

சிம்பொனி ராஜா: தமிழர்களின் பெருமித அடையாளமான இளையராஜா உருவாக்கிய சிம்பொனி இசைத் தொகுப்பான ‘வேலியன்ட்’, லண்டன் நகரத்தில் மார்ச் 8இல் அரங்கேற்றப்பட்டது. இது இளையராஜா இசைப்பயணத்தின் பொன்விழா ஆண்டும் கூட. அதையும் முன்னிட்டுத் தமிழக அரசு செப்டம்பர் 13 அன்று சென்னையில் விழா நடத்தி கௌரவித்தது.
மத்திய அரசு இளையராஜாவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இளையராஜாவின் சிம்பொனியை லண்டனில் இசைத்த அதே குழுவினர் சென்னையிலும் இசைத்து ரசிகர்களை மகிழ்வித்தனர்.
திருப்பூரிலிருந்து டெல்லிக்கு... திருப்பூரில் பிறந்த சி.பி.ராதாகிருஷ்ணன் நாட்டின் 15ஆவது குடியரசுத் துணைத் தலைவர் ஆனார். முன்னதாக ஜார்க்கண்ட், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களின் ஆளுநராகப் பொறுப்பு வகித்த இவர், கல்லூரிக் காலத்தில் டேபிள் டென்னிஸிலும் ஓட்டப்பந்தயத்திலும் பல வெற்றிகளைப் பெற்றவர்.
வேட்பாளராக இவரை முன்மொழிந்த பிரதமர் நரேந்திர மோடி, “விளையாட்டில் ஆர்வம் உள்ள ராதாகிருஷ்ணன் அரசியல் விளையாட்டுகளில் ஈடுபடாதவர்” என்று நகைச்சுவையாகப் பாராட்டினார்.
தங்கம்... தங்கம்... தங்கம்! - டெல்லியில் நடந்த தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் கேரம் வீராங்கனை எல்.கீர்த்தனா தங்கம் வென்றதன் மூலம், கடந்த 15 ஆண்டுகளாகப் பெண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழகம் வெற்றி பெறாத குறை நீங்கியது.
மாலத்தீவில் நடந்த உலகக் கோப்பை கேரம் போட்டியில் ஒற்றையர், இரட்டையர், அணியாகப் பங்கேற்பது ஆகிய மூன்று பிரிவுகளிலும் கீர்த்தனா தங்கம் வென்று அசத்தினார். இவரது தாய் இந்திராணி வீட்டு வேலை செய்கிறார். 6 வயதிலேயே தந்தையை இழந்த கீர்த்தனா அகிலம் போற்றும் உயரத்தை அடைந்திருக்கிறார்.
கபடியில் சாதித்த கார்த்திகா: பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் பெண்கள் கபடிப் போட்டியில் ஈரானை வென்று இந்தியா தங்கப்பதக்கம் வென்றதன் பின்னணியில் அணியின் துணை கேப்டனான கார்த்திகாவின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது.
கார்த்திகாவின் தந்தை கட்டுமானத் தொழிலாளி. தாய் தூய்மைப் பணியாளர். ‘சமூக நோக்கிலும் பொருளாதார நோக்கிலும் பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த பலர், சாதனை படைக்கும் திறனோடுதான் இருக்கிறார்கள்; அதை அவர்கள் உணர்ந்தால் போதும்’ என்கிறார் கார்த்திகா.
அபினேஷின் உறுதி: பஹ்ரைன் ஆசிய ஆண்கள் கபடிப் போட்டியில் இந்திய ஆண்கள் அணியும் தங்கம் வென்றது. திருவாரூர் மாவட்டம் வடுவூரைச் சேர்ந்த அபினேஷ் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இவர் பொருளியல் பயிலும் முதலாமாண்டு மாணவர். அபினேஷின் தந்தை இறந்துவிட்டார்.
இவருக்கு இரண்டு தங்கைகள். இந்நிலையில் அவர் கபடி விளையாடச் செல்வது பொறுப்பற்ற நடவடிக்கையாகச் சமூகத்தால் பார்க்கப்பட்டது. ஆனால் தனது நோக்கத்தில் அபினேஷ் உறுதியாக இருந்து வென்றார். தமிழக அரசு அபினேஷ், கார்த்திகா இருவருக்கும் தலா ரூ. 25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கியது.
சொல்லியடித்த ஜோஷ்னா! - சென்னையில் நடந்த உலகக்கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் இறுதிச்சுற்றில் ஹாங்காங்கை 3-0 என்ற கணக்கில் வென்றதன் மூலம் இந்தியா தனது முதல் உலகக் கோப்பைப் பட்டத்தைப் பெற்றது. இந்திய அணியின் ஜோஷ்னா சின்னப்பா வெற்றிக்குத் துணைநின்றார்.
