2026 சட்டமன்றத் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் பெண் வாக்காளர்களை மனதில் வைத்துச் செயல் திட்டங்களை / தேர்தல் வாக்குறுதிகளை உருவாக்கியிருப்பதைப் பார்க்க முடிகிறது. பெண்களின் தேவை என்று இன்று முதலாவதாக அடையாளப்பட்டிருப்பது சமையலறை சார்ந்த இலவசப் பொருள்கள்தாம்.
கூடவே, பெண்களை அதிகாரப்படுத்துவோம் என்கின்ற குரலை இன்று அனைத்துக் கட்சிகளின் உறுதிமொழிகளிலும் கேட்க முடிகிறது. அதற்கான வழிகள் எவை என்று பார்க்கும்போது - கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் தொடங்குவதற்கான ஆதரவு என்பதாக அந்தப் பட்டியல் நீள்கிறது.
வேலைவாய்ப்பு
இந்தியாவிலேயே முதன்முறையாக அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 30 சதவீத வேலைகளைத் தொண்ணூறுகளில் ஒதுக்கீடு செய்தது தமிழகம்தான். அந்த எண்ணிக்கையை உயர்த்துவோம் என்று 2021 தேர்தல் வாக்குறுதியில் திமுக கூறியிருந்தபோதிலும் அதற்கான அரசாணை இதுவரை வழங்கப்படவில்லை.
அதேவேளையில், சமூக நலம் – மகளிர் உரிமைத் துறையிலும் சுகாதாரம் / பெண்கள் தொடர்பான பணிகளிலும் அதிக அளவில் பெண் பணியாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். எனினும் 50 சதவீத வேலைவாய்ப்பு என்கின்ற இலக்கினைப் பெண்கள் எட்டவில்லை.
அடுத்து, பெண்கள் தொழில் தொடங்க ஊக்கம் அளிப்போம் என்று கட்சிகள் முழங்குகின்றன. திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் இதில் இலக்கு மக்களாக (target audience) சுய உதவிக் குழுக்களை அடையாளம் காட்டுகின்றன.
தமிழ்நாட்டில் பெண்கள் சுய உதவிக் குழுக்கள் பெண்கள் சுய அதிகாரத்துடன் இயங்குவதற்கு உதவியிருக்கின்றன. இக்குழுக்களை ஆட்சியாளர்கள் ஆதரித்து வளர்த்தது இதில் பெரிய பங்கு வகிக்கிறது. ஆனால், சமுதாயத்தை உருவாக்குவதில் பெண்களுக்கு ஊக்கம் அளிக்க இக்குழுக்கள் பெரிய பங்கு எதையும் ஆற்றிவிடவில்லை.
உண்மையில் பஞ்சாயத்துத் தலைவர் பதவிகளில் அமரும் பல பெண்களுக்கு நேரும் அதே நிலை இங்கும் ஏற்பட்டிருக்கிறது. ஆண் மையச் சமூகம் இந்தக் குழுக்களையும் அவற்றின் பொருளாதாரத்தையும் உட்செரித்து ஒரு வருமான வழியாகத் தகவமைத்துக் கொண்டது.
பெண்களை ஒருங்கிணைத்து அரசின் திட்டங்களைச் செயல்படுத்த நடைமுறை சார்ந்த வழி - சுய உதவிக் குழுக்களின் அதிகாரத்தை மேலும் வலுப்படுத்துவதுதான். இதற்கான தெளிவான பார்வை திமுக, அதிமுக தேர்தல் வாக்குறுதிகளில் தென்படுகின்றன.
ஆனால், இவற்றுடன் தொழில் தொடங்குவதில் பெண்கள் சந்திக்கிற சமமற்ற நிலையை ஒழுங்கமைக்கவும் வாய்ப்புகளை உருவாக்கவும் அரசு உதவ வேண்டும். கூட்டு நிறுவனங்களைத் தொடங்குதல், ஆதரித்தல் - மகளிருக்கான வங்கி நிறுவி எளிதில் கடன் வழங்குதல், வட்டியில் மானியம் கொடுத்தல் போன்ற விரிவான தொழில் நடவடிக்கைகளுக்கான ஆதரவுக்கு வழி செய்திட வேண்டும்.
