சிறப்புக் கட்டுரைகள்

ஈவிகே சம்பத் மனதைப் பாதித்த தொடர் சம்பவங்கள் - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 97

கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

திராவிடக் கொள்கைகளில் உறுதியாக இருந்தவர் ஈவிகே சம்பத். அதில் எந்தவொரு சறுக்கலோ, சிந்தனை மாற்றமோ ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். அவரைப் போலவே மற்ற தலைவர்களும் தங்களது கொள்கையில் உறுதியோடு இருக்க வேண்டும் என்று விரும்பினார். தற்புகழ்ச்சி கொள்ளாதவர்; அதேபோல் துதிபாடுவோரையும் விரும்பாதவர். தான் நினைத்த ஜனநாயக சீர்திருத்த மாற்றங்களைக் கட்சியில் கொண்டுவர இயலாத சூழலில்தான் தனிக் கட்சியைத் தொடங்கினார்.

சம்பத்தின் இந்த அதிரடி முடிவுக்கு தங்கள் கற்பனைக்கேற்றவாறு பலரும் பலவித கருத்துகளைத் தெரிவித்தனர். ஆனால், சம்பத் இத்தகைய முடிவு எடுப்பதற்கு அவருக்கு ஏற்பட்ட தொடர் அவமானங்கள், நெருக்கடிகளே முக்கிய காரணிகளாக அமைந்தன. அவற்றுள் சிலவற்றை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்...

அப்போதெல்லாம் திமுக முன்னணி தலைவர்கள் அடைமொழிகளோடு அழைக்கப்பட்டனர். ‘கலைஞர்’, ‘கவிஞர்’, ‘கலைவாணர்’ போன்ற அடைமொழிகள் கலைத்துறையினருக்கு மட்டும் இருப்பதாக இருந்தால் விரசமாக்கப்படுவதில்லை. அரசியல்வாதிகளுக்கு ‘அடைமொழி’ என்பது பிற்போக்கான பரிதாப நிலையாகும். அவ்வாறு அவர்களை அழைப்பது பூஜா மனோபாவத்தை வளர்ப்பதோடு, பாசிசப் பாதையை நோக்கி அது கொண்டு செல்லும் என்னும் கருத்தைக் கொண்டிருந்தார்.

அதை வலியுறுத்தும் வகையில் 1961-ம் ஆண்டு பொங்கலையொட்டி வெளிவந்த ‘இனமுழக்கம்’ பொங்கல் மலரில் அவர் வெளியிட்ட கட்டுரையில், இனிமேல் தம்மை ‘சொல்லின் செல்வர்’ என்ற அடைமொழியிட்டு அழைக்க வேண்டாம் என்றும், ‘தோழர் சம்பத்’ என்று அழைப்பதே தமக்கு மகிழ்ச்சியைத் தரும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

          

ஈவிகே சம்பத்தின் இந்தக் கட்டுரை அண்ணாவுக்கும், கலைஞருக்கும் எரிச்சலைத் தந்தது. ‘நாவலர்’, ‘சிந்தனைச் சிற்பி’, ‘தத்துவ மேதை’, ‘காஞ்சியார்’, ‘நாஞ்சிலார்’... என பல அடைமொழிகளில் முன்னணி தலைவர்கள் அழைக்கப்பட்டனர். இதனால் அவர்களின் சொந்தப் பெயரே பலருக்கும் தெரியாமல் போகும் நிலை ஏ ற்பட்டது. திமுகவின் பொதுக் குழுவில் சம்பத் பேசும்போதுகூட இதை எடுத்துக்கூறி ‘தோழர், தோழியர்’ என்று கவுரவமான நிலையைக் கடைபிடியுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