ஜப்பான் ஓபன் ஸ்குவாஷ் ஒற்றையர் பிரிவு, சிஐஐ வெஸ்டர்ன் இந்தியா தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவுப் போட்டி ஆகியவற்றிலும் ஜோஷ்னா வெற்றி பெற்றார். முக்கியமான போட்டிகளின்போது சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேறி, கவனச்சிதறல்களைத் தவிர்ப்பது இவரது பாணி!
கவனம் ஈர்த்த காமெட்: உலகமே கவனிக்கிற செயற்கை நுண்ணறிவுத் துறைத் தொழில்முனைவோரில் ஒருவர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ். சென்னை ஐஐடியில் படித்த இவர், இந்தியாவின் இளம் பில்லியனராக இந்த ஆண்டு பேசப்பட்டார். அவர் இணை நிறுவனராக இருக்கும் ‘பெர்ப்ளெக்ஸிட்டி ஏஐ’ நிறுவனம், ‘காமெட்’ என்கிற ப்ரௌசரை அறிமுகப்படுத்தியது.
கூகுள் நிறுவனத்தின் ப்ரௌசரான கூகுள் க்ரோம் அதிகப் பயனாளிகளோடு செல்வாக்குச் செலுத்தினாலும், காமெட்டுக்குக் கிடைத்த வரவேற்பு பெரிதாகப் பேசப்பட்டது.
தந்தை தனயன் மோதல்: ‘இனி கட்சியின் தலைவர் அன்புமணி அல்ல. அவர் செயல் தலைவராக இருப்பார்’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தது, அக்கட்சியினரைக் குழப்பத்தில் ஆழ்த்தியது.
பொதுக்குழு மூலமாகத் தேர்வு செய்யப்பட்ட தன்னை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என அன்புமணி பதில் அறிக்கை விட்டார். அறிக்கைப்போர், கடுமையான விமர்சனங்கள், போட்டிக் கூட்டங்கள், ஒருவரை ஒருவர் பொறுப்பிலிருந்து விலக்குதல் என நீள்கிறது மோதல்.
தவெக என்கிற புதிர்: வாரத்துக்கு ஒருமுறை மக்களைச் சந்திக்கும் நோக்கத்துடன் தவெக தலைவர் விஜய் மேற்கொண்டு வந்த பரப்புரைப் பயணம் கரூர் துயரத்தில் முடிந்தது. அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தமிழகத்தை உலுக்கியது.
விஜய்யும் கட்சியின் பிற நிர்வாகிகளும் தமிழகக் காவல் துறையும் இந்நிகழ்வை எதிர்கொண்ட முறை விமர்சனத்துக்கு உள்ளானது. வரும் சட்டமன்றத் தேர்தலில் தவெக பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா என விவாதங்கள் நடக்கின்றன.
அரசியல் திருப்பம்: முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து தவெகவில் சேர்ந்தது எதிர்பாராத திருப்பம். அவருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே இருந்த உரசல், ஒன்றுபட்ட அதிமுகவுக்காக செங்கோட்டையன் எடுத்த முயற்சிகளால் மேலும் தீவிரமானது.
தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ள செங்கோட்டையனுக்கு, தான் சார்ந்த ஈரோடு தொகுதியை தவெக கோட்டை ஆக்குவதுதான் தற்போதைய இலக்கு.
ஆவேசம்... ஆசுவாசம்: உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியதன்பேரில், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானும் அவர் மீது பாலியல் புகார் கூறிவந்த நடிகை விஜயலட்சுமியும் பரஸ்பரம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டதால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
சீமானுக்கு எதிராக டிஐஜி வருண்குமார் தொடுத்த அவதூறு வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திருச்சி விமான நிலைய மோதல் உள்ளிட்ட சில வழக்குகளிலிருந்தும் சீமான் விடுவிக்கப்பட்டார். தங்களுக்குப் புதிய போட்டியாகியிருக்கும் தவெகவைக் கடுமையாக விமர்சிப்பது சீமான் ஆதரவாளர்களின் தற்போதைய கூடுதல் செயல்பாடு.
இடத்தை இழக்காத ஸ்டாலின்: ஒருபக்கம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி பல்வேறு தரப்பினர் நடத்தி வரும் போராட்டங்கள், நிர்வாகக் குறைபாடுகளுக்காக உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் அடிப்படையான துறைகளின் உயர்மட்ட அதிகாரிகளைக் கடுமையாக விமர்சிப்பது, அமலாக்கத் துறை சோதனைகள் எனத் திமுக அரசுக்குப் பல பிரச்சினைகள் ஏற்பட்டன.
எனினும் மக்கள் நலத்திட்ட அறிவிப்புகளால் தனக்கான இடத்தைத் தக்க வைத்துக்கொள்பவராகவே இருந்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். 2026 தேர்தலில் இந்தச் செல்வாக்கு செல்லுபடியாகுமா என்பதுதான் தமிழகத்தின் தவிர்க்க முடியாத விவாதப் பொருள்!