பெண்கள் இன்னும் காலூன்றாத தச்சு வேலை, மர வேலை, கடல் வேலைகள் (மீன் பிடிப்பு), மின்துறைப் பணிகள் - போன்ற துறைகளில் இளம் பெண்களுக்குப் பயிற்சியளித்து வேலைவாய்ப்பு அல்லது தொழில் முனைவுக்கான வாய்ப்புகள் ஏற்படுத்தித் தர வேண்டும்.
பாதுகாப்பு
மாற்றத்துக்கான சக்தியாகத் தங்களை முன்வைக்கும் கட்சிகள் பெண்களின் பாதுகாப்பு குறித்து அதிகம் பேசுகின்றன. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்துதான் இக்கட்சிகள் அதிகக் கவனம் செலுத்துகின்றன.
ஆட்சி அதிகாரத்தில் இல்லாத கட்சிகள் இதைத் தங்கள் முதன்மை இலக்காக முன்னிறுத்தும் சூழலில், ஆளுங்கட்சியும் இத்தேவையை அங்கீகரித்தே தனது வாக்குறுதிகளை முன்வைத்திருக்கிறது.
ஆனால், அனைத்து வாக்குறுதிகளும் காவலைப் பலப்படுத்தப்படுவது குறித்தும், தண்டனையைக் கடுமையாக்குவது குறித்தும் பேசுகின்றனவே தவிர, பாதிப்புக்கு உள்ளாகும் பெண்களின் வலிமையைப் பெருக்குவது, தங்களைத் தற்காத்துக்கொள்பவர்களாகப் பெண்களை உருவாக்குவது, குற்றச் செயல்களில் ஈடுபடாத அளவுக்கு ஆண்களிடம் புரிதலை ஏற்படுத்துவது குறித்த பார்வையை முன்வைக்கவில்லை. குடும்ப வன்முறை என்கின்ற இருட்டறையை இன்னும் யாரும் எட்டிப் பார்க்கவே இல்லை.
ஆரோக்கியம் பிறப்புரிமை
பெருகிவரும் புற்றுநோய்கள் குறித்த கவலையையும் அதற்கான முன்தடுப்பு நடவடிக்கைகளையும் கட்சிகள் முன்வைக்கின்றன. தமிழகத்தில் அதற்கான முன்னெடுப்பு மகளிருக்கு இலவசக் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்த் தடுப்பூசி போடுவதிலிருந்து தொடங்கியிருக்கிறது.
பொதுக் கழிப்பிடங்களில் இலவச நாப்கின் வழங்குவது, மாதவிடாய் விடுப்பு எனப் பல்வேறு நலத்திட்டங்களும் இன்னும் தீர்வு காண வேண்டிய அம்சங்கள் தொடர்பான கோரிக்கைகளும் நீண்டுகொண்டே செல்கின்றன.
பெண்களின் ஆரோக்கியம் பற்றிப் பேசத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சி. ஆனால், ஆரோக்கியமாக வாழ்வதற்கான பெண்ணின் உரிமை பற்றி எப்போது அரசியலர்கள் சிந்திப்பார்கள் எனத் தெரியவில்லை.
திருமண வயதை 21க்கு உயர்த்தவே முடியாத நிலையில், பிள்ளைப்பேறும் பெண்களின் உரிமை என்று பேச வாய்ப்பு கிடைப்பதில்லை. மூடநம்பிக்கைக் கொடுமைகளுக்குப் பெண்களை ஆளாக்கி, அவர்களின் அடிப்படை ஆரோக்கியத்தையும் கல்வி உரிமையையும் பறிக்கிற செயல்களுக்கு எதிராக மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.
