தொடரும் மோடி ஆட்சி: ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்திக்குப் பிறகு அதிக நாட்கள் பிரதமராக இருந்தவர் என்கிற பெருமையை இந்த ஆண்டு பெற்றார் நரேந்திர மோடி. உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா 4ஆம் இடம் பிடித்தது, ஜிஎஸ்டி சீர்திருத்தம், மரபுசாரா எரிசக்தி நிறுவுதிறன் உள்ளிட்ட சாதனைகளை எட்டியது மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு.
வளர்ச்சித்திட்ட நிகழ்வுகள், சர்வதேச மாநாடுகள், பல்வேறு நாடுகளுக்கு நல்லுறவுப் பயணங்கள் என மோடி சளைக்காமல் செயல்பட்டார். டெல்லி, பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கு இவரது பரப்புரைகள், முக்கியப் பங்கு வகித்தன.
சவால் அளிப்பாரா ராகுல்? - புதிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் உள்பட மத்திய அரசின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. பாஜக மீது வாக்குத் திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்துப் பரபரப்பைக் கிளப்பினார். தேர்தல் வெற்றி மட்டும் கிட்டவே இல்லை.
இந்த ஆண்டு அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்ற ராகுல், சமீபத்தில் ஜெர்மனியில் மத்திய அரசுக்கு எதிராகப் பேசியது சர்ச்சையானது. சசி தரூர், திக் விஜய் சிங் போன்ற காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கட்சிக் கட்டமைப்பு பற்றி எழுப்பிவரும் கேள்விகளும் ராகுலுக்குச் சவாலாகியிருக்கின்றன.
விடைபெற்ற நீதியரசர்: உச்ச நீதிமன்றத்தின் 52ஆவது தலைமை நீதிபதியாகக் கடந்த மே 14இல் பதவியேற்ற நீதிபதி பூஷண் ராமகிருஷ்ண கவாய், ‘மாநில அரசுகள் நிறைவேற்றும் மசோதாக்கள் மீது முடிவெடுக்கக் குடியரசுத் தலைவர், ஆளுநர்களுக்குக் காலக்கெடு நிர்ணயிக்க முடியாது’, பட்டியல் சாதியினருக்கு ‘கிரீமி லேயர்’ அளவுகோல் பொருந்தும் என்பன உள்படச் சில முக்கிய வழக்குகளில் வழங்கிய தீர்ப்புகள் குறிப்பிடத்தக்கவை. உச்ச நீதிமன்றத்தில் ராகேஷ் கிஷோர் என்கிற வழக்கறிஞர் கவாய் மீது காலணி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மீண்டும் நிதீஷ்! - பிஹாரில் 10ஆவது முறையாக முதலமைச்சர் ஆனவர் என்ற பெருமையைப் பெற்றார் ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதீஷ் குமார். சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 தொகுதிகளைக் கைப்பற்றியது. பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றிய நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் 25 இடங்களையே பெற்றது. கட்சியின் செயல் தலைவர் தேஜஸ்வி, நவம்பர் 18 அன்று தனது தலைமையிலான ஆட்சியின் பதவியேற்பு விழா நடைபெறும் என்று தேர்தலுக்கு முன்னர் குறிப்பிட்டது அப்போது பேசுபொருளானது. பின்னர் கிண்டலடிக்கப்பட்டது.
இஸ்ரோ தலைவராகத் தமிழர்! - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் (இஸ்ரோ) 11ஆவது தலைவராகத் தமிழகத்தைச் சேர்ந்த வி.நாராயணன், ஜனவரி 14இல் பொறுப்பேற்றார். சி25 கிரையோஜெனிக் திட்டம், சந்திரயான்-2 & 3, ஆதித்யா எல்1 செயற்கைக்கோள் உள்ளிட்ட பணிகளில் ஏற்கெனவே தனது பங்களிப்பைத் தந்திருக்கிறார்.
செயற்கைக்கோள் ஒன்றிணைவுத் தொழில்நுட்பம், என்விஎஸ்-02, நிசார், சிஎம்எஸ்-03, அமெரிக்காவின் ப்ளூபேர்ட் பிளாக்-2 செயற்கைக்கோளை ஹரிகோட்டாவிலிருந்து ஏவுதல் உள்ளிட்டவை இந்த ஆண்டு இஸ்ரோவால் மேற்கொள்ளப்பட்டன. ககன்யான் ஆளில்லா விண்கலம், சந்திரயான்-4, சமுத்ராயன் உள்ளிட்டவற்றுக்கான பணிகளை நாராயணன் தற்போது முன்னெடுத்து வருகிறார்.
