், மனச்சாய்வுகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதையும் பொறுப்புக்குரிய பதவிகளை வகிப்பதற்கான தங்களது திறனின்மையை நிரூபித்திருக்கிறார்கள்’ என்பதையும் இது எடுத்துக்காட்டுகிறது.

‘மக்கள் மற்றும் அரசுகளின் நிர்பந்தங்களுக்குப் பணியாமல் சுதந்திரமாகவும் சட்டங்களுக்கு உட்பட்டும் செயல்படும் நீதிபதிகளே ஜனநாயக சமுதாயத்தின் பண்புத் திறனாகத் திகழ்கிறார்கள்’ என உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எச்.ஆர். கன்னா கூறினார்.

இந்தியாவின் நீதித்துறையில் உச்ச நீதிமன்றம் பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்ள அதிகாரம் படைத்த தலைமை நீதிமன்றமாகும். அரசியல் சட்டத்துக்கு விளக்கம் சொல்லும் உரிமையும் அதிகாரமும் படைத்தது.

அரசியல் சாசன சட்டத்தின் பிரிவு 32-ல் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளின் காப்பாளராகவும், பிரிவு 131-ன் கீழ் மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே ஏற்படும் சிக்கல்களிலும், மாநிலங்களுக்கிடையே ஏற்படும் சிக்கல்களிலும் நீதி வழங்கும் தீர்ப்பாளராகவும், பிரிவு 132-ன் கீழ் அரசியல் சட்டச் சிக்கல்களுக்கு தீர்வு காணும் உயர் அமைப்பாகவும், பிரிவு 133-ன் கீழ் குடிமையியல் வழக்குகளிலும் பிரிவு 134-ன் கீழ் குற்றவியல் வழக்குகளிலும் செய்யப்படும் மேல்முறையீடுகளை விசாரித்து தீர்ப்பு வழங்கும் அதிகாரம் படைத்த அமைப்பாகவும் செயல்படும் பொறுப்பு உச்ச நீதிமன்றத்துக்கே உண்டு. நாடெங்கிலும் உள்ள நீதித்துறையை மேற்பார்வையிடும் அதிகாரமும் அதற்கு உண்டு.

நாடாளுமன்றம் மற்றும் நீதிமன்றம் இவற்றில் எது அதிக அதிகாரம் கொண்டது என்பது குறித்த விவாதங்களோ, பிரச்சினைகளோ 1968-ம் ஆண்டு வரை எழவில்லை. ‘அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மாற்றவோ, திருத்தவோ அல்லது ரத்து செய்யவோ நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் இல்லை’ என கோலக்நாத் வழக்கில் உச்ச நீதிமன்றம் அப்போது தீர்ப்பளித்தது.

அதன்பிறகு 24-வது திருத்தம் மூலம் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 13 மற்றும் 368 ஆகியவற்றில் 05.11.1971 அன்று கூடுதல் பிரிவுகள் சேர்க்கப்பட்டன. இதன்மூலம் அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் திருத்தவோ, மாற்றி அமைக்கவோ நாடாளுமன்றத்துக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது. இந்திராகாந்தி அமைச்சரவையில் 1972-ம் ஆண்டு ஏப்ரலில் அரசியல் சட்டப்பிரிவு 31-க்கு கொண்டுவரப்பட்ட 25-வது திருத்தத்தின் மூலம் தனியார் நிலத்தையோ, அசையாத சொத்துகளையோ பொது நலனுக்காக அரசு கையகப்படுத்தும்போது இழப்பீட்டுத் தொகையை முடிவு செய்யும் இறுதி அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே உண்டு என்றும் உறுதி செய்யப்பட்டது.

அரசியலமைப்புச் சட்டத்தில் மேற்கொண்ட இந்த திருத்தங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கேசவானந்தா பாரதி என்பவர் வழக்கு தொடுத்தார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 13 பேர் கொண்ட அமர்வு இவ்வழக்கை விசாரித்தது. அப்போது இந்த திருத்தங்களுக்கு 6 நீதிபதிகள் ஆதரவாகவும், 6 நீதிபதிகள் எதிராகவும் தீர்ப்பளித்தனர். 13-வது நீதிபதியான எச்.ஆர். கன்னா ஓரளவு ஆதரவாகவும், ஓரளவு எதிராகவும் தீர்ப்பளித்ததால் 7:6 என்ற விகிதத்தில் பெரும்பான்மை தீர்ப்பு திருத்தங்களுக்கு எதிராக உறுதி செய்யப்பட்டது.