மேலும் காவல் துறை, போக்குவரத்துத் துறை உள்ளிட்ட துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கான சிறப்புத் தேவைகள் நிறைவு செய்யப்பட வேண்டும் (நடமாடும் கழிப்பறை ஓர் எடுத்துக்காட்டு).
அதற்குப் பதிலாக அந்தப் பணிகளிலிருந்து பெண்கள் விடுவிக்கப்படக் கூடாது. அடுப்படியிலிருந்து பெண்களை விடுவிக்கும் பொதுச் சமையல்கூடங்கள், பணிபுரியும் இடங்களில் உணவு கிடைக்கச் செய்யும் ஏற்பாடுகள், குழந்தைக் காப்பகங்கள் ஆகியவை ஏற்படுத்தப்பட வேண்டும்.
குழந்தைக் காப்பகங்கள் வாக்குறுதியில் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், சமையல்கூடங்கள் பற்றி யாரும் பேசவில்லை. மிகக் குறைந்த அளவிலேனும் பெண்களின் சொத்துரிமை பற்றிக் கட்சிகள் பேசியிருக்கின்றன.
பெரும்பாலும் பெண்கள் பெயரில் பதிவுசெய்யப்படும் சொத்துகளுக்கான பதிவுக் கட்டணத்தைக் குறைப்பது அல்லது ரத்துசெய்வது என்கின்ற வாக்குறுதியை அவை தருகின்றன. பெண்கள் பெயரில் சொத்துக்கள் பதிவுசெய்வதை இவை ஊக்குவிக்கும். கடந்த தேர்தலைவிட இந்தத் தேர்தலில் முதன்மைக் கட்சிகளில் பெண் வேட்பாளர்கள் அதிகம்.
இன்னும் சில...
குடும்ப அட்டையில் பெண்கள் தலைவர்களாக இப்போது ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள் என்கிறபோதிலும் முழுமையான மாற்றமாகக் குடும்ப அட்டை என்கின்ற பெயர் மாற்றப்பட்டு உணவுப் பொருள் வழங்கும் அட்டை என்று அழைக்கப்பட வேண்டும். விவாகரத்துச் சட்டங்கள் எளிமையாக்கப்பட வேண்டும்.
மேலும், விவாகரத்தின்போது கூட்டு வாழ்க்கையில், வீட்டில் பெண் செலுத்திய உழைப்பு கணக்கிடப்பட்டு நஷ்டஈட்டுத் தொகை முடிவு செய்யப்பட வேண்டும். ‘விதவை’, ‘விபச்சாரி’, ‘முதிர்கன்னிகள்’, ‘பூப்பெய்துதல்’ போன்ற சொற்களுக்கு இணையான சொற்கள் ஆண்களைச் சுட்டப் பயன்படுத்தப்படுவதில்லை.
பெண்களைப் பாகுபடுத்தும் இத்தகைய சொற்கள் தடை செய்யப்பட வேண்டும்; குறைந்தபட்சம் அரசு நிர்வாகக் கோப்புகளிலிருந்து நீக்கப்பட வேண்டும். ‘35 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத பெண்களுக்குத் தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும்’ என்று திமுக அளித்திருந்த வாக்குறுதி நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இது போன்று ஆண்கள் சார்பின்றி பெண்கள் வாழ்வதற்கான வெளிகள் அரசின் ஆதரவுடன் ஏற்படுத்தப்பட வேண்டும். பெண்ணின் முக்கிய உரிமையான இணையரைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைக் காக்கும் பொருட்டு சாதி ஒழிப்பு வாரியம் அமைக்கப்பட வேண்டும். சாதி மறுப்புத் திருமணம் செய்வோருக்குப் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு உள்படத் தேவையான ஆதரவை அரசு வழங்கிட வேண்டும்.
- தொடர்புக்கு: oviacs2004@yahoo.co.uk