கலகம் ஏற்படுத்திய வேலூர் பொதுக்குழு

1961 ஜனவரி 21, 22-ம் தேதிகளில் வேலூரில் பொதுக்குழு கூடுவதாக அறிவிப்பு வெளியாகியது. அதைத்தொடர்ந்து சம்பத் இல்லத்தில் மதியழகன், கண்ணதாசன், ராஜாராம், மேயர் முனுசாமி, ஏ.கோவிந்தசாமி, எம்.பி.சுப்பிரமணியம், பழ.நெடுமாறன், கே.செல்வராஜ், சென்னை மாவட்டச் செயலாளர் மணிவண்ணன், கே.கோவிந்தசாமி, டி.கே.பொன்னுவேல், ஆர்.எஸ்.பாண்டியன், கண்ணப்பா வள்ளியப்பன் ஆகியோர் கூடி 10-க்கும் மேற்பட்ட தீர்மானங்களைத் தயாரித்தனர். தீர்மானங்கள் தயாரிப்பதில் வல்லவர் சம்பத். முறையற்ற தலைவர்களைத் தீர்மானங்கள் மூலமேஅவர்களை சித்ரவதை செய்துவிடுவார். இந்நிலையில் சம்பத் தீர்மானங்களை தயாரித்துள்ளார் என்ற செய்தி பரவியதும் கட்சிக்குள் பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்கெனவே மாயவரம் பொதுக்குழுவில் அவர் கொண்டு வந்த தீர்மானங்கள் அண்ணாவையும், கலைஞரையும் அதிர்ச்சியுற வைத்தன. குறிப்பாக கட்சியின் தலைமை நிர்வாகிகள் எம்எல்ஏ.வாகவோ, எம்.பி.யாகவோ இருக்கக் கூடாது என்னும் தீர்மானம் அந்தப் பொதுக்குழுவில் பலத்த விவாதத்தை ஏற்படுத்தியது. சம்பத்துக்கு இருந்த பலத்த ஆதரவால் கலைஞரே அந்தத் தீர்மானத்தை வரவேற்றுப் பேச வேண்டிய நிலை ஏற்பட்டது.

வேலூர் பொதுக்குழுவுக்கான தீர்மானங்களை தயாரித்த சம்பத் ஆதரவாளர்கள், யார் யார் எந்தெந்த தீர்மானங்களை முன்மொழிவது, வழிமொழிவது என்றெல்லாம் கையெழுத்துப் போட்டு, அவை பொதுச் செயலாளருக்கு அனுப்பப்பட்டன. திமுகவை ‘தீவிர அரசியல் இயக்கமாக’ மாற்றுவதற்கான சிந்தனை கட்சியின் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்பட்டிருந்த காலகட்டம் அது. இதனால் அதுகுறித்த விவாதங்கள் பரவலாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. அதேநேரம் மறுபுறம் சதி ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தன.

வேலூர் சென்ற சம்பத்தும் அவரது நண்பர்களும் ஒரு விடுதியில் அன்றிரவு தங்கி இருந்தனர். காலையில் எழுந்து குளித்து பொதுக்குழு நடைபெறும் இடத்துக்குப் போய் சேர்ந்தனர். அன்று காலை செயற்குழு கூட்டம் ஒரு பீடிக் கம்பெனியின் கட்டிடத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சம்பத் தமது காரில் அந்த இடத்துக்கு வந்தபோது, அங்கு நின்றிருந்த முன்பின் அறியாத சிலர் ஓடிவந்து செயற்குழு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்று கூறினார்கள். அவர்கள் கூறிய இடத்துக்கு சம்பத் விரைந்தார்.

செயற்குழு நடைபெறும் இடத்தைச் சுற்றி பலர் நின்றிருந்தனர். சம்பத் ஆதரவாளர்கள் எவரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதை பலத்த குரலில் கண்டித்து குரல் எழுப்பிய கண்ணதாசனும், மேயர் முனுசாமியும் கோபத்துடன் பொதுக்குழு நடக்க இருந்த சத்திரத்துக்குப் திரும்பிவிட்டார்கள்.