விண்வெளி நாயகன்: ஆக்ஸியோம் 4 மிஷன் மூலமாக, கடந்த ஜூன் 25இல் நாசா வீரர்களுடன் இணைந்து விண்வெளிக்குப் பயணம் மேற்கொண்டார் இந்திய விமானப் படையைச் சேர்ந்த குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா. ஸ்பேஸ் எக்ஸின் டிராகன் விண்கலத்தில் பயணித்த இவர், சர்வதேச விண்வெளி நிலையத்தில் கால் பதித்த முதல் இந்தியர் என்னும் பெருமையைப் பெற்றார். அங்கு 18 நாட்கள் நாசாவைச் சேர்ந்த 3 பேருடன் தங்கியிருந்தார். சுபான்ஷுவின் விண்வெளி அனுபவம், ‘ககன்யான்’ திட்டத்தில் சிறப்பான பங்களிப்பைத் தரும் என நம்பலாம்.
ஒளிவீசும் ஹர்மன்ப்ரீத் கவுர்: நவம்பர் 2 அன்று நடந்த உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் தென்னாப்ரிக்காவை வென்று மகுடம் சூடியது இந்திய மகளிர் அணி. அணியை வழிநடத்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஊடகங்களால் கொண்டாடப்பட்டார்.
வெற்றித்தருணத்தின் திக்குமுக்காடலிலும்கூட, ‘இந்த வெற்றிக்கு முக்கியக் காரணம் பயிற்சியாளர் அமோல் மஜும்தார்’ என்று கூறி அவரது பாதம் தொட்டுப் பணிந்த ஹர்மன்ப்ரீத் என்றென்றைக்கும் கிரிக்கெட் ரசிகர்களின் மனங்களில் ஒளிவீசுவார்.
கேன்ஸ் விருதுப் பெண்! - தனது அறிமுகப் படமான ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ படத்துக்காக 77ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவில், 30 ஆண்டுகளுக்குப் பிறகு கிராண்ட்பிரிக்ஸ் விருதை வென்ற முதல் இந்திய இயக்குநர் என்ற பெருமையைப் பெற்றார் பாயல் கபாடியா.
ஆசிய திரைப்பட விருது, ஆசியா பசிபிக் திரை விருதினையும் இப்படம் வென்றது. இதற்கு முன்னர், இவர் இயக்கிய ‘எ நைட் ஆஃப் நோயிங் நத்திங்’ ஆவணப்படம், 2021 கேன்ஸ் விழாவில் பரிசு பெற்றது. இப்படங்களின் வழியே சர்வதேசக் கவனம் பெற்ற இந்திய இயக்குநர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் பாயல்.
திவ்யா தேஷ்முக்கின் சாதனை! - ஜார்ஜியாவில் நடந்த பிடே மகளிர் உலகக்கோப்பை செஸ் போட்டியில் பட்டம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைத் தட்டிச் சென்றார் திவ்யா தேஷ்முக். 18 வயதான இவர் தன்னை எதிர்த்து விளையாடிய சக இந்தியரான கொனேரு ஹம்பியை இறுதிப் போட்டியில் ‘டைபிரேக்கரில்’ வென்றார்.
இந்தியாவில் கொனேரு ஹம்பி, துரோணவல்லி ஹரிகா, ஆர்.வைஷாலிக்குப் பிறகு கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்து பெற்ற நான்காவது பெண் என்ற பெருமையைப் பெற்ற திவ்யா தேஷ்முக், செஸ் விளையாட்டில் பெண்கள் பலர் மேலும் ஆர்வத்துடன் பங்கேற்க வழியமைத்துள்ளார்.
இளம் புயல் - ‘அடுத்த சச்சின்’ என்று புகழுமளவுக்கு கிரிக்கெட் ரசிகர்களின் ஆதர்சமாக மாறி நிற்கிறார் பிஹாரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி. 14 வயதான இவர், சமீபத்தில் பிரதமரின் ‘பால புரஸ்கார்’ விருதினைப் பெற்றார். 12 வயதில் பிஹாரின் 19 வயதுக்கு உள்பட்டோருக்கான அணியில் (யு-19) இடம்பிடித்த இவர், பின்னர் இந்திய யு-19 அணியிலும் விளையாடி ரன் குவித்தார்.
கடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்காகக் களமிறங்கியவர், குஜராத்துக்கு எதிராக 35 பந்துகளில் சதமடித்தார். பல்வேறு போட்டிகளில் தொடர்ந்து ரன்களைக் குவித்து உலகக்கோப்பைத் தொடருக்கான இந்தியா யு-19 அணியில் இடம்பெற்றிருக்கும் இந்த இளம் புயல், வரவிருக்கும் தென்னாப்ரிக்கா யு-19 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.