தமிழகத்தில் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டங்கள் 3 முறை நடைபெற்றன என்பதை நாம் அறிவோம். குறிப்பாக இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே 1930 காலகட்டங்களில் முதல் இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் தொடங்கியது. ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த ராஜாஜி, 1937-ம் ஆண்டு ஓர் ஆணை வெளியிட்டார். அதன்படி பள்ளிக் குழந்தைகள் அவசியம் இந்தி படிக்க வேண்டும் என்று அறிவித்தார். இதற்கு எதிராக மறைமலையடிகள், திருவிக, நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்ற தமிழறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தத் தொடங்கினர். இந்தி திணிப்புக்கு எதிராக மாநிலம் தழுவிய போராட்டத்துக்கான முயற்சிகளை சோமசுந்தர பாரதியார் முன்னெடுத்தார் என்பதை முன்னரே நாம் பார்த்தோம்.
இந்தி மொழி திணிப்பை நீதிக் கட்சியும் எதிர்த்தது. தங்களுடைய மாநாட்டில் இந்தி மொழி திணிப்புக்கு எதிராக தீர்மானங்களையும் நிறைவேற்றியது. 1938-ம் ஆண்டில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு கூட்டத்தில் அண்ணா கலந்துகொண்டு பேசினார். இதற்காக போலீஸார் அண்ணாவைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீஸாரின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளான கும்பகோணம் தாளமுத்து மற்றும் சென்னையைச் சேர்ந்த நடராஜன் ஆகியோர் சிறையிலேயே தங்களது இன்னுயிரை நீத்தனர். அதுதான் முதல் களப்பலி.
இவ்வாறு இந்தி திணிப்பு போராட்டங்கள் தீவிரமடைந்து கொண்டிருந்த நேரத்தில் 1939-ம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் மூண்டது. அதோடு இந்திய சுதந்திர போராட்டமும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது. இரண்டாம் உலகப் போரில் அன்றைய ஆங்கில அரசின் அணுகுமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் இருந்த காங்கிரஸ் அமைச்சரவை பதவி விலகியது. அந்த வகையில் சென்னை மாகாணத்தில் ராஜாஜியும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அதைத் தொடர்ந்து சென்னை மாகாண கவர்னராக இருந்த ஜான் எர்ஸ்கின், ஆட்சிப் பொறுப்பை ஏற்று வழிநடத்தினார். அவர்தான் இந்தி மொழி கட்டாயம் என்ற ஆணையை திரும்பப் பெற்றார். அவருடைய பெயரில் மதுரையில் செயல்பட்ட மருத்துவமனைதான் இன்றைக்கு ராஜாஜி மருத்துவமனையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
1947-ம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் பெற்றவுடன், 15 ஆண்டுகளுக்கு இந்தியை அரசு அலுவல் மொழியாகவும் இணை அலுவல் மொழியாக ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம் என்றும் முடிவு செய்து அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு 1950-ம் ஆண்டு ஜனவரி 26 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. பின்னாளில் நேரு மறைந்த பிறகு 1964-ம் ஆண்டு பிரதமராக லால் பகதூர் சாஸ்திரி பொறுப்புக்கு வந்தார். அப்போது ஆங்கிலம் இணை அலுவல் மொழியாக நீடிக்கும் என்றும் அதேநேரம் காலவரையறையின்றி இனிமேல் பிரதானமாக இந்தியே ஆட்சி மொழியாக செயல்படுத்தப்படும் என்றும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை அன்றைய திமுக கடுமையாக எதிர்த்தது. காங்கிரஸில் இருந்து விலகி 1959-ல் சுதந்திரா கட்சியைத் தொடங்கி, செயல்பட்டுவந்த ராஜாஜியும் தன்னுடைய நிலைப்பாட்டில் இருந்து மாறுபட்டு இந்தி மொழி திணிப்பை எதிர்த்தார். தமிழ்நாட்டைப் போலவே இந்தி பேசாத பல்வேறு மாநிலங்களில் இந்தி மொழி திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துக் கிளம்பின. 1965-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி முதல் புதிய நடைமுறை செயல்படுத்தப்படும் என்று முன்னரே அறிவிக்கப்பட்டதற்கு ஏற்ப அலுவல் மொழிச் சட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்தது.
இது இந்தி பேசாத மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 1965-ம் ஆண்டு குடியரசு தினம் நெருங்கி வரும் வேளையில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் தீவிரமடைந்தன. சுதந்திரா கட்சித் தலைவர் ராஜாஜி, நாம் தமிழர் இயக்கத் தலைவர் சி.பா.ஆதித்தனார், திமுகவைச் சேர்ந்த நாவலர் நெடுஞ்செழியன், முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த இஸ்மாயில் சாகிப் ஆகியோர் பங்கேற்ற இந்தி எதிர்ப்பு மாநாடு திருச்சியில் நடைபெற்றது.