அவைத் தலைவர் சம்பத் தலைமையில் காலை தொடங்கிய செயற்குழுக் கூட்டம் இரவிலும் நீடித்தது. அருகே உள்ள சத்திரத்தில் மேயர் முனுசாமி கவலையோடு அமர்ந்திருந்தார். அண்மையில் இருந்த ஓர் ஓட்டல் அறையில் தங்கியிருந்த கண்ணதாசனும் மற்றும் பல நிர்வாகிகளும், ‘செயற்குழு இரவு வரை நீடிக்கிறதே... அங்கு என்ன விபரீதம் நடக்கிறதோ’ என்ற கவலையில் புலம்பிக் கொண்டிருந்தனர். அப்போது செயற்குழு நடந்த அறையில் இருந்து வேகவேகமாக வந்த ஒருவர் விஷயத்தை ரகசியமாகச் சொன்னார்.

அதாவது, “கட்சியைப் பிளவுபடுத்தும் வகையில் கண்ணதாசனும், கண்ணப்பா வள்ளியப்பனும் பத்திரிகைகளில் எழுதுவதாகவும், ஆர்.எஸ்.பாண்டியன் கட்சிக்கு துரோகம் செய்வதால் அவரை ‘நம் நாடு’ பத்திரிகையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று கலைஞரின் ஆதரவாளர்கள் பேசியதாகவும், அதற்கு சம்பத், அவையில் இல்லாதவர்களைப் பற்றி பேசக் கூடாது என்று கண்டித்ததாகவும், ஆனால் அதை ஏற்க மறுத்து கூச்சல் குழப்பம் ஏற்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து, அவர்கள் பொதுக்குழுவுக்கு வருவார்கள், அப்போது அதுகுறித்து பேசலாம் என்று சம்பத் கூறியதாகவும், இந்தப் பிரச்சினையை இதோடு விட்டுவிடுமாறு அண்ணா வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதாகவும், தொடர்ந்து மற்ற விவகாரங்கள் பற்றி விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும்" அந்த நபர் பரபரப்பாக சொல்லி விட்டு மீண்டும் செயற்குழுக் கூட்டம் நடைபெறும் அறைக்கு விரைந்தார்.

இரவு 7.30 மணி இருக்கும். அப்போது ‘நம் நாடு’ துணை ஆசிரியர் ஆர்.எஸ்.பாண்டியன் பதற்றத்தோடு ஓடி வந்தார். ஓட்டலுக்குள் நுழைந்த அவர், ‘கவிஞர்... செயற்குழுவில் அடிதடி நடக்கிறது... சம்பத்தை அடிக்கிறார்கள்" என்று மூச்சுவாங்க சொன்னார்.

உடனடியாக கண்ணதாசன், மேயர் முனுசாமி, மணிவண்ணன், முருகேசன், பி.இ.நடராசன், சைதை குமாரசாமி, கே.செல்வராஜ், சம்பந்தம் போன்றவர்கள் செயற்குழு நடந்த அறையை நோக்கி ஓடினார்கள். அப்போது எதிரே வந்த எம்.பி.சுப்பிரமணியம், “மதுரை சண்டியர் ஒருவர் சம்பத்தின் சட்டையைக் கிழித்ததாகவும், இரண்டு நடிகர்கள் சம்பத்தைத் தாக்கியதாகவும், சிலர் சத்தம்போட்டு திட்டியதாகவும், அவர்களை அண்ணா படாதபாடு பட்டு தடுத்தார் என்றும்" பதற்றத்துடன் கூறினார்.