தலைமை நீதிபதி எஸ்.எம்.சிக்ரி, 25.04.1973-ல் ஓய்வு பெற்றார். இவருக்கு அடுத்த இடத்தில் மூப்பு அடிப்படையில் நீதிபதி ஜே.எம்.ஷீலத் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்போதைய இந்திரா அரசுக்கு எதிராக தீர்ப்பளித்தவர்களில் தலைமை நீதிபதி எஸ்.எம்.சிக்ரி, நீதிபதிகள் ஜே.எம்.ஷீலத், கே.எஸ்.ஹெக்டே, ஏ.என்.குரோவர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாக இருந்தனர். எனவே மூன்று நீதிபதிகளில் யாரையும் தலைமை நீதிபதியாக பரிந்துரை செய்ய இந்திராகாந்தி விரும்பவில்லை.

மாறாக, அரசுக்கு ஆதரவாக தீர்ப்பளித்த நீதிபதி ஏ.என்.ரே என்பவரை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டார். நியமன வரிசைப்படியும், மூப்பின் அடிப்படையிலும் தங்களுக்கு மிக இளையவரான அவரைத் தலைமை நீதிபதியாக ஆக்கிய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மூத்த நீதிபதிகளான ஜே.எம்.ஷீலத், கே.எஸ். ஹெக்டே, ஏ.என்.குரோவர் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். ஆனால் அப்போதைய இந்திரா அரசு இதுகுறித்து சிறிதும் அலட்டிக்கொள்ளவில்லை.

இதற்கு பின்னர், 1977-ம் ஆண்டில் தலைமை நீதிபதியாக வரவேண்டிய எச்.ஆர்.கன்னா விரைவில் ஓய்வுபெற வேண்டியிருக்கும் என்ற காரணத்தைக் காட்டி அவரைப் புறக்கணித்துவிட்டு, அவருக்கும் இளையவரான நீதிபதி எச்.எம்.பேக் என்பவரை தலைமை நீதிபதியாக மத்திய அரசு பரிந்துரை செய்தது. ஆனால் அரசு காட்டிய காரணம் சரியானது அல்ல. நீதிபதி எச்.ஆர்.கன்னா, 1976-ம் ஆண்டு ஆட்கொணர்வு வழக்கு ஒன்றில் அரசுக்கு எதிராகத் தீர்ப்பளித்தார் என்பதால் புறக்கணிக்கப்பட்டார் என்பதே உண்மை.

மேலும் 1978-ம் ஆண்டில் தலைமை நீதிபதியாக ஒய்.வி.சந்திரசூட் நியமிக்கப்பட்டபோதும் இவ்வாறே மூத்த நீதிபதிகள் பலர் புறக்கணிக்கப்பட்டனர். ஆனால் ஜனதா அரசு வயது மூப்பு காரணம் காட்டி நீதிபதிகளை நியமிப்பது என்பது நீதித்துறையின் சுதந்திரத்துக்கு எதிரானது எனக் காரணம் கூறியது.

பிரதமர்கள் இந்திராகாந்தி, மொரார்ஜி தேசாய் ஆகியோர் நிர்வாகத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் நீதித்துறையைக் கொண்டு வருவதற்கு செய்த முயற்சிகள் தோல்வியடைந்தன. பின்னர் வந்த அரசுகள் நீதித்துறையுடன் மோதலை தவிர்த்து மென்மையான நடைமுறைகளைக் கையாண்டன. நீதித்துறையிலும் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் 1970-களில் நிர்வாகத் துறையின் கட்டுப்பாட்டுக்குள் நீதித்துறையைக் கொண்டு வருவதற்கு செய்த முயற்சியைபோல பிரதமர் மோடி 2014-ம் ஆண்டில் மேற்கொண்டார்.

தேசிய நீதிபதிகள் நியமன ஆணைச் சட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றினார். ஆனால் இந்தச் சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும், கடந்த இருபதாண்டு காலமாக நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் கொலீஜியம் முறையே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும் 14-10-2015-ம் ஆண்டு நீதிபதி ஜே.எஸ்.கேகர் தலைமையில்கூடிய உச்ச நீதிமன்ற ஆணையம் தீர்ப்பளித்தது. அதற்கு பின் இம்முறையே இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை 7 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 69 உறுப்பினர்கள் மாநிலங்களவையில் 2018-ம் ஆண்டு காலகட்டத்தில் அளித்தார்கள். மேலவைத் தலைவர் இத்தீர்மானத்தை ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தார். அவர் செய்தது சரியா அல்லது தவறா? என்ற விவாதம் ஒருபுறமிருந்தாலும் இதற்கு 3 நாட்கள் கழித்து பல மாதங்களாக தூசி படிந்து கிடந்த நீதிபதிகள் நியமனக் கோப்பை கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்ட இரு பெயர்களில் முதலில் இடம்பெற்ற கே.எம்.ஜோசப் பெயரை விடுத்து, இரண்டாவது இடம்பெற்ற இந்து மல்ஹோத்ராவின் பெயரை குடியரசுத் தலைவருக்கு மத்திய அரசு பரிந்துரை செய்தது. குடியரசுத் தலைவரும், மத்திய அரசின் முடிவை ஏற்று மல்ஹோத்ராவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் தள்ளுபடி செய்யப்பட்ட நான்கே நாட்களில், நீதிபதிகள் நியமனத்தை மேற்கொண்டு அதில் கொலீஜியம் பரிந்துரைத்த இருவரில் ஒருவரை புறக்கணித்து, ஒருவரை மட்டுமே நியமனம் செய்துள்ளது மத்திய அரசின் உள்நோக்கத்தைக் காட்டியது. இந்த செயல் தலைமை நீதிபதிக்கு மறைமுகமான நெருக்கடியையும் இக்கட்டான சூழ்நிலையையும் ஏற்படுத்தியது.