ஜனவரி 25-ம் தேதி மதுரையில் மாணவர் போராட்டக்குழு செயலாளர் அண்ணன் விருதுநகர் பெ.சீனிவாசன், பின்னாளில் அமைச்சராக இருந்த காளிமுத்து, கவிஞர் நா.காமராசன் உள்ளிட்ட ஏராளமானோர் ஊர்வலமாகச் சென்றனர். அந்த ஊர்வலத்தில் மோதல் ஏற்பட்டு பெரும் கலவரமாக மாறியது. மாணவர்கள் பலர் காயமடைந்தனர். மதுரை நகரில் உள்ள காங்கிரஸ் கொடிக்கம்பங்கள் எல்லாம் வெட்டி சாய்க்கப்பட்டன.
ஜனவரி 25-ம் தேதி நள்ளிரவில் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், என்.வி.நடராசன், கலைஞர், நாஞ்சில் மனோகரன், சத்தியவாணி முத்து, நடிகர் கே.ஆர்.ராமசாமி உள்ளிட்ட திமுக முன்னணித் தலைவர்களை போலீஸார் கைது செய்தனர். அதேபோல் தமிழகம் முழுவதும் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதனால் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்தது. அரசின் தடை உத்தரவு, கைது நடவடிக்கைகள் என மறுநாள் இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் பற்றி எரிந்தன.
மாநிலம் முழுவதும் ‘இந்தி அரக்கி’ என்ற கொடும்பாவியை ஊர்வலமாக எடுத்துச் சென்று மாணவர்கள் எரித்தனர். சென்னை கடற்கரையில் ஒன்று திரண்ட மாணவர்கள் இந்தி புத்தகங்களை கிழித்து தீக்கிரையாக்கினார்கள். இன்றைக்கு அண்ணா சிலை அருகே உள்ள வாலாஜா சாலை முனையில் தேசியக் கொடிக் கம்பத்தை வெட்டி சாய்த்து தீ வைத்துக் கொளுத்தினார்கள். இதனால் போலீஸார் தடியடி பிரயோகம் நடத்தினர்.
சிதம்பரத்தில் மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. போராட்டம் வேகமாகப் பரவத் தொடங்கியதால் பள்ளிகள், கல்லூரிகள் காலவரையறையின்றி மூடப்பட்டன. அன்றைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, தமிழக முதல்வர் பக்தவத்சலம், உள்துறை அமைச்சர் கக்கன், அமைச்சர் ராமையா போன்றவர்கள் மாணவர்களின் கடும் கோபத்துக்கும், விமர்சனங்களுக்கும் ஆளானார்கள்.
சென்னை மாநகரப் பகுதிகளில் நடைபெற்ற இந்தி எழுத்து அழிப்பு, ரயில் மறியல், தபால் நிலையங்கள் மீது தாக்குதல், பொதுச் சொத்துகளை சேதப்படுத்துதல், தீ வைத்தல், கல்வீச்சு, தடியடி என போராட்டங்கள் மோசமடைந்து வந்ததைப் போலவே நகராட்சிப் பகுதிகளிலும் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டங்கள் வேகமெடுத்தன.
திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள தபால் நிலையத்தை மாணவர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். தஞ்சையில் வங்கிகளையும், தொலைபேசி நிலையத்தையும் தீ வைத்து எரித்தனர். அங்கும் போலீஸ் தடியடி நடத்தப்பட்டதோடு, கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டன.
தஞ்சை மாவட்டத்தில் அகர மாங்குடியில் தபால் நிலையம் எரிக்கப்பட்டது. அங்கு வந்த போலீஸாரின் ஜீப்பை மறித்து அதற்கும் தீ வைத்தார்கள். அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். ஆற்காட்டில் நடைபெற்ற போராட்டத்தின்போது அரசு கதர் கடைக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த கதர் துணிகளை வெளியே எடுத்துவந்து போட்டு தீ வைத்து கொளுத்தினார்கள். அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். 9 பேர் காயம் அடைந்தனர்.
ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் மாணவர்கள் கலவரம் செய்தபோது, போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் தங்களது இன்னுயிரை மாய்த்தனர். அதேபோல் வடாற்காடு பேர்ணாம்பட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். அன்றைய ராமநாதபுரம் மாவட்டம் சாத்தூர், முதுகுளத்தூரில் தடையை மீறி மாணவர்கள் ஊர்வலமாகச் சென்றனர். அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதில் மாணவர்கள் பலர் காயமடைந்தனர்.