மேலும், “சாத்தியமற்ற திராவிட நாடு பிரச்சினையை விட்டுவிட்டு, தமிழக நலனில் அக்கறை செலுத்த வேண்டும்; கட்சியில் சினிமா ஆதிக்கம் கூடாது; ‘பஜனை பாடிகள்’ ஒழிய வேண்டும்; வன்முறை எண்ணம் நீங்க வேண்டும்; வசூல் கொள்ளை தடுக்கப்பட வேண்டும்; கழகத்தைப் போர்க்குணமிக்க அரசியல் நிறுவனமாக மாற்ற வேண்டும்; ‘பார்ட் டைம்’ அரசியல் செய்வோர் கட்சியில் நிர்வாகிகளாக இருக்கக் கூடாது என்று சம்பத் பேசிய பின்னர்தான் அவரை இழிவாகப் பேசி தாக்கத் தொடங்கினார்கள்" என்று சுப்பிரமணியம் விவரித்தார்.

இதைக் கேட்டவுடன் கண்ணதாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கோபாவேசமடைந்தனர். ஆனால் எம்.பி.சுப்பிரமணியமும், ஏ.கோவிந்தசாமியும் எல்லோரையும் அமைதிப்படுத்தி, “ஒரு மணி நேரத்தில் செயற்குழு முடிந்துவிடும். எல்லோரும் நகரச் சத்திரத்தில் இருங்கள்... சம்பத்தை நாங்கள் அழைத்து வந்துவிடுகிறோம்" என்று கூறி மற்ற எல்லோரையும் காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

செயற்குழுக் கூட்டம் களேபரமான நிலையில் ‘இந்த காட்டுமிராண்டி சபைக்கு நான் தலைமை தாங்க விரும்பவில்லை, வெளியேறுகிறேன்’ என்று அறிவித்து, அதனை பதிவேட்டிலும் குறித்துவிட்டு தமது ஆதரவாளர்களோடு வெளியேறினார் சம்பத். அப்போது இரவு 9 மணி.

இந்த சம்பவம் காட்டுத் தீ போல் பரவி விட்டது. தொண்டர்கள் பதற்றமடைந்தனர். கோவை மாவட்டச் செயலாளர் உடுமலை நாராயணன், சேலம் மாவட்டச் செயலாளர் குப்புசாமி, சென்னை மாவட்டச் செயலாளர் கே.ஏ.மதியழகன், என்.எஸ்.இளங்கோ, கோவை செழியன், சென்னை மேயர் முனுசாமி, முருகேசன், கே.செல்வராஜ், சம்பந்தம், வ.சங்கர நாராயணன், செங்கை வேதகிரி, ம.லோ.பாலு, தங்கமணி, ஏ.கோவிந்தசாமி எம்எல்ஏ., எம்.பி.சுப்பிரமணியம் எம்எல்ஏ., பழ.நெடுமாறன், ஏ.கே.வி.அருண்மொழி, சிற்றுளி சுப்பிரமணியம், பொறையார் ஜம்பு, அ.செல்வராஜ் எம்எல்ஏ., க.ராஜாராம், கடம்பூர் அண்ணாமலை, எம்எல்ஏ., திருச்சி வானமாமலை, கரூர் சோமு, ராஜமாணிக்கம், டாக்டர் லோகாம்பாள், கரு.தமிழழகன், ஆர்.எஸ்.பாண்டியன், தேசிய மணிக்கண்ணன், சீர்காழி சோமு, முனுஆதி, இராவணன், தஞ்சை பெரியசாமி, உ.பில்லப்பன், கண்ணப்பா, வள்ளியப்பன், கருத்தோவியன், திருவாரூர் விசுவநாதன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கோபக்கனல் பொங்க நின்றனர்.

‘இப்போதே அவர்களை முற்றுகையிட வேண்டும் என்றும், பொதுக்குழுவைப் புறக்கணிக்க வேண்டும், கட்சியிலிருந்து எல்லோரும் ராஜினாமா செய்து விடுவோம்’ என்றும் பலர் குரல் கொடுத்தனர். அவர்களை அமைதிப்படுத்திய சம்பத், “ராஜினாமா செய்வது சரியல்ல. ஆத்திரப்படாமல், நிதானமாக இருந்து நாளை நடைபெறும் பொதுக்குழுவில் அனைவரும் கலந்து கொண்டு, நமது தீர்மானங்களை வலியுறுத்துவோம்" என்று கூறினார்.