மத்திய அரசால் நீதிபதி கே.எம்.ஜோசப்பின் நேர்மை, திறமை ஆகியவற்றில் குறை காண முடியாதபடியால், ஏற்கெனவே கேரளத்தைச் சேர்ந்த ஒருவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருக்கிறார். எனவே இரண்டாவதாகவும் ஒருவரை நியமிக்க முடியாது என்று காரணம் கூறியது. அதேநேரம், தில்லி உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த மூவர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக அப்போது இருந்தனர். அதேபோல், ஆந்திரம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த இருவர் முறையே உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளாக இருந்தனர்.

மத்திய அரசு கே.எம்.ஜோசப்புக்கு எதிராக கூறியுள்ள மற்றக் காரணங்களும் பொருத்தமற்றவையே. ஏற்கெனவே தெலங்கானா - ஆந்திர உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அவரை மாற்றிய உத்தரவையும் மத்திய அரசு கிடப்பில் போட்டது. உண்மையான காரணம் என்னவென்றால், உத்தராகண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை அகற்றி குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது செல்லாது என்றும், மத்திய அரசின் இந்த செயலைக் கண்டித்து, அம்மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த கே.எம். ஜோசப் அளித்த தீர்ப்பு பா.ஜ.க. அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

ஆனால் மறுபடியும் கொலீஜியம் கூடி அவரின் பெயரையே பரிந்துரை செய்தால் அதை சட்டப்படி மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படியே அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியானாலும், ஏற்கெனவே பதவியேற்றுள்ள இந்து மல்ஹோத்ராவுக்கு பதவி மூப்பின்படி இளையவராகிவிடுவார். எதிர்காலத்தில் தலைமை நீதிபதி பதவி அவருக்கு கிடைப்பதற்கு இது தடையாக இருக்கும்.

கொலீஜியம் பரிந்துரை செய்த பெயர்களில் எதையாவது ஏற்க மறுப்பதற்கு முன்னர் தலைமை நீதிபதியை மத்திய அரசு கலந்து ஆலோசனை மேற்கொண்டிருக்க வேண்டும். கொலீஜியம் பெயர்களை பரிந்துரை செய்யும்போதே வரிசைப்படுத்திதான் பெயர்களை பட்டியலிடும். இதனால் எதிர்காலத்தில் தலைமை நீதிபதியாக யார் வரவேண்டும் என்பதும் கோடிட்டுக் காட்டப்படும். ஆனால் பட்டியலிலிருந்து ஒருவரின் பெயரை மட்டும் நீக்கித் திருப்பி அனுப்புவது என்பது நீதித்துறையில் நேரடியான குறுக்கீடாகும் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா கண்டனம் தெரிவித்தார்.

1970-களில் இருந்து நீதித்துறை, மத்திய அரசுக்கு அதாவது காங்கிரசுக்கு பணிந்து நடக்க வேண்டும் என்று அன்றைய பிரதமர் இந்திரா காந்தி தொடங்கிய பனிப்போர், படிப்படியாக நேரடி யுத்தமாக மாறி ஒரு கட்டத்தில் அடிப்படை உரிமைகளை, நாடாளுமன்றம் பறிக்க முடியாது என்று தீர்ப்பு வழங்கிய மூன்று மூத்த நீதிபதிகளின் பதவியை 1973-ம் ஆண்டில் பறித்தது. அவ்வாறு 1970-களில் அரசியல் புயலின் கோரப் பிடியில் சிக்கி சரியத் தொடங்கிய நீதித்துறையின் ஆளுமையும், மதிப்பும், மாண்பும் இன்றுவரை நிலைபெற முடியவில்லை.

(தொடர்வோம்...)

அரசியல் புயலின் கோரப்பிடியில் நீதித்துறை! - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 85
நீதித்துறையில் நிலவும் சில பிரச்சினைகள் - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 84

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in