கோவையில் இந்தி திரைப்படங்கள் திரையிடப்பட்ட தியேட்டர்களுக்கும் தீ வைக்கப்பட்டது. உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சியில் எண்ணற்றோர் பலியாகினர். திருச்செங்கோடு தபால் நிலையத்தின் பெயர் பலகையை உடைத்ததோடு, அங்கு கலவரமும் ஏற்பட்டது. அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
அன்றைய கோவை மாவட்டம் வெள்ளக்கோவிலில் ஏற்பட்ட கலவரத்தில் 8 பேர் படுகாயமடைந்தனர். சென்னையை அடுத்த சிங்கபெருமாள் கோயில் ரயில் நிலையத்தை மாணவர்கள் அடித்து நொறுக்கினார்கள்.
இவ்வாறு தமிழ்நாடு முழுவதும் இந்திப் போராட்டம் வலுக்கவே, மும்பை, நாக்பூரில் இருந்து 12 ராணுவ விமானங்கள் மற்றும் ராணுவத்தினர் சென்னைக்கு வரவழைக்கப்பட்டனர். பிப்.10-ம் தேதி மட்டும் 7 இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். புதுச்சேரியில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்குள்ள ரயிலடிக்கு தீ வைத்தனர். அப்போது 2 இடங்களில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து கடலூரில் இருந்து ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இப்படியாக இந்தி மொழி திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் தமிழகத்தில் 18 நாட்கள் நீடித்தன. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் ஆங்கிலமே அலுவல் மொழியாக நிரந்தரமாக நீடிக்கும் என்று தமிழக முதலமைச்சர் பக்தவத்சலம் உத்தரவாதம் அளித்தார். அதைத் தொடர்ந்து இந்தி மொழி திணிப்புக்கு எதிரான மாணவர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது. கலவரங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட மாணவர்கள், தடியடி, துப்பாக்கி சூட்டில் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்த மாணவர்கள் எல்லோரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்தி திணிப்புக்கு எதிராக மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் போராட்டத்தில் குதித்தனர். அதில் 2 ஆசிரியர்கள் தீக்குளித்து உயிரிழந்தனர். ஒருவர் பெயர் சின்னசாமி. இவர் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர். மற்றொருவர் திருச்சி மாவட்டம் அய்யம்பாளையத்தைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் வீரப்பன் என்பவராவார். அதேபோல் சென்னையைச் சேர்ந்த சிவலிங்கம், திமுகவைச் சேர்ந்த ரங்கநாதன், புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரைச் சேர்ந்த முத்து, விராலிமலையைச் சேர்ந்த சண்முகம் ஆகியோரும் தீக்குளித்து தங்கள் உயிரை ஈந்தனர். இப்படி பலர் உண்டு.
போராட்டங்கள் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து 10 நாட்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டன. ஆனாலும் பெரும்பாலான மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு வரவில்லை. இத்தகைய சூழலில் பிப்.17-ம் தேதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே அரசு அலுவல் மொழியாக நீடிக்கும் என்று அறிவித்தார். தமிழ்நாட்டில் நடந்த இந்தி மொழி திணிப்புக்கு எதிரான போராட்டத்தின் தாக்கம் ஆந்திரம், வங்காளம் உள்ளிட்ட சில மாநிலங்களிலும் விரிவடையத் தொடங்கியதால்தான் மத்திய அரசு இத்தகைய முடிவு எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது என்று அப்போது பரவலாகக் கூறப்பட்டது.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று பல்வேறு ரணங்களை அனுபவித்தவர்கள் பலர். அவர்களைப் பற்றியும், அவர்களது குடும்பத்தின் இன்றைய நிலையைப் பற்றியும் வெளியுலகத்துக்கு தெரியவில்லை. கி.ஆ.பெ.விஸ்வநாதம், சி.பா.ஆதித்தனாரும் சிறைக்குச் சென்றதுண்டு. குன்றக்குடி அடிகளாருக்கு சிறைத் தண்டனைக்குப் பதிலாக ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.
பொள்ளாச்சி தபால் நிலையம் முன்பு நடந்த போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் எண்ணற்றோர் பலியாகினர். ஆனால் அந்த விவரம் வெளியுலகத்துக்கு தெரியாமல் மறைக்கப்பட்டு விட்டது என்ற குற்றச்சாட்டும் அப்போது பரவலாக வைக்கப்பட்டது.
திருப்பூரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர், போராட்டக்காரர்களால் எரித்துக் கொலை செய்யப்பட்டார். தேனி மாவட்டம் கூடலூரில் தபால் நிலையம் மீது தாக்குதல் நடத்தியபோது துப்பாக்கி குண்டு பாய்ந்து 3 பேர் உயிரிழந்தனர். அரசின் கணக்கின்படி தமிழகம் எங்கும் நடந்த போராட்டங்களில் 63 பேர் உயிரிழந்தனர் என்று கூறப்பட்டது. ஆனால் உண்மையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை பல மடங்கு இருக்கும் என்று கூறப்பட்டது.