ஆனால் பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர். அனைத்தையும் கேட்ட பிறகு, அடுத்த நாள் பொதுக்குழுவில் சம்பத் கலந்து கொள்வதில்லை என்றும், பொதுக்குழுவிலேயே மெஜாரிட்டியாக உள்ள மற்ற அனைவரும் பங்கேற்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. அன்றிரவு அங்கேயே அனைவரும் தங்கி தூக்கத்தைத் தொலைத்து விடிய விடிய காரசாரமான விவாதித்துக் கொண்டிருந்தனர்.

பொதுக்குழு தீர்மானங்கள்

பொழுது புலர்ந்ததும் எல்லோரும் அவசர அவசரமாகக் குளித்துவிட்டு பொதுக்குழு கூட்டம் நடக்கும் இடத்துக்குச் சென்றார்கள். சம்பத் வரவில்லை. உள்ளுக்குள் எல்லோருக்கும் ஆவேசம் இருந்தது. ஆனால் அதை அடக்கிக் கொண்டு வளாகத்துக்குள் நுழைந்தனர். பொதுக்குழு மண்டபம் பரபரப்பாக ஒரு போர்க்களம் போல் காட்சியளித்தது. காலையில் எல்லோருக்கும் உணவு அளிக்கப்பட்டது. பந்தியில் அமர்ந்து அனைவரும் உணவுண்டனர்.

சம்பத் ஆதரவாளர்களும் வேண்டாவெறுப்பாக உணவை முடித்துக் கொண்டு பொதுக்குழு மண்டபத்துக்குள் நுழைந்தனர். மாவட்ட வாரியாக அவரவர் தம் இருக்கையில் அமர்ந்தனர். அண்ணா மண்டபத்துக்குள் நுழைந்தார். பொதுக்குழு தொடங்கியது. பொதுவான தீர்மானங்கள் மளமளவென்று நிறைவேற்றப்பட்டன. கருத்து மோதலுக்கு இடமளிக்கும் சம்பத் ஆதரவாளர்களின் தீர்மானங்கள் தனியே அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

வேலூர் பொதுக்குழுவுக்காக சம்பத் தயாரித்திருந்த சட்ட திருத்தங்களில் மிக முக்கியமானவை:

1. பொதுக்குழு ஒரு அவைத் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் செயற்குழுவுக்கு 18 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும். முன்பொழிபவர்: கண்ணதாசன்; வழிமொழிபவர்: உ.பில்லப்பன்.

(அதுவரையிலும் செயற்குழு உறுப்பினர்களைப் பொதுச் செயலாளரே நியமித்துக் கொள்வது என்ற முறை இருந்தது. உச்சகட்ட அதிகாரம் படைத்த தலைமைச் செயற்குழுவுக்கு உறுப்பினர்களை ஜனநாயக முறையில் பொதுக்குழு தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது இந்த புதிய சட்ட திருத்தத்தின் நோக்கமாகும்)

2. பொதுக்குழு, தலைமைச் செயற்குழு, ஆட்சி மன்றக் குழு ஆகியவற்றை கூட்டுவதுடன், அவற்றுக்குத் தலைமையேற்று நடத்தித் தரும் பொறுப்பையும் அவைத் தலைவர் ஏற்பார்.

(அவைத் தலைவர் பதவியென்பது பொம்மைப் பதவி அல்ல. அதற்குரிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதை வற்புறுத்திடும் இத்தீர்மானத்தையும் கண்ணதாசனும், உ.பில்லப்பனும் அவை முன் வைத்திருந்தனர்.)

அடுத்து, தலைமை நிலையச் செயலாளரின் அதிகாரம் பற்றிய சட்டத் திருத்த முன்மொழிவை கண்ணதாசனும், ஆர்.எஸ்.பாண்டியனும் கொண்டு வந்த தீர்மானமானது:

3. தலைமை நிலைய நிர்வாகத்தை மேற்கொள்வதுடன், கழகத்தின் நிலையான குழுக்கள், அவ்வப்போது ஏற்படும் துணைக் குழுக்கள் ஆகியவற்றின் கூட்டப் பணிகளையும், பொதுச் செயலாளர் தரும் பணிகளையும் மேற்கொண்டு, பொதுச் செயலாளருக்கு துணையாக இருந்து பணி புரிபவர் தலைமை நிலையச் செயலாளர்.

(அப்போது தலைமை நிலையச் செயலாளராக இருந்தவர் கே.ஏ.மதியழகன். இதுவும் ஒரு பொம்மைப் பதவியாகவே இருந்தது. இப்பதவிக்குரிய அதிகாரங்கள் கோரப்படுவதே இதன் நோக்கம்)

கட்சி முழு ஜனநாயக அமைப்பாக வடிவெடுத்து இயக்க வேண்டும் என்ற நல்லெண்ணமே இத்தகைய சட்டத் திருத்த முன்மொழிவின் முக்கிய நோக்கமாக இருந்தது. ஆனால் எதிர் தரப்பினர் இந்தத் தீர்மானங்களை சந்தேகித்தனர்.

சம்பத் ஆதரவாளர்கள் கொண்டுவந்த தீர்மானங்களைத் தவிர மற்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டவுடன் அண்ணா உரையாற்ற எழுந்தார். அப்போது சம்பத் ஆதரவாளர்கள், தாங்கள் முன்வைத்த திருத்தத் தீர்மானங்களை ஓட்டுக்கு விட வேண்டும் என்று வலியுறுத்தினர். அதற்கு அண்ணா ஆதரவாளர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.

எல்லோரையும் அமைதிப்படுத்திய அண்ணா, “நீங்கள் கொடுத்துள்ள திருத்தத் தீர்மானங்கள் இதோ என் கரத்தில் இருக்கின்றன. நான் உங்களை கேட்டுக் கொள்வதெல்லாம் கட்சியில் குழப்பம் வந்து ஏதாவது ஆகுமென்றால் என்னை உயிரோடு காண முடியாது" என்று கூற, அவையில் குழப்பமான நிலை ஏற்பட்டது. ‘எங்களது தீர்மானங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்று கண்ணதாசன், எம்.பி.சுப்பிரமணியம் குரல் எழுப்ப, அதற்கு, ‘அண்ணாவை அவமதிப்பதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது’ என எதிர்ப்புக் குரல் வந்தது.

அதைத் தொடர்ந்து அண்ணா பேசும்போது, “உங்களுடைய தீர்மானங்களை நான் புறக்கணிக்கவில்லை. ஆனால் இப்போது அதற்கு ஏற்ற நிலைமையில்லை. இந்தச் சூடு தணிந்த பிறகு விவாதிக்கலாம். விரைவிலேயே அடுத்த பொதுக்குழு கூடும். அப்போது எடுத்துக் கொள்ளலாம். அதுவரை தீர்மானங்களை ஒத்திவைக்க விரும்புகிறேன். இதனை ஆமோதிப்பவர்கள் கையைத் தூக்குங்கள்" என்றார்.

உடனே அவரது ஆதரவாளர்கள் கையைத் தூக்கினார்கள். கை தூக்காதவர்களைப் பற்றி பேசும்போது ‘அந்த கைகளை நான் அறிவேன். சமயம் வரும்’ என்று கூறி, இத்துடன் பொதுக்குழுவை ஒத்திவைக்கிறேன் என்று சொல்லிவிட்டு வெளியேறினார். கூட்டம் கலைந்தது. இரு கோஷ்டிகளும் பகை தேசத்து மாந்தர்கள் போல ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டிருந்தனர்.

(தொடர்வோம்...)

SCROLL FOR NEXT