இந்தி மொழி எதிர்ப்பு விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் மத்தியில் உணவு அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியமும், பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த ஓ.விஅழகேசனும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
1967-ம் ஆண்டு தமிழகத்தில் திமுக ஆட்சி வெற்றிபெற்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்கு இந்தி மொழி திணிப்பு போராட்டம் காரணம் என்று சொல்லப்பட்டாலும், அன்றைய காலகட்டத்தில் தமிழகத்தில் நிலவிய உணவு தட்டுப்பாடும் முக்கிய காரணியாக இருந்தது. இதை கவனத்தில் கொண்டுதான் சென்னையிலும், கோவையிலும் ‘ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி வழங்கப்படும்’ என்று தேர்தல் உறுதிமொழியை வழங்கினார் அண்ணா. அதேநேரம் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அந்த வாக்குறுதியை திமுக அரசால் நிறைவேற்ற முடியவில்லை. சென்னையில் மட்டும் ஆங்காங்கே இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் திராவிட கொள்கைகள் பற்றியோ, அதன் சித்தாந்தங்களைப் பற்றியோ எதுவும் அறியாத பாமர மக்கள், தங்கள் தலைவர்களின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு போராட்டக் களங்களில் சுற்றிச் சுழன்று வந்தனர். மேலும் அன்றைய திராவிடர் இயக்கம் பிராமணரல்லாதார் இயக்கமாகவும், இந்தி எதிர்ப்பு, தமிழக உரிமைகளை முன்னிறுத்தி செயல்பட்டதால், வெகுஜன மக்களை கவர்ந்த இயக்கமாகவும் வளர்ந்தது.
அதேநேரம் மத்தியில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆட்சி காலத்தில் அமைச்சரவையில் அங்கம் வகித்த பிரதான கட்சியாக திமுக பல முறை இருந்துள்ளது. அத்தகைய காலங்களில் இந்தி திணிப்பு மற்றும் மாநில உரிமைகளுக்கு அழுத்தம் கொடுத்து எத்தனையோ விவகாரங்களுக்குத் தீர்வு கண்டிருக்கலாமே என்ற கருத்தும் மக்களிடம் எழாமல் இல்லை.
திமுக நிறுவனர் அண்ணா பழகுவதற்கு மிகவும் எளியவர். பேச்சால் அனைவரையும் கட்டிப்போடும் ஆற்றல் மிக்கவர். மற்றும் அவருடைய எளிய தோற்றம், எல்லோரையும் அரவணைக்கும் பண்பு போன்றவற்றால் வெகுஜன மக்களை ஈர்த்து விட்டார். அதேபோல் ‘தம்பி’ என்ற ஒற்றை வார்த்தையால் கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். மிகப் பெரிய தேசியக் கட்சியான காங்கிரசை 1967 தேர்தலில் தோற்கடித்து ஆட்சிக் கட்டிலில் திமுக அமர்வதற்கு இவையும் காரணங்களாக அமைந்தன.
அடித்தட்டு, விளிம்பு நிலை மக்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாக்கி பெருமைப்படுத்தியவர் அண்ணா. அத்தகைய பண்பாளரான அண்ணா மறைவுக்குப் பிறகு கட்சியில் எத்தனையோ மாற்றங்கள், மாச்சரியங்கள் நிகழ்ந்தன. அண்ணாவால் இதயக்கனி என்று அழைக்கப்பட்ட எம்ஜிஆர் கட்சியில் இருந்து நீக்கம், அவரைத் தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் கட்சியில் இருந்து வெளியேறுதல், அதிமுக உருவாக்கம், திமுக ஆட்சியில் இருந்து விலகியது என எத்தனையோ நிகழ்வுகள் அடுத்தடுத்து நிகழ்ந்து விட்டன.
அதேபோல், 1960 காலகட்டங்களிலும் திமுக நிறுவனர் அண்ணா மற்றும் முன்னணி தலைவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திமுகவில் இருந்து விலகி தமிழ் தேசியக் கட்சி என்ற கட்சியை ஈவிகே சம்பத் தொடங்கினார். அதுபற்றி பார்க்க இருந்தபோதுதான், ‘பராசக்தி’ திரைப்படம் பேசிய அரசியல் பரபரப்பானதால் இந்தி மொழி திணிப்பு எதிர்ப்பு போராட்டங்கள் குறித்து நாம் பார்க்க வேண்டியதாயிற்று. தமிழ் தேசியக் கட்சி குறித்து அடுத்து பார்ப்போம்...
(தொடர்வோம்...)